39. அலைவாங்கல்
இரவில் நகுஷன் தன்னை மறந்து ஆழ்ந்து துயின்றான். காலையில் சித்தம் எழுந்து உலகைச் சமைத்து தான் அதிலொன்றாகி அதை நோக்கியது. அனைத்தும் தெளிந்து ஒளிகொண்டிருந்தன. துயிலில் அவன் எங்கோ இருந்தான். பிறிதொருவனாக உடல்சூடி, தானாக உளம் கரந்து கையில் வில்லுடன் அறியா நகரொன்றில் அலைந்தான். இலக்குகள் அனைத்தையும் சென்றெய்தும் விழைவே அவன் உள்ளமென்றிருந்தது. முலைபெருத்த தடித்த பெண்ணொருத்தியுடன் முயங்கும் அவனை அவனே அவ்வறையின் இருள்மூலையில் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் பேரொலி எழும் அவை நடுவே துள்ளும் வில் ஒன்றை வென்றான். கன்னங்கரிய ஒரு பெண்முகம். அணுகும் முகம். ஆலய இருளில் அமர்ந்த மூதன்னை.
அவளை அவன் நன்கறிந்திருந்தான். அவளும் அவனை அறிந்திருந்தாள். அவளை முயங்கி அவன் மல்லாந்து உடல்விரிக்க அவள் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். வஞ்சம் நீர்மையென கனிந்த விழிகள். வாளை ஓங்கி அவனை வெட்ட வந்தாள். அவன் விழியசைக்காமல் அவளை நோக்கிக் கிடந்தான். அவள் தன்னைக் கொல்வதே முறையென எண்ணினான். அவள் வாள் மெல்ல தளர்ந்தது. சுருங்கி ஒரு நாகமென்றாகி அவள் மண்ணுக்குள் புகுந்தாள். அவன் எழுந்து அவள் ஆடையைப்பற்ற அது ஒரு நிழலென்றாகி உருக்கொண்டு பெண்ணாகி அவனை நோக்கி நாணி புன்னகை செய்தது.
அவன் வளைக்குள் அவளைத் தொடர்ந்து தவழ்ந்து சென்றான். அவன் உடல் நாகமென்றாகியது. நீருக்குள் எழுந்தபோது வேர்திளைக்கும் ஆழமொன்றை கண்டான். குமிழிகள் ஒளிவிட்டுச் சுழல அவள் உடலும் ஒரு செங்குமிழியென எழுந்தது. சரிவிறங்கும் மலைப்பாதையில் தேரில் அவனருகே அவள் இருந்தாள். “நான் பெண்ணென்றானேன்” என்றாள். “ஏன்?” என்றான். “அணுகுவதற்காக” என்றாள். “இல்லையேல் உன்னை நான் உண்டிருப்பேன். கருத்தரித்தால் நீ எஞ்சுவாய்.”
விழித்துக்கொண்டு கிடந்தபோது முகத்தில் புன்னகை இருப்பதை அவன் உணர்ந்து உளம் மலர்ந்தான். எழுந்து சென்று சாளரத்தினூடாக சோலையை பார்த்தான். அத்தனை இலைகளும் ஒளி சூடியிருந்தன. புதிய பறவை ஒன்று “இங்கே வாழ்” என்றது. எத்தனை ஒலிகளால் ஆனது காலை! காலை ஒரு பெரும் வான்பொழிவு. குழவிமேல் மெல்ல வருடிச்செல்லும் அன்னையின் கை என தென்றல். காலையில் தனித்திருப்பவர் குறைவு. காலைத்தனிமை ஓர் இனியதவம்.
ஏவலன் வந்து பணிந்து அவனைத் தேடி முதுசெவிலி வந்திருப்பதாக சொன்னான். முகம் கழுவி ஆடைதிருத்தி அமர்ந்துகொண்டு “வரச்சொல்” என்றான். வரவிருப்பது நற்செய்தியல்ல என்று முன்னரே தெரிந்துவிட்டிருந்தது. தன்னை தொகுத்துக்கொள்ளவேண்டும் என்றும் நிலைபிறழலாகாது என்றும் சொல்லிக்கொண்டான். முந்தையநாளின் சொற்கள் எங்கோ நெடுந்தொலைவிலென கிடந்தன.
