ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி

Sharmila1

ஜெ,

ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். [வெறும் 90 வாக்குகள். நோட்டாவை விடக்குறைவு] முற்போக்கின் தோல்வி என்னும் கட்டுரையே ஒருவகையில் முன்னுரைப்பது போல இருந்தது.

ஐரோம் ஷர்மிளா பற்றி நீங்கள் முன்னர் எழுதிய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஆனாலும் ஓர் இலட்சியவாதியின் தோல்வி உங்கள் கொண்டாட்டத்திற்கு உரியதாக இருக்காதென்றே நினைக்கிறேன்

எஸ்.ஜெயசீலன்

***

ஜெ

மே 2017ல், ஐரோம் ஷர்மிளா பற்றி கட்டுரை எழுதியிருந்தீர்கள்.

http://www.jeyamohan.in/89753#.WMXZCHqnyBZ

பொது ஜன ஆதரவு பெற்றவர் அல்ல. பத்திரிக்கைகளால் முன்னிருத்த படும் ஒரு பிம்பம் மட்டுமே, சமயம் வரும் பொழுது தெரியவரும் என்று எழுதியிருந்தீர்கள்.

இதோ மணிப்பூர் சட்ட மன்ற தேர்தலில வெறும் 90 வாக்குகள் வாங்கியிருக்கிறார். பரிதாபமாக இருக்கிறது.

சதீஷ்குமார் கணேசன்

***

அன்புள்ள ஜெயசீலன்,

ஐரோம் ஷர்மிளா எதன்பொருட்டு கொண்டாடப்பட்டார் என்பதிலிருந்து நாம் பேசத்தொடங்கவேண்டும். அவர் சூழியலுக்காக, ஊழலுக்கு எதிராக, மக்களைப்பிரிக்கும் இனவாதத்திற்கு எதிராக, பழங்குடிசபைகளால் ஆளப்படும் மணிப்பூரின் தேங்கிப்போன அரசியலுக்கு எதிராக இதே போன்ற போராட்டத்தை நடத்தியிருந்தால் என்ன ஆகும்? அதிகபட்சமாக நான் ஓரிரு கட்டுரைகள் எழுதியிருப்பேன். இன்று அவரைப்பற்றிப் பேசும் எவரும் அவரை தியாகி என்றோ இரும்புப்பெண்மணி என்றோ சொல்லியிருக்க மாட்டார்கள்

அவர் இந்தியாவெங்கும், இந்தியாவிற்கு வெளியிலும் கொண்டாடப்பட்டது இந்திய தேசியத்தை எதிர்க்கும் சக்திகளால். இதை அவரைப்பற்றி எழுதப் பட்ட நூல்களை லேசாகப் புரட்டிப்பார்த்து அவற்றில் இந்தியா எந்தெந்த அடைமொழிகளுடன் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பார்த்தாலே போதும். இந்தியதேசியமும், இந்திய அரசும் ஈவிரக்கமற்ற அடக்குமுறைச்சக்திகள் மட்டுமே எனச் சித்தரிக்க விரும்பும் குழுக்களின் அடையாளக்கொடியாக ஆகிவிட்டவர் அவர். அவருடைய பெரும் புகழுக்கான காரணம் அதுவே,

இவர்கள் எவர்? ஒன்று இந்தியா என்பது மாபெரும் தொகுப்பாக உருவாகி வந்த தேசம். தொகுப்பைநோக்கிச்செல்லும் விசையே இங்கு மையமானது, முதன்மையானது. ஆனால் அதற்கு எதிர்விசைகளும் உண்டு, அது இயல்பு. ஒவ்வொரு பகுதியிலும் இந்தியதேசியம் என்னும் தொகையடையாளத்திற்கு எதிராக தனியடையாளத்தை முன்வைக்கும் அரசியல்தரப்பு உண்டு. அவர்கள் ஷர்மிளாவைத் தங்களவராகக் கண்டனர்

சென்ற பல ஆண்டுகளாக இந்தியாவின் பொருளியல்வளர்ச்சிக்கு எதிரான அன்னியசக்திகளால் தொடர்ச்சியாக இங்கே பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. [இந்தியாவும் இதேபோல இலங்கையிலும் பாகிஸ்தானிலும் பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கிறது என்பதும் உண்மைதான் . அது சர்வதேச அரசியல்] மற்றநாடுகளை விட நாம் பலமத, பல்லினத் தேசியம் என்பதனால் பிரிவினைவாதம் வளர்வது எளிது. சுதந்திரப்பேச்சுரிமைகொண்ட நாடு என்பதனால் அது கருத்தியல்தரப்பாக திகழவும் வாய்ப்பு அதிகம்.

