அம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்

1

‘கருணை நதிக்கரை – 1′ பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற ஒரு சிங்கள மொழிக் கவிதையை நேற்று தமிழில் மொழிபெயர்த்தேன். உங்கள் பதிவை வாசித்த போது அதுதான் நினைவுக்கு வந்தது. உலகிலிருந்து மறைந்து போன அம்மாவின் தாக்கம் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. அவர்கள் எழுத்தாளர்கள் ஆகிவிடும்போது அத் தாக்கத்தின் பிரதிபலிப்பை எழுத்தில் கொண்டு வந்து அடுத்தவர்களுக்கும் கடத்தி விட முடிகிறது இல்லையா? நான் மொழிபெயர்த்த அந்தக் கவிதையைப் பாருங்கள்.

2

பாரேன் அம்மா எனக்குப் புற்றுநோயாம்…!

 

கருங்கற்பாறை இரும்பையொத்த

உறுதியான உடலை எனக்குத் தந்து

இளகிய மனதை ஏன் தந்தாய் தாயே எனக்கு

மனைவியின் நேசம் நாணற் பாயை

உதறித் தள்ளிச் சென்ற நள்ளிரவில்

அழுதழுது தலையணையில்

விழிநீர் தேக்கியது நீதான் அம்மா

 

 

ஆகவேதான் தனித்திருக்கிறேன் நான் இன்று

நிழல் மாத்திரமே அருகிலிருக்கிறது

மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள் என்பதனால்

தாமாக மூடிக் கொள்கின்றன விழிகள்

பெண்களைக் கண்டதும்

 

 

நள்ளிரவில் உன் கல்லறையருகில் வந்து

உன்னைத் தேடுகிறேன் எனது தாயே

நிலைத்திருக்கும் உன் உருவம் தவிர

யாருடைய உருவப்படமும் இல்லை

இவ் வெற்றுப் பாக்கெட்டில்

 

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு

அருகில்தான் இப்போதிருக்கிறேன் அம்மா

ஜீவிதம் முடிய வெகுதூரமில்லை இன்னும்

புற்றுநோயாம் என நுரையீரலே சொல்கையில்

தனிமையைப் போக்கவென சாம்பலாக்கிய

அப் புகைப்பழக்கம் மறக்கடிக்க விடுவதில்லை அம்மா

உனது புதைகுழியில் இடமுண்டல்லவா

விரைவாக வருகிறேன் அம்மா

உன் மடியில் சுருண்டு படுத்திருக்க

 

நான் வாழ்க்கை கொடுத்த அநேகம் பேர் இன்று

ராஜ வாழ்க்கை வாழ்வது குறித்து மகிழ்ச்சி அம்மா

நீ கட்டளையிட்டபடியே

ஏழைகளுக்காக கவிதைகள் எழுதி எழுதியே

கடமையை நிறைவேற்றி விட்டேன் எனது தாயே

நான் மரணிக்கும் நாளின்

சவப்பெட்டிக்கான பணம் கொடுத்தது

கவிதை எழுதியென்றால் இல்லை அம்மா

******
ஆகவே என்னை நேசித்த தோழமைகளே

எனக்கு விடைபெற அனுமதியுண்டோ

நான் இல்லாத வெறுமையை உணர்வீரோ

இதன் பிறகு கவிதைகள்

இல்லையென்றாலும் அழமாட்டீர்கள்தானே

தொலைதூர வானில் அந்த ஒற்றை ஏழை நட்சத்திரம்

தென்படுகிறதல்லவா உங்களுக்கு

ஐயோ அது நான்தான்

அதைப் பார்த்து எச்சில் உமிழ மாட்டீர்கள்தானே

எங்கு புதைப்பார்களோ தெரியாது

புதைகுழியைத் தேடி

கண்டுபிடிக்கவும் முடியாமல் போகும்

தொப்புள்கொடியை அறுத்த நாள் முதல்

துயரத்தை மாத்திரமே அனுபவித்திருப்பதனால்

சிரேஷ்ட கவிஞர்களே

வேண்டாம் மலர்வடங்கள் எனது நெஞ்சின் மீது

சுமையாக அவை அழுத்தும் என்னை

 

 

எப்போதும் உங்கள் இதயங்களை

முத்தமிட்டேன் நான்

ஏழை இளம் கவியென்பதனால் அது

உங்களுக்குத் தெரிந்திருக்காது

இப்போது எனது தனிமைக்கென

என்னிடம் வந்திருக்கும் புற்றுக் கன்னியே

நான் உன்னைத் துரத்த மாட்டேன்

 

 