முதுசெவிலி வந்து வணங்கி நின்றாள். அவள் தயங்க “சொல்க!” என்றான். அவள் தணிந்த குரலில் “அரசி முதுமையடைந்துகொண்டிருக்கிறார்” என்றாள். அவன் விழிதிருப்பி “ஆம், அவள் நோயுறுவது இயல்பே” என்றான். “அதுவல்ல நான் சொல்வது, அவர் உடல் மிக விரைந்து முதுமை நோக்கி செல்கிறது.” அவன் திகைத்து நோக்க “நான் அன்று குடிலுக்குள் சென்று பார்க்கையிலேயே அரசி பிறிதொருத்தியாக இருந்தார்” என்றாள்.
“பிறிதொருத்தியாக என்றால்…?” என்று அவன் கேட்டான். அவன் நெஞ்சு படபடத்ததில் எச்சொல்லும் சிந்தைநிற்கவில்லை. “பதினெட்டு வயது கன்னியாக இங்கு வந்தார். உள்ளம் ஐந்து வயதுக்குரியதாக இருந்தது. அன்று நான் அறைக்குள் சென்றபோது பத்து வயது மூப்படைந்தவர்போல் இருந்தார்.” ஏதோ நம்பிக்கையை நாடுபவன்போல “துயர் கொண்டிருந்ததனால் விளைந்த தோற்றமா?” என்று அவன் கேட்டான். “அரசே, நான் கூறுவது முகத்தோற்றத்தையோ சோர்வையோ அல்ல. அவர் உடல், ஊன் மூப்படையத் தொடங்கிவிட்டது.”
அவன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “நீயே நேரில் பார்க்கலாம். வேறெவ்வகையிலும் நான் சொல்வதை உன்னால் ஏற்க இயலாது” என்றாள் முதுசெவிலி. “வருக!” என்று அவள் சொல்ல அவன் அசையாமல் அமர்ந்திருந்தான். “வந்து பார்” என்று அவள் மீண்டும் அழைத்தாள். அவன் எழுந்து அவளை தொடர்ந்தான். குழம்பிய சித்தத்துடன் இடைநாழியில் காலிடறியும் தயங்கியும் நடந்தான். அகத்தளத்தில் அத்தனை சேடியரும் திகைப்பும் குழப்பமும் கொண்டிருப்பதை காண முடிந்தது. எதிர்கொண்டு வணங்கிய இளஞ்சேடியரும் அவனை விழிதொட்டு நோக்கவோ நேர்க்குரலில் மறுமொழி உரைக்கவோ அஞ்சினர்.
“எங்கிருக்கிறாள்?” என்றான். “உள்ளறையில்” என்றாள் அணுக்கச்சேடி. உள்ளறைக்குள் நான்கு மருத்துவச்சிகள் நின்றிருந்தனர். அரசர் வந்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் வெளியே வர அரசன் இறுதியாக வந்த மூத்த மருத்துவச்சியிடம் “என்ன செய்கிறது அவளுக்கு?” என்றான். “இது மருத்துவ நூல்களில் சொல்லப்பட்டதல்ல, பிறிதொன்று. அதை தெய்வங்களே விளக்க முடியும்… நிமித்திகர் வரையும் களங்களில் அவர்கள் எழவும் வேண்டும்” என்றாள் அவள். ஒவ்வொரு முகத்திலிருந்தும் அவன் அச்சத்தை பெற்றுக்கொண்டான். அது நோயை, இறப்பைக் கண்ட அச்சமல்ல, மானுடம் கடந்து பேருருக்கொண்டு நின்றிருக்கும் பிறிதொன்று அளிக்கும் அச்சம்.
கதவைத் திறந்து உள்ளே சென்றபோது கடுங்குளிரில் என அவன் உடல் நடுங்கியது. பிடரியில் மூச்சுவிட்டபடி பேய்வடிவம் ஒன்று தொடர்ந்து வருவதுபோல, தோள்களில் காற்று எடைகொண்டு அழுத்தி இடைகளையும் தொடைகளையும் கெண்டைக்கால் தசைகளையும் இறுக்கித்தெறிக்க வைப்பதுபோல. மூச்சை நெஞ்சில் நிறுத்தி மெல்ல விட்டபடி அவன் உள்ளே சென்றான். மஞ்சத்தில் அசோகசுந்தரி படுத்திருந்தாள். அறையிருளில் அவள் அணிந்திருந்த ஆடைகளைக் கொண்டே அவளென்று அவன் உணர்ந்தான். மேலும் ஒரு அடி வைத்து அவளை நன்கு நோக்கியதும் திடுக்கிட்டு பின்னடைந்தான். அங்கு நடுவயதான பெண்மணி ஒருத்தி படுத்திருந்தாள்.
