சினிமாவின் வேகம்

kutram23

நேற்று தபால்துறை போராட்டம். அருண்மொழிக்கு விடுமுறை. ஆகவே குடும்பகொண்டாட்டமாக நாங்கள் இருவரும் ஒரு சினிமா பார்க்கச்சென்றோம். குற்றம் 23. நேர்த்தியான குற்றக்கதை. சீரான திரைக்கதையுடன் கடைசிவரை அடுத்தது என்ன என்று பார்க்கச்செய்தது. குறிப்பிடத்தக்க அம்சம் பெரும்பாலான உரையாடல்கள் அண்மைக்காட்சிகளில் அமைக்கப்பட்டிருந்தன. ஆனலும் நடிப்பு மிக இயல்பாக இருந்தது. குறிப்பாக பெண்களின் நடிப்பு. அண்மைக்காட்சிகளை பெரும்பாலான இயக்குநர்கள் தவிர்ப்பதே தமிழில் வழக்கம், ஏனென்றால் நடிப்பு செயற்கையாகத் தெரியும். நல்ல நடிப்பை வாங்குவது இங்கே மிகக்கடினம். அண்மைக்காட்சிகள் பெரும்பாலும் மின்னி மறைவது அதனால்தான். அறிவழகன் ஒர் இயக்குநராக வெற்றுபெறுவது வில்லன்களைத் தவிர அனைவரிடமும் நல்ல நடிப்பை பெற்றிருந்ததில்தான்

ஆனால் திரும்பிவந்து விமர்சனங்களை சும்மா ஓட்டி வாசித்துப்பார்த்தேன். ஓர் எண்ணம் எழுந்தது, அதைப்பதிவுசெய்யலாமெனத் தோன்றியது. பல விமர்சனங்களில் இரண்டாம்பகுதியில் சிலகாட்சிகள் இழுவை, கத்திரிபோட்டிருக்கலாம் என்னும் வரி இருந்தது. இதை ஒரு தேய்வழக்காகவே பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். இரண்டாம்பகுதியில் முதல்பகுதியின் முடிச்சை விளக்கும் காட்சிகள் அன்றி எதுவும் இல்லை. எந்தக்காட்சியுமே இரண்டு மூன்றுநிமிடங்களுக்கு மேல் நீளவில்லை. எல்லா காட்சிகளுமே தீவிரமான நிகழ்ச்சிகள் கொண்டவை. அப்படியென்றால் எதைச் சொல்கிறார்கள்?

சினிமா என்றாலே அது கதிகலங்க ஓடவேண்டும் பறக்கவேண்டும் என்னும் நம்பிக்கையை தமிழ்சினிமாவின் தொடக்க காலம் முதலே இங்குள்ள விமர்சகர்கள் உருவாக்கி நிலைநிறுத்திவிட்டனர். நல்ல சினிமா எடுக்க தடையாக இங்கே இருப்பது இந்த மனநிலைதான். இதைவெல்லாமல் இங்கே ஒரு சினிமா இயக்கமே எழ முடியாது. பலசமயம் இரண்டாம்பகுதியில் ஐந்துநிமிடம் போரடிக்கிறது, இழுவைஎன எழுதுகிறார்கள். ஓர் ஐந்துநிமிடம் பொறுத்திருந்து என்ன நிகழ்கிறதென்று பார்த்தால்தான் என்ன? சினிமா என்பது காட்சிக்கலை. காட்சி கண்ணில்பதிந்து எண்ணமாக ஆகி எண்ணத்தைக் கடந்து செல்ல கொஞ்ச நேரம்பிடிக்கும். ஒருநிலக்காட்சியை ஒரு கதாபாத்திரத்தின் முகபாவனையை உடல்மொழியை ஒரு நிகழ்ச்சியின் நுட்பங்களை காட்ட சற்றுமெதுவாகவே காட்சிநகர முடியும். சிலசமயம் காட்சி நிலைகொள்ளவும் வேண்டும். தமிழ்சினிமாவில் நிலைக்காட்சிகளே இல்லை என்றாகிவிட்டிருக்கிறது. காரில் நூறுகிமீ வேகத்தில் பறந்தபடி வெளியே தெரியும் காட்சியைப்பார்ப்பதுபோல படம்பார்த்தால் என்னதான் பதியும்?

