45. குளிர்ச்சுழி
மலைச்சரிவில் முண்டன் முயல்போல, பச்சைப் பந்துபோல பரவியிருந்த புதர்களினூடாக வளைந்து நெளிந்து பின்னால் தொடர்ந்து வர, பெரிய கால்களை தூக்கிவைத்து புதர்களை மிதித்து சழைத்து பாறைகளை நிலைபெயர்ந்து உருண்டு அகலச்செய்து பறப்பதுபோல் கைகளை வீசி முன்னால் சென்ற பீமன் நின்று இடையில் கைவைத்து இளங்காற்றில் எழுந்து வந்த மலர் மணத்தை முகர்ந்து ஒரு கணம் எண்ணங்களை இழந்தான். பின்னர் திரும்பி இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி விரித்து “அதே மணம்! ஐயமே இல்லை, அதே மணம்தான். இங்குள்ளது அந்த மலர். இதோ, மிக அருகே!” என்று கூவினான்.
புன்னகையுடன் அவனருகே வந்து மூச்சிரைக்க நின்ற முண்டன் “மரக்கிளைகளினூடாக தாவிச்செல்வது எளிது. அங்கு கைகளால் நடக்கலாம்” என்றான். “மண்ணில் நடப்பதைவிட வானில் நடப்பது எளிது… மண்ணில் நடக்கையிலும் கைகளால் வானிலும் துழாவிக்கொள்கிறோம்.” பீமன் அவன் தலையைத் தொட்டு உலுக்கி “மிக அருகே! அந்த மணம், ஐயமே இல்லை, அதே மணம்தான்” என்றான். “அதோ தெரிகிறது சோலை!” என்று முண்டன் சுட்டிக்காட்டியதுமே பீமன் பாய்ந்து ஓடத்தொடங்கினான்.
மலைச்சரிவின் விளிம்பிலேறி வந்து நின்ற முண்டன் சற்று சரிந்து இறங்கிப்போன நிலத்தில் இரு கைகளையும் விரித்தபடி ஓடி அகன்ற பீமனை தொலைவிலிருந்து நோக்கினான். அச்சோலைக்குள் இருந்த சுனை இளவெயிலில் ஒளி கொண்டிருந்தது. பச்சைப் பட்டால் மூடிவைத்த சுடரகல்போல. பீமன் அம்மரங்களினூடே மறையக் கண்டபின் முண்டன் சிறிய தாவல்களாக தானும் ஓடி அதை அணுகினான். சோலைக்குள் மரங்களினூடே பீமன் புதுமழை மணம் பெற்ற கரடிபோல இரு கைகளையும் விரித்து துள்ளிச் சுழன்று ஓடுவது தெரிந்தது. நறுமணம் மானுடரை பித்தாக்கிவிடுகிறது. காட்சிகளோ ஒலிகளோ சுவைகளோகூட அதை செய்வதில்லை. மணங்கள் புலன்களை எண்ணங்களிலிருந்து விடுவித்து கட்டிலாது கிளரச் செய்துவிடுகின்றன.
ஒரு மரத்தருகே சென்று நின்று திரும்பி நோக்கி “இதுவா…?” என்றான் பீமன். “நானறியேன், கண்டுபிடிக்கவேண்டியவர் நீங்கள்” என்றான் முண்டன். “இதே இடம்! இங்கு முன்பு நான் வந்திருக்கிறேன்” என்றான். பிறகு மூச்சிரைக்க “கனவில் கண்ட இடம். முன்பு கண்ட அதே சோலை” என்றான். மரங்களின் வேர்ப்புடைப்புகளில் ஏறி தாவியிறங்கி “ஆம், எவ்வண்ணமோ இதுவும் முந்தைய சோலை போலவே அமைந்துள்ளது. அங்கிருந்து பறவைகள் விதைகளுடன் இங்கு வந்திருக்கலாம்” என்றான் முண்டன்.
பீமன் திரும்பி ஓடி பிறிதொரு மரத்தடியில் சென்று நின்றான். “இதே மணம்தான்” என்றான். “பிறகென்ன? அதிலிருந்து மலரொன்றை பறித்துக்கொள்ளுங்கள். அதுதான் கல்யாண சௌகந்திகம்” என்றான் முண்டன். பீமன் குதித்து அம்மரத்தின் சிறிய கிளையொன்றை பற்றினான். அது எடை தாங்காது சற்று சாய்ந்து மலர்களை கொட்டியது. பீமன் ஒரு மலரை எடுத்து முகர்ந்தபோது அவன்மேல் ஒரு வெண்ணிறக் கடலலை பெருகிவந்து சூழ்ந்து அறைந்து முழுக்காட்டியதை காணமுடிந்தது. பட்டு இழுபடுவதுபோல அந்த அலை விலகி மறைய கரிய ஈரத்துடன் பாறை எழுவதுபோல் அவன் குளிர்ந்து நின்றான். பின்னர் “இதுவல்ல…” என்றான். முண்டன் புன்னகைக்க “ஆனால் பெரும்பாலும் இது” என்றான். முண்டன் “நான் எண்ணினேன்” என்றான்.
