ஐரோம் ஷர்மிளா -கடிதங்கள்

Sharmila1

அன்புள்ள ஜெ

என் தனிப்பட்ட நிலைபாடுகளை உங்கள் வாதங்களால் அழித்து உங்கள் கருத்துகளை என்னுள் நிறுவுகிறீர்கள். இதனால் புதிதாக தெரிந்துகொண்டேன் என்ற சிறிய மகிழ்ச்சி ஒரு புறமென்றாலும் என் முந்தைய கருத்து குறித்து நான் அறிந்தது குறைவோ, அதனால்தான் எளிதில் உங்கள் வாதங்களால் தோற்கடிக்கிறீர்களோ என்ற எண்ணமும் வருத்துகிறது. மேலும் அறிந்துகொள்ளவும் தூண்டுகிறது. நன்றி.

எப்போதும் உங்கள் எதிர் தரப்பாகவே இருக்க விரும்புகிறேன். தினம் தினம் என் கருத்துகள் சாவதைப் பார்க்கும் ஒரு துயர சோகத்திற்கு அடிமையாகிவிட்டேனோ என்றும் தோன்றுகிறது.

ஐரோம் ஷர்மிளாவை ஒரு எளிய ஒரு பெண்ணாகவே பார்த்தேன். ராணுவ அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட ஒரு எளிய பெண் அதன் பின் உள்ள அரசியல்களை நுணுக்கி ஆய்ந்திருக்க முடிந்திராது. தான் அறிந்த வழியில் அதை எதிர்த்து போராடினார். அதிலும் வன்முறையை நம்பாமல் தன்னை வருத்தி போராடும் அறப்போர் முறையில். தன் போராட்டத்தில் இந்தியா இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு உறுதியுடனுமிருந்தார். அவரை மையப்படுத்தி ஒரு பெரும் அரசியலும் பிற நாட்டு சூழ்ச்சிகளும் இனக்குழு பிரிவினைவாதங்களும் நீங்கள் சொல்வது போல வளர்ந்திருக்கலாம். ஆனால் அவருடைய போராட்டத்தின் நோக்கம் தூயதாகவே கருதத்தக்கது இல்லையா?

அவர் போராட்டம் உண்மையில் அர்த்தமற்றதாக இருப்பினும் அறவழிப்போர் குறித்து அவர் கட்டமைத்த லட்சியவாத பிம்பம் மிக முக்கியமானது இல்லையா? கோக் பெப்சி எதிர்ப்பு போராட்டம் முதல் ஜல்லிகட்டு போராட்டம் வரை அர்பணிப்புப்பான போராட்டத்திற்கான அடையாளமாக ஐரோம் ஷர்மிளா முன்னிறுத்தப்பட்டதைப் பல இடங்களில் பார்த்தேன். தன்னலமற்ற சமூக ஈடுபாடு குறித்து மக்களின் கருத்தாங்களில் ஷர்மிளாவின் பிம்பத்தின் பங்களிப்பு புறக்கணிக்கதக்கது அல்லவே.

ஷர்மிளாவின் போராட்டம் குறித்தோ, மணிப்பூர் அரசியல் குறித்தோ அறியாத சில மாணவர்கள் ஷர்மிளாவை சிலாகிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வரையில் ஷர்மிளா சமூக நோக்கத்திற்காக தன்னை பல ஆண்டுகளாய் வருத்திக் கொள்ளும் தியாகமும் மனதிடமும் கொண்ட இரும்புப் பெண். அவரை போல தாமும் சமூகத்திற்காக வாழ வேண்டும் என்பதே.

ஷர்மிளாவின் படுதோல்வி குறித்து பேசுகையில் பல மாணவர்கள் சமூக போராட்டம் குறித்து நம்பிக்கை இழந்து விட்டதையும் கவனிக்கிறேன். இந்த மக்கள் நன்றி கெட்டவர்கள். இவர்களுக்காக இறங்குவது முட்டாள்தனம் எனும் கருத்தாக்கங்களையும். இது போன்ற எண்ணங்கள் தம் சமூகத்தின் மீதான இளைஞர்களின் நம்பிக்கையை அழிக்காதா?

