46. ஒற்றைச்சொல்
முழுவிசையுடன் தன் கைகளால் மாநாகத்தின் வாயை மூடவிடாமல் பற்றிக்கொண்டான் பீமன். இருவரின் ஆற்றல்களும் முட்டி இறுகி அசைவின்மையை அடைந்தபோது அதன் விழிகள் அவன் விழிகளுடன் முட்டின. அக்கணமே அவர்களின் உள்ளங்கள் தொட்டுக்கொண்டன. இருவரும் ஒருவர் கனவில் பிறர் புகுந்துகொண்டனர். பீமன் அவன் முன்பு முண்டனுடன் கல்யாண சௌகந்திகமலர் தேடிச்சென்ற அசோகசோலையில் நின்றிருந்தான். அவன் முன் இந்திரனுக்குரிய மணிமுடியுடன் நின்றிருந்தான் நகுஷன்.
“நான் ஆயுஸின் மைந்தனும், புரூரவஸின் பெயர்மைந்தனுமாகிய நகுஷன், உன் குலத்து மூதாதை” என்று நகுஷன் சொன்னான். “குருநகரியில் என் மஞ்சத்தில் படுத்திருக்கிறேன். அரண்மனைச் சாளரம் வழியாக வரும் காற்று என் இடப்பக்கத்தை தழுவிக்கொண்டிருக்கிறது. சாளரத் திரைச்சீலைகள் அசையும் ஓசையை கேட்கிறேன். இது கனவு என நான் நன்கறிவேன். ஆனால் கனவு மேலும் அழுத்தமான மெய்யென்றும் தோன்றுகிறது. நீ இன்னும் மண்நிகழவில்லை, ஆயினும் உன்னை என்னால் காணமுடிகிறது.”
“உங்கள் முகத்தை நான் நன்கறிந்திருக்கிறேன், எந்தையே” என்றான் பீமன். “என் இளையோனின் விழிகள் இவை.” நகுஷன் “ஆம், உன்னையும் நான் நன்கறிந்திருக்கிறேன். என் மூதாதை புரூரவஸின் முகம் கொண்டிருக்கிறாய்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி நின்றிருந்தனர். ஒருவரை ஒருவர் நன்கறிந்திருப்பதாக உணர்ந்தனர். ஒரு சொல்கூட உரையாடிக்கொள்ள வேண்டியதில்லை என்று தோன்றியது. “ஒரு துலாவின் இரு தட்டுகளில் முழுநிறைநிகர் கொண்டு நாம் நின்றிருக்கிறோம். நீ என்னை ஏற்கவேண்டும், நான் உன்னை உண்டு உடல்கொண்டால் என் அறையில் மீண்டெழுவேன். இன்னொரு நீள்வாழ்வு எனக்கு வாய்க்கும்” என்றான் நகுஷன்.
“நீங்கள் மண்மறைந்தவர். உங்களில் எஞ்சுவதை நான் பெற்றாகவேண்டுமென்பதே நெறி” என்றான் பீமன். “விழைவகலாமல் நான் விண்புக முடியாது… நான் பசித்திருக்கிறேன்” என்றான் நகுஷன். “எந்தையே, உங்கள் ஆறாப்பசி என்பது என்ன?” என்றான் பீமன். “ஏனென்றால் நாங்கள் ஐவருமே ஐவகை பசிகொண்டவர்கள். என் பசி ஊனில். என் இளையோனின் பசி உணர்வில். மூத்தவர் அறிவில் பசிகொண்டவர்.” நகுஷன் அவனை காலத்திற்கு அப்பால் வெறித்திருந்த விழிகளால் நோக்கினான். “என் பசி எங்கு தொடங்கியதென்று எண்ணிப்பார்க்கிறேன்” என்றான். “அவிழா வினாக்களில் இருந்து அது தொடங்கியது என தோன்றுகிறது.”
தனக்குள் என நகுஷன் சொன்னான் “வாழ்க்கை என்பது சில வினாக்களை திரட்டிக்கொள்வது மட்டுமே என்று தோன்றுகிறது. அனைத்து வினாக்களையும் திரட்டி ஒற்றைவினாவென ஆக்கிக்கொள்பவன் விடுதலை அடைகிறான்.” நாகத்தின் விழிகள் இரு நிலைத்த நீர்க்குமிழிகளாக தலைக்குமேல் தெரிந்தன. அதன் உடலில் இருந்து பரவிய குளிரில் அவன் உடல் விரைத்துக்கொண்டது. செயலற்ற உடலில் இருந்து எண்ணச்சொல் என ஏதும் எழவில்லை. “ஒன்றிலிருந்து ஒன்றென அறியா முடிச்சுகள்…” என்றான் நகுஷன். அவன் விழிகள் மாறின. “என் உடல் ஏன் கல்லாகியது? ஏன் மீண்டது அது?”