இவ்வாறு சென்ற ஐம்பது ஆண்டுகளாக வளர்ந்து பரவும் பிரிவினைப்போக்கு கொண்டவர்களால் ஐரோம் ஷர்மிளா பெரும் தியாகியாக கட்டமைக்கபப்ட்டார். அவருடைய அரசியலைப்பற்றிப் பேசுவதே பெரிய தப்பு என்பது வரை அந்த பிம்ப உருவாக்கம் சென்றது.

என் கட்டுரையில் நான் இப்படிக் கேட்டிருந்தேன். நம் ஊடகங்கள் ஐரோம் ஷர்மிளாவை தொடர்ந்து முன்னிறுத்தியும், சர்வதேசக் கவனத்திற்கு கொண்டுவந்தும் பெருமுயற்சி எடுக்கின்றன. ஆனால் ஏன் மணிப்பூரில் அவரது அந்த மகத்தான தியாகம் அலைகளை கிளப்பவில்லை?அதற்கு மணிப்பூரே ஐரொம் ஷர்மிளாவின் பின்னா ஒருங்கிணைந்து நின்றிருக்கிறது என்றும் நான் அவரை அவதூறுசெய்கிறேன் என்றும் இங்கே பலர் எழுதிக்குவித்தார்கள்

நான் சுட்டிக்காட்டியது அவருடைய அரசியலின் எதிர்மறைத்தன்மை, ஜனநாயகவிரோதமான மூர்க்கம், பழங்குடி இனவாத அரசியலின் பிற்போக்குத்தன்மை ஆகியவற்றைப்பற்றி மட்டுமே. மணிப்பூர் உட்பட வடகிழக்குப்பகுதிகளில் இருப்பது இந்தியதேசியத்திற்கு எதிரான வட்டார தேசியங்களின் எழுச்சி அல்ல. தங்கள் நிலம் தங்களுடையது மட்டுமே என மூர்க்கமாக வாதிடும் பழங்குடி அரசியல் அது.

ஐரோம் ஷர்மிளா மீய்ட்டி இனக்குழுவின் முகம். அவர்கள் மணிப்பூர் தங்களுக்கு மட்டுமே உரியது என வாதிடுபவர்கள். குக்கிகளை நாகாக்களை அங்கமிக்களை கடந்த காலத்தில் கொன்று குவித்தவர்கள். ராணுவம் பலவீனமடைந்தால் அக்கணமே ஆயுதங்களுடன் கொலைக்கு முயல்பவர்கள்.

வெறுமே இணையத்தில் தேடினாலே இந்த அத்தனைபழங்குடிகளும் தங்கள் பூர்வீக நிலம் என்றும் தங்கள் நாடு என்றும் தனித்தனியாக பிரிவினைகோரும் நிலம் பொதுவானஒன்றே என்பதைக் காணமுடியும். அங்கே குக்கிகள், மீய்ட்டிகள், நாகாக்கள், அங்கமிகள் அத்தனை பேருக்கும் தனிநாடுகள் வேண்டும். ஆனால் அந்நாடு ஒரே நிலத்தில் உள்ளது. ஒவ்வொரு பழங்குடிக்கும் மற்ற அனைத்துப் பழங்குடிகளும் தங்கள் நாட்டில் அத்துமீறிய அன்னியர்கள்.

இந்திய அரசு இவர்கள் மேல் அரசுவன்முறையைச் செலுத்தி அங்கே அரசு ஒன்றை நிலைநாட்டியிருக்கிறது. அதன் ஆற்றல் குறையும்போதெல்லாம் அப்பழங்குடிகள் ஒருவரை ஒருவர் கொன்று குவித்த வரலாறே உள்ளது. அரசுடன் மோதி இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட இவ்வாறு செத்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அதையும் இணையத்தை சாதாரணமாகப்பார்த்தாலே தெரிந்துகொள்ளமுடியும்.

