முழுதுறக்காணுதல் 2 – கடலூர் சீனு

பதினோராம் தேதி காலை தேவ பிரயாக் நோக்கி ஜீப் ஏறினோம். முன் சீட்ட்டில் அமர்ந்த அன்னை அவள் குழந்தைக்கு மொச் என முத்தம் கொடுத்த ஒலி ஒரு கணம் சிலிர்க்க வைத்து. வாகனம் கிளம்பியது. சாரல் மழை. இரு சரிவுகள் திரும்பிக் கடக்க, சாலை சரிவில் பள்ளத்தாக்கை நிறைத்து நின்றது இரண்டு வர்ண ஜால இந்திர வில். பாகிரதி குதித்து ஓடும் வழியில் அவளை வேடிக்கை பார்த்தபடியே கீழிறங்கினோம். தேவ பிரயாக் செல்லும் சாலை விலக்கில் இறங்கி பாலம் கடந்தோம். ஒரு இளம் ஜோடி செல்ப் பி எடுத்துக் கொண்டிருக்க, அவர்களின் செல்லம், [அச்சு அசல் அப்படியே ஹீரோ] ஓடி வந்து எங்கள் மேல் தாவியது. கடந்து தொங்கு பாலம் வழியே தேவப் பிரயாக் நகருக்குள் நுழைந்தோம். வசீகர முடுக்கு தெருக்களுக்குள் இறங்கி பிரயாகை நோக்கி நடந்தோம். கீழே தளுக்காக நகர்ந்து வரும் அளகனந்தா உடன் தாவிக் குதித்து ஓடி வரும் பாகிரதி இணைந்து கொண்டாள். பிரபு பிரயாகை நாவலின் முன்னுரை குறித்து பேசத் துவங்கினார். தமிழா என்றபடி நெருங்கினார் அவர். மலேஷியாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர். பெயர் ஜெயராஜ். அறிமுகம் செய்து கொண்டோம். ஜெயமோகன் தளம்சர்ச்சைகள் வழியே அவருக்கு நன்கு அறிமுகம் ஆகி இருந்தது. நாங்கள் ஜெயமோகன் மாணவர்கள் என்று சொன்னோம். அவர் விழிகளில் வியப்பு ”எத்தனையோ வருஷம் வேலைல இருந்திருக்கேன். நான் இன்னாருடைய மாணவன் அப்டின்னு சொல்லி அறிமுகம் செஞ்சுக்கற ஒருத்தர இப்போதான் பாக்குறேன் ” என்றார்.

அதே ஊரை சேர்ந்த நன்கு ஆங்கிலம் அறிந்த ஒரு முதிய பெண் தங்களை அறிமுகம் செய்து கொண்டார். இந்த நேரத்துல இங்க ரெண்டு தமிழர்கள், என்பது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு என்றார்.

சங்கமம் ஓரமாகவே சில கிலோமீட்டர் நடந்து சரிவால் கைவிடப்படிருந்த படித்துறை ஒன்றினில் மாலை மயங்கும் வரை கங்கையின் எக்களிப்பை செவிமடுத்து அமர்ந்திருந்தோம். கிளம்பி பேருந்து ஏறி, ரிஷிகேஷ் வந்து இறங்கி, அறை போட்டு பைகளை போட்டு விட்டு திரி வேணி காட் தேடி அடைந்தோம். மக்கள் கூட்டமே அற்ற படித்துறையில் அமர்ந்து, குளிரக் குளிர கங்கா ஆரத்தி நிகழ்வைக் கண்டோம். திரும்பி வந்து மின்சாரமற்ற நகரத்தில் சுற்றித் திரிந்து ஹோலியை முன்னிட்டு விற்கப்பட்ட வித விதமான இன் தீனிகளை சுவைத்தோம். பீ ஜே பி யர்கள் பட்டாசு வெடித்தார்கள். மின் மிகை மாநிலமாக யு பியை மாற்றுவோம் என சூளுரைத்து வாக்கு வாங்கி இருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன். அறைக்கு வந்து இருளுக்குள் ரஜாய் போர்த்தி உறக்கத்தில் கரைந்தோம்.

