38. நீர்க்குமிழிமாலை
மஞ்சத்தில் காத்திருக்கையில் அவ்வறைக்குள் நுழையும் அசோகசுந்தரியை நகுஷன் பல நூறு உருவங்களில் கற்பனை செய்துகொண்டான். நாணத்தின் எடை உடலெங்கும் அழுத்துவது சிலம்பொலியில் தெரிய நடந்து வந்து, தயங்கிய உடலை அணியோசைகளே அறிவிக்க கதவோரம் நின்று மிரண்ட விழிகளால் நோக்குபவள். அரசிக்குரிய நிமிர்வுடன் அஞ்சா விழிகளும் திரண்ட தோள்களுமாக வந்து ஆலயக்கருவறையில் எழுந்த தேவியென வாயில்சட்டம் நிறைய நின்று அளவோடு புன்னகைத்து அரைச்சொல்லில் பேசுபவள். ஆர்வமும் அச்சமும் கொண்ட காட்டுப்பெண். குடி பயிற்றுவித்த மிகைநாணத்தைச் சூடிவந்து குளிர்நீர் பொழிந்த உடலென குறுகி நின்றிருக்கும் சிற்றூர் மகள். பொய் நாணம் பயிலும் பரத்தை. உடல் தேர்ந்த நடனமாக அத்தருணத்தை நடிக்கும் விறலி. சொல் தேர்ந்த பாணினி. நச்சுநீலம் விழிகளில் சுடரும் நாகினி…
ஒவ்வொரு பெண்ணையும் அவனுள் இருந்து எழுந்து எதிர்கொண்டவன் ஒரு நகுஷன். ஒன்று நூறென பெருகி தன்னுள் நிறைவது இதுவரை பிறந்திறந்த தன் வடிவுகளா, இனி பிறக்கவிருக்கும் விழைவுத்தோற்றங்களா? ஒவ்வொரு விதையும் எழவிருக்கும் நூறாயிரம் மரங்களை சூல்கொண்டிருக்கின்றது என்பது சூதர்பாடல். ஒவ்வொரு தருணமும் வரவிருக்கும் நிகழ்வுகளின் முடிவிலியை உருவாக்குகின்றது என்று அறிந்தால் எவரேனும் ஏதேனும் இயற்ற முடியுமா என்ன? அறியமுடியாமையில் அறிவின்மையில் ஆழ்த்தி அறிவு கடந்த வெளியில் அமைந்திருப்பவை தெய்வங்கள். இங்கு சூழநின்று நோக்குகின்றனவா அறிந்தமைந்த அவர்களின் விழிகள்?
அவன் சிலம்பு சொல்லும் சொற்களை கேட்டான். இரு சேடியரால் அழைத்துவரப்பட்டு வாயிலில் விடப்பட்ட அசோகசுந்தரி திரும்பி “நான் சென்று என் பாவையை எடுத்து வருகிறேன்” என்றாள். ஒருகணத்தில் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டு அவன் உள்ளம் சலிப்படைந்தது. அவள் மாறாத அதே வடிவில்தான் வருவாள் என்பதனால்தான் அத்தனை நூறு வடிவங்களை எண்ணிக்கொண்டோமா? ஆம், பிறகெப்படி இது அமைய முடியும்? பிறிது எவ்வாறுமல்ல என்று எத்தனை உறுதியாக அறிந்திருக்கிறது உள்ளம். செவிலி “சற்றுநேரம் இங்கிருங்கள், அரசி. நான் சென்று பாவையை எடுத்து வருகிறேன்” என்றாள். “ஆம், அதன் அருகே மூன்று மலர்களை வைத்திருந்தேன். அதையும் எடுத்து வாருங்கள். நான் அரசரிடம் பேசிவிட்டு இதோ வந்துவிடுகிறேன்” என்றாள் அசோகசுந்தரி.
“ஆம், சற்று நேரம் விளையாடிக்கொண்டிருங்கள், அரசி” என்று சொல்லி குடிலுக்குள் விட்டு அவளுக்குப் பின்னால் கதவைச் சாத்தி ஓசையின்றி மெல்ல தாழிட்டாள் செவிலி. துள்ளலுடன் உள்ளே வந்து அவனருகே மஞ்சத்தில் அமர்ந்து தன் கொண்டையை மூடியிருந்த பட்டாடையை எடுத்து அப்பாலிட்டு “எனக்கு இப்போதெல்லாம் அணிகள் மிகவும் உறுத்துகின்றன. இந்தப் பட்டாடையின் பொன்னூல்களும் உடலில் உரசிக்கொண்டே இருக்கின்றன. இனிமேல் நான் இவற்றை அணியமாட்டேன்” என்றாள். “நன்று, அணிய வேண்டியதில்லை” என்று அவன் சொன்னான்.