அதாவது மதுரையில் தேவர்கள் தனிநாடு கேட்டு ஆயுதப்போரில் ஈடுபடுகிறார்கள் என்று கொள்வோம். மற்றசாதியினரை தங்கள் தயவில் விட்டுவிட்டு அரசு வெளியேறவேண்டுமென கோருகிறார் என்று கொள்வோம். அது எந்தவகை அரசியல்? ஐரோம் ஷர்மிளா போன்ற ஒருவர் மதுரையில் அரசு வெளியேறும்வரை உண்ணாவிரதம் இருப்பார் என்றால் அது அகிம்சைப்போராட்டமா என்ன?

அகிம்சைப்போராட்டம் என்பது ஆயுதமில்லா வன்முறையோ, கட்டாயப்படுத்தும் உத்தியோ அல்ல. அது தன் கோரிக்கையை ஒருமுகப்படுத்தும் ஓரு வழிமுறை. தன் தரப்பை பொதுமக்களிடையே உத்வேகத்துடன் எடுத்துச்செல்லும் பிரச்சார முறை. ஒருவர் அதில் தான் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறேன் என்பதை காட்டும் ஒரு நேரடிக் களச்செயல்பாடு. அதனூடாக மக்களின் ஆதரவை பெற்று மேலும் மேலுமென போராட்டத்தை முன்னெடுப்பதே காந்திய வழிமுறை.

மக்களின் தேவைகள், வரலாற்றுச்சந்தர்ப்பங்களை ஒட்டி அந்தக் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் காந்தி வளர்த்தெடுப்பதை, தேவையென்றால் நிலைமாற்றம் செய்துகொள்வதை , வலுப்பெறும் வரை ஒத்திப்போட்டு மீண்டும் தொடங்குவதை காணலாம். மூர்க்கமான கண்மூடித்தனமான பிடிவாதமாக எந்த உண்ணாவிரதப்போராட்டத்தையும் அவர் செய்யவில்லை. அவருடைய எல்லா போராட்டங்களும் மக்களிடம் செல்லும் பாதைகள்தான்.

ஐரோம் ஷர்மிளாவுக்கும் மணிப்பூர் யதார்த்தத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என நான் பலமுறை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறேன். ஐரோம் ஷர்மிளா மணிப்பூரில் ஒர இனக்குழுவின் பிரதிநிதி. அக்குழுவுக்குள்ளே கூட அவருக்கு பெரிய ஆதரவு இல்லை, வரும்காலத்தில் அது தெரியவரும். இது நான் முன்பு எழுதியது.

அன்று அவரை ஒட்டுமொத்த மணிப்பூரின் அடையாளமாக, இரும்புப்பெண்மணியாக, பெண்காந்தியாக இங்கே சொல்லிக்கொண்டிருந்தவர்கள் நான் பொய்சொல்கிறேன் என வெறுப்புரை செய்தனர். இன்று அப்பட்டமாக உண்மை கண்ணெதிரே தெரிந்தபின்னரும்கூட அவர்கள் அந்தர்பல்டிகள் அடிக்கவே முயல்வார்கள். அரசியல்சார்புநிலை என்பது பலசமயம் ஒருவகை மனநோய்.

இலட்சியவாதத்தின் தோல்வி இது என சிலர் சொல்கிறார்கள். டிராஃபிக் ராமசாமி போன்ற ஒரு இலட்சியவாதி தேர்தலில் நின்றாலும் இதே கதிதான் வரும், ஆகவே ஐரோம் ஷர்மிளாவின் தேர்தல்தோல்வியை வைத்து அவர் தோற்றுவிட்டதாகச் சொல்லக்கூடாது என்று வாதிடுகிறார்கள்

அந்த ஒப்பீடே பிழையானது. இலட்சியவாதிகள் ஒருசமூகத்தின் உயர்ந்த இலட்சியங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். இலட்சியங்கள் எல்லாகாலத்திலும் எங்கும் சிறுபான்மையினருக்குரியவைதான். சமூகத்தின் கூர்முனைகளில் மட்டுமே இருக்கும் ஒளி அது. இலட்சியவாதிகள் பொதுமக்களை நோக்கிப் பேசுவதில்லை, பொதுமக்களைத் திரட்ட முயல்வதுமில்லை. அவர்கள் தனிப்பயணிகள். ஆகவே கொஞ்சம் அந்நியர்கள். கொஞ்சம் ‘எக்ஸண்டிரிக்குகளும்’கூட

