அன்புள்ள ஜெ,
உங்கள் “ஆளுமையை வரையறுத்தல்” கட்டுரையின் மையக் கருத்தை ஒப்புக் கொள்கிறேன். ஒரேயொரு நெருடல் அசோகமித்திரன் ஏ.எல்.பாஷமின் புத்தகத்தைக் கிண்டலிடித்தது. அசோகமித்திரன் இந்திய வரலாறு பற்றி எழுதிய கட்டுரைகள், அல்லது புத்தகம் அல்லது பேட்டிகளைப் படிக்க அவா. தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் படிக்கிறேன். பாஷம் வரலாறு எழுதாமல் புனைவு எழுதியதாகச் சொல்லியிருக்கும் இந்தியாவின் உலகப் புகழ் பெற்ற வரலாறாசிரியரின் கறாரான வரலாறு எழுத்துகள் இது காறும் தெரியாமல் போனது என் துரதிர்ஷ்டம். எழுத்தாளரை சாமான்யனாகப் பார்ப்பது தவறு ஆனால் உலகப் புகழ் பெற்றதனாலேயே வெளிநாட்டில் இருந்து எழுதும் இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களில் குறை கண்டு பிடித்து அதில் சுகம் காண்பதை எதில் சேர்ப்பது? குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டக் கூடாதென்று நான் சொல்லவில்லை. ஆனால் நோக்கம் விமர்சனம் என்பதல்லாமல் வேறாக இருந்தால்?
“நமது சினிமா எழுத்துக்கள்” கட்டுரையில் ருஷ்டியையும் ரோஹிண்டன் மிஸ்ட்ரியையும் பாசாங்கு எழுத்தாளர்கள் என்கிறீர்கள். ருஷ்டியின் புத்தகம் குறிப்பாக அதிகம் விமர்சிக்கப்பட்டது. இன்றும். அதில் தவறில்லை. மிஸ்ட்ரியின் புத்தகத்தைப் படித்த என் வெள்ளைக்கார மேலாளர் இந்தியாவில் நிலவும் சாதியம் பற்றிக் கேட்டார். குடியா முழுகிவிடும்? சென்ற வருடம் அமெரிக்காவில் மிக ஏகோபித்த பாராட்டைக் குவித்த நாவல் அமெரிக்காவில் நிலவிய அடிமை முறைப் பற்றிய காத்திரமான நாவல். பரிசும் வாங்கியது. அதற்காக அதை எழுதியவர் அமெரிக்காவை அவமதித்து விட்டார், பாசாங்கு எழுத்து, சமைத்துக் கொடுக்கப்பட்டது, இதைப் படித்து விட்டு உலகமே அமெரிக்காவைப் பற்றி என்ன நினைக்கும் என்று யாருமே கேட்கவில்லை. ஏன் நமக்கு மட்டும் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ எடுத்த டேனி பாயில் விரோதியாகத் தெரிகிறார், மிஸ்ட்ரி என்னமோ தேசத் துரோகியாகத் தெரிகிறார் (உங்களைச் சொல்லவில்லை, பொதுவில். மிஸ்ட்ரியின் இன்னொரு புத்தகத்துக்குத் தடைக் கோரப்பட்டது).
மிஸ்ட்ரியின் நாவல் 500 பக்கம் கொண்டது, ஓரு எழுத்தாளர் மெனக்கெட்டு 500 பக்கம் எழுதி காசு பார்ப்பதற்காகவா பாசாங்குச் செய்வார்? ‘பாசாங்கு’ எனும் சொல் ஒரு செயல் செய்வதின் நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது இல்லையா? அவர் நாவல் குப்பை என்றால் அதைக் குப்பை என்று நிராகரித்து விடலாமே? அதற்கான முழுச் சுதந்திரமும் உரிமையும் எந்த வாசகனுக்கும் விமர்சகனுக்கும் உண்டு. உண்மையிலேயே ஏதோ உள் நோக்கம் இருந்தது தெரிய வந்தாலோ அல்லது படைப்பில் நேர்மையில்லாத உள் நோக்கம் நிரூபிக்கத்தக்க வகையில் இருந்தாலோ நாம் எழுத்தாளனின் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்தலாம். அன்றாடம் உங்களின் ஒவ்வொரு பதிவுக்கும் உள் நோக்கம் கற்பிப்பதை நீங்கள் அறிவீர்கள்.
மேற்கண்ட இரு பதிவுகளிலும் சொல்லப்பட்ட இந்த இரு விஷயங்களும் நெருடியது. இரண்டும் ஒன்றொடொன்று தொடர்பும் கொண்டிருப்பதாகத் தோன்றியது.
