கருணை நதிக்கரை -3

இரவில் மணிமுத்தாறு அணை அருகே உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதிக்குச் சென்றோம். 2008-ல் நானும் கிருஷ்ணனும், சென்னை செந்திலும், சிவாவும் ,பாபுவும் ஒரு மலைப்பயணமாக இங்கு வந்திருக்கிறோம். இதே தங்கும் விடுதியில் தங்கியிருக்கிறோம். இதைப்போல பேரூராட்சியால் கட்டப்பட்ட விடுதிகள் வேறெங்குமில்லை என நினைக்கிறேன்.

தனித்தனி கட்டிடங்களாக சுமார் பதினைந்து அறைகள் உள்ளன. நவீனக் கழிப்பறை, குளிர்சாதன வசதிகளுடன் கூடியவை. அமைப்பு ஒரு நட்சத்திர விடுதியளவுக்கு வசதியாக இருந்தாலும் அந்தளவுக்கு தூய்மையாகப் பேணப்படவில்லை என்று சொல்லலாம். ஆயினும் அச்சிற்றூரில் வேறெங்கும் நினைத்துப் பார்க்க முடியாத வசதிகள் கொண்டது.

20170312_123226

நேரெதிரே இரண்டு மூன்று கடைகள் உள்ளன. அங்கே டீ காபி பலகாரங்கள் கிடைக்கும். உணவுக்கு முன்னரே சொல்லி வைத்திருக்க வேண்டும். பணியாட்கள் எவருமில்லை. பஞ்சாயத்தில் முன்னரே முன்பதிவு செய்து சாவியை வாங்கிக் கொண்டு தங்கவேண்டும்.

இத்தகைய தங்குமிடங்களில் உள்ள ஒரே சிக்கலென்பது எங்கும் எந்த இடத்தையும் மது அருந்துமிடமாக மாற்றிக் கொள்ளும் குடிகாரர்கள் வந்து உடன் தங்கக்கூடும் என்பது. தமிழக மக்களின் எண்ணிக்கையிலேயே குடிகாரர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது. எந்த இடத்திற்கானாலும் இவர்களையும் எண்ணித்தான் நமது தங்குமிடம், பயணம் போன்றவற்றை இங்கு முடிவு செய்ய வேண்டும். ஒரு வலுவான நிர்வாகம் இல்லாத இடங்களில் பெண்கள் பாதுகாப்பாகத் தங்கமுடியாது. ஏனென்றால் எந்த விதமான அடிப்படை மரியாதையோ எளிமையான அறஉணர்வுகளோ கூட இல்லாத வீணர்கள் தான் குடிகாரர்களில் பெரும்பான்மையானவர்கள்.

 

நல்லவேளையாக அன்று அந்த விடுதித் தொகுதியில் நாங்கள் மட்டும் தான் தங்கியிருந்தோம். நடந்த களைப்பில் பத்தரை மணிக்கே நான் படுத்தேன். படுத்தபடியே பேசிக் கொண்டிருந்தோம். பதினொரு மணிக்கே நான் தூங்கிவிட்டேன். நண்பர்கள் பன்னிரண்டு மணிவரையும் பேசிக் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள்.

முன்பு வந்தபோது இரவு பத்து மணிக்கு வந்து தங்கிவிட்டோம். ஒரு சிறிய தூக்கத்திற்கு பிறகு ஒருமணிக்கு விழித்துக் கொண்டு கிருஷ்ணன் வெளியே சென்று விடுதிக்குமுன்னால் ஓடும் கால்வாயின் நீர்ப்பெருக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ஒவ்வொருவராக எழுந்து அவரருகே வந்து நின்றார்கள். நள்ளிரவில் கால்வாயில் இறங்கி நீராடினோம். பின்னர் காலையிலும் நெடுநேரம் அதில் நீந்தி விளையாடினோம். கிருஷ்ணன் அதை நினைவுபடுத்தி நீந்தப்போகலாமென அடம்பிடித்தார். எனக்கு நல்ல களைப்பு. நீங்களே செல்லுங்கள் என்றேன். முகம் சுருங்கி அமர்ந்திருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோதுதான் கால்வாய் வற்றி வறண்டு இருப்பதைப் பார்த்தோம். மணிமுத்தாறு அணையிலேயே பெயருக்குத்தான் தண்ணீர் இருந்தது.