மூக்கு சற்று புடைத்து எழுந்து, கண்களுக்குக் கீழ் கருகியதசைகள் இழுபட்டுத் தளர்ந்து இரு அரைவட்ட அடுக்குகளாக வளைந்து, வாயைச்சுற்றி அழுத்தமான மோவாய்கோடுகளுடன் வண்ணமிழந்து வறண்டுலர்ந்த தோலுடன் இருந்தது அவள் முகம். மூச்சின் ஒலியில் “இவள்?” என்று முதுசேடியிடம் கேட்டான். “அரசியேதான். நான் உன்னை சந்திக்க ஓடி வரும்போது இருந்ததைவிட மேலும் முதுமை கொண்டுவிட்டார். கூர்ந்தால் நீர் உலர்ந்து மறைவதுபோல அவரது இளமை அகல்வதை வெறும்விழிகளாலேயே காணமுடியும்.” மேலும் ஒருமுறை திரும்பி அவளைப் பார்த்ததும் அவன் உடல் நடுங்கியது. ஓடி கதவைத் திறந்து வெளியேறி இடைநாழியில் விரைந்து தன்னறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான்.
அவனைத் தொடர்ந்து வந்த பத்மனிடம் “நான் இன்று எவரையும் சந்திக்கவில்லை. இனி சில நாட்கள் அவை கூடுவதும் அரசமுடிவுகளும் உம்மால் நிகழட்டும். என்னை இத்தனிமையில் விட்டு விலகிச்செல்க!” என்றான். ஏவலனை அழைத்து மதுவும் உணவும் கொண்டுவரச் சொன்னான். விலா எலும்புகள் உடைந்து தெறிக்குமளவுக்கு உண்டான். ஒவ்வொரு மூச்சிலும் மூக்கு வழியாக சிந்துமளவுக்கு குடித்தான். பின்னர் ஆடற்கணிகையரை அறைக்குள் அழைத்துவர ஆணையிட்டு அவர்களுடன் வெறிகொண்டு காமத்திலாடினான். களைத்து உடலோய்ந்து துயின்று உதைபட்டவன்போல விழித்து உடனே மீண்டும் உணவிலும் மதுவிலும் காமத்திலும் மூழ்கினான்.
வெறும்புழு என தன்னை உணர்ந்தான். அச்சொல் அவனை எரியும் தசைமேல் குளிர்த் தைலமென ஆறுதல்படுத்தியது. எதிலிருக்கிறோமோ அதில் ஒரு பகுதி என்றாதலே புழுநிலை. அழுகும் ஒரு பொருள் கொள்ளும் உயிர்வடிவம் புழு. தளிர்த்தல் மலர்தல் காய்த்தல் கனிதல் அழுகுதல் என புழுத்தலும் ஒரு வளர்நிலை. கனியும், உணவும், மலரும், மலமும் புழுவென அசைவு கொள்கின்றன. புழுமுழுத்து சிறகு சூடுகின்றது. ஒளியும் சிறகும் யாழிசையும் கொண்டு பறக்கையிலும் தன் உடலில் புழுத்திரளை நுண்வடிவில் சுமந்தலைகிறது பூச்சி. மீண்டும் புழுவென்றாகி பெருகி எழுகிறது.