பன்னிரண்டாம் தேதி காலை நடை மார்க்கமாக ரிசிகேஷை சுற்றினோம். ஈரோடு கிருஷ்ணன் ஒரு முறை சொன்னார். கவிதை அலையை தாங்கிரலாம் கவிதை பேதியை தாங்க முடியாது. என. அப்படி ரிஷிகேஷ் எங்கு நோக்கினும் யோகா பேதி.நூறு நாளில் யோகா ஆசிரியர் ஆக்கி சர்டிபெகட் தருவதாக அழைத்தது ஒரு மையம். டைனமிக் யோகா டான்ஸ் யோகா, என அதில் பல மாதிரிகள். யார் பெத்த புள்ளையோ என எவரும் பரிதாபப்படும் வண்ணம், தன் உடலால் தானே எட்டு முடிச்சு போட்டு அமர்ந்திருக்கும் யோகியர்களின் படங்கள் எங்கெங்கும். எங்கெங்கு காணினும் வெளி தேசத்தினர், ராப்டிங், பங்கி ஜம்பிங், என எங்கெங்கும் புக்கிங் ப்ரோக்கர். முறுக்கிய திராட்டில் தாழாமல், ஒலிப்பானை அழுத்திய விரல் விலகாமல் ராயல் என்பீல்டில் விரையும் உள்ளூர் யுவன்கள். ஏழு தலைமுறை அன்னை மாங்கலைடாக இருந்தால் மட்டுமே ஒருவனுக்கு வேகத்தில் இந்த மூர்க்கம் சாத்தியப்படும். வண்ணம் பூசிய காதல் இணை ஒன்று எதிர்ப்பட்டு என்னை சாந்தி அடைய வைத்தது.

சிவானந்தா ஆசிரமம் சென்று அங்கே தங்கி தத்துவ பாடம் பயின்று கொண்டிருந்த நண்பர் சௌந்தர் அவர்களை சந்தித்தோம். குருகுல வகுப்பு. காலை நான்கு மணிக்கு கங்கை குளியல். நான்கரைக்கு வகுப்பு துவக்கம். பதினொன்னரை மணிக்கு உணவு. என மாலை ஆறு மணி வரை தொடர் வகுப்புகள் இரண்டு மாதம். அத்தனை மாணவர்களும் தத்துவ ஆசிரியர் அருகிலேயே இருந்து மேலை துவங்கி இன்றைய உயிர் நரம்பியல் வரை சகல தத்துவமும்ரு குறுக்கு வெட்டு அறிமுகம் கொள்ளலாம். சிறந்த ஆசிரியர் பத்து பேர் நடுவே சௌந்தர் மகிழ்ச்சியாகக இருந்தார். ஜெயமோகன் போர்ஸ் பண்ணலன்னா இந்த நல்ல சூழல இழந்திருப்பேன் என்றார். நூலகம் சென்றோம். சௌந்தர் நூல்கள் வாங்கி பரிசாக அளித்தார்.

மதியம் ஆசிரமத்தில் உணவு. அரைகிலோ சப்பாத்தி, அரைகிலோ பருப்பு, அரைகிலோ ரசம் சாதம், அரைகிலோ தயிர் சாதம், கால்கிலோ இனிப்பு என எளிய உணவு. தயங்காமல் மறுமுறையும் கோரிப் பெறலாம். உண்டு முடித்து, ஆசிரிமம் சுற்றிப் பார்த்தோம். சிவானந்தர் சமாதியை வணங்கி விட்டு விடை பெற்றோம். படி தடுக்கி இடது கால் புரண்டு கொண்டது. அக் கணம் முடிவெடுத்து கேட்டேன். ஹரித்துவார் நடந்தே போலாமா என. தாராளாமா என அமெரிக்கன் ஸ்டைலில் தோள்களை குலுக்கினார் பிரபு.