அவள் அவன் கைகளை எடுத்து தன் கைகளில் பொத்தி வைத்தபடி “இங்கு நான் வரும்போது என்னை அரசியாக்குவதாக சொன்னீர்கள்” என்றாள். “நீ இப்போது அரசிதானே?” என்றான். “இதுவா அரசி? அரசியென்றால்…” விழிகளை மேலே செருகவைத்து எண்ணிநோக்கி “அரசியென்றால் வானத்தில் பறக்கமுடியும் என்றார்களே?” என்றாள். “யார் சொன்னது?” என்றான். “சௌமை” என்றாள். “யாரவள்?” “சௌமை. சௌமையை தெரியாதா? சமையலறைச்சேடி சந்திரிகையின் மகள். இதோ, இவ்வளவுதான் இருப்பாள். ஆனால் அவளுக்கு எல்லாமே தெரியும்.” நகுஷன் மேலும் மேலும் சலிப்புற்று பெருமூச்சுவிட்டான். தன் உடலில் இருந்து விழைவு விலகிச் செல்வதை உணர்ந்தான்.
ஆனாலும் அவன் அவளிடம் பேசவே விழைந்தான். “நான் உனக்கு புரவியில் ஊர கற்பிக்கிறேன்” என்றான். “புரவியை எனக்கு பிடிக்கவில்லை. அலையலையாகச் செல்கிறது. நான் யானைமேல்தான் ஊர்வேன்.” அவன் புன்னகையுடன் “நன்று, யானை ஊர கற்பிக்கிறேன்” என்றான். “யானைமேல் ஏறி மாமரத்திலிருந்து மாங்காய் பறித்து உண்பேன்” என்றாள். “நன்று” என்று அவன் சொன்னான். ஒவ்வொருமுறையும் எப்படி மிகச் சரியாக குழந்தைபோலவே பேசுகிறாள் என எண்ணிக்கொண்டதுமே குழந்தை வேறெப்படி பேசும் என்றும் தோன்றியது.
எழுந்து நின்று கை விரித்து “யானைமேல் நிற்க முடியுமா?” என்றாள். “முடியும், சற்று பயில வேண்டும்” என்றான். “நீங்கள் நிற்பீர்களா?” அவன் “நான் நின்றதுண்டு” என்றான். “நான் போருக்கு செல்வேன். வாளை எடுத்து யானைமேல் நின்று சுழற்றுவேன்” என்றாள். கைகளை வீசியபடி சுற்றிவந்து அவனருகே நின்று “நான் வில்வித்தை கற்பேன்” என்றாள். “சரி, நான் கற்பிக்கிறேன்” என்றபடி அவன் அவள் இடையை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான். அவள் அவன் தோளில் தலைவைத்து “முதுசெவிலி என்னிடம் சொன்னாள் நீங்கள் என்னை தழுவுவீர்கள் என்று. அப்போது நான் திமிறக்கூடாது என்று சொல்லி எனக்கு கனிச்சாறு தந்தாள். ஆகவே நான் திமிறமாட்டேன்” என்றாள்.
“நன்று, நீ நல்ல பெண் என அறிவேன்” என்று அவன் அவள் கன்னங்களில் முத்தமிட்டான். அவள் சிரித்து கன்னத்தைத் துடைத்தபடி “சுஷமை அவள் கன்னத்தில் முத்தமிட்டால் உடனடியாக துடைத்துவிடுவாள்” என்றாள். “யார் சுஷமை?” என்றான். “சுஷமையையும் தெரியாதா? அவள் சமையலறைச்சேடி ஊர்த்துவையின் மகள், சின்னக் குழந்தை” என்றாள். “ஆனால் அவள் இளையோன் ஸ்ரீதரனுக்கு முத்தமிட்டால் சற்றும் பிடிக்காது. முத்தமிடப்போனால் முகத்திலேயே அறைந்துவிடுவான். இதோ, இப்படி” என தன் கன்னத்திலேயே அறைந்துகாட்டினாள்.