3

விஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக் எழுதிய கவிதை இது. ஒரே கவிதையில் மறைந்த அம்மா குறித்த ஏக்கம், விட்டுப் போன மனைவி தந்து சென்ற தனிமை, சிரேஷ்ட கவிஞர்களால் கவனிக்கப்படாத ஏழைக் கவிஞர், அவருக்கு மரணத்தைக் கொண்டு வந்திருக்கும் புற்றுநோய் என பல விடயங்களையும் குறிக்கும் இச் சிறந்த கவிதையை எழுதியிருக்கும் தர்மசிறி பெனடிக்கை ஒரு சுத்திகரிப்புத் தொழிலாளியாக, ஒரு ஏழைக் கூலித் தொழிலாளியாக  நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்.

 

ஆமாம். அதுதான் அவர். சொந்தமாக ஒரு இருப்பிடமற்று தெருவோரத்தில் படுத்துறங்கும் அக் கவிஞர் சிங்கள மொழியில் ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதியிருக்கிறார். எல்லாமே ஏழை மக்களின் துயரத்தைப் பாடுபவை. ஏழைகளுக்காகப் பேசுபவை.

 

இங்கு அக் கவிதையைப் போலவே முக்கியமானதாக எனக்குத் தோன்றுவது அக் கவிதையை எழுதிய கவிஞரின் பின்னணி. குடை திருத்துபவர்கள், சப்பாத்து தைப்பவர்கள், மரமேறுபவர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள், யாசகர்கள் என எல்லோருமே நாம் தினந்தோறும் காணும் நம் அயலில் இருப்பவர்கள்தான். அவர்களுக்குள்ளும் ஒரு இதயம் இருக்கிறது என்பதையும், அந்த இதயத்திலும் இயற்கை, இலக்கியம் குறித்த ஈடுபாடுகளும் நேசமும் இருக்கக் கூடும் என்பதையும் எத்தனை பேர் எண்ணிப் பார்த்திருக்கிறோம்? அவ்வாறானவர்கள் குறித்து எண்ணத் தூண்டுகிறதல்லவா இந்தக் கவிதை?!

 

 

கவிஞர் தர்மசிறி பெனடிக்கின் கவிதைகள் தினந்தோறும் சிங்களப் பத்திரிகைகளில் பிரசுரமாகிக் கொண்டேயிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கவிதைகள். அனைத்துமே ஏழை மக்களின், கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கைத் துயரத்தைப் பாடுபவை. ஆனால் எழுதும் அவருக்கு ஒரு வாசகர் கடிதம் அனுப்ப முகவரி குறிப்பிடவேனும் அவருக்கென ஒரு இருப்பிடம் இல்லை. கடந்த வருட இறுதியில் அவரது ரசிகர்களால், பத்திரிகைகளில் பிரசுரமான அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு அவரது முதலாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. அதற்கும் அவர் கொடுத்த தலைப்பு ‘அம்மா, வா போகலாம்’. அவர் இக் கவிதைத் தொகுப்புக்கு எழுதியுள்ள குறிப்பைக் கீழே தருகிறேன்.

 

 

     “வெட்கத்தை விடவும் நேசமானது, நெகிழ்வுத்தன்மை மிக்கதென உங்களிடம் முணுமுணுக்கிறேன். நான் சொல்வதை நீங்கள் கேட்பதை விடவும், நீங்கள் காண நேர்பவை குறித்து ஆழமாகச் சிந்தித்து தீர்மானிப்பீர்களென எண்ணுகிறேன். அம்மா இன்று இல்லை. அவள் எரிந்து சாம்பலாகிப் போன மயானத்தில் இன்னும் வாடிய பூக்களில்லை என்பதை உங்களுக்கு அறியத் தருகிறேன். வெறுங்கையோடு உங்களிடம் இந்தக் கவிதைகளையும், இதயத்தையும் சமர்ப்பிக்கிறேன். உங்கள் கண்ணீர்ப் பாத்திரத்தை எனது நுரையீரலின் மீது வைத்து குளிர்விப்பீர்களென எனக்குத் தெரியும்.”

 

 

இத் தொகுப்புக்கு முன்னுரைகளை எழுதியிருப்பது சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள். பின்னட்டைக் குறிப்பை எழுதியிருப்பவர் அவரது ரசிகையான ஒரு தெருவோர ஏழை விலைமாதுவான சுனீதா குமாரி. பின்னட்டைக் குறிப்பு இப்படிச் சொல்கிறது.