பீமன் “யார்?” என்றான். நகுஷன் அக்குரலை கேட்காதவன்போல சொல்லிக்கொண்டே சென்றான். “ஏன் அவளை அங்கேயும் கண்டேன்? அவள் ஏன் எனக்கென அங்கும் காத்திருந்தாள்?” பீமன் “எந்தையே, நீங்கள் யார்?” என்றான். மிக அருகே அர்ஜுனனின் குரல் கேட்டது. “யாரது?” என்று நகுஷன் திடுக்கிட்டு திரும்பினான். “இந்திரனா? யார்?” பீமன் “எந்தையே, நீங்கள் அறிய விழைவது எதை?” என்றான். “இங்கே இக்குகைக்குள் இருக்கிறான், என் உள்ளுணர்வு சொல்கிறது” என தருமனின் குரல் கேட்டது. அர்ஜுனனின் அம்பு ஒன்று வந்து குகைமேல் பாறைவளைவை உரசிச்செல்ல அந்த ஒளியில் குகை மின்னி மறைந்தது.
பீமன் விழித்துக்கொண்டு ஒரு கணம் உடல்நடுங்கினான். “விட்டுவிட்டது” என்றான். பின்னர் எழுந்து “எங்கே?” என்றான். முண்டன் “இங்கிருக்கிறீர்கள், பாண்டவரே” என்றான். பீமன் மெல்ல இயல்புமீண்டு “அந்த வினா என்ன?” என்றான். முண்டன் புன்னகை செய்தான். “அதில் திரள்வதுதான் என்ன?” என்றான் பீமன். முண்டன் “நாம் கிளம்புவோம்… இது அல்ல என்றால் இங்கிருப்பதில் பொருளில்லை” என்றான். “என்ன நிகழ்ந்தது?” என்றான். “நீங்கள் அறிந்ததே நானும் அறிவேன்” என்றான் முண்டன். “உங்களுடன் நானும் அங்கிருந்தேன்.” பீமன் முண்டன் அருகே முழந்தாளிட்டு அமர்ந்து “என்ன நிகழ்ந்தது? என் மூதாதை இன்னும் அக்குகைக்குள்தான் இருக்கிறாரா?” என்றான்.
முண்டன் “வருக!” என எழுந்து நடந்தான். அவனைத் தொடர்ந்தபடி பீமன் “சொல்லுங்கள் முண்டரே, அவர் எங்கிருக்கிறார்? நான் அவரை உண்மையில் எப்போது சந்திக்கப்போகிறேன்? அவர் மீள்வது எப்படி?” என்றான். முண்டன் அங்கிருந்த சிறிய சுனை ஒன்றை அணுகி அதன் கரையென அமைந்த பாறையில் நின்றான். பாறையிடுக்கில் ஊறிய நீர் அந்தப் பாறைக்குழிவில் தேங்கி மறுபக்கம் வழிந்து யானை விலாவிலிட்ட பட்டு என மெல்லிய ஒளியுடன் வழிந்து சென்றது. கீழே அது தொட்டுச்சென்ற இடங்களில் பசுமை செறிந்திருந்தது. உள்ளிருந்து எழுந்த ஊற்றால் சுனை அலை ததும்பிக்கொண்டிருந்தது.
முண்டன் அமர்ந்து தன் சுட்டுவிரலை அச்சுனைமேல் வைத்தான். அவன் உளம்குவிகையில் அத்தனை தசைகளும் வில்நாண் என இழுபட்டன. விரிந்தகன்ற அலைகள் திரும்பிவந்து அவ்வூற்றுக்குள் சுழித்து அமிழ்வதை பீமன் கண்டான். மெல்ல சுனை அமைதிகொண்டது. அதன் நீலப்பரப்பில் அவன் நகுஷனை கண்டான். அவனருகே தருமன் அமர்ந்திருந்தான். தருமனின் சொற்களைக் கேட்டு கைகளால் வாய்பொத்தி உடல்வளைத்து நின்றிருந்தான் நகுஷன். பின்னர் குனிந்து அவன் கால்களைத் தொட்டு தலையணிந்தான். அவன் உடலை ஒட்டி விழுந்திருந்த கரிய நிழல் எழுந்து அவனருகே நின்றது. “ஹுண்டன்” என்றான் பீமன். “அவர் ஏன் மூத்தவரை வணங்குகிறார்?”
