‘முங்கிக்குளி’ கடிதங்கள்

mungkikuli

அன்பின் ஜெ.

முங்கிக்குளி வாசித்தேன்

நீங்கள் சென்ற அதே கல்லிடைக் குறிச்சியில், ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் (பங்களா) இரண்டரை ஆண்டுகள் வசித்தேன். கீழே அலுவலகம்; முதல் மாடியில் வீடு.

காலையில் 6 மணிக்கு அக்கிரஹார அய்யர் ஒருவர் இந்து பேப்பர் கொண்டு வந்து வீசி விட்டுச் செல்வார். கல்யாணி அம்மை வந்து காஃபி போட்டுத் தருவார்கள். அந்த வீட்டில் முதல் மாடியில் அருமையான முற்றம் உண்டு. அங்கே அமர்ந்து காஃபியோடு, இந்துப் பேப்பரைச் சுவைத்துக் (ஃபில்டர் காஃபியும், இந்து பேப்பரும் சுவைக்காத நாவென்ன நாவே.) கொண்டிருக்கும் போது, நெல்லையில் இருந்து தென்காசி வரை செல்லும் அன்று இருந்த ஒரே ஒரு நீராவி எஞ்சின் ரயில் வந்து நிற்கும்.

பின்னர் கல்யாணி அம்மை சுட்டுத் தரும் இட்லியை விழுங்கி விட்டு, அன்று நாங்கள் உருவாக்கிக் கொண்டிருந்த கங்கணாங்குளம் கரிம வேளாண் பண்ணைக்குச் செல்வோம். பின் மதியம் வரை சூரிய ஒளியில் உலாவி விட்டு, உணவுக்கு மீண்டும் வீடு. உண்ட பின் அரைமணி பாவூர்ச் சத்திரம் கல் பாவிய தரையில் கிறங்கல்.

மாலை அலுவலக வேலைகள் முடிந்து வீடு திரும்பி, ஒரு குளியல். 8 மணிக்கு, அம்பாசமுத்திரம் ஹோட்டல் ஒன்றில் டிஃபன்.

ஜூன் / ஜூலை மாத இள வெயிலில், மேல் முற்றத்தில் மஸ்லின் துணி போலத் தொட்டுச் சென்ற சாரல்.

அங்கே அக்கிரஹாரத்துக்கு ஒரு நாள் வந்த ஸ்ருங்கேரி பாரதி தீர்த்த ஸ்வாமிகளைப் பார்க்கச் சென்றதும். அவர் தந்து சென்ற புகைப்படமும்.

மானே தேனேன்னு ஒரு கவிதை எழுதி, அன்று எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பேரில், அனுப்பிப் பிரசுரமாகி, அந்தக் குழந்தையின் பெயரில் வந்த 50 ரூபாய் செக்கும்.

என்றேனும் சென்னை செல்லும் போது, தக்காளி சாதமும், வடாமும் கட்டிக் கொண்டு, நெல்லை எக்ஸ்ப்ரஸைப் பிடிக்க, உலகின் மிக அழகான அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் காத்திருத்தல். அந்த ரயில் செல்லும் அம்பாசமுத்திரம் தென்காசி வழி. கடையம் தாண்டும் போது மறக்காமல் நினைவுக்கு வரும் காணி நிலம் வேண்டும் பாடல். ஆற்றின் கரையில் நிற்கும் தென்னந்தோப்புகள்.

இன்று திரும்பிப் பார்க்கையில், சதவீதம் அதிகமாகத் தெரிந்தாலும், ஒரு 50% வரை முங்கிக் குளித்தேன் எனப்படுகிறது.

பாலா

***

அன்புள்ள பாலா

முங்கிக்குளி பற்றி ஏகப்பட்ட ஒற்றைவரி ஏக்கங்கள் வந்தன. நம் மக்கள் எங்கே சிக்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது

ஜெ

***

அன்புள்ள ஜெ

முங்கிக்குளி வாசித்தேன். சற்று கேலியாக நீங்கள் சொன்னாலும்கூட அது ஒரு மகத்தான வாழ்க்கைதான். வாழ்க்கையின் இன்பங்களை இழந்து இருப்பது மட்டுமே வாழ்க்கையாக ஆனால் என்ன ஆகும். டென்ஷன். அதைப்போக்க யோகா. இயற்கைமருத்துவம். இப்படித்தான் நம்மாட்களின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது

செல்வராஜ்

***

அன்புள்ள ஜெ

முங்கிக்குளி பற்றிய கட்டுரைக்குறிப்பை வாசித்தேன். இன்றைக்கு ‘இவ்வளவு போதும்’ என முடிவெடுத்தால் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிடமுடியும். ஒரு ஐம்பது லட்சம் சம்பாதிப்பதற்கு பத்தாண்டு ஆகும். ஒரு நல்ல கார் வாங்கும் செலவுதான்

எஞ்சிய வாழ்க்கையை அப்படி வாழவிடாமலாக்குவது எது? ஸ்டேட்டஸ். அதை நாம் முடிவுசெய்வதில்லை. பிற நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. அதில் மாட்டி கடன்சுழியில் சிக்கியிருக்கிறோம். அதுதான் சிக்கலே

அண்ணாமலை

***

ஜெ

முங்கிக்குளியை ஒருவகை கிண்டலுடன் முதலில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதன்பின் அதை ஒரு இளைப்பாறுதலாகச் சொன்னீர்கள். ஆனால் அதுதான் மானசீகமான வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமான வாழ்க்கை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை என நினைக்கிறேன். வாழ்க்கை என்பது சும்மா செயல்புரிவதற்குரியது அல்ல. அது ஆழமாக மனசுக்குள்ளே செல்வதற்கும் உரியது. அப்படிப்பட்டவர்களுக்கு உரியது இதேபோன்ற வாழ்க்கைதான். புறவுலகை இப்படிக் கட்டுப்படுத்திக்கொள்வதைத்தான் யமம் நியமம் என்று பதஞ்சலி யோகநூல் சொல்கிறது. பழைய ஆசிரம வாழ்க்கைகள் இதேபோன்றவை. இன்றும் இப்படி வாழ்வதற்குரிய இடங்கள் உள்ளன. இந்தவாழ்க்கையிலிருந்தே மகத்தான பலவிஷயங்கள் எழுந்துவந்தன. ஏக்கமோ தவிப்போ இல்லாமல் இப்படி வாழ்க்கைக்குள் அமிழ்ந்திருக்க முடிந்தால் இதுவே இலட்சிய வாழ்க்கை

ஜெயராமன்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–46
அடுத்த கட்டுரைசினிமாவின் வேகம்