கருணை நதிக்கரை -2

கோரக்கர்மலை முன்பு மிகச்சிறிய இடமாக இருந்திருக்கிறது. இணைந்த இருமரங்களின் நடுவே இயற்கையாக அமைந்த ஒரு பொந்துதான் ஆலயம். அதில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. அருகே இருக்கும் கோரக்க கங்கை என்னும் ஊற்றுக்குச் சுற்றும் நாயக்கமன்னர்கள் கட்டிய கல்லால் ஆன வளைப்பு இருந்தது, இப்போதும் சற்று சிதைந்த வடிவில் உள்ளது. அதற்கு முன்னால் அங்கே ஆலயம் இருந்திருக்கலாம். தொன்மையான சில்லுச்செங்கல் கட்டுமானங்களும் பெரிய கருங்கற்பாறைகளை வெட்டி உருவாக்கப்பட்ட தூண்களும் மண்ணில்புதைந்து கிடக்கின்றன.

நூறாண்டுகளுக்கு முன்னர்தான் இந்தத் தலம் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. அத்திரி முனிவர் பற்றிய தொன்மம் கோரக்கர் பற்றிய தொன்மம் இரண்டுமே ஒரேசமயம் உருவாகிப் பரவலாயின. இரு வெவ்வேறு உள்மத நம்பிக்கைகளின் மோதல், முயக்கம். இப்போதிருக்கும் கோயில் இருபதாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இன்னமும் பணிமுடிவடையவில்லை. பக்தர்கள் வந்து தங்கி சூழலைச் சீரழிக்க ஆரம்பித்தபிறகுதான் கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன.

நெல்லையைச் சூழ்ந்துள்ள மலைகளில் எல்லாம் அகத்தியர் முதலான சித்தர்களுக்கான சிறிய கோயில்கள் உள்ளன. பெரும்பாலானவை ஐநூறாண்டு பழமைகொண்டவை. அவை நெடுங்காலமாக மிகச்சிறிய மலைப்பயணிகள் குழுவினரே செல்லக்கூடியவையாக இருந்தன. இன்று ஊடகங்களால் அவை பிரச்சாரம் செய்யப்பட்டு பெருங்கூட்டம் கிளம்பிச் செல்கிறது. அவர்களுக்குச் சூழியலுணர்வு இல்லை. ஆலயங்களை தூய்மையாக வைத்திருக்கும் வழக்கமே இல்லை. அவர்கள் சென்று வந்தால் காடும் ஆலயமும் குப்பை மேடாக ஆகிவிடுகின்றன.

அதிலும் கோடையில் காட்டுக்குள் சென்றால் சமையல் செய்கிறோம் என காட்டையே கொளுத்திவிட்டுவிட்டு வருகிறார்கள். அடுப்புகளை அணைத்துச் செல்லவும் என மன்றாடிச் சலித்த வனத்துறை சமீபமாக அனைத்து ‘பக்தர்களை’யும் தடுக்க ஆரம்பித்திருக்கிறது. உண்மையில் மேலும் கடுமையான கண்காணிப்பும் கட்டுப்பாடும் தேவை என்றும் ஒருநாளில் அதிகபட்சம் ஐம்பது பேருக்கு மேல் மலைக்குமேல் காடுகளுக்கு செல்ல அனுமதிக்கலாகாது என்றும் நான் விரும்புகிறேன்.

குறிப்பாக மருத்துவாழ்மலை போன்ற மையச்சாலையிலேயே உள்ள மலைகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றால் அவை குப்பை மலையாகவே இருக்கும். சமீபத்தில் தருமபுரி அருகே தீர்த்தமலைக்குச் சென்றிருந்தோம். அது ஒரு மாபெரும் குப்பைமேடு. குப்பைலிங்கம் என்றே தொன்மம் உருவாகிவர வாய்ப்புண்டு.