“அவர் விண்ணேறும் சொல்லை பெறுகிறார்” என்றான் முண்டன். “மூத்தவரிடமிருந்தா?” என்றான் பீமன். முண்டன் “அல்ல, அவர் தந்தை ஆயுஸிடமிருந்து” என்றான். பீமன் விழித்துநோக்கியபடி நின்றான். ஹுண்டனும் நகுஷனும் கைகோத்துக்கொண்டனர். காற்றில் புகை கலைவதுபோல வெளியில் கரைந்து மறைந்தனர். “அவர்கள் விண்புகுந்துவிட்டனர்” என்றான் பீமன். “ஆம்” என்று முண்டன் சொன்னான். “அவர் சொன்னதென்ன?” என்றான் பீமன். “அது ஒற்றைச் சொல்… உதடசைவு ஒரு சொல்லையே காட்டியது.” பீமன் “ஒற்றைச் சொல்லா, அனைத்து வினாக்களுக்கும் விடையாகவா?” என்றான். “ஆம், அது அவர்களுக்குரிய விடை” என்றான் முண்டன்.
முண்டனும் பீமனும் நாகவனத்திலிருந்து வெளியேறி நீரோடை வறண்டு உருவான காட்டுப்பாதையில் நடந்தனர். அதனூடாகவே மான்களும் பன்றிகளும் நடந்துசென்றிருந்தன என்பது காலடித்தடங்களில் தெரிந்தது. “நாம் திரும்பிவிடுவோம்” என்றான் பீமன். “இது மாயமான்வேட்டை என எனக்குத் தெரிகிறது. நுண்மையைத் தேடுபவன் வாழ்வை இழப்பான் என்று எனக்கு எப்போதுமே தோன்றியிருக்கிறது. இப்புவிவாழ்க்கையில் பருண்மைகளே நமக்கு சிக்குபவை. நுண்மைகள் மறுஎல்லையில் தெய்வங்களாலும் ஊழாலும் பற்றப்பட்டிருக்கின்றன. நுண்மைகளில் அளைபவன் தெய்வங்களை நாற்களமாட அறைகூவுபவன்.”
“உண்மை” என்றான் முண்டன். “ஆனால் நுண்மையென ஒன்றை தன் வாழ்க்கையில் அறியப்பெற்றவன் அதை உதறி மீள்வதே இல்லை. நுண்மை தன் அறியமுடியாமையாலேயே அறைகூவலாகிறது. அறியத்தந்த துளியை நோக்கி அறிபவனின் உள்ளத்தை குவிக்கிறது. பாண்டவரே, அறியமுடியாமையை கற்பனையால் நிறைத்துக்கொள்வது மானுட இயல்பு. கற்பனை பெருவெளியென்றே ஆகும் வல்லமைகொண்டது. பருண்மைகள் கற்பனை கலவாதவை. நுண்மையோ கற்பனையால் கணமும் வளர்க்கப்படுவது. அறிக, இப்புவியில் பருண்மைகளில் மட்டுமென வாழும் ஒரு மானுடனும் இல்லை. அறியா நுண்மைகளை நோக்கி தவமிருந்து அழியும்பொருட்டே மண்ணில் வாழ்வது மானுடம்.”
பீமன் பெருமூச்சுவிட்டான். “ஒரு துளி நுண்மை பருண்மையின் பெருமலைகளை ஊதிப்பறக்கவைத்து தான் அமர்ந்துகொள்கிறது. நுண்மையின் ஒளிகொண்ட பருண்மை ஒருபோதுமில்லாத பேரழகு கொள்கிறது. வேதமென்பது என்ன? நுண்மைகளை நோக்கி சொற்களை கொண்டுசெல்லும் தவம்தானே? வேதச்சொல் என்பது நுண்மையின் வெம்மையால் உருகி உருவழிந்த ஒலியன்றி வேறென்ன? பாண்டவரே, கவிதை என்பது பருண்மைகளை ஒன்றுடன் ஒன்று நிகர்வைத்து நடுவே துலாமுள்ளென நுண்மையை உருவகித்தறியும் முயற்சி அல்லவா?”