மணிமுத்தாறு அணை 1957ல் அன்றைய முதல்வர் காமராஜரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரும்பாலான அணைகள் காமராஜரின் தலைமையில் உருவானவை. வறண்ட தமிழகத்தின் முகத்தை அவரால் மாற்ற முடிந்தது. தமிழகத்தின் விளைநிலப்பரப்பை இரண்டுமடங்காக ஆக்கியவர் அவரே. இன்றைய கொங்குமண்டலம் காமராஜரின் சிருஷ்டி என்றால் மிகையல்ல. அதைச் சூழ்ந்திருக்கும் அமராவதி, பவானி. குந்தா, பரம்பிக்குளம் ஆழியார் அணைகளால்தான் அந்த வரண்ட மேய்ச்சல் நிலம் விளைநிலமாகியது. நெல்லை அடுத்தபடியாக.

தமிழகமெங்கும் அக்காலத்தில் அணைகட்டுதலே முதன்மைப்பணியாக நிகழ்ந்திருக்கிறது. வேளாண்மைபெருகி உருவான உபரியால் தொழில் வளர்ச்சி எழுந்தபோது அதை முறையாக வழிநடத்தி கோவை, நாமக்கல். ஓசூர். சிவகாசி, விருதுநகர் போன்ற தொழில்வட்டங்களை உருவாக்குவதில் ஆர்.வெங்கட்ராமனின் துணையுடன் காமராஜர் வெற்றிபெற்றார். நெ.து.சுந்தரவடிவேலுவின் உதவியுடன் ஆரம்பக் கல்வியிலும் பெரும்பாய்ச்சல் நிகழ்ந்தது. இன்றைய தமிழகம் அந்த இலட்சியவாதியின் கனவு. அவர் நட்டவை கனியாகி இன்று நம்மால் உண்ணப்படுகின்றன. இந்த அணைக்குமுன் நிற்கையில் அந்த மாபெரும் மூதாதையின் கால்களை மானசீகமாகத் தொட்டு வணங்கினேன்

800px-Manimuthar_Falls

மணிமுத்தாறு அணையின் முகப்பிலேயே லூர்தம்மாள் சைமன் திறந்துவைத்த கல்வெட்டு ஒன்று உள்ளது. காமராஜரின் அமைச்சரவையில் இருந்த லூர்தம்மாள் தமிழகத்தின் பொருளியல்வளர்ச்சியில் மிகமுக்கியமான பங்காற்றியவர். குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர் அவருக்குப்பின் மீனவர்சமூகத்திலிருந்து முதன்மையான அரசியல்தலைவர்கள் எவருமே உருவாகிவரவில்லை.

முன்பு வந்தபோது மணிமுத்தாறு அருவியில் நீராடிவிட்டு மேலும் சென்று மாஞ்சோலை எஸ்டேட்டை அடையலாம் என்று இருந்தோம். வழியிலேயே வனத்துறை அனுமதி இல்லையென்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். இம்முறை பிரதாப் வனத்துறை அனுமதியை பெற்றிருந்தார். மணிமுத்தாறு அருவியில் நாங்கள் செல்லும் போது ஒரு காரில் வந்த பயணிகள் ஐவர் மட்டுமே இருந்தனர். நாங்கள் நீராடிக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.