மாலையில் சிவசைலம் ஆலயத்திற்குச் சென்றோம். கோரக்கர் ஆலயத்தில் அத்ரி மகரிஷி சிவசைலத்தை நோக்கி கைகூப்பி இருப்பதாகத்தான் தொன்மம். சிவசைலம் என் நினைவுகளில் எங்கெங்கோ சொடுக்கல்களை உருவாக்கியது. நான் அதற்கு முன் அங்கு வந்தது 1986ல் முப்பதாண்டுகளுக்கு முன்பு. கேரள நண்பர் ஒருவர் ‘நோயின்றி வாழமுடியாதா” என்ற சிறிய தமிழ் நூலை மலையாள மொழிபெயர்ப்பு செய்து தரமுடியுமா என்று என்னிடம் கேட்டார். அது சிவசைலத்தில் வாழ்ந்த ராமகிருஷ்ணன் என்பவரால் எழுதப்பட்டது.

அவர் தமிழாசிரியராக இருந்தார். சிவசைலத்தில் நல்வாழ்வு ஆசிரமம் ஒன்றை அமைத்திருந்தார். இன்று இயற்கை உணவு முறை பிரபலமடைந்து கிட்டத்தட்ட ஒரு மதம் போலவே பரவிக்கொண்டிருக்கிறது. அப்போது ஒரு மிகச்சிறிய வட்டாரத்தில் கிட்டத்தட்ட துறவிகளாலும் சித்தர்மரபில் நம்பிக்கை கொண்டவர்களாலும் மட்டுமே கடைபிடிக்கப்பட்டது. ராமகிருஷ்ணன் அப்பகுதியில் தேங்காபழச்சாமி என்று அறியப்பட்டார். தேங்காய் வாழைப்பழம் ஆகியவற்றை முதன்மை உணவாகக்கொண்டு சமைக்கப்படாத உணவை மட்டுமே உண்பது அவர் வகுத்துக் கொண்ட நெறி. அந்நெறியின் பிரச்சாரகராகவும் அவர் தன்னை ஆக்கிக் கொண்டார்.

அவருடைய நல்வாழ்வு ஆசிரமத்தில் யார் வேண்டுமானாலும் தங்கி வேலை பார்த்து சாப்பிடலாம். ஆனால் சமைக்காத உணவு மட்டுமே அங்கு கிடைக்கும். நோயின்றி வாழ முடியாதா என்னும் நூலில் அவர்து சமைக்காத உணவின் முக்கியத்துவத்தையும் அதன் மூலம் உடல்நலத்திற்கும் பொருளியலுக்கும் ஏற்படும் நன்மைகளையும் விரிவாக கூறியிருந்தார். அவர் சென்னையில் வாழ்ந்த இயற்கை உணவு நிபுணரும் தமிழறிஞருமான பாண்டுரங்கன் என்பவரின் மாணவர். தனது மகனை பிறப்பிலிருந்தே சமைக்காத உணவு மட்டுமே கொடுத்து அவர் வளர்த்துவந்தார். இப்போதும் அந்த ஆசிரமம் செயல்பட்டுவருகிறது

சிவசைலத்துக்கு வந்து அவரைச் சந்தித்த பிறகு தான் அந்த நூலை மொழிபெயர்க்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். ஆகவே அவரைப்பார்ப்பதற்காக இங்கு வந்தேன். அப்போது நான் பலவிதமான வட இந்திய பயணங்களின் காரணமாக முற்றிய அமீபியாசிஸ் நோய்க்கு ஆளாகியிருந்தேன். வருடத்திற்கு இரண்டு முறை அலோபதி சிகிச்சை எடுத்துக் கொண்டு இருமுறையும் குணப்படவில்லை. மூன்று மாதத்தில் மீண்டும் நோய் முதிர்ந்துவிடும். அலோபதி முறைப்படி அமீபியாசிஸ் நோயை முழுக்க சரிசெய்யவே முடியாது. அமீபா குருதியில் கலந்து குடல் பகுதி தூய்மையானவுடன் திரும்பி வந்துவிடும் என்றார்கள்.

 

nalvazvu
நல்வாழ்வு ராமகிருட்டினன்

ராமகிருஷ்ணனை சந்தித்து என் நோயைப்பற்றி சொன்னேன். ஒருவேளை மட்டும் சமைத்த உணவை உண்டால்கூட உங்களுக்கு குணமாகிவிடும் என்றார். நான் காலையிலும் இரவிலும் சமைக்காத உணவையும் மதியம் மட்டும் சமைத்த உணவையும் உண்டேன். ஒருமாதத்திலேயே அமீபியாசிஸ் குறையத்தொடங்கியது. அதன் பிறகு அந்நூலை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்தேன். தொண்ணூறு வரைக்கும் கூட ஒருவேளை மட்டுமே சமைத்த உணவை உண்டு கொண்டிருந்தேன். திருமணத்திற்கு பிறகுதான் மீண்டும் பழைய வகையான உணவு முறைக்கு திரும்பினேன்.