எழுந்து கதவைத் திறந்து வெளியே சென்றுவிடவேண்டும் என்று நகுஷன் ஒருகணம் எண்ணினான். பின்னர் தன்னுள் சொல்லிக்கொண்டான். ஆம், இவளுக்குரியது இரண்டாவது வழிமுறை. இவளுக்குள் பறக்கும் விழைவில்லை, உடலில் சிறகுகளும் இல்லை. ஆனால் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்குகிறாள். புதியனவற்றில் கிளர்ச்சி கொள்கிறாள். புதிய ஒன்றை அவளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அதுவே உகந்த வழி. எண்ணங்களைச் சொற்களாக்குவது எத்தனை நல்லது! அது புகையை நீராக்குவது. நீரை உறையவைக்க வேண்டுமென்றால் எழுதவேண்டும்.
நகுஷன் அவள் உடலை தன் காமம் நிறைந்த கண்களாலும் விரல்களாலும் உதடுகளாலும் தொட்டுத் தழுவலானான். அவள் இயல்பாக நெளிந்தும் வளைந்தும் அவன் தொடுகையை தவிர்த்தாள். தொட்டபோது கூசிச் சிரித்தாள். ஆனால் அவள் உடல் அவன் காமத்தை அறியவே இல்லை. அவளுக்குள்ளிருந்து அதன் மறுஅனல் எழுந்து வந்து இணைந்து கொள்ளவில்லை. இடையையும் கழுத்தையும் தொட்டபோது கூசிச் சிரித்து உடல் நெளித்து புரண்டாள். முலைகளைத் தொட்டபோது “அய்யோ” என கைகளைப்பற்றி தூர வீசி எழுந்து ஓடினாள். துரத்தி அவளைப்பற்றி இதழ்களைக் கவ்வி முத்தமிட்டபோது திமிறி அவன் நெஞ்சை கைகளால் உந்தி விலக்கி அப்பால் நின்று சிறு அருவருப்புடன் துப்பியபடி “இப்படியெல்லாம் செய்யக்கூடாது, நான் செவிலிஅன்னையிடம் இதை சொல்வேன்” என்றாள்.
அவன் உடலில் காமம் அணைவது ஏன் என அவன் எண்ணினான். அவள் உடல் மணத்திலும் காமம் இல்லை என்பதுதான். நோக்குகையில் எழும் காமம் அருகணைந்து முகர்கையில் தணிகிறது. சிக்கிமுக்கியை உரசி அனலெழுப்பி மீண்டும் அவளை அருகணைத்து கைகளைப் பற்றியபடி தணிந்த குரலில் அவளுக்குள் காமத்தை சொற்களினூடாக எழுப்ப முயன்றான். கண்களையும் கன்னங்களையும் இதழ்களையும் புகழ்ந்தான். முலைகளையும் இடையையும் நலம் பாராட்டினான். குழல் தழுவியபடி விழிகளை நோக்கி ஆழ்ந்த குரலில் அவள் உள்ளத்திற்குள் செல்லும் சொற்களை சொன்னான்.
மந்த்ரணம், தாடனம், முத்ரணம், ஆலிங்கனம், சும்பனம்… கற்ற காம நூல் கூறிய சொற்களனைத்தும் நினைவிலெழுந்து பொருளற்றவையெனக்காட்டி மூழ்கின. அவன் சொன்ன சொற்களில் மெய்ப்பொருளென மறைந்திருந்த காமத்தை மட்டும் அவளால் உணரமுடியவில்லை. ஒவ்வொரு முறை அவன் தழுவும்போதும் முகம் சுளித்து “வியர்வை” என்றாள். “அய்யோ, இடை வலிக்கிறது” என கூவினாள். மூச்சுவாங்க “எவ்வளவு எடை” என்றும் “எனக்கு மூச்சுத் திணறுகிறது” என்றும் சொல்லி திமிறினாள். “ஆ” என அவள் அலற அவன் பின்னால் நகர்ந்தான். “உங்கள் நகம்… அய்யோ! குருதி வருகிறதே” என சிறு கீறலை காட்டினாள்.