 

 

     “ஒரு நாள், ஹலாவத பிரதேச விடுதியொன்றில் ஒருவருடன் படுக்கவென கட்டிலில் பத்திரிகைத் தாளொன்றை விரித்த போது, அந்தப் பத்திரிகையில் ‘பரத்தைப் பெண்ணுக்கு’ எனும் கவிதை இருந்ததைக் கண்டேன். அப்போது எனக்கு வயது இருபத்தாறு. என்னுடன் படுக்கத் தயாரான நபருக்கு ஐம்பத்தாறு வயது. படுப்பதை ஒரு ஓரமாகத் தள்ளி வைத்து விட்டு, நான் அந்தக் கவிதையை வாசிக்கத் தொடங்கினேன்.”

 

 4

இந்தக் குறிப்பைப் பாருங்கள். இதை எழுதியிருப்பவர் தெருவோரத்தில் வெற்றிலை,பாக்கு விற்கும் ஒரு வயதான தாயொருத்தியான எலிஸ் ரணவக.

 

 

     ‘கவிதை என்றால் அது இதயத்தை உருகச் செய்ய வேண்டும். குருதி நரம்புகள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணிமைகள் துடிக்குமெனில் நான் உணரும் வகையில் அக் கவிதை என்னை எழுப்பி விட்டதாகக் கொள்வேன். இந்தப் பிள்ளையின் கவிதைகளை நான் வாசிப்பது இன்று நேற்றல்ல. இவர் பழகுவதும், வாழ்வதும் எம்மைப் போன்ற ஏழைகளோடுதான். அதனால்தான் எனக்கு இவரது கவிதைகளை மிகவும் பிடித்திருக்கிறது. நான் தினந்தோறும் பத்திரிகை வாங்குவேன். வெற்றிலை பாக்கு விற்று வரும் பணத்தில் பத்திரிகை வாங்கி அக் கவிதைகளை வாசித்து ரசிப்பேன். இவரது கவி வரிகள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல நெஞ்சில் உணர்வேன். என்னைப் போலவே இந்தப் பிள்ளைக்கும் தெருவோரத்தில் நின்று வெற்றிலை, பாக்கு, இளநீர் விற்ற அனுபவமிருக்கும். அனுபவங்களிருப்பதனாலேயே இந்தப் பிள்ளையின் கரங்களால் எழுதப்படும் வரிகளில் ஏதாவதொரு வலியுமிருக்கும். இவர் எனக்குக் காட்டிய கைப்பிரதிகளில் இரண்டாயிரம் கவிதைகளாவது இருக்கும். நிறைய சிகரெட் புகைப்பார். மரித்துப் போய்விடுவாரோ என்ற பயத்தில் நான் இப்பொழுதெல்லாம் இவருக்கு சிகரெட் விற்பதில்லை. பைபிளை வைக்கும் மேசை மீது கவிதைத் தொகுப்பையும் வைக்க என்னைப் பழக்கியது இந்தப் பிள்ளைதான்.”

 

 

லங்கை முழுவதும் பிரபலமான, கூலித் தொழிலாளியான இந்தக் கவிஞரை நேர்காணலுக்காகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அம்மாவின் அடையாள அட்டைப் புகைப்படத்தை எப்பொழுதும் கூடவே வைத்திருக்கிறார். பெனடிக் எனும் அம்மா வழிப் பெயரையே தனது பெயரோடு இணைத்துக் கொண்டிருக்கிறார். இவருடன் உரையாடுகையில் சொல்லப்பட்ட, அம்மாவும் அவரும் மட்டுமே வாழ்ந்த அந்த வாழ்க்கைப் போராட்டம், மிகுந்த மன அழுத்தத்தைத் தரவல்லது. அந்த நேர்காணலையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மா என அனைத்திலும் அவரது அம்மாவே மிகைத்திருக்கிறார்.

 

 

அம்மாக்கள் இல்லாத உலகமேது? அம்மாக்கள் இன்றியும் உலகமேது? எழுத்தாளர்களாலும், கவிஞர்களாலும் மாத்திரமே இழந்த அம்மா குறித்த ஏக்கத்தையும், பாரத்தையும், நினைவுகளையும் இலகுவாக எழுத்தில் இறக்கி வைத்து விட முடிகிறது. எழுதவியலாதவர்களால் அச் சுமையை எங்கனம் தாங்கிக் கொள்ளவியலும்? அம்மாவின் மரணம் தரும் ஆழ்ந்த மௌனத்தை எவராலுமே சகித்திட முடியாது எனத் தோன்றுகிறது.

 

– எம்.ரிஷான் ஷெரீப்

[email protected]

மிருகவதை – கடிதம்

மனதிற்கான வைத்தியசாலை

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–47
அடுத்த கட்டுரைமுங்கிக்குளி -கடிதங்கள் 2