அங்கிருந்து மகேஷ் யோகி ஆசிரிமம் தேடி சென்றோம். வழியெல்லாம் மூஜி பாபா பக்தர்களின் கோலா கலம். ஊருக்கு வெளியே காட்டை ஒட்டிக் கிடந்தது மகேஷ் யோகி ஆசிரமம். முற்றிலும் கைவிடப்பட்டு பாழடைந்து, பீட்டில்ஸ் தலைமுறையின் ஆன்மா போலவே கிடந்தது ஆசிரமம். கடந்த வருடம் யாரோ ஒரு பீட்டில்ஸ் எச்சம், ஆசிரமம் எங்கும் வித விதமான சாமியார்களின் [ரமணர் தொட்டு கபாலிகர் வரை ] ஓவியத்தை வரைந்து டைடானிக் நாயகி கேத் வின்ச்லேட்டுக்கு சமர்ப்பணம் செய்திருந்தது. ஒரு அறைக்குள்ளிருந்து டோங்கிடி டோங்கிடி வீக் வீக் என இசை எட்டிப் பார்த்தேன். ஒரு ஆங்கில யுவன் புட்டத்தை ஆட்டி, ஆட்டி எதோ ஒரு இசைக்கு ஆடிக் கொண்டிருந்தான், அவனது காதலி தலைகீழாக [கைகளால்] நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் முன்னே, ஒரு மாதிரி [காரைக்குடி ஸ்பெசல் உணவு, ] முட்டை கலக்கி போல ஒரு வினோத ஓவியம். அந்த ஓவியம் குறித்து எல்லோ ஷிப் என்றொரு திரைப்படம் வந்திருக்கிறது என்றார் பிரபு.

மகேஷ் யோகி பங்களா முன் ஒரு சிறிய லிங்கம், சுற்றிலும் நூறு குகை அமைப்புகள். த்யான சாதகர்கள் சாதகம் புரிய. மகேஷ் யோகியின் சீடர் ஜக்கி, இதைத்தான் கோவையில் இன்னும் சப்ளிமெட் செய்து இருக்கிறார். ஒரு இளைஞர் பட்டாளம் உள்ளே நுழைந்து செல்பிகளை சுட்டுத்தள்ள துவங்கியது. நவீன ஆத்மீக குரு எவனும் ஏன் இதை இன்னும் முயலவில்லை என தோன்றியது. தொடர்ந்து தன்னை செல்பி எடுப்பதன் வழியே, ஒரு சாதகன் தனது ததாகார விருத்தியை கடந்து செல்லும் தியானம். அடா அடடா இந்த அறிவு சொத்துக்கு உடனே பேடன்ட் வாங்க வேண்டும். சட்டென எதோ அபத்த உணர்வு தாக்க இருவரும் வெளியேறினோம். அருகே கங்கை. கரையில் அமர்ந்து கங்கையை பார்த்துக் கொண்டிருந்தோம். வல்லூறு ஒன்று அம்பு போல கீழிறங்கி கங்கைக்குள் இருந்து மீன் ஒன்றினை வென்று சென்றது.கரை ஓரமாகவே நடந்து படித்துறை ஏகினோம். எதிர் படித் துறையில் கங்கா ஆரத்தி. அமர்ந்து பார்த்தோம். ஆரத்தி முடிந்ததும் ஹோலி பண்டிகை வெடித்தது. எதிர் கரை எங்கும் வர்ண குழம்புகளின் ஆர்ப்பரிக்கும் பொழிவு. இருவரும் மலர் பொதிந்த தொண்ணையில் சுடர் ஒன்று ஏற்றி கங்கை அன்னைக்கு கையளித்தோம்.

