சுஜாதாவின் முதல் சிறுகதை, அசோகமித்திரனின் முதல் சிறுகதை ஒப்பீடு http://www.jeyamohan.in/95659#.WLo8PNIrKUk
ரொபீந்திரநாத் தாகூரின் பார்வையில் சிறுகதையின் ‘இலக்கணம்.’
‘கர்ண பரம்பரை’யாகக் கேள்விப்பட்டது.
தாகூரை சிறுகதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டார்களாம்.
அவர் கூறியது.
‘ சொடோ சொடோ துகோ
சொடோ சொடோ ஷுகோ
ஸேஷ் ஹோலேவு மோனே ஹோய்
ஸேஷ் ஹோயெனி.’
பொருள்.
சிறுகதை என்பது வாழ்க்கையின் அன்றாடச் சின்னஞ்சிறு துக்கங்கள், சின்னஞ்சிறு சுகங்கள்/மகிழ்ச்சிகள் பற்றிப் பேச வேண்டும். கதையைப் படித்து முடித்த பின்பும் மனதில் சிறிது நெருடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும், மனதை ஏதோ அரித்துக் கொண்டே இருக்க வேண்டும். என்னடா, இந்தக் கதா பாத்திரங்களுக்கு பிறகு என்ன நேர்ந்தது, என்ன நேர்ந்திருக்க வேண்டும் என்று மனதில் கேள்விகள் எழுந்து கொண்டிருக்க வேண்டும்,
நா. கணேசன்
***
அன்புள்ள கணேசன் அவர்களுக்கு
அந்த வரையறை சிறுகதை உருவான காலகட்டத்திற்குரியது. அன்று ‘பெரிய’ விஷயங்களையே இலக்கியம் எழுதவேண்டும் என நம்பினர். ஆகவே சின்னவிஷயங்களின் கலையாக சிறுகதை இருந்தது
வளர்ச்சிப்போக்கில் அது இன்று சிறிய எல்லைக்குள் ஆழமான உருவக உலகை உருவாக்கும் கலை என மாறியிருக்கிறது. வெறும் அன்றாடவாழ்க்கையின் ஒரு படச்சட்டகம் இன்று கலையென ஆவதில்லை
ஜெ
அன்புள்ள ஜெ
சுஜாதா, அசோகமித்திரன் முதல்கதைகளைப்பற்றிய சீனுவின் குறிப்பு ஆச்சரியப்படுத்தியது. இருவருமே எழுதவந்தபோது எழுத்தாளனின் நிலைபற்றி முதலில் எழுதியிருக்கிறார்கள். கதாபாத்திரங்களுக்கும் எழுத்தாளனுக்குமான உறவைப்பற்றி பேசியிருக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது
சீனிவாசன்
***
அன்புள்ள சீனிவாசன்,
லூகி பிராண்டெல்லோ நான் விரும்பி வாசித்த எழுத்தாளர் நோபல்பரிசு பெற்ற இத்தாலியப் படைப்பாளி. அவரைப்பற்றி முப்பதாண்டுகளுக்கு முன்னரே எழுதியிருக்கிறேன். என் முயற்சியில் இரு கதைகளும் தமிழில் வெளிவந்துள்ளன. ஒன்று நான் மொழியாக்கம் செய்தது
அவர் எழுதிய Six Characters In Search of an Author) என்னும் நாடகம் முக்கியமான ஒன்று. அதன் பல மேடைவடிவங்கள் அக்காலத்தில் கல்லூரிகளில் நடிக்கப்பட்டன. அதிலிருந்து ஊக்கம் பெற்று எழுதப்பட்ட பல கதைகள் வெளிவந்தன. ஆசிரியனைத்தேடி கதாபாத்திரங்கள் வருவதை க.நா.சு உள்ளிட்டோர் எழுதியிருக்கிறார்கள். எல்லாக் கதைகளுமே சுமாரானவையே
ஜெ