“அத்தனை கலைகளாலும் மானுடன் அறியமுயல்வதுதான் என்ன? தோன்றல் சுவைத்தல் திளைத்தல் அடைதல் வெல்லல் நோயுறுதல் துயருறுதல் மறைதல் என கைதொட்டு கண்நோக்கி அறியும் பருண்மைகளுக்கு அப்பால் ஏதுள்ளது எஞ்சி? அவை ஏன் போதாமலாகின்றன? ஒளியெழும் காலைக்கு ஒரு இசைக்கீற்று அளிப்பது என்ன? கார்குழலுக்கு ஒரு மலர் மேலுமென சேர்ப்பது எதை?” முண்டன் சொன்னான் “இந்த முள் உங்கள் வெறுமையை தொட்டுவிட்டது, பாண்டவரே, இதையறியாமல் இனி இதிலிருந்து மீட்பில்லை உங்களுக்கு.”
பீமன் புன்னகைத்து “கட்டுவிரியன் கடித்துவிட்டு மெல்ல பின் தொடரும். கடிபட்ட உயிர் ஓடிக்களைத்து சரியுமிடத்திற்கு வந்துசேரும்” என்றான். முண்டன் உரக்க நகைத்தான். “நாம் செய்யவேண்டியதென்ன?” என்றான் பீமன். “காத்திருப்போம்… நம்மை நோக்கி வருவதென்ன என்று பார்ப்போம்.” பீமன் “வருமென்று என்ன உறுதி உள்ளது? நிகழ்வுப்பெருக்கென ஓடும் இப்பெருவெளிக்கு நம் மீது என்ன அக்கறை?” என்றான். முண்டன் “அது நம்மை கைவிடமுடியாது. கைவிட்டால் அதற்கு ஒழுங்கோ இலக்கோ இல்லையென்று பொருள். பாண்டவரே, மெல்லிய நீர்த்துளிகூட தன்னை சிதறடிக்க ஒப்புவதில்லை” என்றான்.
அன்று உச்சிப்பொழுதில் அவர்கள் நாகர்களின் சிற்றூர் ஒன்றை சென்றடைந்தனர். தொலைவிலேயே நாய்கள் குரைக்கும் ஒலி கேட்டது. உயர்ந்த மரம் ஒன்றின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பரணிலிருந்து முழவோசையும் எழுந்தது. நாய்கள் தொடர நச்சு அம்புகள் இறுகிநின்றிருந்த விற்களுடன் ஆறு நாகவீரர்கள் அவர்களை நோக்கி வந்தனர். பிறர் நின்றுவிட ஒருவன் மட்டும் நச்சு வேலுடன் அவர்களை அணுகிவந்து “எவரென்று தெரிந்துகொள்ள விழைகிறோம்” என்றான். “நாங்கள் வழிப்போக்கர்கள். நாகவனத்தை பார்க்கச் சென்றோம்” என்று முண்டன் சொன்னான். சட்டென்று எம்பி தலைகீழாக சுழன்று அதேபோல நின்று “ஆடலும் பாடலும் அறிந்தவன். என் கலைகளைக் கண்டு நீங்கள் நகைக்கலாம். இவர் எதையும் அறியாதவர். ஆகவே இவரை வெறுமனே நோக்கி சிரிக்கலாம்” என்றான்.
அவன் முகம் மலர்ந்தது. “நகைக்கூத்தரா? வருக!” என்றான். முண்டன் பாய்ந்து அவன் தோள்மேல் ஏறி நின்று “எழுக புரவியே!” என்றான். அவன் திகைப்பதற்குள் குதித்து நிலத்தில் நின்று “ஆணையிடுகையில் புரவிமேல் அமர்வது எங்கள் வழக்கம்” என்றான். அவன் உரக்க நகைத்து “எங்களூர்களுக்கு நகைக்கூத்தரோ சூதரோ வருவதில்லை. நாங்கள் அவர்கள் தேடும் பொருள் அளிக்கும் வளம்கொண்டவர்களல்ல” என்றான். “நான் பொருள் தேடி வரவில்லை” என்றான் முண்டன். “பிறிது ஏது தேடி வந்தீர்கள்?” என்றான் நாகன். “உணவு, உடை” என்றான் முண்டன். “நல்ல பரிசுப்பொருட்கள், அணிகள், தங்கம், அருமணிகள்.” நாகன் “அதைத்தான் நாங்கள் பொருள் என்கிறோம்” என நகைக்க “ஆ, நீங்களும் என் மொழியையே பேசுகிறீர்கள்” என்றான் முண்டன்.