புழுவாவதன் பெருநிலை. விழிமூடினால் கண்களுக்குள் புழு நெளிவு. உடலெங்கும் பல்லாயிரம் புழுக்களென நெளிந்தன நரம்புகள். பெரிய புழுக்களென தசைகள். தன்னை தான் கவ்விச் சுருண்டிருக்கும் ஒற்றைப்புழு என உள்ளம். செத்து அசைவழிந்த குரங்கின் உடலில் மீண்டும் நூறாயிரம் அசைவென எழுந்த புழுத்திரள். உயிர்கொண்டதென அசைந்தது புழுத்த குரங்கு. இதோ எழுந்துவிடுமென குனிந்து நோக்கி நின்றிருந்தான். முட்டி பால்குடிக்கும் குட்டிகளுக்கேற்ப என குரங்கின் உடல் அசைந்தது. கூட்டம்கூட்டமாக வந்திறங்கி அப்புழுக்களை உண்டன பறவைகள். குரங்கு சிறகுகளாகி கூவிக்கலைந்து வானில் சுழன்றது. எஞ்சிய சிறுதலையில் புன்னகை மட்டும் தங்கியிருந்தது.
பதினான்கு நாட்கள் அசோகசுந்தரி உயிருடன் இருந்தாள். ஒவ்வொரு நாளுமென முதுமைகொண்டு நூற்றியிருபது வயதான முதுமகளென ஆனாள். ஒவ்வொரு விழிப்பிலும் அவள் எதையோ சொன்னாள். ஒலியிலா அசைவென எழுந்த அச்சொற்களை விழிகளால் அறிந்தனர். “என் பாவை” என்றாள். முகம் மலர்ந்து “பறவைகள்” என்றாள். “அழகியவை” என எதையோ சொன்னாள். அழியா உவகை ஒன்றே அவள் முகத்தில் இருந்தது. முகம் முதிர்ந்து வற்றிக்கொண்டிருந்தாலும் புன்னகையில் துயரின்மையின் ஒளி எப்போதுமிருந்தது. இறுதியாக விழிதிறந்து கைமகவுபோல புன்னகை செய்து “இனிய தென்றல்” என்றாள். விழிமூடி அப்படியே உறைந்தாள்.
அவள் நாள்தோறுமென முதுமைகொள்ளும் விந்தையை அவ்வரண்மனையின் விழிகளும் சுவர்களும் தூண்களுமென்றாகி நகரம் நோக்கிக்கொண்டிருந்தது. “அவள் மறைந்துகொண்டிருக்கிறாள். ஒளிச்சுடராக வந்தபோதே நாம் அறிந்திருக்கவேண்டும், அது அணையும் என்று” என்றார் ஒரு முதியவர். “இறுதிச்சொல் என அவள் நம்மை பழித்துவிட்டுச் சென்றால் இந்நகரும் குடியும் அழியும், ஐயமில்லை” என்றாள் மூதன்னை ஒருத்தி. “அவள் இயல்பால் துயரற்றவள். ஒருபோதும் தீச்சொல்லிடக்கூடியவள் அல்ல” என்றான் இளஞ்சூதன் ஒருவன்.
நகரம் அதை மட்டுமே வேண்டிக்கொண்டிருந்தது. அவன் அதை அறியாமல் தன்னை மேலும் மேலும் கீழ்மையில் புதைத்துக்கொண்டிருந்தான். எண்ணி எண்ணி அதை தன் இருட்டுக்குள் இருந்து எடுத்து தன்னைச்சுற்றி பரப்பினான். அவள் இறந்த செய்தியை பத்மன் வந்து சொன்னபோது நான்கு சேடியருடன் காமத்திலிருந்தான் நகுஷன். ஏவலன் அமைச்சர் வந்திருப்பதை அறிவித்ததும் எழுந்து வெளிவந்து கள் நிறைந்து உடல் நீர்களின் நிலையின்மை கொண்டு தளும்பி தள்ளாட நின்றான். விழிகளும் மூக்கும் ஊற்றென வழிந்தன. கதவுநிலையைப் பற்றியபடி உடலை நிறுத்தி சரிந்த இமைகளை உந்தி மேலெழுப்பி சிவந்த கண்களால் அவனை நோக்கி “சொல்க!” என்றான்.
உதடுகளும் நாவும் கள்ளூறி குழைந்து தடித்திருந்தன. மெல்லிய ஏப்பம் விட்டபோது உருகிய தசைமணத்தை மூக்கு அறிந்தது. “அரசி சற்று முன் விண்புகுந்தார்” என்றான் பத்மன். “யார்?” என்று அவன் கேட்டான். “பட்டத்தரசி” என்றான் பத்மன். “ம்” என்றான். “தாங்கள் மணம்கொண்டு நகர்நிறுத்திய கான்மகள்” என்றான் பத்மன். அவன் விழிதூக்கி நோக்க பத்மன் கண்களில் கடும் வஞ்சம் தெரிந்தது. “நன்று” என்றபின் அவன் திரும்பி தன் அறைக்குள் சென்றான்.
