அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். என்னுடைய வட இந்திய நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவன் கூறிய விஷயம்.
“பொது மக்களிடம் சமண, பவுத்த மதங்கள் செல்வாக்கு கொண்டிருந்த தருணம், துறவு போன்ற கருத்துகள் மக்களால் பின்பற்ற ஆரம்பிக்கப்பட்டது. அதே சமயம் நிறைய போர்கள் அதனால் ஏராளமான உயிர்சேதம் என்று கணிசமான அளவு மக்கள் தொகை குறைந்தது. இந்த தருணத்தில்தான் இந்து மத அரசர்கள் வாத்சாயனரை ” காமசூத்திரா ” எழுதச் சொல்லி வற்புறுத்தினார்களாம். துறவு என்ற கருத்தியலுக்கு எதிராகவும் மக்களிடையே செக்ஸ் பற்றிய ஆர்வம் அதிகரிக்கவும் இதைச் செய்யச் சொன்னதாகவும் அவரும் ஒப்புக் கொண்டு எழுதியதாகவும் ” நண்பன் சொன்னான்.
இது உண்மையா ? இந்து கோவில்களில் காமத்தைப் பற்றிய சிற்பங்கள் மக்களிடம் ஆர்வத்தைத் தூண்டி பிரம்மச்சர்யம் போன்ற சமண, பவுத்த மதங்களின் முக்கியமான கொள்கையை ஒடுக்கத்தானா ?
அன்புடன்,
நா.சாத்தப்பன்.
***
அன்புள்ள சாத்தப்பன்
இங்கே நம்மிடம் செயல்படும் சில சிந்தனைச் சட்டகங்கள் உள்ளன. மிகமிக எளிமைப்படுத்தப்பட்டே இத்தகைய சட்டகங்கள் உருவாகின்றன. ஆகவே எளிமையான மனங்களை அவை மிகவும் கவர்கின்றன. அவற்றைச் சொல்லும்போது சிந்தனையாளன் என்னும் ஒரு தோரணையும் அமைகிறது. ஆகவே முகநூல் போன்ற வட்டாரங்களில் இவை அதிகம் பகிரப்படுகின்றன. இந்த தரத்தில் பேசிக்கொண்டிருக்கும் ‘அறிஞர்’களும் புகழ்பெறுகிறார்கள்
முதல் சட்டகம், எல்லாவற்றையும் எளிமையான பயன்பாட்டுத் தர்க்கத்துடன் அணுகுதல்.
உதாரணமாக ஏன் கோபுரங்களைக் கட்டினார்கள்? அதன் உச்சியில் கலசங்களில் விதைகளை வைப்பார்கள். அது பெரிய வெள்ளம் வந்தாலும் அழியாமல் இருக்கும். அதற்காகத்தான். அதற்கு மலைமேல் கொண்டுசென்று வைத்தால் போதுமே என இதை கேட்பவர்கள் திருப்பிக் கேட்கக்கூடாது.
கோயிலில் ஏன் காமச்சிற்பங்கள் இருக்கின்றன தெரியுமா? மக்கள் அதைப்பார்த்து எப்படிச் செய்யலாம் என்று தெரிந்துகொள்ள. செய்துபார்த்தவர்கள் பலவருடம் சுளுக்கெடுக்கும் வைத்தியர் இல்லங்களில் வாழவேண்டியிருந்திருக்கும், பாவம்.
கலை, அழகுணர்வு, குறியீடுகள் என எதுவுமே இதைச் சொல்பவர்களின் உலகில் இல்லை. வரலாற்றுப்பதிவு பண்பாட்டுமரபு எதுவும் ஒரு பொருட்டும் அல்ல.
இரண்டாவது சிந்தனைச்சட்டகம். இந்துமரபின் அத்தனை சிந்தனைகளும் அத்தனை மரபுகளும் சமண, பௌத்த மரபுகளை ஒழிப்பதற்காக மட்டுமே உருவாகியிருக்கும் என்பது.புத்த மதத்தைவிட தொன்மையானது பெரியதுமான ஒரு மதத்திற்கு சொந்த உபயோகத்திற்காக சில நம்பிக்கைகளும் சில குறியீடுகளும் உருவாகியிருக்க வாய்ப்புண்டு என இந்த கும்பலிடம் சொல்லிப்புரியவைக்கவே முடியாது.
மேலே சொன்ன இரு சட்டகங்களும் இங்கே இடதுசாரி ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டவை. உண்மையில் டி டி கோஸாம்பியின் மரபு மிக மிக படைப்பூக்கத்துடன் இந்தியவரலாற்றையும் பண்பாட்டையும் அணுகி ஆழமான வினாக்களுக்கு விடைகண்டது. பலதிறப்புகளை உருவாக்கியது. ஆனால் கழுதை தேய்ந்து இந்த கட்டெறும்புகள் பிலுபிலுவென ஊரத் தொடங்கின.