சிவசைலம் என்னும்போது என் நினைவில் மங்கலாக இருந்தது இடுங்கிய தெருக்களும் தூசி படிந்த தாழ்ந்த ஓட்டு வீடுகளும் கொண்ட ஒரு சிறிய கிராமம். அதையொட்டி மண்சாலை வழியாகச் சென்று நல்வாழ்வு ஆசிரமத்தை அடையவேண்டும். இப்போது சிவசைலம் முற்றிலும் மாறிவிட்டது. தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றத்தை எத்தனைபேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் இங்குள்ள ஓட்டுக் கட்டிடங்கள் அனேகமாக மறைந்துவிட்டிருக்கின்றன. தஞ்சை போன்ற சில பகுதிகள் தவிர எங்குமே கூரைக்கட்டிடங்களை பார்க்க முடியவில்லை.

ஒருகாலத்தில் வீட்டுக்கு கூரை வேய்வது என்பது மிக செலவு பிடிக்கும் ஒன்றாக இருந்தது. அதை வருடம் முழுக்க எண்ணி எண்ணி ஏங்குவார்கள். பணம் சேர்ப்பார்கள். கூரை பிய்ந்து போய் மழைக்காலத்தை எதிர்கொள்வதைப் பற்றிய கவலைகள் பழைய நாட்டுப்புற பாடல்களில் இருக்கும். நவீன இலக்கியங்களில் கூட அது பதிவாகியிருக்கிறது. ஓட்டுவீடு என்பது ஒரு பெரிய சமூக அந்தஸ்தாக இருந்தது. பின்னர் ஓட்டுவீடுகள் பெருகலாயின. இன்று சிமிட்டி கூரை வீடுகள் மட்டுமே உள்ள வீடுகளாக நமது கிராமங்கள் மாறிவிட்டன.

பரவலான பொருளாதார வளர்ச்சி ஒரு காரணம். அதற்கிணையான காரணம் சென்ற பத்தாண்டுகளில் மத்திய அரசின் பலதிட்டங்கள் மக்களின் வீட்டுவசதியைப் பெருக்குவதற்கு மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன என்பது. அதிலும் சென்ற சில ஆண்டுகளாக கிராமப்புற வீட்டு வசதிகளுக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு கொல்லிமலை சென்ற போதும் அங்கே பெரும்பாலானவை புதிய சிமிட்டி வீடுகள்தான் என்பதைக் கண்டேன்.

1

தமிழகம் ஒருவகையில் உணவு உடை உறைவிடம் ஆகியவற்றில் தன்னிறைவை நோக்கி சென்று ஏறத்தாழ அடைந்துவிட்டதென்ற எண்ணம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செல்லும் போது ஏற்படுகிறது. இளவயதில் நான் கண்ட வறுமை எங்கும் இல்லை. வறுமை இருக்குமிடங்களில் கொடிய குடிப்பழக்கமே அதை உருவாக்குகிறது. இரண்டு நாள் ஏதேனும் உடலுழைப்பு வேலைக்குச் சென்றால் அந்த வாரத்திற்கான முழு உணவையும் ரேஷனில் பெற்றுக் கொள்ள முடியும் என்று இன்று ஆகிவிட்டிருக்கிறது. இரண்டு லட்சரூபாயை எப்படியும் தேற்ற முடிந்தால் ஒருதரமான சிமெண்ட் கூரை வீட்டை அமைத்துவிடமுடியும். அரசு பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் காலியாகி உள்ளன. அடித்தள மக்கள் கூட குழந்தைகளை ஆங்கிலக்கல்விக்கு அனுப்புகிறார்கள்.

