தூய்மைவாதிகள் வருக!

krs

ஜெ

‘அறிஞர் கரச’ பற்றி எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் நக்கல் செய்பவர்கள் ஏதோ ஒருவகையில் உங்களுக்கு முக்கியமானவர்கள். அவர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சரவணன்

***

அன்புள்ள சரவணன்,

ஆம், அவர் எனக்கு முக்கியமானவர்தான். அவருடைய கொந்தளிப்பு வசை குமுறல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவற்றைக்கொண்டு நான் அவரது கருத்துக்களை மதிப்பிடுவதில்லை.

ஏன் அவர் முக்கியமானவர்? அவர் ஒரு தூய்மைவாதி. தூய்மைவாதிகள் மதம், பண்பாடு போன்றவற்றில் ஏதேனும் ஒரு கூறை முதன்மையானது, தொன்மையானது என எடுத்துக்கொள்கிறார்கள். அதைத்தவிர பிற அனைத்தையும் நிராகரிக்கிறார்கள். அதன்பொருட்டே சிந்திக்கிறார்கள். அதைக்கொண்டு ஒட்டுமொத்த மதத்தையும் பண்பாட்டையும் மறுவரையறை செய்ய முயல்கிறார்கள்

இம்முயற்சியில் அவர்கள் முக்கியமான பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களாக ஆகிவிடுகிறார்கள். தொடர் விவாதம் ஒன்றை நிகழ்த்துகிறார்கள். இடைவெளியில்லாமல் பண்பாட்டை ‘கலக்கி’ உயிர்த்துடிப்புடன் இருக்க வைக்கிறார்கள். பண்பாடும் மதமும் முரணியக்கம் வழியாகவே செயல்பட முடியுமென நான் நினைக்கிறேன். ஆகவே அவர்கள் ஒரு தரப்பாக மிகமிக முக்கியமானவர்கள். அவர்களைப்போன்றவர்கள் இல்லையேல் பண்பாடும் மதமும் உறைந்து நிறுவனமாக ஆகிவிடும். அதில் சிந்தனையற்ற நிறுவனமனிதர்கள் வந்து அமர்வார்கள்.

அடிப்படைவாதி  என்னும் சொல் சற்று வேறுபட்டது. அடிப்படைவாதிகளுக்கு பண்பாடும் மதமும் அமைப்புகள்தான். அவ்வமைப்புக்கு விசுவாசமாக இருந்து அதற்காகப் போராடுவதே அவர்களின் பணி. அவர்களுக்குச் சிந்தனை கிடையாது, விவாதங்களில் இடமும் இல்லை

கேரளப்பண்பாடு குறித்த ஓங்கியறையும் தரப்பான ‘சாதியமைப்பும் கேரளவரலாறும்’ நூலில் பி.கே. பாலகிருஷ்ணன் ‘எல்லாவகையான தூய்மைவாதிகளிடமும் பெருமதிப்பு கொண்டவன் நான். அவர்களுடன் ஒருபோதும் உடன்படமுடியாவிட்டாலும் அவர்களின் தீவிரத்தை மதிக்கிறேன்’ என்று எழுதியிருந்தார். அதைப்பற்றி அவருடன் விவாதித்ததை நினைவுகூர்கிறேன். என் இந்த எண்ணம் அப்போது உருவானதே.

கரச என்னும் பெயரில் எழுதுபவர் ஐயமில்லாமல் தமிழின் பேரறிஞர்களில் ஒருவர். சமகாலத்தமிழ்ச்சூழலில் இளையவர்களில் தமிழறிஞர்கள் அருகிவரும் சூழலில் அவ்வாறு ஒருவர் செயல்படுவது மிகமிக முக்கியமானது. அவருடைய மாதவிப்பந்தல் என்னும் இணையதளம் நான் எப்போதும் விரும்பி வாசிப்பது, எனக்குக் கற்பிப்பது.

தூய்மைவாதிகள் சைவம் வைணவம் போன்ற மதங்களில் இன்றும் உண்டு. மலேசியாவில் ஒருவர் சைவம் அல்லாத அனைத்துமதங்களும் சிறுதெய்வ வழிபாடுகளே என நாற்பதாண்டுகளாக வாதிட்டுவருகிறார். முருகவழிபாடே கூட பிழையானது என்பது அவரது தரப்பு.ஒரு இதழும் இதற்கென நடத்துகிறார்.