 Lourthammal Simon

லூர்தம்மாள் சைமன்

நீர் பெருகிக் கொட்டும் அருவியில் தனியாக நீராடுவதென்பது ஓர் அரிய அனுபவம். மணிமுத்தாறு அருவி அதிக உயரம் கொண்டதல்ல. ஆனால் நீர் நேரடியாகவே இருபதடி உயரத்திலிருந்து கொட்டுவதனால் அடிகள் மிக பலமாக இருந்தன. தரையிலும் காங்க்ரீட் ஓரளவு பெயர்ந்திருந்தது. கிருஷ்ணன், சக்தி கிருஷ்ணன் இருவருக்குமே கால்களில் காயமேற்பட்டது. சிறிது நேரத்திற்குள்ளேயே குளிர் விலகியது. போதும் போதும் என உளம் ஏங்கும் போதும் உடல் மீண்டும் மீண்டும் ஏறி அருவியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

மணிமுத்தாறு அருவிக்கு நேர் முன்னாலிருக்கும் தடாகம் மிக ஆழமானது எண்பதடி பள்ளம் அது. அதன் அடர் நீல நிறமே ஆழத்தைக் காட்டியது. பலர் அங்கு உயிரிழந்திருக்கிறார்கள். விதவிதமான சுழிகள் கொண்டது. ஆகவே நீச்சலடிக்க தடை உள்ளது. தடை இருந்தால் கூட அதை மீறுவதை ஒரு சாகசமாகச் செய்பவர்கள் மேலும் அங்கே உயிர் துறக்கத்தான் செய்வார்கள் என்று தோன்றியது.

அந்தக் காலை நேரத்திலேயே பயணிகளை எதிர்பார்த்து குரங்குகள் சூழ்ந்திருந்தன. கார் கதவை திறப்பதற்குள்ளாகவே நகரப்பேருந்தில் நாம் இறங்குகையில் ஏற முண்டியடிக்கும் பயணிகளைப்போல அவை உள்ளே நுழைய முயற்சி செய்தன.

மாஞ்சோலை பெருந்தோட்டத்தில் உணவுவிடுதியிலேயே சிற்றுண்டிக்குச் சொல்லியிருப்பதாக பிரதாப் சொன்னார். இப்பகுதியின் சாலை இருபுறமும் செறிந்த காடுகளும் செங்குத்தாக எழுந்த கரிய பாறைகளும் கொண்டு அழகிய கனவு போல் இருந்தது. குறிப்பாக கோடையில் எங்கேனும் வெந்து சலித்திருக்கும்போது கண்மூடினால் உள்ளே எழும் ஏக்கக்கனவு.

கோடை தொடங்கிவிட்டிருந்தாலும் சென்ற சில நாட்களாக மழை பெய்து கொண்டிருந்ததனால் காடு புதிய பசுமை கொண்டிருந்தது. பல மரங்கள் மாந்தளிர் நிறத்தில் செம்பு நிறத்தில் தழல் நிறத்தில் தளிர் விட்டிருந்தன. மலரும் தளிரும் ஒன்றே என்று மயங்க வைக்கும் அழகு. பின்காலை மேலும் வெண்ணிற ஒளி கொண்டு கண் கூச விரிந்த போதும் கூட அங்கிருந்த பசுமையும் நீராவியும் அது முன்புலரி என்ற எண்ணத்தையே அளித்தன.

மாஞ்சோலை எஸ்டேட் பரவலாக தமிழ்நாடு முழுக்க அறியப்பட்டது டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் ஒரு அரசியல் போராட்ட நிகழ்ச்சியின் வழியாக. 1999, ஜூலையில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தினக்கூலி, 150 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என, போராடினர். பெண்கள் உட்பட, 198 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து, ஜூலை 23ல் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லையில் பேரணி நடந்தது. இதில், கலவரம் வெடித்தது. போலீசார் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தினர். உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்த, 17 பேர், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் கமிஷன் விசாரணை நடத்தியது.ஆனால் எவரும் தண்டிக்கப்படவில்லை. அந்நிகழ்வைப்பற்றி ஆர்.ஆர். சீனிவாசன் எடுத்த நதியின்மரணம் என்னும் ஆவணப்படமும் புகழ் பெற்றது.

