- அறிதலின் பேரிடர்
‘நாளை சூரியன் உதயமாகும்.’
மிகவும் எளிமையான கூற்று. இந்தக் கூற்று ஒரு அன்றாட உண்மையை முன்வைக்கிறது. ஐந்து வயது குழந்தை அறியும். ஆனால் இந்தக் கூற்றில் மனித குலமே இதுவரை களைய முடியாத பெரும் தத்துவ சிக்கல் ஒன்று ஒளிந்துள்ளது. இந்தக் கூற்றை நாம் உண்மையில் தர்க்க ரீதியாக சரியென நிறுவ முடியுமா?
ஏனெனில் நேற்று நமக்கு நிகழ்ந்தது நம் அனுபவம். இந்த நொடி அனுபவத்தின் வழியே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் நாளை? இன்னும் நிகழாததை எப்படி அனுபவிப்பது? அவதானிப்பது? ஆகையால் ‘நாளை சூரியன் உதயமாகும்’ என்பதை நம் அனுபவத்தைக் கொண்டு அறிய முடியாது. அனுபவம் நிகழ் மற்றும் கடந்த காலத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அப்போது தூய தர்க்கத்தின் வழியாக சரியென நிறுவ முடியுமா? அதைக்கொண்டும் இந்தக் கூற்றை சரியென சொல்லமுடியாது. ஏனெனில் ‘நாளை சூரியன் உதயமாகாது’ என்பதற்கும் சமமான வாய்ப்பு உள்ளது.
இதை இப்படி புரிந்துகொள்ளலாம். சூரிய உதயமே இல்லாத ஒரு கோளில் இருந்து வேற்றுகிரகவாசி ஒருவன் பூமிக்கு வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். பூமியில் சூரிய உதயத்தை காண்கிறான். பதினெட்டாம் நூற்றாண்டு மனிதனிடம் இருந்த அனைத்து தர்க்க முறைமையும் அவன் அறிவான். அவன் நாளையும் சூரியன் உதயமாகும் என்பதை இன்றே சரியென தர்க்கத்தின் மூலம் நிறுவ முடியுமா?
இதேபோல இன்னொரு கூற்றையும் எடுத்துகாட்டலாம்.
- இதுவரை நாம் கண்ட காகங்களின் நிறம் கறுப்பு.
- எனவே அனைத்து காகங்களின் நிறமும் கறுப்பு.
பெரும் சுவர் ஒன்று இருக்கிறது. அதன் ஒருபுறம் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். மறுபுறம் என்னென்ன உள்ளன என்று காணமுடியாத அளவுக்கு உயரமான சுவர். ஆனால் அந்த சுவற்றில் ஒரு வாயில் மட்டும் உள்ளது. அந்த வாயிலின் வழியாக இந்தப்புறம் நம்மை நோக்கி வரும் அனைத்தையும் நம் புலன்களால் அறிய முடியும்.
ஒரு பறவை முதலில் பறந்து வருகிறது. கா கா என்று கரைந்து வருவதால் அதற்கு காகம் என்று பெயரிடுகிறோம். மேலும் அது கறுப்பு நிறமாக உள்ளது. இனி வரும் ஒவ்வொரு காகத்தையும் நாம் கவனித்துக்கொண்டே இருக்கிறோம். அடுத்து வந்த காகமும் கறுப்பு நிறம். அதற்கடுத்து கறுப்பு. அடுத்து…அடுத்து…கறுப்பு…கறுப்பு… எண்ணற்ற காக்கைகள். ஆனால் அனைத்தும் கறுப்பு நிறம்.