விசிஷ்டாத்வைத தரப்பில் இதேபோன்ற உக்கிரமான நிலைபாடுள்ளவர்கள் உண்டு, ஸ்ரீவைஷ்ணவசுதர்சனம் என்னும் இதழ் இருபதாண்டுகளாக எனக்கு வந்துகொண்டிருந்தது. தொட்டாலே அனல் பறக்கும். என்றைக்காவது ஒருநாள் ஆத்திரமிகுதியில் பெருமாளுக்கே நாலு சாத்து சாத்தப்போகிறார் என நான் அருண்மொழியிடம் சொல்வதுண்டு.

கரச முருகன் மற்றும் சிலநாட்டார் தெய்வங்கள் மட்டுமெ தமிழர் மெய்யியல் என நினைக்கிறார். பிற அனைத்துமே ஆரியச்சதியால் வந்தேறிய திரிபுகள். தமிழர்களுக்கு மதம் இல்லை, வழிபாடுகளே உண்டு என வாதிடுகிறார்.. அவரிடம் புறநாநூற்றின் ஆரம்பப்பாடல்களிலேயே வேள்வியும் வைதிகமும் குறிப்பிடப்பட்டுள்ளனவே என்று கேட்டால் அதற்கும் முன்னால்சென்று தூயநிலையை கண்டுபிடித்து மற்றதெல்லாம் திரிபுகளே என்பார்.தூய்மைவாதிகளுக்கு இது ஒரு வசதி, அவர்களுக்கு பிடிக்காத எல்லாமே திரிபுகள் என சொல்லிவிடுவார்கள்.

தமிழின் ஏறத்தாழ அத்தனைச் சொற்களும் தமிழ் வேர்கொண்டவை என வாதிடுவார். ஆதி, பகவன் எல்லாமே கூட தமிழ்ச்சொற்கள். சமணமும் பௌத்தமும் கொண்டுவந்த சொற்களுக்குக்கூட தமிழ்வேர் கண்டுபிடிப்பார். இந்த மொழியாராய்ச்சி, வேர்ச்சொல் ஆராய்ச்சி எல்லாமே விருப்பப்படி இழுக்க ஏற்றவை. ஆதல் என்பதில் இருந்தே ஆதி வந்திருக்கிறது என ஒருவர் சொன்னால் எப்படி வாதிடமுடியும்? பெருமாளே முழுமுதல்தெய்வம் என கிடாம்பி ஆசசான் சொன்னால் ‘சரிதான்’ என்று சொல்லி ஒதுங்கித்தானே போகமுடியும்?

அப்படியென்றால் அவரது பங்களிப்பு என்ன?  உதாரணமாக இந்தக் கடிதத்தைச் சுட்டிக்காட்டுவேன்

*

யஜுர் வேதத்தின் மைத்ராயனி சம்ஹிதையில் ஸ்கந்த எனும் வார்த்தை இருக்கிறது என்றும் சாந்தோக்கிய உபநிஷத்தில் 7.26.2 ஸநத்குமாரரை ஸ்கந்தன் என்று உருவாகிறது என்றும் படித்தேன் இவை போயுமு 10-8ஆம் நூற்றாண்டு காலகட்டத்தவை உத்தேசமாக அதை விட பழைய தமிழ் குறிப்பு இந்த கந்து என்னும் வார்த்தைக்கு இருக்கிறதா என்ன? இந்த காலத்தில் தமிழ் மொழியே கிடையாதே.ஸ்கந்தம் என்னும் வார்த்தைக்கு விந்தை வெளியேற்றுதல் என்னும் பொருள் உள்ளது அது குமரனின் கதையுடன் தொடர்புடையதுதானே.
http://sanskritdictionary.com/?q=skanda
http://sanskritdictionary.com/?q=skand&iencoding=&lang=

கோபி நாத்

*

இந்தக்கடிதம் நான் கந்து என்னும் கட்டுரையும் மேலதிக விளக்கமும் எழுதியபோது எனக்கு வந்தது.   நான் இதை அப்போது பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் இக்குரலுடன் விவாதிக்க முடியாது. நான் மொழி, பண்பாடு, மதம் எல்லாம் மாபெரும் கலவையாக, முரணியக்கங்களின் பெருக்காக நிகழ்பவை என்னும் தரிசனம் கொண்டவன். எந்த வகை அடிப்படைவாதமும் நம்பிக்கையை, பற்றை சார்ந்தது. அவற்றுடன் விவாதிக்கமுடியாது