ஒரு கணம், அவன் அஞ்சி ஒத்திப்போட்டுக்கொண்டிருந்த தருணம் வந்தது. அவன் முற்றிலும் அணைந்தான். உளவிழைவு நாண் அறுபட உடல் தளர்ந்தது. பெருமூச்சுடன் தன் சால்வையை எடுத்தபடி “நன்று, நாம் திரும்பிச் செல்வோம்” என்றான். “இதுவா விளையாட்டு?” என்றாள். அவன் “ஆம், செல்வோம்” என்றான். “இருட்டிவிட்டது. நாம் இந்தச் சோலைக்குள் சென்று பறவைகள் சேக்கையேறியிருப்பதை பார்க்கலாமா?” என்றாள். அவன் “ஆடை அணிந்து கொள்” என்று அவள் ஆடைகளை எடுத்து அருகே வீசினான். கச்சு தளர்ந்து அவள் இளமுலைகள் வெளித்தெரிந்தன. முயலின் மூக்கு போல் சிவந்த கண்கள் கொண்ட பளிங்குக் குமிழ்கள். பனிவெண்மை கொண்ட தோள்கள். அல்லிஇதழென மென்மை காட்டிய கழுத்து. தோள்களிலும் முலைச்சரிவிலும் அவன் கைநகம் பட்ட சிவந்த வடுக்கள் இருந்தன. அவன் கைகள் அழுந்திய பகுதி சிவந்து குங்குமத் தீற்றல்போல தெரிந்தது.
அவனளித்த மேலாடையை வாயால் கவ்வி முலைமேல் தொங்கவிட்டபடி கைகளை மடித்து பின்னால் கொண்டுசென்று அவிழ்ந்த கச்சையின் பின்முடிச்சை போட்டாள். பட்டுக்குள் அசைந்த அவள் முலைகளைக் கண்டதும் அவன் நெஞ்சு அச்சம் கொண்டதுபோல படபடத்தது. அவள் திரும்பி “நாம் சேர்ந்து காட்டுக்குச் செல்லலாமா?” என்றாள். அவ்வசைவில் ஒருகணத்தில் அவன் அடைந்தவை கொண்டவை அனைத்தையும் இழந்து வெறும் காமம் கொண்ட உடலென்றானான். பாய்ந்து அவளை அணுகி இடைவளைத்து தூக்கி மஞ்சத்திலிட்டான். அஞ்சி அவள் அலற அவள் கைகளைப் பற்றியபடி கச்சு முடிச்சை அவிழ்த்து முலைகளைத் திறந்து அவள் மேல் உடலமைத்து பொருத்திக்கொண்டான்.
அவள் கூச்சலிட்டுக் கதறியபடி கால்களை உதைத்து துடித்தாள். கைகளால் அவன் தோளைப்பற்றி உந்தி தலையை அசைத்துப்புரட்டி அவன் இதழ்களுக்கு தன் இதழ்கள் சிக்காமல் செய்தாள். அவன் தன் உடலெடையாலும் தோள்வலிமையாலும் அவற்றை முற்றிலும் தன் ஊர்தியும் படைக்கலமும் எனக்கொண்டு எழுந்த விழைவின் வெறியாலும் அவளை முழுமையாக அடக்கிக்கொண்டான். அவளை தன் உடலால் கடந்தான். அச்சத்தாலும் பதற்றத்தாலும் துள்ளித் திமிறி அதனாலேயே மூச்சு இறுகி உடல் வெம்மைகொண்டு வியர்த்து மிக விரைவிலேயே தளர்ந்து மெல்லிய ஊன்கூழென்றாகி அவன் உடலுக்கடியில் அவள் கிடந்தாள்.
வெறி விசையென்றாகி விரைவுத்தாளம் கொள்ள அவள் உடலை முற்றிலும் வென்று அடக்கியபோது நான் ஆணெனும் உணர்வு எழுந்தது. ஆம், நான் ஆண், நான் ஆண் என உள்ளிருந்து தருக்கிய ஒன்று அவனை ஐயமற்றவனாக்கியது. தடுக்கமுடியாதவனாக்கியது. வெறிக்குள் இருந்த பதற்றம் முற்றிலும் அடங்க ஊன் சுவைத்துண்ணும் சிம்மத்தின் பொறுமையுடன் அவன் அவளை புணர்ந்தான். உடல் அறிந்திருப்பவை என்னென்ன என உளம் அறிந்துகொள்ளும் வேளை. உள்ளம் வளர்த்துக்கொண்டவற்றை உடல் மீளப் பெற்றுக்கொள்ளும் ஆடல்.