பனிப் படலத்துக்கு உள்ளே நிலவு ஒளி இழையும் இரவு துவங்க, பேசியபடியே ஹரித்துவார் நோக்கி நடக்கத் துவங்கினோம்.பேச்சு வழியில் சந்தித்த நண்பர்களை மையம் கொண்டது. டெல்லி வரை வித விதமான ராணுவ சேவை நண்பர்களை சந்தித்தோம். ஒருவர் ஆரணிக்காரர். இங்க ஒரு ராமர் கோவில் இருக்கு உள்ள குண்டு விழுந்தா வெடிக்கவே வெடிக்காது, அவசியம் போய் பாருங்க என அறிய தகவல் ஒன்றினை தந்தார். மற்றவர் தேனிக்காரர், சும்மா நிலத்தை அதன் விரிவை பார்க்க மேலே நோக்கி செல்கிறோம் என்ற கான்செப்டே அவருக்கு புரியாத புதிராக இருந்தது. ”அங்க என்னங்க இருக்கு? வெறும் காடு, பனி அவ்வளுதானே” என ஆச்சர்யப்பட்டார். அவர் பங்குக்கு கங்கையின் பரிசுத்தம் கண்டு அமெரிக்க விஞ்ஞானிகளே திகைப்பது, சக்தி மட் கோவிலை ஒரே ஒரு முறை தரிசித்தால் கூட பறந்து போகும் ராகு தோஷம், குறிப்பிட்ட அறிய அறிய அறிய நாளில் ஓம் என வடிவில் பனி உருகும் கேதார்நாத் மலை என முக்கிய பயணத் துணை தகவல்களை தந்து உதவினார். மராத்தி ராணுவ வீரர் ஒருவர். உள்ளே காம்பசுக்கு தெரியாமல் [உள்ளே ஆண்ட்ராய்டு அனுமதி இல்லை] காதலியுடன் கடலை போட்டுக் கொண்டு இருக்கிறார். பிரபு அவரிடம் குன்சாக நாணுவ ரகசியம் எதுனா இருந்தா சொல்லுங்களேன் என பிட்டை போட்டார். ”அப்டில்லாம் ஒண்ணும் இல்லைங்க, எங்கனா பாம் போடுறதா தகவல் வரும். உண்மையா பாக்க, எங்களுக்கு எதுவும் சொல்லாமல், அந்த இடத்துக்கு பாரா அனுப்புவாங்க, குண்டு இருந்து நாங்க செத்தா, மேலதிகாரிங்க கூடி எந்த பக்கம் தப்பிச்சி ஓடலாம்னு முடிவு செய்வாங்க. அவ்ளோதாங்கஎனக்குதெரிஞ்ச ஒரே ராணுவ ரகசியம் ” என்றார். பிரபு என் வசம் ”ஒருத்தன் கோவில்ல விழுந்த குண்டு வெடிக்காது அப்டிங்கறான், ஒருத்தன் கங்கை தண்ணிய வீசி சீனா காரண கதற விடலாம்கிறான், மத்தவன் உள்ளே யாருக்கும் தெரியாம மொபைல் நோண்டுறான். இவனுகள வெச்சிக்கிட்டு அந்த மேலதிகாரி வேறு என்னதான் பண்ண முடியும்?” என்றார் விசனத்துடன்.

