சகரியாவின் ‘இதுதான் என்பெயர்’

zakariya

நாதுராம் கோட்சே, வரலாற்றின் அழியா பக்கங்களிலெல்லாம் கரும் புள்ளிகளில் விழிக்கும் பெயர். காந்தியும் கோட்சேயும் ஒன்றுக்கொன்று நிரம்பும் ஆடி பிம்பமா என்ற கேள்வி தோன்றியது. வெறுப்பின் சொட்டு கசப்பை நாக்கில் தீட்டி நாலா பக்கமும் பரப்பி மொத்தமும் கசந்த எச்சிலை இறக்குவதைப் போல காந்தியை மெல்ல தொண்டைக்குழியில் இறக்கி வைத்திருந்தேன். காந்தியை சுட்டுத் தள்ளத்தான் வேண்டுமா?

சந்திரசேகரனின் வெறி வந்து தொற்றிக் கொண்டது. ஒரு முஸ்லமான் மட்டும் காந்தியைக் கொன்றிருந்தால் என்னவாயிருக்கும். அகிம்சாவாதிகளால் அடிக்கப்படும் கோட்சேயின் உடல், ஆன்மாவிற்கு அழிவில்லை என்று தத்துவம் சொல்கிறது. ராமனின் காலடிகளில் மிதிபடும் வண்டாய், பின் சரயூ நதியில் அந்த நீலக் கால்களை குத்திக் கிழிக்கும் மீனாய், என்னவெல்லாம் பிறப்புகளெடுக்கிறான். பரமபதத்திற்கு கிழவனுக்கு வழி அமைத்துக் கொடுத்து விட்டேனே என்று குமுறுகிறான்.

ஆம். என் பெயர் மோகன் தாஸ். செத்துப் போன அந்தக் கிழவனிற்கு எதற்கு அந்த பெயர் என்று பிதற்றும் கோட்சேயிடம் காந்தியின் ஆவி எழுந்து வந்து மன்னித்து விட்டேன் என்று அறிவித்தால் அய்யோ? அதற்கும் அஞ்சுவதில்லை. நான் ஒரு பிராமணனாய் இருந்தும் சத்ரியனைப் போல் உங்களுக்காக நம் இந்து மதத்திற்காக நம்மை பிடித்த நோயையே அழித்தேன். நாம் வாழ்வோம் சுதந்திரமாக. அந்த நாறும் பிணத்தைக் கொண்டு ஏன் அழுது பிதற்றுகிறீர்கள். ஆம். காந்தியைக் கொல்வதே வழி போலும். ஆனால் காந்தியத்தை எப்படிக் கொல்வது.

இந்த காந்தியை எனக்கு பிடிக்கவில்லை. ரூபாய் நோட்டுகளில் இளித்துக் கொண்டிருக்கும் இந்த பாமரக் கிழவன் எனக்கு தேவையில்லை. பொறுமையின்றி சகிப்பின்றி நசுக்கத் தொடங்குகின்றேன், என் சுயத்தை. அன்னாவின் போராட்டத்தை கள்ளத்தனம் என்று வாதிட எத்தனை நண்பர்களைத் தேடிச் சென்றிருப்பேன். பைத்தியக்காரன்யா! இந்த சசிப்பெருமாள், கடைசில அந்தக் கிழவன மாறித்தான் செத்துப் போனான். இப்படிச் சாவதுக்கு எதுக்கு போராட்டம். அவன் பிள்ளைக் குட்டிகளுக்கு இனி வழியுண்டா? எல்லாம் போச்சா. சரியான வட்டுக் கேசுங்க கேட்டியா!

பின் நினைக்கிறேன். எத்தனை சுயநலம். எத்தனை பொறாமை. எத்தனை எத்துவாளித்தனங்கள். மன்றாடுவதற்கு கூட நாக்கு இல்லை. இன்று காந்தியை நினைவு கூர்வதில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். ஒரு மகத்தான கொலை இந்துக்களுக்காக ஒரு சனாதன இந்துவைக் கொல்வோம். அந்த துரோகியின் முகத்தில் காறி உமிழத்தலைப்பட்ட ஒற்றைப்படையான வெறித்தனத்தில் என்ன உள்ளது. இன்றும் மாறாத கசப்பு சூழ்ந்து கொள்கிறது. அவனின் ஒரு சொட்டு ரத்தத்தை கொடுங்கள். என் நெற்றிப்பொட்டில் அணிந்து கொள்ள. கரிந்து மணத்தும் உள்ளத்தில் கேள்விகளை எழுப்புகிறேன்.