இந்த இரு டெம்ப்ளேட்டுகள்தான் காமசூத்திரம் எழுதப்பட்டதைப்பற்றிய நீங்கள் சொல்லும் விளக்கத்திலும் உள்ளன. சொல்லும்போதே எவ்வளவு அபத்தம் என உணரத்தக்கவை.
காமசூத்திரம் என்பது உபவேதங்களில் ஒன்றாக தொன்மையான காலம்முதல் கருதப்பட்டது. ஆயுர்வேதம் [மருத்துவம்] தனுர்வேதம் [ஆயுதம்] கந்தர்வவேதம் [இசை] காரண்ய உபவேதம் [தர்க்கம்] காமகலை ஆகியவை இங்கே பயிலப்பட்டுள்ளன. வாத்ஸ்யாயனரின் காமநூல் அந்த நூல்மரபில் வந்த இறுதிநூல். அது ஒரு வழிநூலும்கூட
காம சாஸ்திரம் குப்தர் காலகட்டத்தில், இந்துசிந்தனைகள் உச்சத்தில் இருந்தபோது உருவான நூல். அந்தக்காலகட்டத்தில் அதற்கு முன்னாலிருந்த மரபுகளை கற்று மீட்டு எடுக்கும் ஒரு போக்கு உருவானது. சாணக்யரின் அர்த்தசாஸ்திரமும் இவ்வாறு உருவான ஒரு வழிநூல்தான்
காம சாஸ்திரம் நூல்கற்ற மிகசிறுபான்மையினரிடம் மட்டுமே பயிலப்பட்டது. உபவேதமாக. அது குருகுலங்களில் கற்கப்பட்டிருக்கலாம். ஷத்ரியர்களும் அதைப்பயின்றிருக்கலாம். பொதுவான வாசிப்புக்கு எப்போதுமே வந்ததில்லை. ஏனென்றால் இந்தியாவில் அப்படி பரவலான நூல்கல்வி இருந்ததில்லை. அந்தந்த குலங்களுக்கு அவர்களுக்குரிய கல்வியே அளிக்கப்பட்டிருந்தது
காமசாஸ்திரத்தை நீங்கள் பார்த்தால் தெரியும், அது காமத்தூண்டுதலை அளிக்கும் நூல் அல்ல. மனிதனின் காமத்தை புறவயமாக வரையறைசெய்து பிற அறிதல்முறைகளுடன் இணைத்துப்பார்க்கும் நூல். சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களின் அடிப்படையிலான வகைபாடுகளை நிகழ்த்தவே அது முயல்கிறது. தர்மம் அர்த்தம் மோட்சம் ஆகிய புருஷார்த்தங்களை காமத்துடன் இணைத்துப்பேசுகிறது. அது காமத்தை பிற உபவேதங்களான ஆயுர்வேதம், இசைவேதம், தர்க்கவேதம் ஆகியவற்றுடன் இணைக்கமுயல்கிறது
கடைசியாக, பௌத்தமதம் பரவியது வணிகர்களிடமும் பின்னர் அடித்தள மக்களிடமும். அவர்களிடம் இப்படி நூல் எழுதியா காமத்தை பரப்பவேண்டும்? அந்த மதங்கள் இல்லறத்தாரிடம் காமத்தை தடைசெய்தன என எவர் சொன்னது? அவை இல்லறத்தாருக்கு ஐந்து நெறிகளை மட்டுமே வலியுறுத்தின. அந்த மதத்தின் துறவிகள் மிகச்சிலர். அவர்களுக்கே பாலுறவு ஒறுத்தல் சொல்லப்பட்டது
எல்லாவற்றையும் விட முக்கியமாக, காமத்தை எந்த மதமாவது குறைக்கமுடியுமா? எந்த நூலாவது கூட்டமுடியுமா? கஷ்டகாலம், நம் வரலாற்றுப் பண்பாட்டு விவாதங்கள் இந்த லட்சணத்தில் நிகழ்கின்றன
சிந்தனைகள், கலைகள் ஆகியவை ‘சதிவேலை’களின் பகுதியாக உருவாகும் என நம்புவது இந்தியாவில் எப்படியோ பரவியிருக்கும் மனநோய். அதிலிருந்து விடுபடாமல் எதையுமே ஆக்கபூர்வமாக, அர்த்தபூர்வமாக சிந்திக்கமுடியாது. சிந்தனைகள் பல்வேறு சமூகவிசைகள் பொருளியல் மாற்றங்களின் விளைவாக உருவாகின்றன. பலவகையான உளவியல் கூறுகள் அதில் பங்குவகிக்கின்றன.
சிந்தனை என்பது எப்போதுமே எளிமைப்படுத்துவதற்கு எதிரானதே
ஜெ