சக்தி கிருஷ்ணனுடன்

8 ஆயிரத்து 934 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாஞ்சோலை தேயிலைத்தோட்டம் வெள்ளையர் காலத்தில் உருவாக்கப்பட்டது. நூறுவருடக் குத்தகைக்கு பிரிட்டிஷாரிடம் நிலத்தைப்பெற்று திருநெல்வேலியின் வரண்ட நிலப்பகுதி மக்களைக் குடியேற்றி அவர்களைக் கொண்டு காட்டை அழித்து தேயிலைத் பயிர்வெளிகள் உருவாக்கப்பட்டன. அங்கு ஒரு ஊர் உருவாகியது.

இன்று ஒட்டுமொத்தமாக தேயிலைத் தொழிலே நசித்திருப்பதால் இந்த மாபெரும் தோட்டம் இன்று சரிவு நிலையில் இருக்கிறது. மிகக் குறைவான கூலிக்கு வேறெங்கும் செல்ல இடமில்லாததனால் இங்கேயே அளிக்கப்பட்ட வீடுகளை ஏறத்தாழ முற்றுரிமை கொண்டிருப்பதனாலும் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பலபேர் கீழே நகரங்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்கள்.

கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, பிரதாப்

மாஞ்சோலை தோட்டத்தின் குத்தகை 2018-உடன் முடிகிறது. அதன் பிறகு அது வனத்துறையால் கையகப்படுத்தப்பட்டு காடாக மாற்றப்பட்டுவிடும் எனறார் பிரதாப். வால்பாறை மூணாறு உட்பட பல பகுதிகளில் அவ்வாறு பல தோட்டங்கள் காடாக மாற்றப்பட்டுவிட்டன. கைவிட்டுவிட்டாலே பத்துவருடங்களுக்குள் அடர்காடுகள் உருவாகிவிடும். மாஞ்சோலை தோட்டத்தைச் சுற்றி இருப்பது களக்காடு முண்டந்துறை புலிக்காப்பகத்தின் பசுங்காடுதான்

மாஞ்சோலை வழியாக மறுபக்கம் ஏறி இறங்கினால் குமரி மாவட்டம் கோதையாற்றின் மேல்முகாமுக்கு செல்லலாம். அங்கிருந்து ஒரு தூக்கிவண்டி வழியாக கோதையாறு கீழ்முகாமுக்கும் செல்ல முடியும். அது ஒரு அரிய மலை நடை. ஆனால் இப்போது அனுமதி கிடைப்பது அனேகமாக சாத்தியமில்லை என்றார். அந்தப்பகுதி ராஜநாகங்களின் புகலிடம்

நாங்கள் செல்லும் போது பத்துமணி கடந்திருந்தது. கடையில் காலை உணவு இல்லையென்றார்கள். உற்சாகமான தொழிலாளர்கள் ஓய்வாக அமர்ந்து அரசியல்பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் திராவிட இயக்கத்தையே நிராகரித்து இடதுசாரி அரசியல் பேச மற்றவர்களுக்கு மாற்றுக்குரல் இருக்கவில்லை. அருகிலிருந்த கடையில் இருபது நேந்திரம் பழங்களை வாங்கி அதையே காலை உணவாக உண்டுவிட்டு மாஞ்சோலைக்குள் ஒரு நடை சென்றோம்.

நான், சக்தி கிருஷ்ணன்,பாரி

இயற்கையான கால்ஃப் மைதானமென்று அழைக்கப்படும் மிகப்பெரிய புல்வெளி ஒன்று அங்குள்ளது. அதை ஒட்டி சிறிய ஏரி. வெளியாட்கள் நுழைய அங்கு தடை இருந்த போதும் கூட வண்டியை நிறுத்திவிட்டு அப்புல்வெளியை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் அங்கிருந்து  காட்சி முனை ஒன்றுக்குச் சென்றோம்.