மறுபுறம் நின்றிருப்பவர்களில் கூர்மையான ஒருவர் ‘நண்பர்களே! கவனித்தீர்களா? இதுவரை நாம் கண்ட அனைத்து காகங்களின் நிறமும் கறுப்பு.’ என்று சொல்கிறார். ‘ஆம். முதல் காகத்துக்கும் கடைசி காகத்துக்கும் உள்ள தொடர்பை பற்றித்தான் நானும் யோசித்துக்கொண்டிருந்தேன்’ என்கிறார் இன்னொருவர். மூன்றாவது நபர் இன்னும் ஒரு படி மேலேச் சென்று ‘இனி வரப்போகும் காகங்களும் ஏன் கறுப்பாக இருக்கக் கூடாது?’ என்று தன் தர்க்கத்தை முன்வைக்கிறார்.. இதை நாம் தொகுத்து அறிதலின் தர்க்கம் (Inductive Logic) எனலாம். அதாவது பொதுவாக இருக்கும் ஒரு அம்சத்தை – கறுப்பு நிறம்- அடிப்படையாகக் கொண்டு அனைத்து தனித்தனி நிகழ்வுகளையும்- தனித்தனி காகங்கள்- ஒரே சரடில் தொகுக்கிறோம். இந்த அறிதல் முறைமையை தொகுத்து அறிதல் (Induction) எனலாம்.
ஆனால் டேவிட் ஹ்யூம் (1711-1776) என்ற தத்துவவாதி ‘இங்கு ஒரு பெரும் தத்துவச்சிக்கல் உள்ளது’ என்கிறார். ஏனெனில் யுகயுகங்களாக தலைமுறை தலைமுறையாக அமர்ந்து நோக்கினாலும் இயற்கை ஒவ்வொன்றாக அனுப்பும், இனி அனுப்பப்போகும் காகம் கறுப்பு என்பதை நம்மால் தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியாது என்கிறார். உண்மையில் இங்கு நிகழ்ந்தது ஒரு தாவல்.
அனால் இதுவரை நாம் பார்த்த காகங்கள் அனைத்தும் கறுப்புதான் என்ற அனுபவ உண்மையை கண்ணை மூடிக்கொண்டு மூர்க்கமான தர்க்கத்தின் மூலம் மறுக்க முடியாது. ஆனாலும் அதே சமயம் எத்தனை காகங்களைப் பார்த்தாலும் அனைத்து காகங்களும் கறுப்பு என்று திட்டவட்டமாக சொல்லவும் முடியாது என்ற தத்துவசிக்கலின் ஆழமும் நம் முகத்தில் அறைகிறது.
யோசிக்க யோசிக்க ஒரு பெரும் தத்துவச்சிக்கலாக விரிவது இது. சில தனித்தனியாக காகங்களை மட்டும் அவதானித்துவிட்டு இனி நாம் அவதானிக்கப்போகும் அனைத்து காகங்களையும் பற்றியும் ஒரு பொது கருத்தை நோக்கி செல்வதில் உள்ள பேரிடர் (Problem of Induction) இதுதான்.
ஆனால் இந்த நிகழ்வுகளில் இன்னொரு ஆச்சரியமான உண்மையை அறிகிறோம். இதுவரை ஒரு நாளும் இயற்கை நீலநிற காகத்தை அனுப்பவில்லை. பச்சை காக்கையை எவரும் பார்த்ததில்லை. இயற்கையின் அடியில் உள்ள இன்னொரு ஒழுங்கு நமக்கு புலனாகிறது. இயற்கையின் அந்த மாறாத்தன்மையில் நம்பிக்கை கொள்கிறோம். இந்தமுறை மிக தைரியமாக தொகுத்து அறிதலுடன் பிணைந்த இன்னொரு ஊகத்தை முன்வைக்கிறோம். இயற்கை ஒழுங்கானது. மாறாதது. ஒரே இசைவு கொண்டது. இதை Universality of nature என்கிறோம்.