பிரகாஷ் கோ

***

அன்புள்ள பிரகாஷ்,

கசப்பானதாக இருந்தாலும், கனவுகளைக் கலைப்பதாக இருந்தாலும் உண்மையை எழுதவேண்டியதன் அவசியம் இதுதான். பொய்யான சித்திரங்களை அளிக்கையில் காலப்போக்கில் மிக எளிதாக அவை உண்மைநிறம் காட்டிவிடுகின்றன. அப்பொய்கள் கலையும்போது இலட்சியவாதமே பொருளிழந்துவிட்டது என்னும் எண்ணம் உருவாகிவிடுகிறது

இலட்சியவாதம் என்பது உயர்ந்த இலட்சியத்துக்காக போராடுவதே ஒழிய எளிய அரசியல்கோரிக்கையை முன்வைத்து களமாடுவது அல்ல. வெற்றியானாலும் தோல்வியானாலும் இலட்சியத்திற்காகப் போராடுவதென்பது தன்னளவிலேயே நிறைவளிப்பது. வெற்றிபெறாவிட்டாலும்கூட அந்த இலட்சியங்களை நிலைநிறுத்துவது

உதாரணமாக பொட்டி ஸ்ரீராமுலு மொழிவழி மாநிலப் பிரிவினைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். அது இலட்சியவாதப் போராட்டமா என்ன? இல்லை. அது ஓர் அரசியல்போராட்டம். தன் தன் அரசியலுக்காக அவர் இறந்தார். அவ்விறப்பு தியாகமே. அது ஒரு போரில் வீரன் இறப்பதற்குச் சமானமானது. அதை ஆதரிப்பவர்களுக்கு முக்கியமானது. அதை தெலுங்கர் மதிப்பார்கள், நாம் கொண்டாடுகிறோமா?

எத்தனையோ புத்தபிட்சுக்கள் சாதாரணமான இனவாதக் கோரிக்கைக்காக தீக்குளித்தும் உண்ணாவிரதமிருந்தும் இறந்திருக்கிறார்கள் இலங்கையில். அது இலட்சியவாதச்செயலா என்ன? நாம் மறுதரப்பு, ஆகவே நமக்கு அது போர்மரணம், நம்மை அழிப்பதற்கானது. ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் அதைப்போல மிகக்குறுகிய அரசியல்நோக்கம் கொண்ட வன்முறைப்போராட்டத்தின் ஓர் அகிம்சை முகம் அவ்வளவுதான்.

மாறாக, இலட்சியவாதம் அனைத்து மானுடருக்குமானது. அடிப்படையில் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டது.நெல்சன் மண்டேலா தன் நாட்டுவிடுதலைக்காகவே நாற்பதாண்டுக்காலம் சிறையிருந்தார். ஆனால் அது பிரிட்டிஷாருக்கு எதிரான காழ்ப்பாக வெளிப்படவில்லை. அவர்களையும் உள்ளடக்கிய ஒரு நவீனதேசியத்துக்காக அது நிகழ்ந்தது. அந்த உயர்ந்த இலட்சியத்தால்தான் அது மாபெரும் இலட்சியவாதமாகியது. உலகமெங்கும் உள்ள மானுடவிடுதலைவிரும்பிகள் அனைவராலும் கொண்டாடப்பட்டது

மேலும், உயர்ந்த இலட்சியவாதமே ஆனாலும் முதலில் அகிம்சைப்போராட்டம் என்பது மக்களுடனான உரையாடல்தான் என்பதை கருத்தில்கொண்டாகவேண்டும். மக்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்ந்து உணர்ந்துகொண்டு அதை தன் செயல்பாடுகள்மூலம் வழிநடத்தவேண்டும். உண்ணாவிரதமிருப்பதே ஒரு பெரிய இலட்சியத்தை மக்களிடையே கொண்டுசென்று சேர்ப்பதற்காகத்தான். மூர்க்கமான பிடிவாதத்துடன் மக்களை முற்றிலும் உதாசீனம் செய்து அவர்களின் உணர்வுகள் என்னவென்றே தெரியாமல் செய்யும் உண்ணாவிரதம் எவ்வகையிலும் அகிம்சைப் போராட்டம் அல்ல. அது உயர்ந்த இலட்சியம்கொண்டிருந்தாலும்கூட வெறும் பிடிவாதமே ஆகும்

ஜெ

***

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

மேற்கண்ட தலைப்பையொட்டி ‘DNA (DAILY NEWS & ANALYSIS)’ ஊடகத்தில் வந்துள்ள பொருள் பொதிந்த அலசல் கட்டுரையை தங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்,காரணம் அப்போது மோதியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து எழுதியபோது நீங்கள் பொதுவெளியில் வாங்கின ஏச்சுக்களும்,பேச்சுகளும் மேலும் இப்போது ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்விக்கான உண்மையான காரணங்களை சுட்டிக்காட்டியபோது வருகிற வசைகளும்,கிண்டல்களும்.

குறிப்பாக இக்கட்டுரையில் ஐரோம் ஷர்மிளாவின் படு தோல்வி பற்றி வரும் கருத்துக்கள்:

பல காலமாக மணிப்பூர் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருவதாக பல ஊடகங்களால் தூக்கி பிடிக்கப்பட்ட ஷர்மிளா,இந்த தேர்தலில் வெறும் 90 வாக்குகளை மட்டும் பெற்று அதிர்ச்சிதரும் உண்மை நிலையை பிரதிபலித்தார்.நமது தேர்தல்கள் பல நேரங்களில் வெறும் பணத்தாலும்,அடிதடி அரசியலாலும் தீர்மானிக்கப்பட்டாலும்,ஒருவர் வெறும் இரண்டு இலக்கத்தில் வாக்குகள் பெறுவது,அம்மாநிலமக்கள் அவரின் பார்வைகளையும், கொள்கைகளையும் சற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே சாமானிய அறிவுள்ளவருக்கும் புலப்படும் உண்மை.