unnamed

குளிர் நிலா சாலை. ஒரு பதிமூன்று கிலோ மீட்டர் நடந்திருப்போம்.நள்ளிரவு தாக்கும் குளிர். எதோ வனம் ஒன்றினுள் நின்றிருந்தோம். பிரபு அங்கே அமெரிக்காவில் கிரிசி பியர் கரடியை அதன் ஆலிங்கனத்தை ஐந்தடிக்குள் தவற விட்டவர். ”அண்ணா இங்க நிறைய புலி சிறுத்தை இருக்கும்னு படிச்சிருக்கேன். பக்கத்துல கங்கை இருக்கு, பௌர்ணமி, ஏதாவது ஒண்ணு தண்ணி குடிக்க இப்போ வந்தா?” வினவிய குரலில் நடுக்கம். நான் ”பொதுவா பயம் வந்தா அட்ரினல் சுரக்கும் அந்த வாசனைதான் புலிக்கு அழைப்பு. அனேகமா இடது புறம் இருந்து புலி உங்க மேலதான் முதல்ல பாயும்”. பிரபு ”ஒரு சின்ன குச்சியாவது கையில் இருந்தா தெம்பா இருக்கும்” என்றார். எதிரே ஒரு ராணுவ ஜீப் வந்து எங்களை மறித்தது. ராணுவ காவலர்கள் எங்கள் ஐடிக்களை சோதித்து எங்களை விசாரித்தனர். இது டைகர் ரிசர்வாயர் இங்க இப்டி வரது ஆபத்து தெரியுமா என்றார். பிரபு திரும்பி போயிடவா என்றார் அப்பாவியாக. அவர் ”இது ஏழு கிலோ மீட்டர் காடு இப்போ நாலு கிலோ மீட்டர் வந்திருக்கீங்க, முன்னால போனா மூணு பின்னால போனா நாலு, முன்னால போறதா பின்னால போறதா நீங்களே முடிவு பணிக்குங்க ” என்றார். நான் ஓகே சார் வில் மேனேஜ் என்றுவிட்டு முன்னாள் நடந்தேன். பிரபு ”சார் சொல்லுங்க சார் நாங்க என்ன செய்யட்டும் என்றார்”. இராணுவர் ”போய்க்கிட்டே இருங்க ஐந்து நிமிடத்தில் ரோந்து போலிஸ் உங்க பின்னால வரும் சரியா? டோன்ட் ஸ்டாப் எனி வேர் கோ ”என்றார். பிரபு விரைந்தார். நான் வலிக்கும் இடது காலை விசுக்கி விசுக்கி அவர் பின்னால் ஓடினேன். இராணுவர் சொன்னது போல பின்னால் காவல் துறை வந்தது ” நீங்கதானா ஓகே நிக்காம போய்க்கிட்டே இருங்க மூணு கிலோ மீட்டர்ல சாந்தி குனி ஆசிரமம் உள்ள போய்டுங்க, போங்க ” என்றுவிட்டு விளக்கு சுழல முன்னால் விரைந்து புள்ளியானார். உண்மையில் பீதி எங்களை பின்னால் துரத்த காலாதீத நடை முடிந்து சாந்தி குணியை கண்டதும்தான் தொண்டையில் எச்சிலே இறங்கியது. பெங்காலி நிர்வாகிகள் கொண்ட ஆசிரிமம். எங்கள் ஆங்கிலம் அவர்களுக்கு புரியவில்லை. அவரது பெங்காலி எங்களுக்கு புரியவில்லை. தேவ பூமி கேதாரநாத் யாத்ரீகா அது மட்டும் அவருக்கு புரிய, தங்க பொது அறை ஒன்று அளித்து இரண்டு ரஜாய்அளித்தார். அதிகாலை மூன்றரை மணிஆகிவிட்டு இருந்தது. உயிருடன் உறங்கும் நிலை அளிக்கும் சுகத்தை அன்று அனுபவித்தோம்.

unnamed

பதிமூன்றாம் தேதி காலை, கக்கா முக்க தேவை இன்றி கலகலத்து வெளியேறியது. இந்தியர்களுக்கு இரண்டு சிக்கல்கள் ஒன்று தத்துவம் மற்றது மலம். அட்ரினல் சுரந்தால் மலம் இளகுகிறது. எனில் அட்ரினல் கொண்டு ஏன் சிறந்த மலமிளக்கி தயாரித்து பார்க்கக் கூடாது? அடடா முதலில் இதற்க்கு பேடன்ட் பதிய வேண்டும் பிறகு.இதை பாபா ராம்தேவுக்கு விற்க வேண்டும். அப்டியே ரிசிகேசில் ஒரு ஆசிரமம்… ஆசிரமத்தின் எதிரே இருந்த சிற்றுண்டியகத்தில் அடுக்கி இருந்த அத்தனை பெங்காலி இனிப்பிலும் ஒவ்வொன்று தருவித்து உள்ளே இறக்கினோம். ஆண்டவா உயிர் கொண்டு உலவுவது இத்தனை இனியதா.