Universality of nature ஒரு புது உற்சாகத்தைத் தருகிறது. புதிதாகக் கண்டுகொண்ட இந்த அறிதல் முறைமையின் அடிப்படையில் அடுத்து வரும் இன்னொரு புதிய பறவையை கவனிக்க ஆரம்பிக்கிறோம். அது வாயிலின் வழியே பறந்துவந்து அமர்ந்து கூ..கூ..கூ என்று இனிமையாக கூவுகிறது. சிலர் அந்த இசையில் மெய்மறக்கிறார்கள். வேறு ஒரு கூட்டம் முன்பு வந்த காகத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மரங்கள், விலங்குகள் என்று வரும் ஒவ்வொன்றையும் அவதானிக்கிறோம். இவ்வாறு சுவரின் அந்தப்புறம் இருந்து வரும் அனைத்து பொருட்களையும் இந்தப்புறம் அமர்ந்து அவதானிக்கிறோம். அந்த சிறுசிறு அவதானிப்பில் இருந்து கட்டி எழுப்பிய கோபுரங்கள்தான் இன்று நாம் காணும் ஒவ்வொரு அறிவுத்துறையும்.
ஆனால் இயற்கை மாறாததன்மை கொண்டிருக்கிறது என்ற ஊகத்தின் அடிப்படையில் இந்த அறிதல் முறை இயங்குகிறது. இது ஊகம் மட்டுமே என்பதால் தொகுத்தறிதல் முன்வைக்கும் கூற்றுகளை நாம் 100 சதம் உறுதியாக எப்போதுமே நிறுவ முடியாது. தொகுத்து அறிதல் முறையின் தத்துவச்சிக்கல் இதுதான்.
சில அடிப்படைகள். தகவல்களை தர்க்க ரீதியாக தொடர்புபடுத்தி முடிவுகள் அடையப்படுகின்றன. விவாதப் பொருளுடன் தொடர்புடைய தகவல்கள் இல்லாதபோது யூகிக்கிறோம். தகவல்கள் முடிவுக்கு திட்டவட்டமான ஆதாரமாக இருந்தால் அதை சரியான வாதம் என்கிறோம். தகவலுக்கும் முடிவுக்கும் உள்ள தொடர்பு திட்டவட்டமாக ஆதாரப்பூர்வமாக தொடர்புடையாதாக இருப்பதை கூரிய வாதம் என்கிறோம்.
இதேப்போன்று இன்னொரு அறிதல் முறையும் உள்ளது. அது Deductive தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
- அனைத்து பென்குயின்களும் பறவைகள்
- அனைத்து பறவைகளும் விலங்குகள்
- ஆக, அனைத்து பென்குயின்களும் விலங்குகள்
இதற்கும் தொகுத்தல் அறிதல் முறைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் இதில் கூற்றுகள் 1 மற்றும் 2 உண்மையாக இருந்தால் அதன் முடிவுக் கூற்று 3-ம் உண்மையென செல்லுபடியாகக் கூடியது. இந்த அறிதல் முறைதான் கணிதம் மற்றும் தூய தர்க்கம் போன்ற துறைகளின் சுவாசம். அதாவது முற்கூற்றுகளின் உண்மையும் அவற்றுக்கு இடையே உள்ள கறாரான தர்க்க தொடர்பு மட்டுமே அதற்கு போதும். ஆனால் தொகுத்து அறிதலின் முடிவு கூற்று அதன் ஆதாரமாக – இதுவரை கண்ட தனித்தனி நிகழ்வுகள்- நிற்கும் கூற்றுகளுடன் நிற்காது. அது மேலும் ஒரு தர்க்க தாவலை – அனைத்து நிகழ்வுகள்- அடைந்திருக்கும்
இந்த இரு அறிதல் முறைகளும் இருவகை வாதங்களுக்கு வலிமை சேர்க்கிறது. தொகுத்து அறிதல் அனுபவவாதத்திற்கு வலு சேர்க்கிறது. Deductive வாதம் தூய பகுத்தறிவு வாதத்தை முன்வைக்கிறது.