அருகணைந்த பீமன் சோர்வுடன் “இதே மணம்தான். அகலே நின்றிருக்கையில் எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை. கையிலெடுத்து முகரும்போது உள்ளிருந்து பிறிதொரு புலன் சொல்கிறது இதுவல்ல என்று” என்றான். பின்பு அந்த மலரை உதிர்த்துவிட்டு அருகே வந்து “இது நாமறிந்துகொள்ள முடியாத ஏதோ உள விளையாட்டு. என் சித்தம் பிறழ்ந்திருக்கக்கூடும்” என்றான். “திரும்பிவிடலாமென எண்ணுகிறேன், முண்டரே. பொருளற்ற ஒரு ஆழ்துழாவல் மட்டும்தான் இது. இதைத் தொடர்ந்துசென்று நான் அடையக்கூடுவதென ஏதுமில்லை”.
முண்டன் “பாண்டவரே, ஒரு செடியில் எழும் முள்ளில் முதலில் உருவாவது எது?” என்றான். “என்ன?” என்று பீமன் புரியாமல் திரும்பி கேட்டான். பின்னர் அவ்வினாவின் உட்பொருளை உணர்ந்தவனாக “அதன் மிகக்கூரிய முனை. முள்முனையின் இறுதிப்புள்ளி” என்றான். “அப்புள்ளியின் கூர்மையை வலுப்பெறச் செய்வதற்காகவே மேலும் மேலுமென தன் உடலை அது திரட்டிக் கூம்பி நீண்டெழுகிறது.” சிரித்தபடி “நன்று” என்றான் முண்டன். “ஐவரில் தத்துவம் அறியாதவர் நீங்கள் ஒருவரே என்கிறார்கள் சூதர்கள், நன்று.” பீமன் சிரித்து “தத்துவம் அறியேன். ஆனால் முட்களை அறிவேன்” என்றான்.
“தாங்கள் சொன்னதில் மேலுமொரு நீட்சி உள்ளது, பாண்டவரே. அம்முள்முனையின் முடிவிற்கு அப்பாலிருக்கும் வெறுமையைத்தான் அந்த முள் முதலில் அறிந்தது. அதை நிரப்பும் பொருட்டே முனையின் முதல் அணுவை உருவாக்கிக் கொண்டது” என்றான் முண்டன். “அவ்வெறுமைக்கும் அம்முதலணுவுக்குமான உரையாடல் ஒன்று ஒவ்வொரு முள்ளிலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. முள்முனைகள் குத்துவதும் கிழிப்பதும் வருடுவதும் அதைத்தான்.” அவன் சொல்வதன் பொருளென்ன என்று விளங்காவிட்டாலும் எவ்விதமோ அதன் உட்பொருளை நோக்கி சென்றுவிட்ட பீமன் புன்னகையுடன் அருகே வந்தான்.
முண்டன் “அந்தச் சிற்றாலயத்தை தாங்கள் இன்னும் பார்க்கவில்லை” என்றான். பீமன் அப்போதுதான் தாழ்ந்த மரக்கிளைகள் இலைக்கொத்துகளால் பொத்தி வைத்திருந்த கரிய சிற்றாலயத்தை பார்த்தான். “அதே வடிவில், அதே அளவில்” என்றபடி அதை நோக்கி சென்றான். ஆலயத்தின் சிறிய வாயில் கதவில்லாது திறந்திருந்தது. அதன் முன் சென்று இடையில் கைவைத்தபடி நின்று உள்ளே பார்த்தான். பின்னர் திரும்பி அணுகி வந்த முண்டனிடம் “அதே சிலையா?” என்றான். “ஏறத்தாழ…” என்றபடி முண்டன் அருகே வந்தான். “இவள் அசோகசுந்தரி” என்றான். “கையில் அசோகம் ஏந்தியிருக்கிறாள். மின்கதிருக்கு மாறாக அமுதகலம்.” குனிந்து நோக்கியபடி “ஆம்” என்றான் பீமன். “ஆனால் அதே முகம்” என்றபின் “ஒளியின் மாறுபாட்டினாலா என தெரியவில்லை. இது ஊர்வசியின் முகத்தில் இல்லாத பிறிதொரு புன்னகை கொண்டுள்ளது” என்றவன் கைகளைக் கட்டி கூர்ந்து நோக்கியபடியே நின்றான். திரும்பி புன்னகைத்து “ஒருவேளை நீர் சொன்ன கதையால் உருவான உளமயக்காக இருக்கலாம். இது இளம்கன்னியின் அறியா புன்னகை. ஊர்வசியின் முகத்தில் இருந்தது துலாவின் மறுதட்டையும் அறிந்தபின் எழும் நகைப்பு” என்றான்.