மூங்கில்புதர்களால் வேலியிடப்பட்ட சிற்றூரில் இழுத்துக்கட்டப்பட்ட யானைத்தோல் கூரைகள்கொண்ட சிறுகுடில்கள் வட்டமாக சூழ நடுவே குடித்தலைவனின் மூன்றடுக்குக் கூரைகொண்ட குடில் இருந்தது. அதன் முன் அமைந்த முற்றத்தில் அவர்கள் கொண்டுசென்று நிறுத்தப்பட்டனர். நாகர்குடிகள் கூச்சலிட்டபடி ஓடிவந்து அவர்களை சூழ்ந்துகொண்டன. இடையில் குழந்தைகளை ஏந்திய பெண்கள். அன்னையரின் ஆடைகளைப்பற்றிய குழந்தைகள். புழுதிமூடிய சிற்றுடல்கள், மரவுரிகள், கல்மாலைகள், மரக்குடைவு வளையல்கள். மலர்சூடிய நீள்கூந்தல்கொண்ட கன்னியர். வேட்டைக்கருவிகளும் படைக்கலங்களுமாக தோள்தசை இறுகி, வயிற்றுநரம்புகள் வரிந்து, வில்லெனும் கால்கள் கொண்ட இளையோர்.
பெருங்குடிலுக்குள் இருந்து முதிய நாகர்குடித்தலைவன் தன் நாகபடக் கோலுடன் இடைவரை கூன்விழுந்த உடலுடன், ஆடும்தலையில் நாகக்கொந்தையுடன், பழைய எலும்புகள் சொடுக்கொலி எழுப்ப, மூச்சொலியும் முனகலுமாக உள்ளிருந்து மெல்ல வெளிவந்து அவர்களை பழுத்த விழிகளால் நோக்கினார். “இவன் யார்?” என்று பீமனை நோக்கி விரல்சுட்டி காட்டினார். கணுக்கள் முறிந்து இணைந்தவைபோல உருவழிந்திருந்தது அவ்விரல். “நகைக்கூத்தர். இவன் அக்குள்ளரின் மாணவன். வித்தைகள் காட்டுவார்கள் என்றார்கள்” என்றான் அவர்களை அழைத்துவந்தவன். நாகர்களின் உடல்கள் சிறியவை, முதுமையால் மேலும் சிறுத்து அவர் ஒரு சிறுவனை போலிருந்தார்.
ஆடும் தலையில் நிலைகொண்ட விழிகளுடன் அவனை நோக்கிக்கொண்டிருந்தார். “நான் உன்னை முன்னரே கண்டிருக்கிறேன். உன்னை அல்ல. உன் மூதாதையரில் ஒருவரை. அல்லது…” என்றபின் “பெருந்தோளனே, உன் குடி என்ன? பெயரென்ன?” என்றார். “அஸ்தினபுரியின் குருகுலத்தில் பிறந்தவன். பாண்டுவின் மைந்தான். என் பெயர் பீமன்” என்றான் பீமன். “ஆம், நினைத்தேன்” என்றார் அவர். “என் பெயர் தண்டகன். உன் குடிமூதாதை ஒருவரை நான் முன்பு கண்டதுண்டு.” பீமன் “எப்போது?” என்றான். “நெடுங்காலத்திற்கு முன்பு… நான் நீணாட்களாக வாழ்கிறேன்” என அவர் புன்னகைத்தார். “என் கண்ணெதிரே நாடுகள் உருவாகி அழிந்துள்ளன. தலைமுறைகள் பிறந்து இறந்துகொண்டுள்ளன” என்றார்.
“நீங்கள் கண்ட என் மூதாதையின் பெயரென்ன?” என்றான் பீமன். “அவர் பெயரை நான் மறந்துவிட்டேன். உயரமானவர். மிகமிக உயரம்… மெலிந்த வெண்ணிற உருவம்… நான் அவரை சிபிநாட்டுப் பாலையில் கண்டேன்.” பீமன் “பீஷ்மர், என் பிதாமகர்” என்றான். “ஆம், அவர் பெயர் பீஷ்மர். காமநீக்க நோன்புகொண்டவர் என்றார்கள்.” அவர் அவனை நோக்கி “ஷத்ரியர்களை நாங்கள் எங்கள் குடிகளுக்குள் ஒப்புவதில்லை…” என்றார். “நான் ஷத்ரியனாக இல்லை இப்போது. காடேகி குரங்குகளுடன் வாழ்கிறேன்.” அவர் புன்னகைத்து “ஆம், உன்னிடம் குரங்குமணம் எழுகிறது. ஆகவேதான் உன்னை என் உள்ளம் ஏற்கிறது” என்றார். “இங்கு ஏன் வந்தீர்கள்?”