சிவசைலத்தின் ஆலயத்திற்கு அருகே கடனாநதி ஓடுகிறது. புதுமழையால் ஓரளவு கலங்கிய கருணை சென்று கொண்டிருந்தது. படிக்கட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் சைவ ஆலயங்களில் உழவாரப்பணிகளைச் செய்யும் குழுக்கள் மிகத்தீவிரமாக இயங்கிவருகின்றன என்று சக்தி கிருஷ்ணன் சொன்னார். பெரும்பாலான ஆலயங்களை சென்ற இரண்டாண்டுகளில் முழுமையாக அவர்கள் தூய்மைப்படுத்தி செப்பனிட்டிருக்கிறார்கள். ஒருவகையான சமூக இயக்கமாகவே அது மாறிவிட்டிருக்கிறது என்றார்.

படிக்கட்டில் அமர்ந்து தாமிரபரணியில் நீராடுபவர்களைப் பார்த்தபோது எங்களூரில் இன்றும் நிலவும் ஒருவாழ்க்கை முறையைப் பற்றிய சித்திரத்தை அளித்தேன். அந்தக் காலத்தில் பொறியியல் படித்துவிட்டு ஹொசூரில் சிலநாள் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பி ஊரிலே இருந்துவிட்ட அண்ணா ஒருவரிடம் பேசும்போது “சாயங்காலம் நீரில் மூழ்கிக் குளித்து இரவில் மீன்கறியுடன் சாப்பிடுவதும் வருஷத்தில் இரண்டு மழைக்காலமும் இல்லாமல் வாழ்வதில் என்ன அர்த்தம் ஆகவே திரும்பிவிட்டேன் இங்கிருப்பது எனக்குப்போதும்” என்றார். அவருடைய ‘தரிசனம்’ என்ன?

காலை எழுந்தவுடன் ‘கட்டன்’ காப்பி. வானொலி அல்லது டிவி. எட்டு மணிக்கு அபப்டியே மெல்ல நகர்ந்துசென்று டீக்கடையில் செய்தித்தாள் வாசித்துவிட்டு நேந்திரம் பழத்துடன் புட்டு. காலார நடந்து வயல்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தால் அன்றைய வேலை முடிந்தது. ஒருமதியம் வரை முத்தாலம்மன் கோயில் கல்மண்டபங்களில் தென்னங்காற்று ஏற்று இதேபோன்று வந்துகூடும் சுகஜீவிகளிடம் கதை பேசுவது, மூன்று சீட்டு ஆடுவது, சதுரங்கம் விளையாடுவது. திரும்பிவந்து தேங்காய்க் குழம்புடன் சம்பா அரிசிச் சோறு குழைத்து உருட்டிச் சாப்பிடுவது. விரிவான மதிய உறக்கம்.

மாலையில் தலைக்கு எண்ணை பொத்திக்கொண்டு பூவரசு இலையில் லைபாய் சோப்பை எடுத்துக்கொண்டு சென்று தாமிரபரணியில் தலைகுளிர மூழ்கிக் குளித்தல். கண்கள் சிவக்க சோப்பை தென்னை ஈர்க்குச்சியில் குத்தி தூக்கிப்பிடித்துக் கொண்டு நடந்து சென்று கோயிலில் சாமி கும்பிட்டு சந்தன பிரசாதம் அணிந்து திரும்புதல். ஆலயத்தை ஒட்டிய கல்மண்டபத்தில் அமர்ந்து இரவு வரை மீண்டும் அரட்டை. எட்டுமணிக்கு வீடுதிரும்பி மீன்குழம்புடன் சோறு. ஒன்பது மணிக்கு படுத்து மீண்டுமொரு தடையற்ற உறக்கம். வருடத்திற்கு நாலைந்து திருவிழாக்கள் ஏழெட்டு சினிமாக்கள்.

இந்தவகை வாழ்க்கையை ‘முங்கிக்குளி’ என்று சொல்லலாம் என்றார் சக்தி கிருஷ்ணன். அதிலிருந்து முங்கிக்குளி என்ற சொல்லாட்சியை வைத்து ஒவ்வொருவரும் எத்தனை சதவீதம் முங்கிக்குளி வாழ்க்கையில் இருக்கிறோம் என்பதைப்பற்றி பேசிக் கொண்டோம். கிட்டத்தட்ட முங்கிக்குளி ஒரு லட்சிய வாழ்க்கை என்பது போல.