“ஆம். நமது உள்ளம் கொள்ளும் சித்திரம்தான் அது” என்றபடி முண்டன் அப்படியில் அமர்ந்தான். அவன் முன் அடிமரம்போல் பருத்த உடலுடன் எழுந்து நின்ற பீமன் “இங்கும் நானறிவதற்கு ஏதேனும் உள்ளதா?” என்றான். “வினாக்கள்தான். உறவுகளைப்பற்றி விடைகளை எவர் கூறக்கூடும்?” என்றான் முண்டன். “காலத்தில் பின்னகர்ந்து செல்ல வேண்டுமா என்ன? செல்கிறேன்” என்றான் பீமன்.
“இம்முறை காலத்தில் முன்னகர்ந்து செல்லலாம்’’ என்று முண்டன் சொன்னான். “இமயமலை அடிவாரத்தில் யமுனை நதிக்கரையில் குகையொன்றில் உங்கள் மூதாதை நகுஷன் ஒரு பெரும்பாம்பென இருளில் உறைகிறார். அக்குகைக்குள் வழிதவறி தங்க வரும் உயிர்களை மட்டுமே பற்றி இறுக்கி உணவாகக் கொள்கிறார். ஆகவே தீராப் பசி கொண்டிருக்கிறார். தன் பசியை முழுதடக்கும் பேருடல் விலங்கொன்றை உண்ணும்போது அவருக்கு மீட்பு என்று சொல்லிடப்பட்டுள்ளது” என்றபின் நகைத்து “தீயூழ் என்னவென்றால் யானைகள் அச்சரிவில் ஏறமுடியாது. குகைகளுக்குள் நுழையும் வழக்கமும் யானைகளுக்கில்லை” என்றான்.
பீமன் முண்டனின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். “அமர்க!” என்று அவன் சொன்னதும் அசோகசுந்தரியை நிலம்பணிந்து வணங்கிவிட்டு சிறுவனைப்போல் உடலொடுக்கி படிகளில் அமர்ந்தான். முண்டன் தன் கையை அவன் முகத்தருகே காட்டினான். “காலம் நாமணியும் ஆடையைப் போன்றது. ஆடை நம்மீது படிகிறது. ஆடைக்கு நாம் வடிவளிக்கிறோம். நம்முள் எங்கோ ஆடையே நம் வடிவென்றாகிறது. நோக்குக, ஆடைகள் அனைத்தும் மானுட வடிவொன்றை கரந்துள்ளன. அணியப்படாத ஆடைகளில்கூட அணியவிருக்கும் மானுடர் உறைகிறார்கள். ஆடைகளை மாற்றிக்கொள்கையில் நம் உடல் பிறிதொன்றாகிறது. உடல் பிறிதொன்றாகையில் உளம் பிறிதொன்றாகிறது. ஏனெனில் உளமணியும் ஆடையே உடல். பாண்டவரே, உளம் எது அணிந்த ஆடை?”
அவன் குரல் தேனீபோல ரீங்கரித்து அவன் தலையைச்சுற்றி பறந்தது. “இது பிறிதொரு காலம். அடர்காடு. யமுனை கரியநீர் பெருகிச்செல்லும் சரிவு. நீர் நோக்கி புடைத்தெழுந்த வேர்த்திரள்களாலான எழுகரை. நீர் உண்டு உரம்பெற்ற பேருடல் மரங்கள் கிளைதிமிறி இலைகொப்பளிக்க அணிவகுத்திருக்கும் கான்தடம்” என்றான். முதலில் சொற்களாக பின்னர் காட்சிகளாக பின்னர் வானும் மண்ணுமாக காலமாக அவன் சொற்கள் உருமாறிக்கொண்டே சென்றன.