கதவிலிருந்து மஞ்சத்தை நோக்கி நடந்து சென்ற பன்னிரு அடிகளில் நெடுந்தூரம் உள்நகர்ந்தான். யாரோ எங்கோ எதையோ சொன்னார்கள் என்பதற்கப்பால் அவன் எதையும் உணரவில்லை. மஞ்சத்தில் குப்புற விழுந்து எழுந்து ஆடைதிருத்தி நின்றிருந்த கணிகையரிடம் “அருகிலிருங்கள்! அருகிலிருங்கள்! யார் எழுந்து சென்றாலும் அவர்கள் தலை கொய்யப்படும்” என்றபடி இருமுறை குமட்டினான். மஞ்சத்திலேயே சற்று வாயுமிழ்ந்தபின் துயிலில் ஆழ்ந்தான்.
விழித்தெழுந்தபோது ஒவ்வொரு மதுக்கேளிக்கைக்குப்பின் உணரும் அதே வெறுமை. தலை நூறு இரும்புக்கம்பிகளால் இழுத்து நொறுங்கக் கட்டப்பட்டதுபோல இருந்தது. கண்களுக்குமேல் ஊசி குத்துவதுபோல வலி. ஒளியை நோக்கி இமையை தூக்க இயலவில்லை. இரு கைகளாலும் தலையைப் பற்றியபடி மஞ்சத்திலேயே குனிந்தமர்ந்தான். அருகே கணிகையர் எவரும் இருக்கவில்லை. பத்மன் வந்து “தங்களுக்காகக் காத்திருக்கிறது அரசியின் உடல், அரசே. குலமுறைச் சடங்குகள் அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றான். “நன்று, நான் இன்னும் சற்று நேரத்தில் ஒருங்கிவிடுவேன்” என்றான் நகுஷன்.
நகுஷன் ஏவலர் இருவர் துணை சேர்க்க எழுந்து நடந்து அணியறைக்குச் சென்று வெந்நீரில் நீராடி தேன்கலந்த புளிப்புநீரை உண்டு சற்றே தலைமீளப் பெற்றான். ஆடையை பற்ற முடியாதபடி கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. ஈரம் எஞ்சிய குழலுடன் சிற்றடி வைத்து நடந்து வந்து பத்மனிடம் “செல்வோம்” என்றான். இடைநாழிகளினூடாக நடந்து அகத்தளம் வரை செல்கையில் இருவரும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. குறடோசைகள் மட்டும் மரத்தரையில் ஒரு வினாவும் அதன் விடையும் என ஒலித்தன. தன் நிழல் நீண்டு படிகளில் விழக்கண்டு அவன் திகைத்து நின்றான். “செல்க, அரசே!” என பத்மன் அவனை மெல்ல தோளில் தொட்டான்.
மகளிர்மாளிகையின் படிகளில் ஏறுகையில் நகுஷன் திரும்பி “முதுமகள் ஆகிவிட்டாள்” என்றான். சிரிப்பதுபோல உதடுகள் வளைந்தன. “முதுமகள்…” என மீண்டும் சொன்னான். பேசுவது நன்று என பத்மன் எண்ணினான். “ஆம், அவ்வாறே நானும் அறிந்தேன். அவர் அணைகட்டி அப்பால் நிறுத்தியிருந்த அகவைகள் அனைத்தும் வந்து சூழ்ந்து பற்றிவிட்டன” என்றான். நகுஷன் “அவளை அவ்வகையில் பார்க்க நான் விழையவில்லை” என்றான். “ஆம், அது கடினமானதே. ஆனால் அவ்வுருவை நீங்கள் பார்த்துத்தான் ஆகவேண்டும். இல்லையேல் உங்களிடம் இருந்த அவர் விலகப்போவதே இல்லை. வருக” என்று சொல்லி பத்மன் முன்னால் நடந்தான்.