இரு அறிவியலாளர்களை இந்த இரு அறிதல்முறைக்கு உதாரணங்களாக சொல்வதுண்டு. நியூட்டன் (1643-1727) அனுபவவாதத்தையும் டெகார்தே (1596-1650) பகுத்தறிவுவாதத்தையும் வளர்தெடுத்தார்கள். ஆனால் இருவரும் கறாராக தன் முறைமையை மட்டும் எடுத்தாளவில்லை. அறிவு விரிய விரிய அவதானிப்புகள் தேவை என்றார் டெகார்தே. அதே போல நியூட்டனின் முறைமையும் நுண்கணிதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
ஹ்யூம் முன்வைத்த இன்னொரு தத்துவ சிக்கல். காரண காரிய தொடர்பு பற்றியது. காரணத்துக்கும் காரியத்துக்கும் உள்ள தொடர்பையும் நாம் தர்க்க ரீதியாக நிறுவ முடியாது என்கிறார் ஹ்யூம். ஹ்யூமின் இந்த இரு தத்துவ சிக்கல்களும் அறிவியலின் அடித்தளத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.
ஹ்யூமின் இந்த ஐயவாதங்களுக்கான மறுமொழி என்று பின்வந்த நவீன தத்துவ சிந்தனைகளைச் சொல்லலாம். இம்மானுவேல் கான்ட் (1724-1804) மெய்மையை இரண்டாக பிரிக்கிறார். மெய்மையை ‘அப்படியே’ நாம் அறிவதில்லை. காலம், வெளி, காரண-காரிய தொடர்பு போன்றவற்றைப் பற்றி நம் மனத்தில் உள்ள a priori கருத்தாக்கங்களின் வழியேத்தான் இந்த உலகத்தை அறிகிறோம். இந்த உலகத்தை Phenomenal உலகம் என்கிறார். மெய்யான உலகம் (Noumenal world) நம் அறிதலுக்கு அப்பாலுள்ளது. அனுபவத்தை கருத்தில் கொள்ளாத கோட்பாடு வெறுமையானது. அதேபோல கோட்பாட்டை கருத்தில் கொள்ளாத அனுபவமும் குருட்டுத்தனமானது என்றார். இவ்வாறு கான்ட் அனுபவ வாதத்தையும் பகுத்தறிவு வாதத்தையும் ஒருங்கிணைத்தார்.
ஹ்யூம் சிக்கலுக்கு கார்ல் பாப்பரின் (1902-1994) மறுமொழி என்ன? தனித்தனி நிகழ்வுகளை அவதானித்து நாம் ஒரு பொதுவான விதியை, கோட்பாட்டை உறுதியாக உய்த்துணர முடியாது என்ற ஹ்யூமின் வாதத்தை பாப்பர் ஏற்றுக்கொள்கிறார். மேலும் மெய்மைக்கும் கோட்பாட்டுக்கும் உள்ள தொடர்பை விளக்குக்கிறார்.
‘அனைத்து காகங்களும் கறுப்பு’ என்ற கோட்பாட்டை (T) எடுத்துக்கொள்வோம். இந்தக் கோட்பாடு தர்க்க ரீதியாக ஒரு கணிப்பை (P) முன்வைக்கிறது. அதாவது எந்த ஒரு நேரத்திலும் அவதானிக்கப்படும் ஒரு காகம் கருமையாகத்தான் இருக்கும் என்பதை.
- கோட்பாடு T கணிப்பு P-ஐ சுட்டுகிறது.
- கணிப்பு P மெய்யானது.
- எனவே, கோட்பாடு T-யும் மெய்யானது.
இந்த வாதத்தில் முற்கூற்றுகள் சரியாக இருக்கலாம். ஆனால் முடிவு தவறாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. சுவற்றின் அந்தப்புறம் நீலநிற காகங்கள் இருக்கலாம் என்ற ஒரு சிறு காரணம் அதை தகர்க்க போதும்.