தொலைவிலேயே ஆறு இருப்பதை பீமன் உணர்ந்துவிட்டான். அவன் உள்ளமும் சித்தமும் அதை அறிவதற்குமுன் உடல் உணர்ந்துவிட்டது. அவனுக்குப் பின்னால் நால்வரும் திரௌபதியும் நடைதளர்ந்து நாவறண்டு ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி விரைவழிந்து நடந்துவந்து இறுதி ஆற்றலும் அகல மூச்சிரைத்தபடி நின்று பாறைச்சரிவின் நிழலில் பூழிமண்ணின் எடையுடன் விழுந்து அமர்ந்தனர். திரௌபதி சரிந்து கண்மூடி படுத்துவிட்டாள். பீமன் பாறைமேல் நின்றபடி “நீர்” என்றான். தருமன் தலைதிருப்பி “மொண்டு வருக, இளையோனே! எங்களால் நடக்கமுடியாது” என்றார்.
அந்த மலைச்சரிவெங்கும் நீருற்றுகளே இருக்கவில்லை. கௌதமரின் தவச்சாலையிலிருந்து களிந்தமலைச் சாரலில் உள்ள கண்வரின் தவக்குடிலுக்குச் செல்வதென தருமன் முடிவெடுத்தபோது அவரது மாணவர்களில் ஒருவர் “இவ்வழி செல்வது மிக அரிது. எவரும் அணுகலாகாதென்பதனாலேயே அங்கு சென்று குடிலமைத்திருக்கிறார் கண்வர். வடகிழக்கு நோக்கிச்சென்று மலைமேல் ஏறி மீண்டும் கீழிறங்கி அங்கு செல்வதே இயல்வது. பன்னிரு நாட்கள் நடைபயணம் தேவையாகும்” என்றான். ஒரு கணம் எண்ணியபின் தருமன் “இல்லை, அவ்வளவு நாட்கள் இங்கிருக்க இயலாது. துவைதக் காட்டுக்கே நாங்கள் திரும்பிச்செல்ல வேண்டியிருக்கிறது. வரும் முழுநிலவு நாளில் அங்கு நிகழும் வேதச் சொல்லாய்வு அமர்வில் நானும் பங்குகொள்ளவிருக்கிறேன்” என்றார்.
அர்ஜுனன் “நாம் இவ்வழியே செல்லலாம். இதுவரை நாம் அறியாத கடுமைகொண்ட பாதையாக இருக்க வாய்ப்பில்லை” என்றான். அனைவரும் திரும்பி பீமனைப் பார்க்க “செல்வோம்” என்று அவன் சுருக்கமாக சொன்னான். அன்று காலை அவர்கள் கிளம்பும்போதே “கையில் நீரெடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் கௌதமர். “நீள்வழி, ஆனால் எங்கும் ஓடைகள் இல்லை. அனைத்து ஊற்றுகளும் வழிதல்களும் ஆற்றுக்கு மேற்கேதான் உள்ளன. ஆறோ அறுபதடி ஆழத்தில் உருளைப்பாறைக் குவியல்களுக்கு அடியில் பெருகிச் சென்றுகொண்டிருக்கிறது.”
தருமன் “இங்கு இப்படியொரு வறண்ட நிலம் எப்படி உருவானது?” என்றார். கௌதமர் சிரித்து “மண்ணியல்பை அப்படி வகுக்கமுடியுமா என்ன?” என்றார். அர்ஜுனன் “மண்ணுக்கு அடியில் விரிசலே அற்ற ஒற்றைப்பெரும்பாறைப்பரப்பு இருக்கக்கூடும்” என்றான். நகுலன் மூட்டையை இறுக்கிக் கட்டியபடி “இரக்கமே அற்ற மண்” என்றான். தருமன் அதன் பொருள் அறியாமுள் என தொட்டுச்செல்ல திரும்பி நோக்கிவிட்டு “ஆம், அது அன்னை என்பதனாலேயே அவ்வாறும் இருந்தாகவேண்டியிருக்கிறது” என்றார்.
இரு பெரும்தோற்பைகளில் நீர் நிரப்பி பீமன் தன் இரு தோள்களிலும் மாட்டிக்கொண்டான். உண்பதற்கு உலர்அப்பமும் காய்ந்தபழங்களும் நிரப்பிய தோல்பையை முதுகிலிட்டான். கச்சையை இறுக்கியபடி அவன் எழுந்து நடக்க அவர்கள் வணக்கங்களுக்குப்பின் தொடர்ந்தனர். உருளைக்கரும்பாறைகள் விண்ணிலிருந்து மழையாகப் பொழிந்தவைபோல சிதறிப் பரந்திருந்த நிலவெளியினூடாக நடக்கத் தொடங்கினர். விரைவிலேயே வானில் முழு வெம்மையுடன் கதிரவன் எழுந்தான். “பெருங்கோடைக்காலம் இது” என்றார் தருமன். “நிமித்திக நூலின்படி பன்னிரண்டாண்டுச் சுழற்சி இக்கோடையை கொண்டுவந்துள்ளது. மழையிலாது இலைகளை உதிர்த்து மரங்கள் தவமிருக்கின்றன.”