“நான் ஒரு மலரை தேடிவந்தேன்” என்றான் பீமன். “அதன் பெயர் கல்யாண சௌகந்திகம் என்றார்கள். அதன் நறுமணத்தை நான் உணர்ந்தேன். அதை என் தேவிக்கென கொய்துசெல்ல வந்தேன்.” அவர் அவனை நோக்கி புன்னகைத்து “அதையெல்லாம் பொருட்டென எண்ணும் நிலையில் நீ இன்னமும் இருப்பது மகிழ்வளிக்கிறது” என்றார். பின்னர் உடல்குலுங்க வாய்விட்டு நகைத்து “நன்று, பொருட்டென எண்ணாமல் அதை அறியமுடியாது, அறியாமல் கடக்கவியலாது” என்றார். பீமன் சற்றே சினம்கொண்டாலும் அதைக் கடந்து “நான் ஏன் அதைத் தேடிவந்தேன் என நானே வியந்துகொண்டிருக்கிறேன், மூத்தவரே” என்றான். “அதை அறிவதும் அம்மலரை அறிவதும் நிகர்” என்றார் அவர்.
“நீங்கள் பீஷ்மபிதாமகரை எப்போது பார்த்தீர்கள்?” என்றான் பீமன். “நெடுங்காலம் முன்பு நிகழ்ந்தது அது. அன்று நான் என் குடியை விட்டு நீங்கி உலகை முழுமையாகக் காணும்பொருட்டு அலைந்து கொண்டிருந்தேன். பாஞ்சாலத்திற்கும் சிந்துவுக்கும் கூர்ஜரத்திற்கும் சென்றேன். அங்கிருந்து சிபிநாட்டுப் பாலையில் சென்று அங்குள்ள மக்களுடன் வாழ்ந்தேன். என் குலத்தின் வருவதுரைக்கும் முறைகளும் உளமறியும் நெறிகளும் எங்கும் எனக்கு தேவையான பொருளை ஈட்டியளித்தன. என் வழிச்செலவுக்கென மட்டுமே அவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தேன்” என்றார் தண்டகர்.
“என்னிடம் அனந்தம் என்னும் யானம் இருந்தது. அதில் நாகரசத்தை நிரப்பி அதை பார்ப்பவரின் உளமென்றாக்க என்னால் இயலும். விழிப்பு, கனவு, ஆழ்வு, முழுமை என்னும் நான்கு நிலைகளிலும் ஒருவன் அதில் தன்னை நோக்கமுடியும். அதை நோக்கும்பொருட்டு பீஷ்மர் வந்தார். அன்று அவர் இளைஞர்.” முண்டன் “அன்று தங்கள் வயதென்ன?” என்றான். அவர் மீண்டும் உடல்குலுங்க நகைத்து “அன்றும் நான் முதியவனே…” என்றார். பீமன் “அவர் அதில் தன்னை நோக்கினாரா?” என்றான். “ஆம், நோக்கி அதிர்ந்தார். அவர் கண்டது அவர் எண்ணியதை அல்ல.”
முண்டன் “ஆம், எப்போதுமே எண்ணியது எழுவதில்லை” என்றான். பீமன் “அவர் கண்டது எதை, மூத்தவரே?” என்றான். “அவர் எண்ணியது புருவை, கண்டது யயாதியை” என்றார் தண்டகர். “நான் அவருக்கு அவர் குலமூதாதையரின் கதையை அவருக்குள்ளிருந்தே கண்டெடுத்து சொன்னேன். அஞ்சி அமர்ந்திருந்தார். பின்னர் தெளிந்து விலகிச்சென்றார்.” பீமன் நீள்மூச்சுடன் “ஆம், புரிகிறது” என்றான். முண்டன் “மாறாமலிருக்கும்படி செலுத்தப்பட்ட ஊழ் கொண்டவர்களைப்போல அளிக்குரியோர் எவருமில்லை” என்றான்.
இளந்தலைவன் “மூத்தவரே, இவர்களை நாம் வரவேற்கலாமா?” என்றான். “ஆம், இவர்களுக்கு ஆவன செய். இவர்கள் காட்டும் கலைகளை கண்டு நாமும் மகிழ்வோம்” என்றார் தண்டகர். அவர் கைகளை முட்டில் ஊன்றி முனகியபடி எழப்போனபோது பீமன் “மூத்தவரே, நான் உங்கள் கால்களை தலைசூடலாமா?” என்றான். அவர் புன்னகைத்து “அது வழக்கமில்லை. நீ ஷத்ரியன்” என்றபின் “இங்குள நாகர் அதிர்ச்சியுறக்கூடும்” என்றார். “என் மூதாதை நீங்கள், உங்கள் குருதி நகுஷனிலூடாக என் குலத்திலும் உள்ளது” என்றான் பீமன். அவர் “ஆம்” என்று சொல்ல பீமன் சென்று அவர் காலடிகளை தொடப்போனான். அவனை அழைத்துவந்த நாகவீரன் “அது முறையல்ல… உங்களுக்கு அவர் வாழ்த்துரைத்தால் நீங்கள் எங்கள் குடியென்று ஆகிறீர்கள்” என்றான்.