தன் காமத்திற்கு சிக்கியிருப்பது அவளுடைய உடல் மட்டுமே என்றும், வலுதுவண்டு சொல்லிழந்து தன்னுள்தன்னுள் எனச்சுருங்கி அவள் உள்ளம் வேறெங்கோ இருந்துகொண்டிருக்கிறது என்றும் அவன் அறிந்தான். ஆனால் அது அப்போது ஒரு பொருட்டெனத் தெரியவில்லை. உடலை வெல்வதனூடாக அவன் அவள் உள்ளத்தையும் அழுத்திப் பற்றிவிட்டதாகவே எண்ணிக்கொண்டான். உள்ளம் என ஒன்றிருக்கும் என்றால் அதைப் பற்றவும் வெல்லவும் உடலொன்றே வழி. இவ்வுடலிலிருந்து அவள் ஒருபோதும் உளம் விலகப்போவதில்லை. மரத்திலிருந்து இப்போது அஞ்சி சிறகடித்த பறவை வானில் பதைத்துச் சுழன்று சிறகு தளர்கையில் மீண்டும் இங்குதான் வந்தமரும். அப்போது இந்த மரம் பிறருக்குரியது என்று அறியும். அதன் கிளைகளும் மலர்களும் மட்டுமல்ல தானும் தன் சிறகுகளால் துழாவிய வானும் பிறர் உரிமை என்று அறியும்.
உடைமை கொள்ளுதலின் பேரின்பத்தை, வென்று கடத்தலின் நிறைவை அவன் அறிந்தான். திளைப்பதென்பது உளமிழந்து உடல்மட்டுமே என்றாதல். காமம் என்பது திளைப்பு. பிறிதொரு திளைப்பு வலி. திளைப்பதை தடை செய்கிறது நீங்கா தன்னுணர்வு. அதைச் சூடிய சித்தம். எனவே மானுடரைவிட விலங்குகள் திளைக்கின்றன. விலங்குகளைவிட பறவைகள் திளைக்கின்றன. பறவைகளைவிட மீன்கள். ஆயினும் புழுக்களைப்போல் திளைக்க எவ்வுடலாலும் ஆவதில்லை. திளைக்கையில் புழுவென்றாகிறோம். புழுவென்றாதலே உடலின் முழுமை. உடலென்றான ஒன்று தன்னை அப்போது முற்றிலும் விலக்கி உடல்சூடுவதற்கு முன்பிருந்த வெளியில் பரவியிருக்கிறது. உடல்கொண்டு அமைந்ததன் நிறைவை பின்னர் வந்தமைந்து தானும் அடைகிறது.
காமக்குடிலின் மஞ்சத்திற்கு அவன் மீண்டபோது எண்ணியதென்ன என்பதை உள்ளம் அறிந்திருக்கவில்லை. இறுக முறுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட பட்டுத்துணியைப்போல உடல் சுருட்டி, தொடைகளை மடித்து, நெஞ்சோடு சேர்த்து, கால்முட்டில் முகம் புதைத்து, கைகளால் தலைபற்றி, குளிர்கொண்டவள்போல் நடுங்கியபடி, விழிமூடி கண்ணீர் கசிந்து வழிய படுத்திருந்த அசோகசுந்தரியை எழுந்து நின்று நோக்கியபோது தன் உடலில் நிறைந்தது என்ன உணர்வென்று பின்னர் பல முறை நகுஷன் எண்ணியதுண்டு. நோய்கொண்ட விலங்கென அவள் முனகியதைக் கேட்டபோது உள்ளிருந்து மகிழ்ந்தது எது?
அப்போது அது ஆண்மையின் நிறைவென்று தோன்றியது. பின்னர் வெறும் விலங்கென நிற்பதன் விடுதலை என்று தோன்றியது. நாட்கள் சென்றபின் சித்தத்தின் பிடியிலிருந்து முற்றிலும் விடுபட்ட தசையின் வெற்று அதிர்வு மட்டுமே அது என்று உணர்ந்தான். ஆடை அணிந்து அருகிலிருந்த பொற்கிண்ணத்திலிருந்து கிராம்பையும் இஞ்சியையும் எடுத்து வாயிலிட்டு மென்றபடி வெளியே சென்று குளிர்காற்று பெருகிச் சென்றுகொண்டிருந்த சோலைமரங்களைப் பார்த்தபடி நின்று கைதூக்கி சோம்பல் முறித்தான். அப்போது உலகனைத்தையும் வெல்ல முதல் அடியெடுத்து வைத்தவன்போல, கடக்க முடியாத எல்லையொன்றைக் கடந்து திரும்பி நோக்குபவன்போல தன்னை உணர்ந்தான்.