“பறவைகள் அனைத்தும் நீர் தேடிச் சென்றுவிட்டன போலும்” என்றான் நகுலன். தருமன் குனிந்து செடிகளைப் பார்த்து “அத்தனை செடிகளும் தங்கள் உயிரை விதைகளில் பொறித்து மண்ணில் விட்டுவிட்டு மடிந்துவிட்டன. பல்லாயிரம் விதைகள். அவற்றில் ஒன்று எஞ்சினால்கூட அவற்றின் குலம் வாழும்” என்றபின் திரும்பி “வேதத்தில் ஒரு சொல் எஞ்சினால் போதும், முழு வேதத்தையும் மீட்டுவிடலாம் என்றொரு நூற்குறிப்புள்ளது, இளையோனே” என்றார். சகதேவன் புன்னகைத்து “முடிவின்மையை ஒவ்வொரு துளியிலும் பொறிக்கும் விந்தையையே இயற்கையில் பிரம்மம் விளையாடிக் கொண்டிருக்கிறது” என்றான்.
ஏன் அவர்கள் அனைத்தையும் சொல்லென ஆக்கிக் கொள்கிறார்கள் என பீமன் எண்ணினான். சொல்லென்றல்ல, அறிந்தவையென ஆக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் எங்கும் அதையல்லவா செய்கிறோம். அறியாத மானுடன் ஒருவனைக் கண்டால் குலமும் குடியும் ஊரும் பெயரும் கேட்டு உரையாடி அவனை அறிந்தவனென்றாக்கிக் கொள்கிறோம். இந்த நிலத்திற்கு ஒரு பெயரிடவேண்டும். இத்தனை பாறைகளுக்கும் எண்ணிடவேண்டும். இவற்றின் நேற்றும் முன்னாளும் தெரிந்திருக்கவேண்டும். அதன்பின் இந்நிலம் நிலமல்ல, வெறும் அறிவு.
உடலுக்குள்ளிருந்து நீர் வெம்மைகொண்டு குமிழிகளாகிக் கொதித்து தளதளத்து ஆவியாகி தோலை வேகவைத்தது. அனைத்து வியர்வைத் துளைகளினூடாகவும் கசிந்து வழிந்து ஆவியாகியது. உலர்ந்த வாய்க்குள் வெந்நீரில் விழுந்த புழுவென நாக்கு தவித்தது. புருவங்களிலும் காதோர மயிர்களிலும் உப்பு படிய திரௌபதி “சற்று நீர் கொடுங்கள், முகங்கழுவிக்கொள்ள” என்றாள். தருமன் ஏதோ சொல்ல எண்ணி திரும்பி நோக்கியபின் சொல்லாமல் அமைந்தார். கிளம்பியபோது முதலில் வயிறு நிறையும்படி நீரருந்தி முகம் கழுவி எஞ்சியதை தலையிலும் விட்டுக்கொண்டார்கள். ஏழு இடங்களில் அமர்ந்து உச்சிப்பொழுதைக் கடந்தபோது தோற்பைகளில் நீர் மிகக் குறைவாகவே இருந்தது. அப்போது பிறிதொருவர் நீர் அருந்துவதைக் கண்டால் உடல் பதறியது.
“அச்சமூட்டுவது இது. நம்மிடம் இருக்கும் நீரின் அளவு தெரியும், செல்ல வேண்டிய தொலைவு தெரியாது” என்றார் தருமன். அர்ஜுனன் வில்லுடன் தலை குனிந்து நடந்து அப்பால் சென்று பாறையொன்றின்மேல் அணிலெனத் தாவி ஏறி நாற்புறமும் நோக்கி “நெடுந்தொலைவெங்கிலும் நீர் இருப்பதாகத் தெரியவில்லை. அனைத்து மரங்களும் பசுமை வாடியே தென்படுகின்றன. சிறுசுனையோ ஊற்றோ இருந்தால்கூட தழைத்த மரங்கள் சில தென்படும்” என்றான். பீமன் “பார்ப்போம்” என்றபடி முன்னால் நடந்தான்.