அதே நேரத்தில் ஷர்மிளா அவர்களின் தனிப்பட்ட நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது,ஆனால் இந்த தோல்வி அவர் பல காலமாக அம்மாநில மக்களுக்காக AFSPA”யை வாபஸ் வாங்குவதற்கு நடத்தி வரும் போராட்டத்தையே ஆட்டம் காண வைத்துவிட்டது.பொது வழக்கில் ஒரு கூற்று ஓன்று உண்டுபாமர மக்கள் எல்லாவற்றையும் அறிவார்கள்“.இவ் விஷயத்தில் பாமரமக்களின் அறிவு,அறிவுஜீவிகளின் கணிப்பையும் மீறிவிட்டது.” என்று முடித்திருக்கிறது.

இதை இங்கு எடுத்தாள காரணம் மற்றவர்கள் எல்லாம் ஒரு நிகழ்ச்சி நடந்த பிறகு கூறும் கருத்துக்களை ,நீங்கள் வெகு முன்பே சரியாக கணித்து எழுதிவிடுவதே.ஆங்கிலத்தில் வந்துள்ள இக்கட்டுரையின் சுட்டியை கீழே கொடுத்திருக்கிறேன்.

http://www.dnaindia.com/india/report-assembly-elections-2017-7-popular-media-narratives-that-were-punctured-2352273

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

அன்புள்ள சேஷகிரி,

இந்தத் தேர்தலில் மணிப்பூர் அளிக்கும் செய்தி ஐரோம் ஷர்மிளாவின் தோல்வியை விட மிகமுக்கியமாகப் பேசத்தக்கது. அம்மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். பிரிவினைப்போரின் தொடக்கத்தில் அவர்களும் அதை ஆதரித்திருக்கலாம். ஏனென்றால் எந்தவகையான பிரிவினைவாதமும் இரு அடிப்படைகளில் உணர்ச்சிகளைத் தூண்டியபடியே எழும். ஒன்று நாம் உயர்ந்தோர் என்னும் பெருமிதம். இன்னொன்றும் நம் துயர்களுக்கு பகைவர்களே காரணம் என்னும் வெறுப்பு. இரண்டும் உணர்ச்சிகரமாகப் பரப்பப்படும்போது எளிய மானுடர் அதை ஏற்பார்கள்

ஆனால் நடைமுறையில் மணிப்பூரின் ஆயுதந்தாங்கிய குழுக்கள் நாலாந்தர அதிகாரவெறியர்கள், கூலிப்படைக் கொலைக்காரர்கள் என இன்று அம்மக்கள் அறிந்திருக்கிறார்கள். அதை அங்குள்ள எவரும் சொல்வார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துவிட்டதை அவர்கள் உணர்கிறார்கள்

மணிப்பூரில் அமைதி திரும்பினால் ஐந்தாண்டுகளில் அது இந்தியாவின் முக்கியமான சுற்றுலாமையமாக ஆகமுடியும். அங்குள்ள வறுமை முழுமையாகவே ஒழியும். எனென்றால் மிக வளமான மண் அது. இமாச்சலப்பிரதேசம் செல்லும்போது அங்குள்ள செல்வச்செழிப்பை கண்டு மணிப்பூர் மேகாலயா அனைத்தும் இதைப்போன்ற பகுதிகளாக மாறலாகாதா என ஏங்கியிருக்கிறேன்

முக்கியமான வரலாற்று வாய்ப்பு வந்து கதவைத் தட்டியிருக்கிறது. பெரிய ரயில்திட்டங்களும் சாலைத்திட்டங்களும் இன்று முழுவீச்சுடன் வடகிழக்கில் செய்யப்படுகின்றன. சாலைவழியாகவே கல்கத்தாவை சிங்கப்பூருடன் இணைக்கும் பன்னாட்டு பெருந்திட்டம் ஒன்றை நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார். வடகிழக்கின் கொடியவறுமையை மிக எளிதாக இவை அகற்றிவிடக்கூடும். அதற்கு சீனாவால் தூண்டப்படும் தீவிரவாதம் முற்றொடுக்கப்படவேண்டும்

ஜெ

***

ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2

ஐரோம் ஷர்மிளாவின் மனமாற்றம்

ஐரோம் ஷர்மிளா ராணுவம் தேசியம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
அடுத்த கட்டுரைதேவதேவன் -தக்காளி