ஆகையால் நாம் கோட்பாட்டை வேறுவகையில் முன்வைக்கலாம்.
- கோட்பாடு T கணிப்பு P-ஐ சுட்டுகிறது.
- கணிப்பு P மெய்யானது அல்ல.
- எனவே, கோட்பாடு T-யும் மெய்யானது அல்ல.
இதுதான் தர்க்க ரீதியாக கறாரான வாதம். கார்ல் பாப்பரின் வாதம் இதுதான். ஒரு கோட்பாடு அது முன்வைக்கும் கணிப்புகளின் மெய்மையைக் கொண்டு அந்த கோட்பாடு மெய் என்று தர்க்க ரீதியாக நிறுவ முடியாது. ஆனால் ஒரே ஒரு எதிர் கணிப்பை அவதானிப்பதன் மூலம் அந்த கோட்பாடு தவறு என்று தர்க்க ரீதியாக நிறுவ முடியும். இதை பாப்பரின் பொய்பித்தல் வாதம் என்கிறோம்.
உதாரணமாக, ஒரு தம்பதிக்கு இரு குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தையின் பாலினத்தை கணிக்க இரு கோட்பாடுகள் உள்ளன எனக் கொள்வோம்.
கோட்பாடு ஒன்று முதல் குழந்தை ஆண் என்ற கணிப்பை மட்டும் முன்வைக்கிறது. இரண்டாவது குழந்தையைப் பற்றி எந்தக் கணிப்பும் அந்த கோட்பாட்டில் இல்லை.
கோட்பாடு இரண்டு முதல் குழந்தை ஆண் என்றும் இரண்டாவது குழந்தை பெண் என்றும் இரு கணிப்புகளைக் கொண்டுள்ளது.
கோட்பாடு 1 – முதல் குழந்தை பற்றிய கணிப்பை மட்டுமே கொண்ட கோட்பாடு.
முதல் குழந்தை ஆண். கணிப்பு 1 மெய்
முதல் குழந்தை பெண். கணிப்பு 1 பொய்
கோட்பாடு 2 – இரு குழந்தைகளையும் பற்றிய கணிப்புகளைக் கொண்ட கோட்பாடு.
முதல் குழந்தை ஆண். கணிப்பு 1 மெய்
முதல் குழந்தை பெண். கணிப்பு 1 பொய்
இரண்டாவது குழந்தை ஆண். கணிப்பு 2 பொய்
இரண்டாவது குழந்தை பெண். கணிப்பு 2 மெய்.
கோட்பாடு 1 மெய்யாக இருக்கச் சாத்தியம் ஐம்பது சதம். ஆனால் கோட்பாடு 2 மெய்யாக இருக்கச் சாத்தியம் இருபத்தி ஐந்து சதம் மட்டுமே.
கார்ல் பாப்பரின் இந்த நோக்கிலும் ஒரு சிக்கல் உள்ளது. அதிக தகவல்கள் அல்லது கணிப்புகளைக் கொண்ட கோட்பாடுகள் குறைந்த கணிப்புகளைக் கொண்ட கோட்பாடுகளை விட அதிக பொய்பித்தல் சாத்தியம் கொண்டிருக்கிறது. நமது நோக்கம் அறிவியலின் வளர்ச்சி என்றால் பொய்பித்தல் சாத்தியத்தை மிக அதிகமாகக் கொண்ட கோட்பாடும் நம் நோக்கமாக இருக்கமுடியாது.
இது மீண்டும் சிக்கல் ஆரம்பித்த இடத்திற்கே நம்மைக் கொண்டே செல்கிறது. இப்போது ஹ்யூமின் சிக்கலை இன்னொரு வடிவில் எழுப்பலாம். எல்லைக்குட்பட்ட அனுபவ உண்மைகளிலிருந்து பொதுவான முடிவுகளை நோக்கி செல்வதை உறுதியாக நிறுவ முடியாது என்றாலும் அதன் சாத்தியக்கூறையாவது– நிகழ்தகவு கணிதத்தின்படி- தர்க்கத்தின் மூலம் தோராயமாக நிறுவுவது எப்படி?