ஐரோம் ஷர்மிளா மணிப்பூரின் இலட்சியவாதம் எதற்கும் பிரதிநிதி அல்ல. அங்குள்ள இனக்குழு,பிரிவினை அரசியல் ஒன்றின் உலகளாவிய முகம் அவர். அவர் மக்களைநோக்கித்தான் பேசிக்கொண்டிருந்தார். மக்களை ஒருங்கிணைக்கவே முயன்றார். இருபதாண்டுகளுக்கும் மேலாக அவருடைய உடன்பிறந்தவர் உட்பட ஒரு பெரிய கூட்டமே அமைப்பாகத் திரண்டு அரசியல்நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டுவந்தது. இன்று அவர்களின் அரசியல் உருமாறிவிட்டது. அது இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலாக ஆகிவிட்டது. ஐரோம் ஷர்மிளா அன்னியப்பட்டுவிட்டார்.

ஆகவே ஐரோம் ஷர்மிளாவின் தோல்வி என்பது அவருடைய அரசியல்தரப்பின் தோல்வியேதான். இலட்சியவாதத்தை அதை எத்தனைபேர் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை வைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் அரசியலை அதை எத்தனைபேர் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை வைத்துத்தான் மதிப்பிடவேண்டும்.

அப்பட்டமாகச் சொன்னால் ஐரோம் ஷர்மிளா அங்கே இந்திய அரசால் மணிப்பூர் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டத்தானே உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் பெற்ற ஓட்டுகளில் இருந்து அவர் சொன்னதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்? அவர் முன்வைத்தது பொய்யான ஒரு சித்திரமென்பதற்கான ஆதாரம்தானே அது?

இல்லை அவர் இலட்சியவாதி . அவர் பட்டினி கிடந்தார், ஆகவே அவரை ஆதரித்திருக்கவேண்டும் அம்மக்கள் என நாம் இங்கிருந்து சொல்வோமென்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்!

ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி –அதை தோல்வி என்பதை விட மாபெரும் அவமதிப்பு என்றே சொல்லவேண்டும் – அவர் மணிப்பூரின் மக்களின் யதார்த்தத்தில் இருந்து மிகமிக விலகி எங்கோ நிற்பதைத்தான் காட்டுகிறது. முகநூலிலும் ஊடகங்களிலும் உள்நோக்கம் கொண்ட அரசியல்கூச்சலிடும் கும்பலை தவிர்த்துவிட்டு நம்மூரில் வேலைபார்க்க வந்திருக்கும் நான்கு மணிப்பூர் பையன்களிடம் பேசினாலே நாம் அங்குள்ள உண்மையை தெரிந்துகொள்ளமுடியும் நேரில் மணிப்பூரில் ஒரு சுற்றுசுற்றி நான்குபேரிடம் பேசினால் முகத்தில் வந்து அறையும் அந்த உண்மை.

மணிப்பூர் மக்கள் நவீனவாழ்க்கையை விரும்புகிறார்கள். அங்கே எல்லாச் சுவர்களிலும் பொறியியல், மருத்துவக் கல்லூரி விளம்பரங்கள்தான், [நம்மூர் எஸ்.ஆர்.எம் கல்லூரி, மணிப்பால் மருத்துவக்கல்லூரி] சிற்றூர்களில்கூட போட்டித்தேர்வுப் பயிற்சிநிலையங்களின் டியூஷன் நிலையங்களின் கணிப்பொறிப்பயிற்சி நிலையங்களின் விளம்பரங்கள் நிறைந்துள்ளன, செல்பேசிகள், சட்டைகள், செருப்புகளின் விளம்பரங்கள்.