எங்கிருந்து பார்த்தாலும் பசிய மலைச்சரிவுகளன்றி இங்கு பார்ப்பதற்கு பிறிதொன்றுமில்லை. ஆனால் ஒருநாள் முழுக்க வெவ்வேறு கோணங்களில் அமர்ந்து பார்த்தாலும் பார்த்த நிறைவோ சலிப்போ வராதபடி இளம் குளிரும் அமைதியும் கொண்ட இடம் இது.

K._Kamaraj

தென்காசியில் வணிகம் செய்யும் மலையாளியான முகம்மது ஷாஜித் தன் தம்பிகளுடன் அங்கே வந்திருந்தார். உற்சாகமான மனிதர். எண் கொடுத்தார். கூப்பிட்டால் எடுப்பீர்களா என கிருஷ்ணன் நக்கலாக கேட்டார். “என்ன சார் நீங்க, நான் பிஸினஸ்மேன்சார், தெரிஞ்சநம்பரா இருந்தத்தான் யோசிப்பேன். தெரியாத நம்பர்னா எடுத்திருவேன்” என்று அவர் பதில் நக்கல் செய்தார்.

இரண்டு மணிக்கு திரும்பி வந்து அந்த உணவகத்தில் சொல்லி வைத்திருந்த உணவை உண்டோம். சாதாரண வீட்டுச் சாப்பாடென்றாலும் நடைக்களைப்புக்குப்பின் மிக சுவையாக இருந்தது. மீண்டும் மூன்று கிலோமீட்டர் நடை. ஒரு காட்சி முனையிலிருந்து விழிதொடும் தொலைவு வரை தெரிந்த பசுமலை அடுக்குகளைப்பார்த்தோம். தாமிரவருணி உற்பத்தியாகும் அகத்தியமலைமுடியையும் வெள்ளிவழிவென அது பசுமைநடுவே இறங்கிவருவதையும் முகில்குவைகள் ஒளிகொண்டு அதன்மேல் கவிந்திருப்பதையும் கண்டபோது அப்படியே தூங்கிவிடவேண்டும் என்றுதான் தோன்றியது

மாஞ்சோலையிலிருந்து நாலரை மணிக்குத் திரும்பிவிட வேண்டுமென்று வனத்துறை ஆணை. நாங்கள் திரும்பும்போது ஐந்தரை மணியாகிவிட்டிருந்தது. மழை பெய்து துமிகள் காற்றால் அள்ளிச்செல்லப்பட்டு மீண்டும் ஒளிகொண்டன. ஒரு மழைப் பயணமேதான். குளிர் அதிகமில்லை என்பதனால் நாங்கள் நடப்பதைப் பொருட்படுத்தவில்லை.

அங்கிருந்த வாழ்க்கை மிகமிக மெதுவானது. காலம் யானை போல நடக்கிறது. “இதுதான்சார் முங்கிக்குளி வாழ்க்கை” என்றார் சக்திகிருஷ்ணன். ஆனால் அது நீடிக்கப்போவதில்லை. அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இருவரைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணன் “இருபது முப்பது -ஆண்டுகாலம் ஒரு சின்ன கிராமத்தில் அப்படி எதைத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் சார்?” என்றார்.

பொதுவாகவே நகரத்து லௌகீகர்கள் இதைக் கேட்பதுண்டு. அனுபவங்களை எழுதும் எழுத்தாளர்களிடம் “உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வாழ்க்கை அனுபவங்கள்? எனக்கெல்லாம் சொல்லும்படி இருபது அனுபவம்கூட இல்லை” என்று கேட்டபடியே இருப்பார்கள். என்னிடம் அப்படி ஒருவர் கேட்டபோது “நீங்கள் எங்கெல்லாம் சென்றிருக்கிறீர்கள்?” என்றேன். அவர் வாழும் ஒரு பெருநகரத்தில் மூன்று தெருக்களையும் அலுவலகத்தையும் விட்டு முப்பதாண்டுகள் பெரிதாக எங்கும் பயணம் செய்ததில்லை.