மேலும், ஒரு கோட்பாட்டின் துல்லியமான கணிப்புகள் பின்பு நமக்கு எதைத்தான் உணர்த்துகின்றன? ஆஸ்டிரியாவில் 1920-களில் அறிவியலாளர்களும் தத்துவவாதிகளும் கூடி அறிவியல் முறைமையின் சிக்கலை விவாதித்தினர். அது வியன்னா வட்டம் என்று அழைக்கப்பட்டது. அது முன்வைக்கும் தத்துவம் Logical empiricism அல்லது Logical Positivism என்று அறியப்படுகிறது. இந்த தத்துவவாதிகள் பாப்பரின் தூய தர்க்கத்தையும் கறாரான நிரூபணவாதத்தையும் இன்னொருவகையில் இணைத்தனர். ஏனெனில் அறிவியல் உண்மை என்பது ஒரு காலை தூய தர்க்கத்திலும் மறுகாலை அனுபவத்திலும் திடமாக ஊன்றி நிற்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.
வியன்னா வட்டத்தை சேர்ந்த கார்ல் ஹெம்பல் என்பவர் தொகுத்தறிதலின் இடருக்கு ஒரு மாற்றை முன்வைத்தார். இது Hypothetico-deductive model of confirmation எனப்படுகிறது. ஒரு அறிவியல் ஆய்வாளர் மிகப்பொதுமையான வடிவில் உள்ள ஒரு கருதுகோளில் இருந்து ஆரம்பிக்கிறார். உதாரணமாக, கெப்ளரின் இரண்டாம் விதியானது கோளையும் சூரியனையும் இணைக்கும் ஆரம் சமகால அளவுகளில் சமபரப்பளவுகளை அலகிடுகிறது என்று கூறுகிறது. இந்த விதியின் மூலம் தற்போது கோள் இருக்கும் இடத்தையும் திசைவேகத்தையும் கணக்கில்கொண்டு அந்தக் கோள் பிந்தைய ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த இடத்தில் இருக்கும் என்பது உய்த்துணரப்படுகிறது.
முன்வைக்கும் கணிப்பு சரியென்றால் ஒரு கோட்பாடு உறுதிசெய்யப்படுகிறது. இல்லையென்றால் நிராகரிக்கப்படுகிறது. அதிக கணிப்புகளை முன்வைக்கும் கருதுகோள் சரியென உறுதிசெய்யப்பட்டால் அதை நாம் நம்புகிறோம். அதாவது ஒரு கோட்பாட்டில் இருந்து உய்த்துணரப்பட்ட சரியான கணிப்புகள் உண்மையில் தொகுத்து அறிதலுக்கான ஆதாரமாக கொள்ளவேண்டும்.