நன்றி
அரவிந்தன் கண்ணையன்
அன்புள்ள அரவிந்தன்,,
இரு விளக்கங்கள். இலக்கியத்தில் எப்போதுமே மெல்லிய கிண்டல்கொண்ட சொற்றொடர்களுக்கு முக்கியமான இடமுண்டு. அதேபோல முன்னரே சொல்லப்பட்டவற்றின் தொடர்ச்சியாக அமையும் ஒற்றைவரிகளுக்கு.
ஏ.எல்.பாஷாம் அசோகமித்திரனின் மிக விருப்பமான வரலாற்றாசிரியர். ஆகவேதான் நானும் ஞாநியும் அவரைப்பார்க்கச் சென்றபோது முதுமையிலும் கண்ணாடிபோட்டுக் கொண்டு குனிந்து அமர்ந்து அதை அவர் வாசித்துக்கொண்டிருந்தார்
ஆனால் அவர் யதார்த்தவாதி. வரலாற்றைப்பற்றி, வாழ்க்கையைபற்றி எந்த பொதுமைப்படுத்தல் சொல்லப்பட்டாலும் ‘அப்டியெல்லாம் சொல்லிட முடியாது’ என்று அவர் சொல்வதைப்பார்க்கலாம்.
ஏ. எல். பாஷாமின் நூலை நீங்கள் வாசித்தால் தெரியும் இந்தியவரலாறு, பண்பாடு பற்றி அவர் சொல்லும் மிக படைப்பூக்கம் கொண்ட ஒற்றைவரி ஊகங்கள் , முடிவுகள் முக்கியமானவை. நம்மை சிந்திக்கத் தூண்டுபவை.
அசோகமித்திரனும் அதற்காகவே அதை வாசிக்கிறார். ஆனால் அதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால் அவர் திநகர் விட்டுச் செல்ல விரும்பவில்லை. ‘அன்றாடவாழ்க்கையின் எளிமக்களின் புறவய யதார்த்தம்’ என்பதே அவர் காணும் மெய்மை.
அதைத்தான் அவர் sarcastic ஆகச் சொல்கிறார். அதை பாஷாமின் நூலை வாசித்த ஒருவர், அசோகமித்திரனை அறிந்த ஒருவர் புன்னகையுடன் புரிந்துகொள்ளமுடியும்.
அசோகமித்திரனை அமெரிக்க எழுத்தாளர்களில் வில்லியம் சரோயன், ஐசக் பாஷவிஸ் சிங்கர் போன்றவர்களுடன் பொதுவாக ஒப்பிடலாம். அது ஒரு மிகப்பெரிய எழுத்துப்பள்ளி. அவர்கள் ‘வரலாறற்ற’ ‘தத்துவங்களால் தொகுக்கப்பட முடியாத’ ஒரு தனிமனிதனை, இருபதாம்நூற்றாண்டில் நின்றுகொண்டிருக்கும் ‘சாமானியனை’ எழுதமுயன்றவர்கள்.
ஆனால் அசோகமித்திரன் தனிவாசிப்பில் மிகப்பெரிய கற்பனாவாதக் கதைகளை [உதாரணம் அலக்ஸாண்டர் டூமாவின் நாவல்கள், ] விரும்புபவர். வரலாற்றுநூல்களை வாசிப்பவர். இந்திய தத்துவம், யோகமரபு, தாந்த்ரீகம் ஆகியவற்றிலெல்லாம் ஆர்வம் கொண்டவர். இது படைப்பியக்கத்தின் பெரிய மர்மம்.
*
ரோகிண்டன் மிஸ்திரி நாவல்பற்றி. அது ஒரு தனிவிமர்சனக்கட்டுரை அல்ல. பலவற்றைத் தொகுத்துசொல்லிச்செல்லும் குறிப்பு. இந்திய ஆங்கில நாவல்களின் விற்பனை பெரும்பாலும் ஆங்கிலம்பேசும் ஐரோப்பிய அமெரிக்கர்களிடம். அவர்களே முன்னிலை வாசகர்கள். ஆகவே அவ்வெழுத்துக்களில் இயல்பாக உருவாகும் பாசாங்கு ஒன்று உண்டு. என் வாசிப்பில் அமிதவ் கோஷ் தவிர எவருமே அதிலிருந்து தப்பியதில்லை.
