மௌனி எனும் தொன்மம்

200px-Mowni

அழியாச்சுடர்களில் வெளிவந்துள்ள எம்.வி.வெங்கட்ராமின் இந்த கட்டுரை முக்கியமான ஓர் இலக்கிய ஆவணம். இதன் உள்ளடக்கத்தை அவர் என்னிடம் நேரில் சொல்லியிருக்கிறார். பின்னர் கட்டுரையாகவும் எழுதினார். அதற்கு நான் மறுமொழியும் எழுதியிருக்கிறேன். இணையத்தில் இப்போதுதான் வருகிறதென நினைக்கிறேன்.

தமிழ்ச்சூழலில் மௌனி பெயரைச் சொல்வதென்பது அன்றெல்லாம் தன்னை அதிநுட்பமானவராகக் காட்டிக்கொள்வதற்கான ஒருவழியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் நகுலனுக்கு அந்த இடம் சிலரால் அளிக்கப்பட்டது. மௌனி, நகுலன் படைப்புகள் முழுமையாக அச்சில் கிடைக்க ஆரம்பித்ததுமே அந்த தொன்மம் கலையத் தொடங்கிவிட்டது. ஆனால் அன்று மௌனி கதைகளை தேடிச்சென்று வாங்கிப் படிப்பதே பெரிய சாகசமாகக் கருதப்பட்டது.

அகவயமான விஷயங்களை எழுத தமிழ் மொழி போதுமானது அல்ல என்றும், தான் செல்லும் உயரத்துக்கு தமிழ் மொழியால் வரமுடியவில்லை என்றும் சொன்ன மௌனியின் கூற்றை அன்று பல ‘சீரிய’ வாசகர்கள்கூட நம்பி திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தனர். மௌனியின் பிரச்சினை மொழியறிவின்மை, மொழியை ஆழ்மன எழுச்சியுடன் பிணைக்கும் தொடர்பயிற்சி இல்லாமை.அதை நான் என் விமர்சனக்கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்

மௌனி முக்கியமான நாலைந்து சிறுகதைகளை எழுதிய சிறுகதையாசிரியர். அவை படிமங்களை கதைகளின் பயன்படுத்தியமையால் தமிழுக்கு முன்னோடியான முயற்சிகள். ஆனால் நோக்கு, அகஎழுச்சி ஆகிய இரண்டிலுமே குறையுடையவை. புதுமைப்பித்தனின் மகத்தான சிறுகதைகள் இன்றும் எழுப்பும் தொடர்ச்சியான அற, தத்துவ, ஆன்மிக வினாக்களை எழுப்புபவை அல்ல அவை.

அவர் தன் பலவீனங்களை உணர்ந்திருந்தார், தன் படைப்புகளின் தரம் பற்றியும் அறிந்திருந்தார். அதுகுறித்த பதற்றம் அவருடைய ஆளுமையில் இருந்தது. அதையே எம்.வி.வெங்கட்ராம் பதிவு செய்கிறார். மௌனியை நிதானமான மொழியில் ஆராய்ந்து பாராட்டுரைகளுடன் அவரது எல்லைகளை மதிப்பிட்டு உரைத்த திலீப்குமாரின் கட்டுரை [மௌனியுடன் கொஞ்சதூரம்] அன்று மௌனி குறித்த ‘தொன்மங்களை’ அழித்தது. பின்ன அதிலிருந்த பாராட்டுரைகளையும் கூட திலீப் திரும்பப் பெற்றுக்கொண்டார். மௌனியின் ஆளுமை குறித்து உருவாக்கப்ட்டிருந்த அன்றையட சித்திரங்களை எம்.வி.வெங்கட்ராமின் இந்தப்பேட்டி இல்லாமலாக்கியது.

உதாரணமாக சுந்தர ராமசாமி மௌனி தன் கதைகளை சொல் சொல்லாகத் திருப்பி எழுதுபவர், இருள் இருட்டு என்னும் இரு வார்த்தைகளின் ஒலி வேறுபாட்டைக்கூட கருத்தில்கொள்பவர், சிறுகதையை தவமென ஆற்றுபவர்,சரியான மொழியாட்சி வரும்வரை ஆண்டுக்கணக்காக கதைகளை எழுதுபவர் ஆகவே மிகமிகச்சில கதைகளையே அவர் எழுதினார் என்றெல்லாம் நம்பி எழுதிவந்தார். அன்றிருந்த தொன்மம் அது. அதை மௌனியே பல பேட்டிகள் வழியாக நிறுவினார். இந்த கட்டுரையில் எம்விவெங்கட்ராமின் நேர்மையே ஆதாரமாக அமைந்து அந்தத் தொன்மத்தைத் த் தகர்த்தது

இலக்கியத்தில் எப்போதுமே இத்தகைய தொன்மங்கள் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகின்றன. அதிலும் தமிழ்போல சிறிய வட்டத்திற்குள் இலக்கியம் புழங்கும் சூழலில் மாறுபட்ட விமர்சனக்கருத்துக்கள் எழுவது அரிது. காலம்தோறும் அது மறுபரிசீலனை செய்யப்படுவதும் அரிது. இத்தகைய தொன்மங்கள் பெரும்பாலும் நுண்ணுணர்வுக்கு பதில் வெறும் பயிற்சியால் இலக்கியத்தை வாசிப்பவர்களால் சொந்த பிம்ப உருவாக்கத்தின் பொருட்டு கட்டமைக்கப்படுபவை. அவற்றை எப்போதும் இலக்கியப் படைப்பாளிகளே கடந்துசெல்கிறார்கள்.

மௌனியும் எம். வி.வி.யும் – எம்.வி வெங்கட்ராம்

*

மௌனியின் இலக்கிய இடம் 1

மௌனியின் இலக்கிய இடம்- 2

முந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு, சுபவீ, லிங்கம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49