அகத்தளத்தின் பெரிய கூடத்தில் பட்டு விரிக்கப்பட்ட காலில்லாப் படுக்கையில் அசோகசுந்தரியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. காலடியிலும் தலையருகிலும் இரு நெய்யகல்கள் ஒளியிலாச் சுடர்களுடன் நெளிந்தன. வெண்பட்டு போர்த்தப்பட்டிருந்த அந்த உடலை அணுகியதும் நகுஷன் வேறெங்கோ எதன் பொருட்டோ வந்திருப்பதாக உளம் கொண்ட மயக்கை எண்ணி வேறு எங்கிருந்தோ வியந்தான். அங்கே ஒரு மெல்லிய நறுமணம் இருந்தது. அவள் காலடியில் ஐவகை மலர்கள் இருந்தன. வெண்தாமரை, அல்லி, மந்தாரம், முல்லை. அனைத்தும் வெண்ணிறம். அசோகம் மட்டுமே சிவப்பு. ஆனால் மலர்மணம் அல்ல.
சேடி “நோக்குகிறீர்களா, அரசே?” என்றாள். தரை பன்னீரால் கழுவப்பட்டிருந்தது. குங்கிலியமும் கொம்பரக்கும் புகைந்தன. அவற்றின் மணமும் அல்ல. “அரசே?” அவன் தலையசைக்க காலடியிலிருந்து பட்டை மெல்ல அகற்றி முகம் வரை சுருட்டி மேலெடுத்தாள். சவ்வாது, புனுகு, கோரோசனை, கஸ்தூரி அனைத்தும் அங்கே மணத்தன. ஆனால் பிறிதொன்றும் கலந்திருந்தது. அந்த மணங்கள்… மலர்கள்… அறியாத மணம் நாரென அவற்றை தொடுத்திருந்தது. “அரசே, நோக்குக!” என்றான் பத்மன்.
அவன் அங்கு கிடந்த உடலை நோக்கி ஒருசில கணங்களுக்கு சித்தமென ஒன்றில்லாதிருந்தான். பின்னர் ஒரு சொல்லென அது ஊறிவந்தது. அலறிஅணுகும் கோடைப்பெருமழையென பல்லாயிரம் கோடி சொற்களாலான பெருக்காக மாறி அறைந்து மூழ்கடித்துச் சூழ்ந்தது. அங்கு படுத்திருந்த முதுமகள் தலைநரைத்து, தோல்சுருங்கி, விழிகள் குழிந்து உட்புகுந்து, பற்கள் அனைத்தும் உதிர்ந்து, உள்மடங்கி மறைந்த உதடுகளுடன் சிறுமியளவுக்கு வற்றிய சிற்றுடலுடன் தெரிந்தாள். வெறும் எலும்பென ஆன சின்னஞ்சிறு கைகள். நிலம் பதிந்ததுண்டா என்றே வளைந்த சிறுகால்கள். நரம்புகள் அனைத்தும் தெரிய எலும்புக்குவை என்றே ஆன வெற்றுக்கூடு. பெருமழை அவனை குளிர்ந்து நடுங்கச்செய்தது. அவனுடைய ஒரு காலும் ஒரு கையும் நடுங்கத்தொடங்கின.
நிலைதவறி விழுவதற்குமுன் இரு வீரர்கள் அவனை பற்றிக்கொண்டனர். “மூடுங்கள்!” என்றான் பத்மன். சேடி பட்டை முகத்திலிருந்து இழுத்து கால்வரை மூடி அவள் உடலை மறைத்தாள். அந்தப் பட்டுக்கு அடியில் ஓர் மானுட உடலிருப்பதாகவே புடைப்புகள் காட்டவில்லை. மீண்டும் அதை நீக்கி நோக்கினால் அங்கே சில சுள்ளிகள் இருக்கக்கூடும். சில படைக்கலங்கள் இருக்கக்கூடும். அல்லது திகைத்து மேலே நோக்கும் ஒரு சிறு குழந்தை.