சிவசைலம் ஆலயம் தூய்மையாக பேணப்பட்டு அழகாகவே இருந்தது. சொல்லும்படியான சிற்பங்கள் எதுவும் இல்லை. சுவர்களில் கொத்தனார்கள் வரைந்திருந்த கண்கொண்டு காணச் சகியாத ஏஷியன் பெயின்ட் ஓவியங்கள் அந்தக் குறையை நிவர்த்தி செய்யுமென்று சொல்ல முடியவில்லை. பரமகல்யாணி அன்னையின் ஆலயம் அருகிலேயே.

சிவசைலம் ஆலயத்தின் பெரிய கொடுமை திருப்பணி என்ற பேரில் செய்யப்பட்டிருக்கும் கோராமை. தரையில் செட்டிநாடு டைல்ஸ் ஒட்டி கருங்கல் தூண்களுக்கு தூணுக்கொரு வண்ணம் பூசி முடிந்தவரை நாறடித்திருக்கிறார்கள். எப்படியெல்லாம் ஒர் அரிய ஆலயத்தைச் சீரழிக்கமுடியும் என அறைபோட்டு யோசித்திருப்பார்கள் போலும் பாவிகள்.

கல்கட்டிடங்களில் செங்கல் சிமிண்ட் இணைப்புகள் அமைப்பது டைல்ஸ் ஒட்டுவது போன்றவற்றை தொல்லியல்துறை முற்றிலும் தடைசெய்துள்ளது. இவை போன்ற வீட்டுக்கட்டுமானங்கள் ஐம்பது ஆண்டுகள்கூட நீடிக்காதவை. அதிலும் ஏராளமான மக்கள் வந்துசெல்லும் ஆலயங்களில் பத்தாண்டுகளில் அவை பாழடைந்துவிடும். அவற்றை இடித்து சுரண்டி அகற்றி மறுகட்டுமானம் செய்யும்போது ஆலயமே பழுதடைந்துவிடும். புண்ணியத்துக்காக இவ்வகை திருப்பணிகளைச் செய்பவர்களுக்கு உண்மையில் சிவன்கோயிலை இடித்த பாவமே சேரும் என்று சொல்லத் தோன்றுகிறது.

திருப்பணி செய்ய விரும்புபவர்கள் தொல்லியல் துறையை அணுகி அவர்களிடம் ஆலோசனை பெற்று அவர்களின் அளவுகோலின்படி கட்டவேண்டும். கொஞ்சம் மரபின் மீது ஈடுபாடும், கொஞ்சம் கலையார்வமும் கொண்ட அனைவரும் அதற்காக நம் பக்தர்களை கட்டாயப்படுத்தவேண்டும். நாத்திகர்கள் இதில் ஈடுபட்டாகவேண்டும், கலைச்செல்வம் அவர்களுக்கும் உரியதுதான்.

sivasailam-temple

சிவசைலத்தின் மாகாளை நான் இதுவரை பார்த்தவற்றில் மிகமிகக் கலையழகுவாய்ந்த ஒன்று. மிகச்சிறந்த மாகாளைகளை நான் கர்நாடகத்தில் ராஷ்டிரகூட, காகதீய பேரரசின் பகுதிகளிலேயே கண்டிருக்கிறேன். ஹொய்ச்சாள காளைகள் அவ்வழியே வந்தவை. அவை நுணுக்கமான செதுக்குகளுடன் நகைகளைப்போல் அமைந்தவை. இந்த மாகாளை அணிச்செதுக்குகள் குறைவானது. ஆனால் பின்னங்காலிலும் கழுத்திலுமுள்ள சதைமடிப்புகளும் ஓசைகேட்டு எழுந்த செவிகளும் மிக அழகாக செதுக்கப்பட்டிருந்தன. கருங்கல்லின் கரிய ஒளியில் நாம் கேட்கமுடியாத ஒலியில் விழியுருட்டி எழ எண்ணி படுத்திருந்தது. அதன் புள்ளிருக்கையும் தோளும் சிலிர்ப்பதுபோலப் பிரமை எழுந்தது.