பீமன் “ஆம், நாகனாகவும் நான் இருக்கிறேன்” என்றான். “எங்கள் குருதி தூயது, அதுவே எங்கள் தகுதி” என்றான் அவன். பீமன் “வீரரே, குருதிக்கலப்பில்லாத குடி என பாரதவர்ஷத்தில் ஏதுமில்லை. என் இளையோன் நாகர்குடிப் பெண்ணை மணந்தவன். நான் அரக்கர்குடிப் பெண்ணை மணந்தேன். எங்கள் குடியிலும் அரக்கரும் நாகரும் குருதி செலுத்தியுள்ளனர்” என்றான். “அப்படியென்றால் குடி என்பது பொய்யா? நீங்கள் தலைக்கொள்ளும் நால்வர்ணமும் பிழையானதா?” என்றான் நாகன்.
“எவன் பிறப்பறுக்கும் பெருஞ்செயலை மட்டுமே செய்கிறானோ அவன் அந்தணன். எது தனித்துவமேதுமின்றி, தான்மட்டுமேயென்றாகி, இயல்புகளனைத்தும் சூடி, ஏதுமில்லையென்றாகி இருக்கிறதோ அதில் தன் இறுதிப்பற்றை கொண்டிருப்பவன் அவன். அதைவிட்டு உலகியலில் உழல்பவன் அந்தணருக்குரிய கருவில் பிறந்தாலும் அந்தணன் அல்ல” என்றான் பீமன். “பிறர்நலம் காக்கும்பொருட்டு வாழ்பவன் ஷத்ரியன். கொடையினூடாக முழுமைகொள்பவன் வைசியன். உருவாக்கி உணவூட்டி வாழ்ந்து நிறைவடைபவன் சூத்திரன். செயல்களால் மட்டுமே வர்ணங்கள் உருவாகின்றன. பிறப்பினால் அல்ல.”
பீமன் தொடர்ந்தான் “நினைப்பறியா தொல்காலத்திலேயே இங்கு குடிகளும் குலங்களும் கலக்கத் தொடங்கிவிட்டன. எனவே குடித்தூய்மை குலத்தூய்மை என்பவை பொய்நம்பிக்கைகளன்றி வேறல்ல. அனைத்து மானுடருக்கும் உடல்சேர்க்கையும் பிறப்பும் இறப்பும் நிகரே. நாங்கள் அந்தணராயினும் அல்லவென்றாயினும் வேள்விசெய்கிறோம் என்னும் வேதச்சொல்லே குலமும்குடியும்வர்ணமும் பிறப்பினாலன்று என்பதற்கான முதற்சொல் ஆகும். பிறப்பில் மானுடர் விலங்குகளே. நெறிகளை ஏற்றுக்கொள்ளும் உபநயனத்தாலேயே குலமும் குடியும் அமைகின்றன.”
நாகவீரன் குழப்பத்துடன் தண்டகரை நோக்கிவிட்டு தலைவணங்கினான். இன்னொரு நாகவீரன் வந்து வணங்கி “குடிலுக்கு வந்து இளைப்பாறுக, விருந்தினரே!” என்றான். அவர்கள் அவனைத் தொடர்ந்து சென்றபோது இருமருங்கும் கூடிநின்ற நாகர்கள் அவர்களை நோக்கி சிரித்தனர். கைநீட்டி பேசிக்கொண்டனர். முண்டன் “நீர் சொன்னவற்றை எங்கு கற்றீர்?” என்றான். “அறியேன், நான் ஏன் அவற்றை சொன்னேன் என்றும் தெரியவில்லை” என்றான் பீமன். பின்னர் நின்று “நான் அஞ்சுகிறேன், முண்டரே… நான் எப்படி அச்சொற்களை சொன்னேன்? அவை நன்கு யாக்கப்பட்டவை. நான் எங்கே கற்றேன் அவற்றை?” என்றான். முண்டன் “காலப்பக்கத்தை புரட்டிப்பார்க்கலாம். ஆனால் அதற்கு நிறையவே உணவு தேவைப்படும்” என்றான். “விளையாட வேண்டாம்… என் சித்தம் பிறழ்ந்துவிட்டதா என்றே ஐயம்கொள்கிறேன்” என்று பீமன் சொன்னான்.