”சரி எத்தனை மனிதர்களைத் தெரியும்?” என்றேன். உற்ற நண்பர்களென ஒரு இருபது பேருக்கு அப்பால் வேறு எவரையும் தெரியாது. “இந்நகரத்திலேயே வழக்கமான வழிகளிலிருந்து விலகிச் சென்றிருக்கிறீர்களா உங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் சேரிக்கு ஒருமுறையாவது சென்றிருக்கிறீர்களா? இந்நகரத்தில் உள்ள தொன்மையான நினைவகங்கள் வரலாற்று இடங்களை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் வாழும் வீட்டின் அருகே தான் குணங்குடி மஸ்தான் சாகிப் அவர்களின் சமாதி உள்ளது சென்றிருக்கிறீர்களா?” என்று கேட்டேன். எங்குமே சென்றதில்லை அவர்.

”இந்த சீலைப்பேன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உங்களுக்கு இருபது வாழ்க்கை அனுபவம் இருப்பதே அதிகம்” என்றேன். “ஆனால் இத்தனை சூம்பிப்போன வாழ்க்கையை வைத்துக் கொண்டு பிறருக்கு மட்டும் ஏன் வாழ்க்கை அனுபவங்கள் நிறைய உள்ளன என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அது ஒரு அசட்டுத்தனம் மட்டுமல்ல அசட்டுத்தனம் மட்டுமே உருவாக்கும் ஆணவமும் அதில் உள்ளது” என்றேன்..

சென்ற முப்பத்தைந்தாண்டுகளாக நான் பத்து நாட்களுக்கு மேல் ஓர் ஊரில் தொடர்ச்சியாக தங்கியிருந்தது மிக அபூர்வம். இரண்டு வெளியூர் பயணங்கள் இல்லாது ஒரு மாதம் கூட என் வாழ்க்கையில் கடந்து சென்றதில்லை. ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று மாதங்கள் எப்போதும் பயணங்களில் தான் இருந்து கொண்டிருக்கிறேன்.  இன்று எண்ணிப்பார்க்கையில் எத்தனையோ ஊர்கள், எண்ணினால் மலைக்கும் இடங்கள், எத்தனையோ தருணங்கள்.

ஒரு பத்தாண்டுகள் எனது வலைத்தளத்தை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு இதிலிருக்கும் பயணங்களின் அளவும் தொலைவும் வியப்பூட்டலாம். உண்மையில் அனுபவங்களில் ஒரு சிறு திறப்பேனும் நிகழும்போது மட்டும்தான் அது இலக்கியமாக பதிவாகிறது. பதிவாகாத அனுபவங்கள்தான் மிகப்பெரும் பகுதி. உண்மையில் எந்த எழுத்தாளனும் தன் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை எழுதி முடிப்பதே இல்லை.

ஆனால் நான் அனுபவச்செறிவாக என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டது என்பது எனது பத்தொன்பது வயதில் ஆரம்பித்தது. வீடுவிட்டு நான் கிளம்பியது அப்போதுதான். துறவியாகவும் பிச்சைக்காரனாகவும் திரியத் தொடங்கினேன். ஆனால் அதற்கு முன்பு வெறும் கிராமத்து இளைஞனாக நான் பெற்ற அனுபவங்கள் இதே அளவுக்கு விரிந்தவை என்று இப்போது தோன்றுகிறது. ஒரே இடத்தில் வாழ்வதனால் அனுபவங்கள் ஒருபோதும் குறைவதில்லை. அனுபவங்களுக்கும் புறவுலகுக்கும் சம்பந்தமில்லை. அவை பெற்றுக்கொள்வதில்தான் உள்ளன. நான் திருவரம்பைத்தான் இத்தனை பெரிய உலகைக்கொண்டு நிரப்பிக்கொண்டிருக்கிறேன்.

