மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் நவீன். நாகர்கோயில் நான் பிறந்த ஊர். தங்களது அறம் தொகுதி வாசித்துவிட்டு சொல்லவியலாத உணர்வு நிலைகளுக்கு ஆட்பட்டேன். முக்கியமாக சோற்றுக் கணக்கு கதையைப் பல முறை படித்துவிட்டு திருவனந்த்புரம் சாலை தெருவில் உள்ள kethel’s kitchen தேடிப் பிடித்து கோழி குஞ்சு வறுவலும், குழம்பும் வயிறு முட்டும் அளவுக்கு சாபிட்டது ஒரு மறக்க முடியாத அனுபவம். அளவில்லா சாப்பாடு மற்றும் போஞ்ச், ஆனால் மீன் கிடைக்கவில்லையே! அந்த கடையைப் பற்றியதுதானே உங்கள் புனைவான சோற்றுக் கணக்கும்?
உங்கள் இணைய எழுத்துக்களுக்குத் தொடர் வாசகன். பல நேரங்களில் தங்கள் கருத்துக்கள் அபாரமான திறப்புகளைத் தந்திருக்கின்றன. மனதில் படிந்து விட்ட அற்ப எண்ணங்களை இனம் கண்டு கட்டுடைத்திருக்கின்றது. தங்கள் எழுத்துக்களைப் படிக்கையில் என் மனதில் ஒரு surgical strike நடப்பது போலவே இருக்கும். அவ்வளவு துல்லியமாகத் தேர்ந்தெடுத்து தகர்த்து புனரமைப்பும் செய்துவிடும
எங்கள் வீடு இருப்பது கோணம் என்னும் ஊரில். பதினைந்து வருடங்களுக்கு முன், பள்ளி விடுமுறைகளில் மிதிவண்டியில் அனந்தன் கால்வாய் சாலை வழியாக பார்வதிபுரம் வந்து ஆலம்பாறை மலையில் ஏறி அங்கிருக்கும் பாறையில் பகலைக் கழித்துவிட்டு, அந்தி சாயும் நேரத்தில் ஆலம்பாறை ஆலமரத்திற்க்குப் பின்னால் இருக்கும் குளத்தில் குளித்துவிட்டு வீடு வருவது வழக்கம். அந்த மலை, குளம், வயல்வெளிகள் அந்த நிலக்காட்சியே பேருவகையைத் தருவதாயிருந்தது. இன்றோ அந்த வயல்கள் குறுகி வீடுகளுக்கு வழி விட்டுக் கொண்டிருக்கிறது. குளம் குட்டையாகிப் போனது. மலைகளின் பாறைகள் உடைக்கப்பட்டு கல்வி மையங்களாக மாறுகின்றன. இப்போதும் ஊருக்கு வருகையில் அதே ஆலம்பாறைக்கு எப்படியாவது ஒரு அந்தி சாயும் பொழுதை ஒதுக்கிவிடுவது வழக்கம்.முன்பு இளைப்பாறிய பாறையை அடிவாரத்திலிருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருப்பேன். அந்த குளத்தங்கரையில் நிற்கையில் ஆற்றாமையுடன் பெருமூச்சை மட்டும் விட முடிகிறது. கண்கள் பனிக்க திரும்பி வந்துவிடுகிறேன் ஒவ்வொரு முறையும்.
நில பகுதியின் மாண்பை அதைச் சார்ந்தவர்கள் உணராததே இதன் காரணமா அல்லது கால மாற்றத்தில் இது போன்றவை தடுக்க முடியாததா என்று தெரியவில்லை. நான் படித்திருக்கிறேன், நான் சார்ந்த நிலப்பகுதியின் தனித்துவத்தை உனார்ந்திருக்கிறேன் என்று உறுதியுடன் அதன் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் முன்னிறுத்தி பேச இயலாதவனாகி நிற்க்கிறேன். இதற்காகவே தங்களிடம் ஒரு உதவி . இந்த நிலப்பகுதியின் வரலாற்றையும் அதன் இயற்க்கை வளங்களையும்,நில அமைப்பையும் பேசும் நூல்களையும் அப்புனைவெழுத்துக்களையும் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
நன்றியுடன்
நவீன்
அன்புள்ள நவீன்
நாகர்கோயிலில் அழகான பகுதிகளில் ஒன்று பார்வதிபுரம். தெரிசனங்கோப்பு செல்லும்பாதை இன்னொரு இடம். பலர் இன்றும் இங்கே வருகிறார்கள்
ஆனால் சென்ற இருபதாண்டுகளாக இது பெருநகராக ஆகிக்கொண்டே இருக்கிறது. பார்வதிபுரம் மூன்றுகூட்டு மேம்பால வேலை தொடங்கிவிட்டது. ஆரல்வாய்மொழி இணைப்புச்சாலை வேலைமுடிந்துவிட்டால் இப்பகுதிதான் நாகர்கோயிலின் மையநகரம். சரிதான், காலகதி.