ஓர் அமெரிக்க, ஐரோப்பிய வாசகன் இந்திய வாழ்க்கையில் ஆச்சரியமாக, அதிர்ச்சியாக, உற்சாகம்கொண்டு அணுகும் விஷயங்கள் பல உண்டு. உதாரணமாக கைம்மைநோன்பு அல்லது தீண்டாமை அல்லது மதமூடநம்பிக்கைகள். ஆங்கிலேயனாக, அமெரிக்கனாக நின்று அவற்றை நோக்கி அவர்களின் பார்வையில் அவர்களின் ரசனைக்காக எழுதினால்மட்டுமே அந்த ஆக்கங்கள் ஆங்கிலத்தில் புகழ்பெறும். அதில் எள்ளலும் விமர்சனமும் இருக்கும். சிலசமயம் பூடகப்படுத்தலும் வழிபாட்டுத்தன்மையும்கூட இருக்கும். ஆனால் அவை மைய இந்திய இலக்கியம் அல்ல. இந்திய எழுத்தின் ஒருவகை, அவ்வளவே. ரோஹிண்டன் மிஸ்திரி அவ்வாறு எழுதியவர்.
தன் ஆன்மிகத்தை, உணர்வுநிலைகளை, தன் வாழ்க்கைக்கான முழுமைநோக்கை தேடி வாசிக்கும் இந்தியவாசகனுக்கு அன்னியமான, பயனற்ற எழுத்து இது. அவன் தெரிந்துகொள்ள வாசிப்பதில்லை, தெரிந்ததை கடந்துசெல்ல வாசிக்கிறான்.இலக்கியத்தின் சாரம் என்பது ஓர் அசல்தன்மை.
இந்தியாவின் இருட்டை இந்தியாவின் மாபெரும் எழுத்தாளர்கள் எழுதிய அளவுக்கெல்லாம் இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் எழுதியதில்லை. பிரேம்சந்த், பன்னலால் பட்டேல் போன்ற முதல்தலைமுறை எழுத்தாளர்கள் முதல் இன்று எழுதும் சகரியா வரை. அவர்கள் இங்கே கொண்டாடத்தான் படுகிறார்கள். சிவராம காரந்தின் சோமனதுடி அளவுக்கு தலித் வாழ்க்கையைச் சொன்ன ஆங்கிலநாவல் ஏதும் இல்லை. பிரிவினையைப்பற்றி மிஸ்திரியைவிட உக்கிரமாகவே இஸ்மத் சுக்தாயும் அம்ரிதா பிரீதமும் எழுதியிருக்கிறார்கள்.
இவர்கள் இந்திய வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதல்ல அளவுகோல். அதிலுள்ளது அந்த எழுத்தாளனின் உண்மையான அக எழுச்சி, அவனுடைய சொந்த ஆன்மிகத் தவிப்பு, அவனுடைய கண்டடைதல் அல்ல என்பதே. அவன் எவருக்காக எழுதுகிறானோ அவர்களே அவன் எழுத்தைத் தீர்மானிக்கிறார்கள் என்பதே. ஆகவே அவை பொய்கலந்தவை, போலியானவை என்கிறேன்
இலக்கியத்தில் இந்த பொய்கலத்தல் என்பது மிகப்பெரிய சவால். இதை அரசியலில் உள்ள நேர்மையின்மையுடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை எழுத்தாளனை அறியாமலேயே அது அவனில் படர்கிறது. நீங்கள் உங்கள் மகளிடம் உணர்ச்சிகரமாகப் பேசுகிறீர்கள் என்று கொள்வோம், அது ஒரு கருவியில் பதிவாகிறது என்றால் மெல்ல, உங்களை அறியாமலேயே ஒரு பொய் உங்கள் உணர்வுகளில் குரலில் குடியேறுகிறது அல்லவா? அதைப் போலத்தான். அறியாத ஒரு மாற்றம் அது
இலக்கியம் எதுவானாலும் பொய்மை கலந்தபடியேதான் இருக்கும் அதன் வடிவத்தை, ஒழுங்கை எழுத்தாளனின் கவனம்தான் முடிவு செய்கிறது. அது கொஞ்சம் பொய்யை கலக்கவைக்கும். சூழலில் உள்ள கருத்துக்களால், எழுத்தாளனின் அரசியல் நடவடிக்கைகளால், ஏன் ஃபேஸ்புக்கில் சம்பந்தமில்லாதவர்களிடம் தர்க்கம் செய்வதால்கூட, அவனிடம் அந்த பொய் குடியேறும்.
செம்பு இல்லாமல் வெறும் தங்கம் நகையாகாது. மிகப்பெரிய படைப்பாளிகளில் கூட. மிக முக்கியமான நூல்களில் மட்டுமே தங்கம் செம்பை விட அதிகமாக இருக்கும். ரோகிண்டன் மிஸ்திரி, ருஷ்தி போன்றவர்களிடம் செம்பு மிக அதிகம், தங்கம் மிகமிகக் குறைவு
ஜெ