இதிலுள்ள நிலைபாடுகளைக் கவனியுங்கள்.முதலில் இன்னமும்கூட தெளிவாக காலவரையறைசெய்யப்படாத நூல்களை கிமு 10க்கு முன்னால் கொண்டுசெல்கிறார். அப்போது தமிழே கிடையாது என்கிறார்.அந்நூல்களில் உள்ள ஒரு சொல் கண்டிப்பாக சம்ஸ்கிருதத்தில் இருந்தே வெளியே சென்றிருக்கும், வந்திருக்காது என்கிறார்

இது ஒரு அதீதநிலைபாடு. இதிலுள்ளவை இரண்டு மனநிலைகள். ஒன்று அமைப்பை நிலைநிறுத்தும் பற்றுசார்ந்த அடிப்படைவாதம். இரண்டு ஆதிக்கநோக்கு

சாதாரண தர்க்கத்துக்கே தெரியும், மொழிகளின் தோற்றம் என்பது அவை எழுத்துவடிவில் பதிவாவதற்கும் பற்பல நூற்றாண்டுகள் முந்தையது. எழுத்துக்களை தொகுத்துப்பேணும் அமைப்புக்கள் உருவானபின்னர் கிடைக்கும் ஆவணங்களைக்கொண்டு மொழிகளின் பிறப்பை உருவகிக்கமுடியாது. கோண்ட் பழங்குடிமொழிகளுக்கே கூட சம்ஸ்கிருதம் அளவுக்கு அல்லது அதைவிடவும்கூட தொன்மை இருக்க வாய்ப்புண்டு. சம்ஸ்கிருதம் மதத்தின் மொழியென ஆனமையால் அதிலுள்ள மதநூல்கள் எழுதி பேணப்பட்டமையால் நமக்கு நூல்களாகச் சொற்கள் கிடைக்கின்றன.

சங்கப்பாடல்கள் தமிழின் மிகப்பிற்காலத்தைய தொகைநூல்கள். ஒருவகை கணக்கெடுப்புகள் அவை. அவற்றில் மிகத்தொன்மையான பாடலுக்கும் மிகக்கடைசிப்பாடலுக்கும் நடுவே மொழியின் வேறுபாட்டை வைத்து நோக்கினாலே ஆயிரமாண்டுக்கால இடைவெளி  இருக்கலாம்.

நாட்டார் வழக்கில், பேச்சுவழக்கில் உள்ள ஒரு சொல்லின் தொன்மையை நம்மால் அளவிடவே முடியாது. ஏன் மைத்ராயனிய சம்ஹிதையிலோ சாந்தோக்யத்திலோ தமிழிலிருந்து, அல்லது தமிழின் தொல்வடிவிலிருந்து அச்சொல் சென்றிருக்கக்கூடாது? சென்றது என நான் உறுதியாகச் சொல்லவரவில்லை, அப்படிச் சொல்ல அடிப்படைவாதிகளாலும் தூய்மைவாதிகளாலும்தான் முடியும். இத்தனை தொல்பழங்காலத்தைப்பற்றி நம்மால் ஒன்றும் முற்றுமுடிவாகச் சொல்லமுடியாதென்பதே என் எண்ணம். ஆனால் சென்றிருக்கலாம் என்பது ஒரு வாய்ப்பு.

ஏனென்றால் சம்ஸ்கிருதம் பிற இந்தியமொழிகளுடன் உரையாடத்தொடங்கியது வேதகாலத்தின் இறுதியிலேயே நிகழ்ந்துவிட்டது. அது தன்னை ஒரு இணைப்புமொழியாக உருமாற்றிக்கொண்டது. சொற்களை அனைத்துமொழிகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளத் தொடங்கியது. அதற்கேற்ப இலக்கணங்களை மாற்றிக்கொண்டே இருந்தது. இன்றைய ஆங்கிலம் எப்படி சொற்களைப் பெற்றுக்கொள்வதனூடாக இணைப்புமொழியாக வளர்கிறதோ அதேபோலத்தான்.

சம்ஸ்கிருதம் இணைப்பு மொழியாக ஆனதன் வழியாகவே வேதக்கலாச்சாரம் இந்தியப்பெருநிலம் முழுக்கப் பரவியது. இந்தியாவெங்கும் மிகமிகத் தொல்காலத்திலேயே வேதப்பண்பாட்டின் தடையம் உள்ளது என்பது சம்ஸ்கிருதம் வந்தது என்பதற்கு மட்டும் அல்ல சம்ஸ்கிருதம் பெற்றுக்கொண்டது என்பதற்கும் சான்றுதான். அதனூடாகவே இந்துமதம் என்னும் மாபெரும் தொன்ம – தத்துவ –வழிபாட்டு களஞ்சியம் உருவாகி வந்தது.