திருவரம்பு என்ற சிற்றூர் கிட்டத்தட்ட மாஞ்சோலைதான். ஏறத்தாழ ஐநூறு வீடுகள் இருந்த என் ஊரில் அனவரையுமே எனக்கு நன்கு தெரியும். அவர்களின் மூன்று தலைமுறைக்கதைகளை கேட்டிருக்கிறேன். அங்குள்ள ஒவ்வொரு சிறு சம்பவமும் நீண்ட வாழ்க்கையின் ன்னணியில் வைத்துப்பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்வாக மாறிவிடுகிறது. ஒருவருடைய எருமை குட்டிபோட்டதென்றால் அது வெறும் தகவல் அல்ல. அந்த எருமை எங்கு வாங்கப்பட்டது, அந்த எருமைக்கு அதுவ்ரை என்ன நிகழ்ந்தது, அந்த எருமையின் உரிமையாளரின் தந்தையிடம் எத்தனை எருமை இருந்தது , அவற்றின் குணாதிசயங்கள் என்ன எருமைகள் வழியாகவே ஒரு வரலாறு விரியும்

ஒரு சிறு கிராமத்தில் பேசி முடிக்கப்படாத அளவுக்கு வாழ்க்கை நிறைந்து வழிந்து கொண்டேதான் இருக்கும். ஆகவேதான் பெரும்பாலான எழுத்தாளர்கள் கிராமங்களில் பிறந்துவளர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நகர்களில் அப்பார்ட்மெண்ட்களில் வாழ்பவர்களை எழுதமுடியுமா என்ற ஐயம் எனக்குண்டு. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கைப்பரப்பு மிககுறைவானது. அறிந்த மனிதர்கள் விரல் விட்டு எண்ணத்தக்கவர்கள். அவர்கள் சொல்வதற்கு மிக அன்றாட எளிய நிகழ்ச்சிகள் அன்றி வேறு ஏதும் இருப்பதில்லை. அவையும் திரும்ப திரும்ப அனைவருக்கும் ஒரேவகையாக நிகழக்கூடியவை. ஆயினும் அத்தகைய ஒரு உலகிலிருந்து அசோகமித்திரன் போன்ற ஒரு பெரும்படைப்பாளி எழுந்து வர முடிகிறது, முடிவற்ற வண்ணபேதங்களில் எழுதிக்குவிக்க முடிகிறது என்பது படைப்பிலக்கியத்தின் வீச்சைக் காட்டுவது.

பொதுவாக நாம் நகரங்களிலிருந்து செல்லும்போது இத்தகைய ‘தூங்கும்நிலங்களை’ கண்டதும் ஆழ்ந்த அமைதியை முதலில் உணர்கிறோம். பின்னர் ‘பார்ப்பதற்கு ஒன்றுமில்லை’ என உணரத் தொடங்குகிறோம். பின்னர் பெரும் சலிப்பு. கிளம்பிவிடுவோம் என்னும் எண்ணம். இவர்களெல்லாம் எப்படி இங்கே இருக்கிறார்கள் என்னும் வியப்பு. நகர்களில் வாழும் அன்றாட வாழ்க்கை என்பது கடிகாரத்திற்கு அடியில் தொங்கும் பெண்டுலத்தின் சுறுசுறுப்பு கொண்டது. வில்விரிந்து முறுகுவதன்றி ஏதும் எஞ்சாதது. இத்தகைய சிறியநிலங்களில் வாழ்பவர்களே மேலும் விரிந்த வாழ்க்கையை அடைகிறார்கள். நம் சிறிய அளவுகோல்களைக் கடந்துசென்றால் அதை நம்மாலும் சிலநாட்களுக்குள் உணரமுடியும்.