நிழல் நீண்டு கிழக்கே சரியத் தொடங்கியது. தோல்பையில் நீர் முழுமையாகவே ஒழிந்தது. இறுதியாக எஞ்சிய அரைக்குவளை நீரை மூங்கில் குழாயில் நிரப்பி திரௌபதியிடம் கொடுத்த பீமன் “இது உனக்கு, தேவி” என்றான். அவள் அதை வாங்கி தருமனிடம் அளித்து “தாங்கள் வைத்திருங்கள்” என்றாள். “நீர் உனக்கு என்பதுதான் நெறி” என்றார் தருமன். “அதை தாங்கள் அளிக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். இறுதியாக எஞ்சிய நீரையும் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கையில் அருந்தி முடித்தபோது ஐவரும் அச்சம் கொண்டிருந்தனர். “இவ்வழியை நாம் தேர்ந்திருக்கலாகாது” என்று தருமன் சொன்னார்.
“ஒவ்வொருமுறையும் நாம் அறிந்தவற்றை வைத்து இவ்வுலகை மதிப்பிடுகிறோம். ஒவ்வொருமுறையும் எதிர்காலம் என்பது முற்றிலும் அறியாததாகவே இருக்கிறது. கல்வியைக் கொண்டு வாழ்வை எதிர்கொள்ள முடியாதென்று இளவயதில் முதுசூதன் ஒருவன் என்னிடம் சொன்னான். ஏனெனில் இதுவரை வாழ்ந்த வாழ்வே நூலென மொழியென அமைந்துள்ளது. எழும் வாழ்வின் நெறிகளோ இயல்புகளோ ஏதும் அவற்றிலிருக்க வாய்ப்பில்லை.” அவர் பேசுவது அச்சூழலில் எவ்வகையிலும் பொருந்தவில்லை. ஆனால் பேசாமலிருக்கும்போது எழுந்து சூழ்ந்த அமைதியில் அக்குரல் ஒரு வழிகாட்டி அழைப்புபோல ஆறுதல் அளித்தது.
சகதேவன் “ஒவ்வொரு புல்லும் தன் தலைமுறைகள் வாழ்ந்த அறிதலை சிறுவிதைமணியாக்கி தன் தலையில் சூடியிருக்கிறது. தான் மடியும்போது எஞ்சவிட்டுச் செல்கிறது” என்றான். அவனை திரும்பி நோக்கிய தருமன் சில கணங்களுக்குப்பின் “ஆம், நம்மில் நாளை எஞ்சுமெனில் அது அறிவென்றோ உணர்வென்றோ இருக்காது. உடலில் பழக்கமென, உள்ளத்தில் கனவென, உயிரில் நுண்மையென மறைந்திருக்கும். அதை அறிய இயலாது, நம்பலாம்” என்றார். சகதேவன் சிரித்து “எப்போதும் அறிய இயலாதவற்றை அல்லவா நம்புகிறோம்?” என்றான்.
பீமன் முன்னால் நடந்து அங்கிருந்த பெரும்பாறையொன்றின்மேல் உடும்புபோல தொற்றி ஏறி அதன் உச்சியில் பாறைப்பிளவில் வேர் செலுத்தி எழுந்து கிளை விரித்திருந்த அரசமரமொன்றின் அடிமரத்தைப்பற்றி மேலேறி உச்சிக் கிளையில் நின்று சூழ நோக்கினான். பின்பு இறங்கி வந்து பாறைமேல் நின்று நகுலனிடம் “இளையோனே, அங்கு நீருள்ளது. நான் சென்று மொண்டு வருகிறேன்” என்றான்.
பீமன் பாறையிலிருந்து பாறைக்குத் தாவி மலைச்சரிவில் விரைந்தான். இலை உதிர்த்து வேரில் உயிர் மட்டும் எஞ்ச நின்ற மரங்களுக்கு அப்பால் வானிலெழுந்து சுழன்றமைந்த பறவைகள் அங்கிருக்கும் பசுஞ்சோலையொன்றில் வாழ்பவை என்று தெரிந்தது. அணுகுந்தோறும் பறவை ஒலிகள் தெளிவு கொண்டன. அவை பேசும் மொழி அனைத்தும் தனக்கு நீர் நீர் என்றே பொருள் கொள்வதை அவன் விந்தை என உணர்ந்தான். மொழி என்பது கொள்ளப்படும் பொருள் மட்டுமே என்று எங்கோ கேட்ட சூதர்சொல் நினைவுக்கு வந்தது. மேலும் அணுகியபோது பசும்கோட்டையென எழுந்த சோலை மரங்களை கண்டான். அதற்கப்பால் ஒரு ஆறு ஓடுவதை உணர்ந்தான்.