”’ சீனு நீங்க பேசிக்கலா ஒரு காட்டுவாசி. எல்லாத்தையும் பொறுத்துக்கலாம் ஆனால், இந்த காட்ல புலி வரும்னு சொன்ன ரானுவத்துக்கிட்ட வீ வில் மேனேஜ் னு சொன்னீங்க பாருங்க அதை மட்டும் என்னால ஆயுசுக்கும் மறக்க முடியாது ” என்றுவிட்டு கண்ணீர் தளும்ப சிரித்தார் பிரபு.. வாட் டு டூ கிராதம் படித்திருக்கக் கூடாது.

ஹரித்வார் வந்து சங்கர மடம் எதிரே அறை போட்டு விட்டு கீழே வந்து மானசா தேவி கோவில் வாசல் வந்தோம். ஊர் மொத்தமும் ரங்கோலி சூப்பர் நோவா. மேலிருந்து வர்ணக் குழம்பு வந்து எங்களை மோதியது.கண்ணாடி தெரித்தது. ஐயையோ என் கேமரா என்றபடியே பிரபு மல்லாந்து விழுந்தார். ஹோலி ஹோலி எங்கும் ஹோலி கொண்டாட்டம். வர்ணக் கரைசல் வழியும் சாலை. ஒலி பெருக்கிகளில் சோளிக்கள் கிழியட்டும் சுநிரிக்கள் பறக்கட்டும் ஹோலி ஹோலி என்றது ஒரு ஹிந்தி பாட்டு, பாரத பண்பாட்டின் அத்தனை மாந்தக் குமுகத்துடன் வெளிநாட்டினரும் கலந்து வர்ணக் குழம்பில் குளித்து களியாடிக்கொண்டு திமிறி ஆர்ப்பரித்தனர். ராமர் கோவிலில் ராமர் ஹோலி கொண்டாடுவதாக பாடல். ராதே ஷியாம் என்றபடி கன்னத்தில் வர்ணம் பூசும் நீலனின் காதல் துணைகள். வர்ண குவியலாக ஊடே நடந்து செல்லும் சாமியார்கள். வர்ணம் பூசும் குழந்தைகள், ஹோலி ஹோலி ஹோலி. மகிழ்ச்சியின் கட்டின்மை. பாவம் தமிழ் நிலம் மூளை வீங்கிகளுக்கு வாய்த்ததெல்லாம் சினிமாவும் அரசியலும் முகநூல் மீம்ஸ், பெருந்தீனி, பெலியோ குப்பை மட்டும் தான். ஷாவட்டும்.

முதல் தொன்மத்தில் வாசுகியின் மகள் மானசா தேவி. வாசுகிக்கு நீண்ட நாளாகக குழந்தை இல்லை. அவள் உள்ளாழம் விரும்பும் வடிவில் மகளாக பாவை ஒன்றினை சமைத்து, மானசா தேவி என பெயரிட்டு அதை கொஞ்சிக்கொண்டு இருக்கிறாள். சிவன் தனது மனைவிகளில் ஒருவளான சண்டி தேவியுடன் கூடுகையில் சிவனின் பீஜம் நழுவி, மானசா மேல் விழ, அவள் உயிர் கொள்கிறாள். ஆகவே அவள் சிவனின் மகள்.

அடுத்த தொன்மத்தில் சண்டி, மானசா இருவருமே சிவனின் மனைவிகள். இருவர்க்கும் தங்கள் இணையற்ற ஆற்றலால் சிவன் தனக்கே அடிமை என சண்டை மூள, சண்டி ஊழி நெருப்பை ஏவுகிறாள், மானசா ஆலகாலம் ஒத்த நஞ்சை கக்குகிறாள், உலகே அழியும் சூழல். சிவன் இடக்கையில் ஊழி நெருப்பை ஏந்திக் கொள்கிறார். கண்டத்தில் நஞ்சினை தேக்கிக் கொள்கிறார். இருவரும் கர்வ பங்கம் அடையவைத்து உலகை காக்கிறார்.