உலகமெங்கும் சினிமா மெல்லத்தான் செல்கிறது. கலைப்படங்கள் மெல்லத்தான் நகரமுடியும், இல்லையேல் அவை எதையும் காட்ட முடியாது. நம் திரைவிழாக்களில் ரசிகர்கள் கலைப்படங்களுக்கு ஆற்றும் எதிர்வினைகளைக் கண்டு நொந்திருக்கிறேன். காரணம் சினிமா என்றால் அது ராக்கெட் என்னும் நம்பிக்கை. ஹாலிவுட் வணிகசினிமாக்கள்கூட அவ்வப்போது மிகமெல்ல செல்வதைக் காணலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களில்கூட நிதானமான நீண்ட காட்சிகள் உண்டு. இங்கே அதே படத்தை எடுத்திருந்தால் நான்குநிமிடம் பொறுமையைச் சோதிக்கிறார் பாண்ட் என விமர்சனம் எழுந்துவிடும்.

இந்த மனநிலையை எதிர்கொள்ளவே சினிமாக்களை வேகமானதாக காட்ட ஏகப்பட்ட உத்திகளை தமிழ் சினிமா கண்டடைகிறது. சரசரவென கேமராவை ஓடவிடுவது, வெட்டிவெட்டிக் காட்டுவது, பலமுறை காட்டுவது, ஓசையை உரக்க ஒலிக்கவிடுவது, ராம்பிங் என. இவற்றை நாம் ஹாலிவுட் படங்களில் காணமுடியாது. நம்மவர்களின் மனநிலையே நம் சினிமாவை இப்படி ஆக்கிவிட்டிருக்கிறது. எந்த சினிமா உத்தியையும் படத்தை வேகமானதாக காட்டும்பொருட்டு தமிழ்சினிமா கையாள்வதைக் காணலாம்.

உண்மையில் குற்றம்23 மேலேசொன்ன செயற்கையான வேகஉத்திகள் இல்லாமல் ஆனால் கதைவேகம் ஓட சிறப்பான படமாகவே இருந்தது. ஆனால் பிற்பகுதியில் ஏழு காட்சிகளில் தலா ஒருநிமிடம் இழுவை என்பதுபோல பிரபல இதழ்கள் எழுதுமென்றால் அடுத்த சினிமாவில் அறிவழகன் காமிராவைச் சுழற்றும் கட்டாயத்துக்கு ஆளாவார் இதுதான் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

வேகம் குறித்த இந்த முதிராமனநிலை உண்மையில் திரைக்கதையை பாதிக்கிறது. குற்றப்புலனாய்வுப்படம் படிப்படியாகத்தான் முடிவைநோக்கிச் செல்லமுடியும். ஆனால் இரண்டாம்பகுதி பறந்தாக வேண்டும். ஆகவே அதுவரை வந்த நிதானமான குற்றச்சித்தரிப்பும் புலனாய்வுவிளக்கமும் விலகி திருப்பங்கள் தற்செயல்கள் என பரபரப்பு ஊட்டியாகவேண்டியிருக்கிறது. ஏராளமான கதைகளை கொண்டுவந்து நிறைக்கவேண்டியிருக்கிறது. கடைசி 30 நிமிடம் சினிமாவில் புயலை எதிர்பார்க்கும் மனநிலையால் உத்வேகமான சம்பவங்களை மட்டுமே சொல்லியாகவேண்டியிருக்கிறது. அப்போது அவற்றுக்கி இடையே உள்ள தர்க்கபூர்வமான விளக்கத்தை முன்வைக்க இடமில்லாமலாகிறது. காட்சிகள் துண்டுதுண்டாக நிற்கநேர்கிறது. அப்போது அடுத்த விமர்சனம் எழுகிறது. ரசிகன் ஊகிக்கட்டும் என இயக்குநர் விட்டுவிட்ட இடங்களை எல்லாம் சுட்டிக்காட்டி அவையெல்லாம் தர்க்கப்பிழை என விமர்சகர்கள் சொல்வார்கள்.

முந்தைய கட்டுரை‘முங்கிக்குளி’ கடிதங்கள்
அடுத்த கட்டுரைபார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்