சம்ஸ்கிருதம் வாழ்க்கைச்சூழலின் சொற்களைப் பெற்றுக்கொண்டிருக்கலாம், மதப்பரவலின் போக்கில் தத்துவக் கலைச்சொற்களை அளித்திருக்கலாம். இது ஒரு பெரும் உரையாடல். கொள்ளல் வாங்கல். நான் கந்து என்னும் நாட்டார் சொல்லில் இருந்து ஸ்கந்த என்னும் சொல் சென்றிருக்கலாம் அதுவே கந்தனாக மீண்டும் வந்திருக்கலாம் என்று சொல்வது இந்த உரையாடலை அடிப்படையாகக் கொண்டே.

இங்கு பண்பாடுகள், மொழிகள் நடுவே நடந்தது ஒரு உரையாடல். அப்படி உருவகித்துக்கொள்வதே கொஞ்சமாவது யதார்த்த உணர்வுடையவர்கள் செய்யும் செயலாக இருக்கமுடியும். நான்தான் கொடுத்தேன், ஆனால் பெற்றுக்கொள்ளவே இல்லை என்பதைப்போல அபத்தமான பிடிவாதம் இல்லை.

ஆனால் அடிப்படைவாதிகள் இருசாராரும் அதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.வேறு மொழிகளில் உள்ள ஒரு விஷயம் சம்ஸ்கிருதத்தில் இருந்தால் அது சம்ஸ்கிருதத்தில் இருந்து சென்றது மட்டுமே என்ற எளிய நிலைபாட்டுக்கு செல்வார்கள். சம்ஸ்கிருதம் செய்யப்பட்ட மொழி, இணைப்புமொழி என அவர்களால் ஏற்கமுடியாது. அது தெய்வமொழி, தூயமொழி, அப்படியே வானிலிருந்து இறங்கியது. அது மொழிமீதான பற்று அல்ல. அது மதப்பற்று, சாதிப்பற்று, அதற்கும் மேல் ஆதிக்கநோக்கு.

அந்த நிலைக்கு நேர் எதிர்நிலையாக இந்த நிலை, கரச அவர்களின் நிலை, இங்கே இருக்கட்டுமே என்றுதான் எனக்குப் படுகிறது.ஸ்கந்த என்னும் சொல்லை ஒட்டுமொத்தச் சொல்லாகவே காணமுடிகிறது, அதன் வேர் ஒலி சம்ஸ்கிருதத்தில் இல்லை என்பது ஓர் ஊகம். இல்லை இதோ வேர்ச்சொல் என சம்பந்தமே இல்லாமல் ஒடித்து கொண்டுகூட்டி வாதிடுவது ஒரு நிலைபாடு. அதை இந்தப்பக்கமும் செய்யலாமென கரச காட்டுகிறார்.

அவர்களின் சொல்லாராய்ச்சியுடன் விவாதிக்க முடியாது நம்மால். இவர்களுடனும் விவாதிக்கமுடியாது. ஆனால் இருசாராரும் விவாதித்துக்கொள்ளட்டும்.அது அனைத்துச் சாத்தியங்களையும் திறந்து வைக்கட்டும். நாம் வாசித்து பொதுப்புத்திக்கு ஏற்ப பெற்றுக்கொள்வோம்.

ஆயிரமாண்டுக்காலத் திரிபுகள், அடிப்படைவாத மூர்க்கங்கள், ஆதிக்கநோக்குகள் தமிழைச் சூழ்ந்துள்ளன என்பது வெளிப்படை. ஆகவே மறுபக்கமாக தேவநேயப்பாவாணர் முதல் கரச வரை நின்று களமாடட்டும். இவர்களின் சொல்லாய்வுகள் பெரும்பாலும் அதீதமான தாவல்கள்  என நாம் அறிவோம். ஏனென்றால் நமக்குத் தமிழ் தெரியும். ஆனால் அவர்களுடையதும் பெரும்பாலும் அப்படித்தான் என்பதே உண்மை. நூறு பூக்கள் மலரட்டும் என்பதுபோல நூறு வேல்கள் எழட்டும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

எந்தத் தரப்பானாலும் நம் சூழலில் அறிஞர்கள் முக்கியமானவர்கள் [ஆனால் அறிஞர்கள் மட்டும்தான், அல்லக்கைகள் அல்ல] அவர்கள் பேசட்டும். அவர்களுக்கு கூடவே நாலுவாய் குரவையிடவும் உரிமை உண்டு என்பது நம் பண்பாட்டுமரபு.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–39
அடுத்த கட்டுரைமுற்போக்கின் தோல்வி ஏன்? -2