ஏவலர்களின் தோள்களைப் பற்றியபடி தன் அறை நோக்கி மீள்கையில் “என்ன இது! என்ன இது!” என்று அவன் கேட்டுக்கொண்டான். ஒரு சொல்லின் பேய்மழை. அனைத்து இலைகளையும் அறைந்து துடிக்கச்செய்து உரக்கக் கூவும் நாக்குகளாக்குகிறது. ஒற்றைச்சொல்லின் ஊழிநடனம். அறைக்குள் கொண்டுசென்று அவனை படுக்க வைத்தனர். அவன் மென்னிறகு மஞ்சத்தில் புதைந்துகொண்டே சென்றான். “மது ஊட்டிவிடுங்கள்” என்றான் பத்மன். தட் என எங்கோ அறைந்து நின்றது அவன் மஞ்சம். கணிகையர் வந்து அளித்த மதுவை பாலையில் கைவிடப்பட்டவன் நீரையென வாங்கி வாங்கி அவன் குடித்தான். கணிகையர் கைகள் நாகங்கள். படமெடுத்த உள்ளங்கை. நாகநஞ்சு.
மொத்த உடலையே மதுவால் நிரப்பிவிட விழைபவன்போல அவன் குடித்தான். உடல் நிரப்பி விரல் நுனிகளை குளிர்ந்து எடைகொள்ள வைத்த மது அவன் சித்தத்தை முற்றும் நனைத்து குழைத்து உள்ளலைகளின்மேல் முற்றிலும் படிந்து வழியவைக்க தலையை அசைத்தபடி “என்ன இது! என்ன இது!” என்றே கேட்டுக்கொண்டிருந்தான். சற்றே துயிலிலாழ்ந்து நீள்மூச்செடுத்து உடல் தளர்ந்து நெருப்பால் தொடப்பட்டதுபோல் துடித்து விழித்து எழுந்து “என்ன இது! என்ன இது!” என்று மீண்டும் உளம் பெருகலானான்.
அசோகசுந்தரியின் இறப்பை முரசுகள் அறிவித்தபோது நகரெங்கும் வாழ்த்தோசை எழுந்து அடங்காமல் அலையடித்துக்கொண்டிருந்தது. அவள் இறுதியாக சொன்ன சொல் “இனிய தென்றல்” என்று செய்தி பரவியபோது மக்கள் விழிநீர் உகுத்தனர். மூதன்னை ஒருத்தி வெறியாட்டெழுந்தவளாக கைவிரித்து ஓடிவந்து முற்றத்தில் நின்று “அவள் என்றுமிருப்பாள்! அழிவற்ற காற்றில் வாழ்வாள். துயர்நீக்கும் காற்று அவள். தேவீ, அன்னையே, காவல்தெய்வமே, எங்களை காத்தருள்க!” என்று கூவினாள். “அவள் தென்றல் வடிவானாள். எங்கள் குழந்தைகளுக்கு அவள் களித்தோழி ஆகுக! எங்கள் மகளிருக்கு இனிய துணைவியாகுக!” என்றார் புலவர் ஒருவர்.
அரண்மனை முற்றத்தில் அமைந்த பந்தலில் அவள் உடலை கொண்டுவந்து வைத்தபோது குருநகரியின் மக்கள் ஒருவர் எஞ்சாமல் திரண்டு வந்து மலரிட்டு வணங்கினர். அவள் காலடியில் தங்கள் குலக்கோல்களை வைத்து வணங்கிய குடிமூத்தார் எழுவர் “அவள் மூதன்னையானாள். நம் குடிவாழ என்றும் காவல் இருப்பாள்” என்றார். “இளமை ஒன்றையே எஞ்சவைத்து பிறிதனைத்தும் முன்பெங்கோ வாழ்ந்து முடித்தவள். வாழமறந்த அந்நாட்களை மட்டும் இங்கு வாழ்ந்து மறைந்தாள்” என்றனர் நிமித்திகர். இரவும் பகலும் ஒழுகிய கூட்டம் அவளை வந்து வணங்கிச் சென்றுகொண்டிருந்தது.