ஆனால் சீனாவால் பேணிவளர்க்கப்படும் தீவிரவாதம் அங்கே வாழ்க்கையை முடக்கிவைத்துள்ளது. அயலூர் லாரிகள் மேல் தாக்குதல். சாலை மற்றும் பாலங்கள் போடும் குத்தகைதாரர்கள் மேல் தாக்குதல். பெரிய நிறுவனங்கள்மேல் உச்சகட்ட கப்பவசூல். சந்தைகள் சூறையாடுதல். ஆகவே பொருளியல் உறைந்து நிற்கிறது. ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கிருந்து இந்தியாவெங்கும் வேலைதேடிக் கிளம்புகிறார்கள். கடைக்கோடியில் நாகர்கோயில் ஓட்டல்கள் வரை வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் தவிப்பும் தேவையும் என்ன என்று புரிந்துகொள்ளலாம்.

ஐரோம் ஷர்மிளா பிரிவினைவாதக் கோரிக்கையை முன்னெடுத்த சில செயல்பாட்டுக் குழுக்களால் உருவாக்கப்பட்ட அடையாள முகம். அவர்களின் நோக்கம் மணிப்பூரின் நலனோ மக்கள் வாழ்வோ அல்ல. அவர்கள் பெரும்பாலும் நிதிபெற்றுச் செயல்படும் அன்னியக்குழுக்கள். அவர்கள் ஒருகட்டத்தில் ஐரோம் ஷர்மிளாவை கைவிட்டனர். அவர்கள் பேசிய அரசியல் மணிப்பூரை பொருளியல்ரீதியாக திவாலாக்கிவிட்டு தானும் அழிந்துகொண்டிருக்கிறது. சீனாவால் நடத்தப்படும் மறைமுகப்போராக மட்டுமே அங்கே இன்று தீவிரவாதம் நீடிக்கிறது. ஐரோம் ஷர்மிளா தன் அந்தர உலகில் மீண்டும் தீவிரவாத ஆதரவு, இந்திய எதிர்ப்பு அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்

ஐரோம் ஷர்மிளா ஓய்வெடுக்கட்டும். அவரது அரசியல் பெரிய அழிவை உருவாக்கிவிட்டு ஓய்ந்துவிட்டது. மணிப்பூரின் இளைய தலைமுறை வாழ்வதற்கு இனியாவது ஐரோம் ஷர்மிளா அனுமதிக்கவேண்டும்.

உண்மையில் எத்தனை புரிதலற்ற மூர்க்கமானதாக இருந்தாலும், எத்தனை எதிர்மறைத்தன்மைகொண்டதாக இருந்தாலும் , அந்தப்போராட்டத்திலுள்ள அர்ப்பணிப்பும் அவர் அடைந்த துன்பங்களும் என்னை நெகிழவே வைக்கின்றன. எதன்பொருட்டாக இருந்தாலும் ஒருவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் போராடுவது ஒரு உயர்விழுமியம் என்றே என் எழுத்தாளனின் அகம் சொல்கிறது. காலாகாலமாக வீரர்களை பரணிபாடி ஏத்திய புலவர்களின் மரபு நான்

ஆயினும் இந்த தேசம் இனக்குழுக்களின் பண்பாடுகளின் மதங்களின் தொகுப்பு. வரலாற்றுப்போக்கில் இது ஒன்றாக இணைந்து மாபெரும் மக்கள்பரிமாற்றம் ஒன்று நிகழ்ந்துவிட்டிருக்கிறது.ஆகவே இது ஒன்றாகவே நீடிக்கமுடியும். பிரிவது அழிவை மட்டுமே உருவாக்கும்.

பிரிவினையை எதன் பொருட்டு பேசுபவர்களும் அழிவை வரவேற்பவர்கள். தவறான அரசியலின்பொருட்டு தவறான போராட்டமுறை ஒன்றை மேற்கொண்டவர் என்றே ஐரோம்ஷர்மிளாவை வரலாறு நினைவுகொள்ளும். அது பிறருக்கும் முன்னுதாரணமாக அமையவேண்டும்.

ஐரோம் ஷர்மிளா வென்றிருந்தால் உருவாகியிருக்கக்கூடியது அராஜகமும் அழிவும். ஆகவே அவர் வெல்லவில்லை என்பது வரவேற்புக்குரியது

ஜெ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2

முந்தைய கட்டுரைநிழற்தாங்கலில் “ஜெயமோகனுடன் ஒரு நாள்’
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–42