குழந்தை வீறிடல் கேட்டு கையில் இருந்த எளிய ஆங்கில ”தல புராண ” நூலை கீழே வைத்தேன். ஐந்து ஜோடி கரங்களும், மும்முகமும் கொண்ட மானசா தேவி அன்னையை பார்த்து விட்டு [எனக்கு ஆஸ்திகனின் அம்மா ] கீழே இறங்கும் வழியில் ஒரு இளைப்பாறும் கடையில் கிடைத்த புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். வித விதமான வேறுபாடு கொண்ட தொன்மக் கதைகள். மானசா அன்னை நாகர்களின் ஆதித் தாய் என்பதில் மட்டும் எந்த வேறுபாடும் இல்லை.

எதிர் பூக்கடையில் ஒரு அம்மா தனது ஒரு வயது பெண் குழந்தையை, அடித்து துவைத்து, காயப் போட்டாள். அது அப்படி என்ன செய்தது என எங்களுக்குப் புரியவில்லை. இரண்டடி தள்ளி விழுந்து வீரிட்ட குழந்தையை தூக்கி சமாதனம் செய்ய முயன்றால் அதன் அம்மா நம்மையும் அதே போல அடித்து வைக்கக் கூடும் என பிரபு எச்சரித்ததால், மரத்திலிருந்த குட்டை வால் குரங்குக்கு இணையாக நானும் திக்ப்ரம்மை அடைந்து அமர்ந்திருந்தேன். குழந்தை அது பாட்டுக்கு வீரிட, அம்மா அவள்பாட்டுக்கு பூ வியாபாரம் பார்த்தாள். பக்தர்கள் குறைந்த போது, அம்மா குழந்தையை தூக்கி நெஞ்சுடன் இறுக்கி அணைத்து போதும் நிறுத்து என்றாள் அதே கோபத்துடன். அநியாயம் மின்சாரம் போனது போல, குழந்தை அமைதி கண்டது.

மாலை மயங்க கீழே வந்து கங்கை படித்துறைகளில் உலாவினோம். ஏதேதோ கோவில்கள் எங்கும் செல்லாமல் கங்கையின் மடியில் மட்டுமே இருப்பதேன முடிவு செய்து கரை முழுதும் திரிந்தோம். பல்லாயிரம் பேர் குழும, பிரம்ம குந்தில் கங்கா ஆரத்தி பாத்தோம். காசியில் நிகழும் கங்கா பூஜை ஒரு செவ்வியல் கலை என்றால், இங்கே நிகழ்வது கொஞ்சம் நாட்டுப்புறம் கலந்த கலை. பூஜை முடிந்து கூட்டத்தில் கலந்து, நழுவி, கங்கை அன்னை ஆலயம் கண்டு அன்னையை வணங்கினோம். கருவறை வாயிலில் தமிழில் ஸ்ரீ கங்கை அன்னை என கண்டிருந்தது. பரவசம் அளித்தது. பக்கத்தில் இருத்த கோவிலின் லிங்கமும், விடையும், ரங்கோலி வர்ணம் கொண்டு பூஜை செய்விக்கப்பட்டு நின்றது. அதன் எதிரே ஒரு எழுத்தாளனுக்கு கோவில். வால்மீகி ஆலயம். வளாகம் முழுக்க பாரத நிலத்தின் அத்தனை வேறுபாடு கொண்ட அழகின் முகங்களின் பெருக்கில் கரைந்தோம். பிரிவினை பேசும் அத்தனை புண்மைகள் மீதும் பரிதாபம் எழுந்தது. நாய்களே நாய்களே இது நமது பாரதமடா, ஹமாரா இந்தியா, இந்த இந்தியாதான் எனது இந்தியா வெல்லும் இந்தியா ஜெய் ஹிந்த். மனம் உவகையில் ததும்பிக் கொண்டே இருக்க கூட்டத்தில் நகர்ந்து கங்கைக் கரை கடைவீதிகளில் நடந்தோம்.

