அலெக்ஸாண்டரின் சிரிப்பு

இன்று முழுக்க சோர்வு கைகளையும் கால்களையும் அழுத்திக்கொண்டிருந்தது. இணைத்து வேலைசெய்யவைப்பது பிரக்ஞை. அது தளர்கையில் கைகளும் கால்களும் வெறும் தசைச்சுமைகள். மெல்ல மாலைவரை கடந்துவந்தது அலக்ஸாண்டர் பாபுவின் இந்த தனிக்க்குரல்நகைச்சுவை நிகழ்ச்சிகளினால்.

நம்மூரில் இவ்வகையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் இல்லை, அவற்றில் இந்த அளவுக்கு பூடகமான அறிவார்ந்த விரைவான கிண்டல் இருந்தால் இங்குள்ள சபை மரணவீடுபோலத் தோற்றமளிக்கும். ஆகவேதான் நமது பிரபல நகைச்சுவையாளர்களான சுகி சிவம், லியோனி போன்றவர்கள் நகைச்சுவைத் துணுக்கை கதைபோல விரித்து விரித்து உரைக்கிறார்கள். நகைச்சுவை முடிச்சை அவர்களே இருமுறை சிலசமயம் நாலைந்துமுறை திருப்பிச் சொல்கிறார்கள்.

கமல்ஹாசனின் நகைச்சுவைப் படங்களில் அவர் அவருக்காகவே துணிந்து நகைச்சுவையை நுட்பமாகவும் விரைவாகவும் அமைத்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் திரையரங்கில் தோல்வியடைந்தன. கிளாஸிக் என்று சொல்லத்தக்க மைக்கேல் மதனகாமராஜன் கூட திரையரங்கில் ஆட்கள் பிரமைபிடித்தவர்களாக அமர்ந்திருந்தார்கள்.  பலமுறை பார்க்கப்பட்டபின் மெல்ல அவை தொலைக்காட்சியில் வெற்றி அடைந்தன.

நம்மவர்கள் வெளிநாடு சென்றால் கொஞ்சம் சிரிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நல்லது. இந்த நாளுக்காக அலக்ஸாண்டர் பாபுவுக்கு நன்றி.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–37
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கமும் அனோஜன் பாலகிருஷ்ணனும்