இந்தமுறையின் மூலம் அறிவியலின் புறவயத்தன்மையும் காக்கப்படுகிறது. ஏனெனில் தரவுகளில் இருந்து கருதுகோளும் கோட்பாடும் உருவாக்கப்படுகிறது. தூய தர்க்கத்தின் அடிப்படையில் நிகழ்வுகளை அது கணிக்கிறது. இங்கு கருதுகோள் மற்றும் கோட்பாட்டின் மெய்மையைப் பற்றி எந்த முன்ஊகமும் செய்யப்படுவதில்லை. அந்த நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தால் கோட்பாடு அனுபவ உண்மை ஆகிறது. இன்னும் விரிவான முறையில் தொகுத்து அறிதலுக்கு ஆதாரமாக அமைகிறது. கோட்பாடு உறுதி செய்யப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிவியலின் புறவயத்தன்மை அதன் தர்க்க முறைமை, அதன் ஊகங்கள் அனைத்தைப் பற்றியும் கேள்வி எழுப்பினார் தாமஸ் குன் (1922-1996). குன்னின் வாதத்திற்கு மையமாக உள்ளது ‘கருத்தோட்டம்’ – Paradigm என்ற தத்துவ நோக்கு. அதனுடன் அறிவியல் வளர்ச்சி பற்றிய தன் வரலாற்றுவாதத்தையும் சேர்த்துக்கொண்டார். அறிவுத்துறையில் உள்ள ஒவ்வொரு கோட்பாடும் ஒரு இணையற்ற கருத்தோட்டத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு கருத்தோட்டமும் தனக்கென ஒரு எல்லையை, சட்டகத்தை அமைத்து கொள்கிறது. ஒரு கருத்தோட்டத்தில் ஆராயும் அறிவியலாளர் அதை பொய்பிக்க எல்லாம் முயல்வதில்லை. இப்படி ஒரு கருத்தோட்டம் இல்லையென்றால் முறையான ஆய்விற்கே வாய்ப்பில்லை. மேலும் அறிவியல் கோட்பாடே இல்லை என்கிறார் தாமஸ் குன்.
நாளைடைவில் ஒரு கருத்தோட்டம் புதிர்களை களையும் தன்மையை புதிய ஆதாரங்கள் கிடைக்க கிடைக்க இழக்குமெனில் இன்னொரு புது கருத்தோட்டம் உருவாகும். அது ஒரு புரட்சி நிகழ்வு. ஒவ்வொரு அறிவுத்துறையிலும் இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்த புது கருத்தோட்டம் அதன் பேசுபொருளுக்கு ஏற்ப அறிதல் முறைமையும், நுட்பங்களையும் கொண்டிருக்கும். உண்மையில் கருத்தோட்டம் என்பதை ஒரு கோட்பாட்டின் அனைத்து விதிகள், ஊகங்கள், உண்மைகளை நிறுவும் முறைமை, அது களையவேண்டிய புதிர்கள், நோக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு என்று சொல்லலாம். ஒரு துறையில் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு இந்த கருத்தமைப்பு ஒரு விதிக் கையேடு போல.
புதிய ஆதாரங்கள் பழைய கருத்தோட்டத்தை ஒரு அறிவுத்துறையின் மைய ஓட்டத்தில் இருந்து ஓரத்திற்கு தள்ளுகிறது. உதாரணமாக, பதினேழாம் நூற்றாண்டில் ஆரம்பித்து மைய ஓட்டத்தை நோக்கி வந்த நியூட்டனின் கருத்தோட்டத்தை இருபதாம் நூற்றாண்டின் ஐன்ஸ்டைனின் கருத்தோட்டம் ஓரத்துக்கு தள்ளியது. இங்கு கார்ல் பாப்பர் சொல்வது போல பழைய கருத்தோட்டம் பொய்ப்பிக்கவும் படவில்லை. புது கருத்தோட்டம் இன்னும் விரிவான தர்க்க அடிப்படையைக் கொண்டிருப்பதால் அது ஏற்றுக்கொள்ளவும் படவில்லை.
பழைய கருத்டோட்டத்திலிருந்து புது கருத்தோட்டத்திற்கு அறிவியல் முறைமையோ தர்க்கமோ எதுவும் கைமாற்றப்படுவதில்லை. ஒவ்வொரு கோட்பாடும் சட்டகத்தில் அடைபட்ட நிழற்படம் போல தனித்தனியாக உள்ளன. அல்லது ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத தனித்தனி தீவுகள் போல. புது கருத்தோட்டத்தில் உள்ள விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய உலகத்தில் வாழ்கிறார்கள். பழைய வானவியலாளர் சூரியன் தினமும் காலையில் எழுகிறது என்று தன் அவதானிப்பை முன்வைத்தார். நவீன விஞ்ஞானி பூமி சுழல்கிறது என்று சொல்கிறார்.
தொடரும்…