நான் என்ன செய்வது? ஒரு கொலை நிகழ்ந்தே விட்டது. இந்துக்களுக்காக? அப்படியா? ஒரு இந்துவா காந்தியைக் கொன்றான். இந்துவா? குற்ற உணர்வில் நொதிக்கிறேன். இந்துவின் துப்பாக்கி குண்டுகளா அவரைத் துளைக்க தலைப்பட்டது. அணுகுண்டுப்பிளத்தலில் வெடிக்கும்ஒற்றை அணு நான்? ஆதாமும் ஏவாளும் கடித்து தின்ற சாத்தானின் குழந்தை நான். காந்தி நம்மிடம் எதைக் கேட்டார். நம் பலவீனங்களை ஒழிக்கும் வழியை அல்லவா சுட்டிகாட்டினார்.

தனி நாட்டை காந்தி விரும்பியிருப்பாரா? நிச்சயம் இல்லை. பின் வற்புறுத்தப்பட்டாரா? அது ஒரு தேவையாக ஆகியதா? ஒற்றை ஆளாய் நவகாளியில் காந்தி நின்றிருந்த பொழுது, அந்த காளி கோவில் சாமியாரின் வாக்கியங்கள் காதை அடைத்தன. கர்மயோகியினால் செய்ய முடிந்தது என்ன? அய்யோ! பிதற்றிக் கொண்டே இருக்கிறேன். காந்தி! காந்தி! காந்தி! நீ எங்களிடம் எதைக் கேட்டாய்? அந்தக் கொலைகளுக்கு உன் பதில் என்ன?

பின் தொடரும் நிழலின் குரலின் டால்ஸ்டாய் என்ன செய்வார் அந்த அழுந்திப்பதிந்த ரத்தக்கைககளைப் பார்த்து. நான் பிரார்த்திகிறேன். என் பிதாவிடம் இறைந்து மன்றாடுகிறேன். இந்தக் கொலைகளுக்கும் போன உயிர்களுக்கும் என் கையாலாகாத் தனத்தை நான் என்ன செய்ய. அழுது கண்ணீர் விடுவதை தவிர்த்து. உன் கண்ணீர்த்துளிகள் தேவனின் காலடிகளுக்கு சென்றதா! குண்டடிகள் தெறிக்க கப்ரியேல் ஏந்திக் கொண்டானா? ஜய விஜயர்கள் வந்து தூக்கிக் கொண்டு சென்றார்களா!

கேள்விகளாய் அடுக்கிக் கொண்டிருந்தன. சத்தங்கள் மெல்ல அமிழ்ந்து கொண்டிருந்தன. காந்தியை அறிவது காந்தியாய் வாழ்வதனால் மட்டுமே முடியும். சசிபெருமாள் காந்தியாகவே செத்தார். அவரின் காலம் முடியாது. இன்று தகவல் அறியும் சட்டமும், லோக்பாலையும் எண்ணிக்கொள்கிறேன். ஊழலுக்கு எதிரான முதல் அடியை எடுத்து நமக்குள் தீக்கங்கை தெறித்து விட்ட காந்தியம். அதன் பொறி இன்றளவும் அணையவில்லை என்றே நம்புகிறேன். ஆனால் காலத்தின் கண்ணாடியில் வசைகளின் பெரும் பரப்பில் காந்தி துரோகியாகவும். கோட்சே யுக புருஷனாகவும் சித்தரிக்கப்படுவதை எங்கனம் ஏற்றுக்கொள்ள.

ஆம் எனக்குள் இருக்கும் கோட்சேவை நான் வழிபடும் வரை காந்தியெனும் கிழவன் கொல்லப்பட வேண்டியவனே. இன்னும் எத்தனை காந்திகள் வந்தாலும் கொல்வதை செய்வோம் என்பது தின்ணம்.

நன்றி,

நந்தகுமார்.

 

முந்தைய கட்டுரைகருணைநதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகருணை நதிக்கரை -3