அவர்களை நாகர்கள் ஒரு தோல்குடிலுக்குள் கொண்டுசென்றனர். அவர்கள் அருகே ஓடிய ஓடையில் நீராடி வந்ததும் புதிய மரவுரியாடைகள் அளிக்கப்பட்டன. அடுமனைக்கு அருகிலேயே சிறிய குடிலொன்றுக்குள் அமர்ந்து பீமன் உணவுண்ணலானான். அவன் உண்பதைக் காண நாகர்குடியே சூழ்ந்து நின்றது. சிறுவர்கள் அறியாது மெல்ல அவனை அணுகி அவனருகே சூழ்ந்து அமர்ந்துகொண்டனர். பெண்கள் உளக்கிளர்ச்சியால் ஒருவரை ஒருவர் தழுவிநின்றனர். இளையோர் ஒருவரோடொருவர் விழிதொட்டுக்கொண்டனர்.
முண்டன் உணவுண்டு எழுந்து நின்று “என் உள் அனல் நிறைந்துவிட்டது… இனி காடு பற்றி எரியும்” என்றான். பீமன் அவனை திரும்பிப்பார்க்காமல் உண்டுகொண்டிருந்தான். “நான் காலத்தை புரட்டி நோக்குபவன்…” என அவன் அப்பெண்களை நோக்கி சொல்ல அவர்கள் வாய் பொத்தி சிரித்தபடி பின்னகர்ந்தனர். அவன் துள்ளி பல சுருள்களாக சுழன்று சென்று நின்று “ஆ” என்றான். பீமன் “என்ன?” என்றான். “இது எந்த இடம்? நாகநாட்டில் பீதபுரம் என்னும் நகரம். முன்பு இது ஒரு சிற்றூராக இருந்தது… இதோ, ஒரு சிற்றாலயம். இங்கு பாண்டவனாகிய பீமன் வந்திருக்கிறான். அவன் உணவருந்திய இடத்தில் நாட்டப்பட்ட சிறுகல் தெய்வமாகியிருக்கிறது.”
பீமன் ஆர்வத்துடன் எழுந்து அருகே வந்தான். முண்டன் மீண்டும் பலமுறை சுருள்பாய்ச்சல் கொண்டு அருகே வந்து நின்று “பாண்டவரே, நீங்களா?” என்றான். “ஆம், நெடுந்தொலைவு சென்றீர்களோ?” என்றான். “நாம் எங்கிருக்கிறோம்?” என்றான் முண்டன். பீமன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் சூழ நோக்கிவிட்டு “இங்குதானா?” என்றான். பீமன் “சொல்லும், நான் சொன்னது எப்படி எனக்குத் தெரிந்தது?” என்றான். “என்ன சொன்னீர்?” என்றான் முண்டன். “நாகர்களிடம் நான் சொன்னது…”
“அவை சர்ப்பநீதி என்னும் நூலில் உள்ள சொற்கள்” என்றான் முண்டன். “நான் அந்நூலை படித்ததில்லை” என்றான் பீமன். “வாய்ப்பில்லை, அந்நூல் இன்னும் எழுதப்படவில்லை.” பீமன் “என்ன சொல்கிறீர்?” என்றான். “நாகத்திடம் நீங்கள் பிடிபட இன்னும் நாளிருக்கிறது. அந்நிகழ்வை சூதர் பாடியலைய மேலும் நாட்கள் தேவை. அதிலிருந்து அஸ்தினபுரியின் கவிஞரான அக்னிபாலர் தன் சிறிய நெறிநூலை யாக்க மேலும் நாள் கடக்கும். அது உங்கள் குருதிவழிவந்த மன்னராகிய ஜனமேஜயனின் காலத்தில்… அன்று இந்நூல் மிகவிரும்பி கற்கப்பட்டது… ஏனென்றால் நாகர்குலத்து முனிவரான ஆஸ்திகன் வந்து நாகவேதத்தை மீண்டும் நிறுவிவிட்டுச் சென்றிருக்கிறார்.”
பீமன் சில கணங்கள் அவனையே கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றபின் தலையை அசைத்தான். “நாகவடிவு கொண்டிருந்த நகுஷனுக்கு மூத்த பாண்டவராகிய யுதிஷ்டிரர் உரைத்ததாக இச்சொற்கள் வருகின்றன” என்றான் முண்டன். பீமன் சில கணங்கள் நிலைவிழிகளுடன் நோக்கியபின் வெடித்துச் சிரித்தான்.