மரங்களின் பேருருவம் தெளிவடைந்து வந்தது. மலைப்பாறைகளை கவ்விப் பிரித்து உடைத்து பற்றியிருந்தன வேர்கள். சுண்ணப்பாறை கரைந்துருகி வழிந்ததுபோல அடிமரங்கள் கிளை விரித்தன. எழுந்து கிளைவிரித்து பசுந்தழைக் கூரையைத் தாங்கிய அவற்றுக்குமேல் பல்லாயிரம் பறவைகளின் பேரோசை இடையறா முழக்கமென எழுந்து கொண்டிருந்தது. பின்பு அவன் ஆற்றிலிருந்து எழுந்த நீராவியை மெல்லிய வெப்பமாற்றம் என முகத்தில் உணர்ந்தான். பின் வியர்வைக்குளிரென. மேலும் அணுகியபோது நீர்த்தண்மையென. மூச்சை நிறைக்கும் அழுத்தமென, மெல்லிய நடுக்கமென.
அச்சோலைக்குள் நுழைந்து அதன் குளிர்ந்த இருளுக்குள் அமிழ்ந்தான். சீவிடுகளின் ரீங்காரம் பகலிலும் இரவென எழுந்து அனைத்து ஒலிகளையும் ஒன்றென இணைத்திருந்தது. காற்று கடந்து செல்ல கிளைகள் முனகியபடி உரசிக்கொண்டன. காற்றலைகளால் அள்ளப்பட்ட இலைகள் சுழன்றபடி இறங்கின. சிலந்திவலையின் காணாச்சரடில் சிக்கி வெட்டவெளியில் நின்று நீந்தின. அதுவரை வெயில்கொண்டு அனல் உமிழ்ந்த பாறைகளை மிதித்து வந்த அவன் கால்கள் வெம்மையையே அறியாத குளிர்ப்பாறைகளை நீர் உறைந்த குவைகள் என்றே உணர்ந்தன. உள்ளங்கைகளையும் பாதங்களையும் அப்பாறைகளில் ஊன்றி அத்தண்மையை உடலெங்கும் வாங்கிக்கொண்டான்.
பாறைகளைப் பற்றியபடி தொங்கி தாவி இறங்கியபோது மிக ஆழத்தில் உருளைப்பாறைகளிடையே மோதி நுரைத்து வெண்ணிறமாக ஓடிய யமுனையை கண்டான். பகலெங்கும் அவன் தன் குடுவையிலிருந்து ஒரு துளி நீரையும் அருந்தியிருக்கவில்லை. கால் நகத்திலிருந்து தலைமயிரிழை நுனிவரை எரிந்த பெருவிடாய் அவனிலிருந்து பிரிந்தெழுந்து பேருருக்கொண்டு கீழே ஓடிய குளிர்நீர்ப் பெருக்கை நோக்கி மலைத்து நின்றது. பின்னர் அலையலையாக படிகளெனச் சென்ற வேர்மடிப்புகள் வழியாக தாவி இறங்கினான். பாறைகளின் மேலிருந்து மரக்கிளைகளைப்பற்றி ஊசலாடி மேலும் இறங்கிச் சென்றான்.
இறங்குந்தோறும் யமுனை அகன்று பெருகியது. மேலே நிற்கையில் சிற்றோடையின் வெள்ளி வழிவெனத் தெரிந்த யமுனை அகன்று பெருகலாயிற்று. நூற்றுக்கணக்கான பாறைத்தடைகளில் அறைந்து வெள்ளி நுரை சிதற வளைந்து நீர்க்குவைகளென்றாகி நீர்த்திரைகளென விழுந்தாடி இறங்கிச் சென்றுகொண்டிருந்த நதியின் களித்துள்ளலை விட்டு கண்களை அவனால் எடுக்க முடியவில்லை. இரு பெரும்பாறைகள் தழுவியவை என நின்ற இடுக்கினூடாக புகுந்து மென்மணலும் சருகும் பரவிச்சரிந்த பாறை வழியாக வழுக்கிச் சென்று பெரிய பாறைத்தடம் ஒன்றில் நின்றான். இடையில் கைவைத்து மூச்சிரைக்க ஆற்றை நோக்கிநின்று தன் தோளில் தொங்கிய இரு நீர்க்குடுவைகளையும் சீரமைத்துக் கொண்டான்.