இதில் ரத்தச்சிவப்போ பச்சையோ பூசி வைக்கவேண்டும் என்றும் சிவலிங்கத்தில் ஊதாநிறம் பூசலாமென்றும் எந்தச் சும்பனுக்காவது தோன்றிவிடக்கூடாதே என்று சிவசைல லிங்கத்தை வேண்டிக் கொண்டேன். இப்போதெல்லாம் ஆலயங்களில் வேண்டிக் கொள்வது ஒன்றே, இறைவா லௌகீக வெறியும் கலைமூடத்தனமும் கொண்ட ஆத்திகப் பதர்களிடமிருந்து உன் ஆலயத்தை நீயே காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று.

index

 

எட்டுமணிக்கு கல்லிடைக்குறிச்சி வந்து சேர்ந்தோம். கல்லிடைக்குறிச்சியில் உள்ள இலக்கிய நண்பர்கள் சிலர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக ஜான்பிரதாப் சொன்னார். அபுபக்கர் வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் நான் எழுதிய ’யானை டாக்டரை’ ஒருசிறிய பதிப்பாக முன்னரே வெளியிட்டிருக்கிறார். அவர்களின் குடும்பத்தை சேர்ந்த யானை ஒன்று அங்கிருக்கும் தர்க்கா ஒன்றுக்கு வாங்கி அளித்திருக்கிறார். அவர்களுக்குத் தெரியாமலேயே பாகன் அதை பல வேலைகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார். செல்லும்போது ஒருமுறை வெறிநாய் கடித்துவிட்டது. அதைப்பாகன் உரிமையாளரிடம் மறைத்துவிட்டான். ஆகவே முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. யானை ரேபிஸ் நோயால் தாக்கப்பட்டு எட்டுவயதிலேயே இறந்துவிட்டது.

அந்த யானையின் அட்டைப்படத்துடன் கூடிய யானை டாக்டர் பதிப்பை எனக்குக் காட்டினார். ஓரிரு முறைக்கு மேல் அந்த யானையை பார்க்கவே முடியாத அளவுக்கு உள்ளம் துயர் கொண்டது. பரம கல்யாணி கல்லூரியில் உயிரியல் பேராசிரியராக வேலைபார்க்கும் விஸ்வநாதன் அவரது நண்பராகிய கிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்தேன். இருவரும் கவிதைகள் எழுதுகிறார்கள். அவர் எழுதிய ஒன்றிரண்டு கவிதைகளைப் பார்த்தேன். கணையாழி அமுதசுரபி போன்ற இதழ்களில் அக்கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.

nalvazvu

கல்லிடைக்குறிச்சி போல ஒரு சிறு ஊரில் கூட கவிதை ஒரு இயக்கமாக இருப்பது ஒருவகை நிறைவைத் தந்தது. பலர் தன்னந்தனியாக ரகசியமாக இக்கவிதைகளை எழுதி பிரசுரம் செய்து கொண்டிருப்பார்கள். உண்மையில் சிற்றூர்களில் இருந்து எழுதும் பலர் சேர்ந்து தொகை நூல்கள் கொண்டு வருவது மிகச்சிறந்தது. அந்த ஊரின் தனிப்பட்ட குணாதிசயமும் அங்கிருக்கும் ஒரு அறிவியக்கமும் வெளிப்படும்படி அத்தொகுதி இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திரும்பிப்பார்த்தால் அது ஒரு கால ஆவணமாகவும் இருக்கக்கூடும்.

கவிதை ஒரு பரவலான இயக்கமாக இருக்கும்போதுதான் அதில் உச்சகட்ட சாத்தியங்கள் உருவாகின்றன. ஹைக்கூ என்பது ஜப்பானில் ஒரு பெரிய மக்கள் இயக்கம் என்று நித்யா சொன்னது என் நினைவில் வந்தது.

அங்குள்ள சிறிய ஓட்டல் ஒன்றில் இரவுணவு அருந்தினோம். மதிய உணவே நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்தாலும் கூட நண்பர்களின் பொருட்டு இரவுணவு அருந்தலாமென்று முடிவு செய்தேன். நெல்லையின் இப்பகுதி எளிமையான சிற்றுண்டிக்கு புகழ் பெற்றது. இட்லி தோசை போன்றவை அலாதியான சுவையுடன் இருந்தன. கல்லிடைக்குறிச்சி அப்பளம் மிகப்புகழ் பெற்றது என்றார் அபுபக்கர்.


 

கருணை நதிக்கரை -1

 

நல்வாழ்வு ஆசிரமம் பற்றி ஒரு கட்டுரை

 

முந்தைய கட்டுரைபாஷாம் , மிஸ்திரி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44