அவள் உடலை தெற்கே கொண்டுசென்றபோது குருநகர் முழுமையும் ஊர்வலமாகப் பெருகி தொடர்ந்தது. தென்றிசைக்காடு முழுக்க தலைகளால் மூடப்பட்டது. விழிதிகைத்து குரலெழுப்பி அழும் முகங்களால் நிரப்பப்பட்டிருந்தன மரந்திகழ் சோலைகள். “குருகுலத்து கோமகள் வாழ்க! துயரற்றவள் வாழ்க!” என்று பெருகிச் சூழ்ந்தன வாழ்த்துரைகள். அவளுக்கு அமைக்கப்பட்ட சிதைமேல் உடலை ஏவலர் தூக்கி வைத்தபோது அத்தனை சிறிய உடலா என அனைவருக்குள்ளும் எண்ணமெழுந்தது. சந்தனப்பலகைகளை அவள் மேல் அடுக்கியபோது முதுகுலத்தார் ஒருவர் நெகிழ்ந்த குரலில்
“மெதுவாக…” என்றார். அடக்க அடக்க எழுந்த அழுகையுடன் “தூய வெண்மலர்” என்றபோது வெடித்து கேவியபடி அப்படியே அமர்ந்துவிட்டார்.
இரு ஏவலர் தோள்பற்றி எங்கிருக்கிறோம் என்றே தெரியாது, கால்கள் மண் தொட்டு இழுபட, துவண்டு தொங்கிய கைகளுடன் வந்த நகுஷன் எவரோ கையிலளித்த அனற்குடுவையை வாங்கி அவள் காலடியில் வைத்தான். பின் தன் கைகளைப் பார்த்து ஏதோ சொன்னான். தழலெழுந்து நாபறக்கத் தொடங்கியதும் குருநகரின் குடிகள் நெஞ்சிலறைந்து கதறி அழுதனர். வாழ்த்துக்களும் முழவும் முரசும் கொம்பும் சங்கும் இணைந்த பேரிசையும் சூழ்ந்தன. அவ்வொலியின் விழிவடிவமென எழுந்து நின்றாடியது சிதைத்தீ.
நகுஷனிடம் “செல்வோம், அரசே” என்றான் பத்மன். “அவ்வளவுதானா?” என்று அவன் கேட்டான். “ஆம், அவ்வளவுதான்” என்றான் பத்மன். “நான் செல்லலாமா?” என்றான் நகுஷன். “ஆம், செல்வோம்” என்று பத்மன் அவனைத் தழுவி கொண்டுசென்றான். “முதுசெவிலி அங்கிருப்பார் அல்லவா?” பத்மன் புரியாமல் “ஆம்” என்றான். “அவரிடம் சொல்க, முடிந்துவிட்டது என்று” என்றான். “ஆம், சொல்கிறேன்” என்றான் பத்மன். “கொன்றபழி தின்றால்…” என அவன் பதறும் விழிகளுடன் அவனை நோக்கி சொன்னான். “நான் தின்னவில்லை… தின்றது எரி.” “நாம் அரண்மனைக்குச் சென்று பேசுவோம், அரசே” என்றான் பத்மன்.
அரண்மனையை அடைந்தபோது அவன் திரும்பி பத்மனிடம் “அதே அரண்மனை” என்றான். “ஆம்” என்றான் பத்மன். அவன் தோளைப்பற்றி “அங்கே குரங்குகுலம் இருக்குமா எனக்காக?” என்றான். “இருக்கும், வருக அரசே!” என தேர்விட்டு இறங்கச்செய்தான் பத்மன். முற்றத்தில் நின்று அரண்மனையை நோக்கியதும் அவன் தன் ஆழத்தில் ஓடிக்கொண்டே இருந்த சொல்லை சென்றடைந்தான். “என்ன இது! என்ன இது!” என்று தனக்கே என, தன்னருகே நின்றிருக்கும் அறியாத ஒன்றிடம் என கேட்டான்.
“வருக, அரசே!” என்று பத்மன் அவனை அழைத்துச்செல்ல அவ்வொரு சொல்லை மட்டுமே மீள மீள உச்சரித்தபடி ஏவலர்களின் உடலில் தன் எடையைச் சாய்த்து அவன் நடந்து சென்றான். தன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் எடையுடன் விழுந்து “மது… நிறைய மது” என்றான். கண்களை மூடியபடி ஓசையின்றி அதே சொல்லை சொல்லிக்கொண்டிருந்தான். வெறும் ஒலியென்றாகியது அச்சொல். பின்னர் ஓர் எண்ணமென ஓர் அக அசைவென ஆகியது.