கணியாகுளம் வரலாற்றுச்சிறப்பு மிக்கது. இங்குதான் இரவிக்குட்டிப்பிள்ளைப்போர் நிகழ்ந்தது. பழைய வணிகச்சாலை இவ்வழிச் சென்றது. இன்றும் மூலம்திருநாள் கட்டிய கல்மண்டபங்கள் சில உள்ளன
இங்கு மூன்று பெரும் ஏரிகள் உள்ளன. கணியாகுளம் அருகே இரண்டு ஏரிகள். ஒன்று சோழர்கால ஏரி. ஒன்று மூலம்திருநாள் வெட்டியது. என் வீட்டுக்குமேல் உள்ள ஏரி சோழர்காலத்தையது. மூன்றிலுமே பத்தாண்டுகளாக தண்ணீர் இல்லை. தூர்வாரப்பட்டு அரைநுற்றாண்டு ஆகிவிட்டது. சேற்றுக்குழிகளாக கிடக்கின்றன. தூர்வாரினால் நீர் தேங்குவது மிக எளிது. ஏனென்றால் மழை மிக அதிகம். பேச்சிப்பாறை அனந்தவிக்டோரியா சானல் இவ்வழித்தான் செல்கிறது.
ஆனால் ஏரிகளை சென்ற சில ஆண்டுகளாக ஆக்ரமித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதைக்குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க மக்களுக்கு ஆர்வமில்லை. சொல்லப்போனால் மக்கள் ஏரிகள் அழியவேண்டுமென விரும்புகிறார்கள். அப்போதுதான் இப்பகுதி ‘வளரும்’ என நினைக்கிறார்கள். என் வீட்டுக்குமேலே தண்டவாளத்திற்கு அப்பால் உள்ள சோழர்கால ஏரி சென்ற இரண்டு ஆண்டுகளில் கால்வாசியாகச் சுருங்கி பட்டா நிலமாக ஆக்கப்பட்டு பிளாட் போடப்படுகிறது. ஆனால் மறுபக்கம் அதை தூர்வாரியதாகக் கணக்கு எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இது தமிழகம் முழுக்க நிகழ்கிறது. பாறையடி மலையின் அழிவுக்கு என்ன காரணம்? அங்கே நான்கு பொறியியல்கல்லூரிகள் அரசியல்வாதிகளால் மலையை ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளன. ஒரு மலையை முழுக்கவே சவேரியார் கல்லூரி ஆக்ரமித்துள்ளது. ஏதாவது செய்யப்படுகிறதா? இங்குள்ள நகர்ப்புற மக்களுக்கு அதில் எந்த ஆர்வமும் இல்லை. நீங்களே பார்க்கலாம், நகரிலிருந்து மிகச்சிலரே அங்கே நடைபயிற்சிக்குக்கூட வருகிறார்கள். கணிசமானவர்கள் செல்வது ஸ்காட் கிறித்தவக் கல்லூரி மைதானத்துக்குத்தான்.
சென்ற இருபதாண்டுக்காலத்தில் நான் கண்ட சீரழிவு இந்த அற்புதமான சானலில் கழிவுகளைக் கலந்துவிடுவது. வீடுகள் பெருகப்பெருக மாநகராட்சியே ஓடைகளைக் கட்டி இந்த நல்லநீரில் சாக்கடையைக் கொண்டுசேர்க்கிறது. நீர் பாதிப்பங்கு சாக்கடைதான் இன்று. நன்னீரில் சாக்கடையைக் கலக்கும் அரசு அனேகமாக உலகில் இதுமட்டும்தான்.
மறுபக்கம் மொத்த குமரிமாவட்ட கடலோரமும் தாதுமணல் கொள்ளையரால் சூறையாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய ஊடகங்களில் ஒரு கட்டுரைகூட அதைப்பற்றி எழுதமுடியாது. சமஸ் எழுதிய கட்டுரை பாதியில் நின்றது நினைவிருக்கலாம்.
நாம் போலியான எதிரிகளை உருவாக்கி போலியான எதிர்ப்பில் திளைக்கும் முகநூல்சமூகம். எனக்கு இன்று ஒரு கடிதம் ‘ஒட்டுமொத்த தமிழகத்தின் சுற்றுச்சூழலை அழிப்பவர் ஜக்கி வாசுதேவ். பல்லாயிரம் யானைகளைக் கொன்றவர். ஜக்கியை துரத்தினால் தமிழ்நாட்டின் நிலவளம் பாதுகாக்கப்படும்”
என்னத்தைச் சொல்ல?
ஜெ