அப்போது குகைக்குள் மெல்லிய இருளசைவொன்றை ஓரவிழி உணர திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். திறந்த குகைக்குள் யுகங்களின் இருள் மையென செறிந்திருந்தது. பேருருக்கொண்ட கன்னியொருத்தி சுட்டுவிரல் நீட்டி தொட்டு கண்ணெழுதும் சிறு சிமிழ். விழி அறிந்த அவ்வசைவு உண்மையா என்றெண்ணி அவன் மேலும் கூர்ந்து நோக்கினான். ஓசையின்மை அசைவின்மையாக தன்னை மாற்றிக்கொண்டது. நோக்குந்தோறும் இருள் மேலும் செறிந்தது. அங்கு எது இருந்தாலும் திரும்பிப்பாராது கீழிறங்கி நீரை நோக்கிச் செல்வதே தனக்கு உகந்ததென்று அவனுக்குத் தோன்றியது.
ஆனால் விந்தைகளை எப்போதும் எதிர்நோக்கும் அவனுள் உறைந்த சிறுவன் செல்லும்பொருட்டு அடி எடுத்து வைத்த அவனை பின்னிலிருந்து இழுத்தான். ஐயத்துடன் மீண்டும் கூர்ந்து நோக்கியபின் அவன் அக்குகை நோக்கி சென்றான். நின்ற பாறையிலிருந்து சற்றே சரிந்திறங்கிச் சென்று அக்குகைக்குள் நுழைய வேண்டியிருந்தது. குகைவாயிலை முற்றிலும் மூடி நின்றிருந்த மரங்களின் இலைத்தழைப்பால் உள்ளே ஒளிசெல்லும் வழிகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. அதன் வாயிலில் நின்று உள்ளே கூர்ந்து நோக்கி “யார்?” என்று அவன் கூவினான். மிக ஆழத்திலெங்கோ குகை ‘யார்?’ என எண்ணிக்கொண்டது. “உள்ளே யார்?” என்று அவன் மீண்டும் கேட்டான். அச்சொல் சில கணங்களுக்குப்பின் ஒரு விம்மல்போல திரும்பி வந்தது.
உடலெங்கும் பரவிய எச்சரிக்கையுடன் காலெடுத்து வைத்து அவன் குகைக்குள் நுழைந்தான். முற்றிலும் விழியிருள அக்கணமே அகம் எண்ணங்களை ஒளியென்றாக்கிக் கொண்டது. இருளில் உடல் கரைய உள்ளம் மட்டும் இருண்ட தைலமென வழிந்து முன்சென்றது. மேலும் சில அடிகள் வைத்தபோது குகை தூய வட்டவடிவில் இருப்பது விந்தையெனப் பட்டது. அதன் இருள் ஈரமென மெல்லிய ஒளி கொண்டிருந்ததா? இருண்மை நீர்மையென்றாகி மேலிருந்து கீழென வழிகிறதா? உருகும் பாறையா? மறுகணம் அவன் அனைத்தையும் உணர்ந்தான். அது மாபெரும் பாம்பு ஒன்றின் உடற்சுருள். குகையின் பாறை வளைவை ஒட்டியே தன் உடலை வளைத்துப் பதித்து அவனை சூழ்ந்துகொண்டிருந்தது அது.
குகையிலிருந்து அவன் வெளியே பாய்வதற்குள் பெயர்ந்து விழும் மாபெரும் வாழைத்தண்டு என அதன் தசைப்பெருக்கு சுருள்களாக அவன் மேல் விழுந்தது. நிலைதடுமாறி அவன் விழுவதற்குள் அவனுடலைச் சுற்றிக் கவ்வி இறுக்கி அது தன் உடற்குழிக்குள் இழுத்துக்கொண்டது. குகைக்குள் அதன் உடல் கீழ்ப்பகுதி இருளில் புதைந்திருக்க மேல்பகுதி காலிலிருந்து தலைவரை அவனை முற்றிலும் சுற்றிக்கொண்டு இறுக்கிச் சுழன்றது. குளிர்நீர் பெருகிச் செல்லும் காட்டாறு ஒன்றின் சுழியில் சிக்கிக்கொண்டது போல. இரு கைகளாலும் இறுகும் அத்தசைவெள்ளத்தை தள்ளி விலக்க முயன்றான். கைகள் வழுக்கி விலக அதன் பிடி மேலும் இறுகியது.
தலைக்குமேல் எழுந்த அதன் நாக விழிகளை பார்த்தான். திறந்த வாய்க்குள்ளிருந்து நாக்கு எழுந்து பறந்தது. அதன் அண்ணாக்கின் தசை அசைவு தெரிந்தது. குனிந்து அவன் தலையை அதன் வாய் விழுங்க வந்தபோது கைகளால் அதன் இரு தாடைகளையும் விலக்கி பற்றிக்கொண்டான்.