ரேபிஸ் தலைக்கேறிய யுவன் ஒருவன் கூட்டத்தில் ராயல் என்பீல்டை பறக்க விட்டான். தடதடக்கும் ஒலியில் சந்தை அதிர்ந்தது. வழியில் பிறந்து சில நாளே ஆன கன்றுக் குட்டி. ஒலிக்கு பதறி சிறிய முடுக்கு ஒன்றனில் துள்ளி ஓடி அபயம் எழுப்ப, அன்னைப்பசு ஹூங்காரம் கொண்டு ஓடி வந்தது. கூட்டம் மொத்தமும் வழி விட்டு தெறிக்க, ஹூங்காரம் எழுப்பியபடி பைக்கை துரத்தியது பசு. யுவனுக்கு குஷி கிழிய, அன்னையின் மத்தகத்துக்கு எட்டும் இரண்டு அடி தொலைவில், ஊளையிட்டு சிரித்தபடி பைக் ஒட்டி விரைந்தான். ஓடி நின்ற பசு, கங்கா பூஜை சங்கநாதம் போல ஒலி எழுப்பியது. எங்கிருந்தோ ஓடிவந்து கன்று அதன் காலிடையில் ஒட்டிக் கொண்டது.

நீண்ட நேரம் அங்கேயே அந்த அன்னையையே பார்த்து நின்றிருந்தேன். ஏதேதோ நினைவுகள். பாத்துட்டு வாங்க நான் ரூம் போறேன் என்றுவிட்டு அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தேன்.

***                         ***                        ***                        ***                        ***                        ***                        ***

பதினான்காம் தேதி காலையில் ஊர் திரும்ப முடிவு செய்தோம். அதிகாலைக் குளிரில் கங்கைக் கரையில் உதயம் பாத்தோம். வெய்யோன் ஒளி ஏந்தி விசையுடன் விரைந்துகொண்டிருந்தாள் ஐங்குழல் கொற்றவை. குளித்தபடி சூரியனை பார்த்துக் கொண்டிருந்தோம். கிராத சிவன், பிரயாகயாக திரௌபதி, வெய்யோன் என கர்ணன், இந்திர வில்லில், விஜயன், ராம படிமமமாக தர்மன், மந்திகளாக பீமன், அனைத்துக்கும் மேல் ஹோலிக் கொண்டாட்டமாக நீலன், எல்லோரையும் பாத்துட்டோம் இல்லையா என்றார் பிரபு.

ஆம் இங்கிருப்பது வெறும் கல்லும் மண்ணுமல்ல. நமது வாழ்வும் வளமும், இந்த நிலமன்றி பிறிதில்லை. மலையாலும், நதியாலும், சூழலாலும் உருவாக்கி நிற்கும் ஒரு நெடிய பண்பாடு. அந்தப் பண்பாட்டின் விளைகனி, பாரத மாந்தர் என்ற இந்தக் குமுகம். அந்தக் குமுகத்தின் ஒரு துளி நான்.

நேற்றைய கங்கையில் சுடர் அளித்த தருணத்தை நினைத்துக் கொண்டேன். வானதிக்காக கங்கையில் ஒரு சுடர் கையளிக்க எண்ணி இருந்தேன். கங்கையை கண்டபின் அறிந்தேன். அற்ப்பர்களுக்குத்தான் மரணம். பெருந்தன்மை கொண்டோருக்கு மரணமில்லை. அற்பர்களின் மரணத்துக்கு அர்ப்பர்களே கவலை கொள்வர். வாழ்பவனுக்கு மரணமில்லை. மரணம் அற்றவர்களுக்கு துயரம் இல்லை. களப்பணியாளன் செயலில் வாழ்பவன். எழுத்தாளன் சொல்லில் வாழ்பவன்.

இங்கிருக்கும் அனைத்துடன் என்னை இணைக்கும் மொழி எனும் பெரு வல்லமை. அந்த வல்லமையை கொண்டு இங்கு இலங்கும் அனைத்தையும் எனக்குள் ஒளியாக நிறைக்கும் எனது ஆசிரியர்.

மானசீகமாக வணங்கினேன். யாரோ வழியனுப்பிய சுடர் ஒன்று என்னை கடந்து சென்று மறைந்தது.

***                         ***                        ***                        ***                        ***                        ***                        ***

முந்தைய கட்டுரைவெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–50
அடுத்த கட்டுரைஅக்னிநதி, கொற்றவை -கடிதங்கள்