”இந்தப் பயணத்தின் ஹைலைட் முங்கிக்குளிதான்” என்றார் சக்தி கிருஷ்ணன். அவருடைய வாழ்க்கையே அலாதியானது. காவலராகப் பணிக்கு சேர்ந்திருக்கிறார். கமாண்டோ பயிற்சி பெற்று பணியாற்றியிருக்கிறார். சிறைக்காவலராக இருந்தார். சட்டம் கற்று வெளிவந்து வழக்கறிஞராக ஆனார். கூடவே மூன்று தொழில்கள் செய்கிறார். செல்பேசி சிம்கள் விற்பது, மருந்து வணிகம், பொன்வணிகம். கூடவே நிலவியாபாரம் செய்திருக்கிறார். ஒரு கல்லூரியின் நெறியாளராகவும் இருக்கிறார். இத்தனைக்கும் மேலாக நெல்லையில் கலையிலக்கியத்திற்கான சக்தி கலைக்களம் என்னும் அமைப்பையும் நடத்துகிறார். மிஞ்சிய நேரத்தில் எங்களுடன் அத்தனை முங்கிக்குளிகளுக்கும் வந்துகொண்டிருக்கிறார்.

ஏதோ ஒருவகையில் என் இயல்புடன் ஒத்துப்போகும் சக்தியைப் போன்றவர்களே என்னுடன் நீடிக்க முடிகிறது.  என் நண்பர் கே.பி.வினோத் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் முதன்மை அதிகாரி. பகலில் அங்கே வேலை. இரவில் மிஷ்கினின் உதவியாளராக மூன்று படங்களில் பணியாற்றி முடித்துவிட்டார். கூடவே இசை, இலக்கியவாசிப்பு. எங்கள் அத்தனை பயணங்களுக்கும் வந்திருக்கிறார். ஆனால் பயணங்களில் ஆழ்ந்த அமைதி கொண்டுவிடுவார்

“வாழ்க்கை வரலாற்றை எழுதித்தொலைத்துவிடவேண்டாம். சென்னைவாசிகள் நம்பமுடியவிலை , சக்திகிருஷ்ணன் என்ற நபரே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்” என்றேன். உண்மையில் அவரைப்போன்றவர்களுக்கு மிக எளிதில் மாஞ்சோலை போன்ற ஊரில் ஒன்றமுடியும். ஏனென்றால் வாழும் வாழ்க்கையில் இருந்து மிக அதிகமாக அள்ளக்கூடியவர் அவர். மாஞ்சோலையும் அவருக்கு குன்றாக்களஞ்சியமே. மாற்றமில்லாத அன்றாடவாழ்க்கையாளர்களுக்கு அந்நிலம் அளிக்கும் சலிப்பை அவரைப்போன்றவர்கள் அடைவதில்லலை

இந்தப்பயணத்தில் உள்ளமெங்கும் பசுமையைத்தான் நிறைத்துக்கொண்டிருக்கிறேன் என தோன்றியது. பசுமையை உயிர்த்துடிப்பென்றும் பேரமைதி என்றும் மொழியாக்கம் செய்துகொள்ளமுடியும்.ஆறுமணிக்கு மணிமுத்தாறு வந்து சேர்ந்தோம். பிரியாவிடை பெற்றுக்கொண்டேன், ஐந்து நாட்களுக்குப்பின் தஞ்சையில் மீண்டும் சந்திக்கப்போகிறோம். அதற்கடுத்தவாரம் சென்னை, அதற்கடுத்தவாரம் மீண்டும் பயணம். இத்தனை பரபரப்பாக முங்கிக்குளிக்கும் ஒரு குழு தமிழகத்தில் இல்லை என நினைக்கிறேன்.

பேருந்தில் எட்டுமணிக்கு நாகர்கோவிலை நோக்கிக் கிளம்பினேன். கிருஷ்ணனும் பிறரும் ஈரோடுக்கு பேருந்து ஏறினர். ஜான் பிரதாப்பை தழுவி நன்றி என்று சொன்னேன். அது இப்பயணத்திற்காக மட்டும் அல்ல.

[முழுமை]

 

லூர்தம்மாள் சைமன் ஓர் அறிமுகக்கட்டுரை

மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்

முந்தைய கட்டுரைசகரியாவின் ‘இதுதான் என்பெயர்’
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45