அவனைக் கண்டதும் அப்பாலிருந்து அணுகிவந்த முதிய சேடி அவன் ஆணையைக் கோரி அங்கே நின்றாள். உள்ளே செல்லும்படி அவளிடம் கைகாட்டிவிட்டு இருளில் இறங்கி நடந்தான். எதிரே வந்த அன்னைச்செவிலியின் முகத்தை நோக்கும் துணிவு அவனுக்கிருக்கவில்லை. அவளும் ஒன்றும் கேட்கவில்லை.
தன் அறையை அடைந்து மஞ்சத்தில் படுத்ததும் அதுவரை இல்லாதிருந்த கசப்பு ஒன்றை தன்னில் உணர்ந்தான். எவர் மீது என்று கேட்டுக்கொண்டான். தன் மீதா, தன் செயல் மீதா? அல்ல என்று உறுதியாகத் தோன்றியது. அவள் மேலா? அவள்மேல் இரக்கமும் மெல்லிய இளிவரலுமே அப்போது எழுந்தது. பின் எவர் மீது? இந்த மானுடத்தனிமையின் கணத்திலும் உடனிருப்பது எது?
விழுந்துகொண்டே இருப்பதுபோல் தோன்றியது. எழுந்து அறையிலேயே நிலையழிந்தவனாக சுற்றி வந்தான். ஒவ்வொரு சாளரத்தினூடாகச் சென்று மெல்ல இருளுக்குள் அசைந்த மரங்களைப் பார்த்தான். திரைச்சீலைகளை அசைக்கும் காற்று அறைக்குள் எவர் எவரோ வந்து செல்லும் உணர்வை அளித்து உட்புலன் ஒன்றை திடுக்கிடச் செய்தது. நான் இங்கிருக்கிறேன், இப்போது நான் செய்தது அறப்பிழை எனில் அதன் கடன் ஒரு தொடர். அதை நிகர்த்துவது யார்? அவர்கள் இன்னும் கருக்கொள்ளவில்லை.
மீண்டும் மஞ்சத்தில் படுத்தபோது துணையின்றி அங்கிருக்க முடியாதென்று தோன்றியது. பத்மனை வரச்சொல்லலாம் என்று எண்ணியபோதே அது எத்தனை பொருளற்றதென்று தோன்றியது. அறநெறிகளால் ஆவதில்லை. சொற்களால் மழுப்பவும் கூடுவதல்ல. கூரிய வாள்முனையை கூரியதொன்றே சந்திக்கமுடியும். அல்லது அதன் இரையென்றாகும் ஒன்று. எழுந்து கதவைத் திறந்து பணிந்துநின்ற காவலனிடம் “மது கொண்டுவரச்சொல்… கூடவே அணியறைகளிலிருந்து ஆடற்கணிகையரை அழைத்து வருக!” என்றான். சற்று நேரத்திலேயே இரு இளம்கணிகையரை காவலன் அழைத்து வந்தான். அவர்கள் பயின்றமருட்சியும் சீரமைந்த அசைவுகளும் கொண்டிருந்தனர். அவன் விழிகளை சந்தித்ததும் ஒருத்தி நாணி மெல்ல கைதூக்கி குழல் திருத்தினாள். ஆடை நழுவ பெருமுலைகள் மெல்ல அசைந்தன. பிறிதொருத்தி அஞ்சியவள்போல் அவள் பின் ஒளிந்தாள்.
அவனுள் கடும்கசப்பு எழுந்தது. வாளை உருவி அவர்களின் தலைகளைக் கொய்து நிலத்திட்டு காலால் உதைத்து உருளச்செய்யவேண்டுமென்னும் வெறி. உடலெங்கும் அதன் அதிர்வு பரவ அவன் பின்னகர்ந்தான். அவர்கள் உள்ளே வந்த ஓசை கேட்டதும் பிறிதொரு விலங்கு குகை விட்டு எழுந்தது. காலால் கதவை ஓங்கி உதைத்து மூடிவிட்டு இருவரின் கூந்தலையும் பற்றி இழுத்து மஞ்சத்தை நோக்கி கொண்டுசென்றான். அவர்களை சேக்கையில் தள்ளி தானும் பாய்ந்து நிணக்குவியலில் புரண்டு களிக்கும் சிம்மமென அவர்களுடன் உறவுகொண்டான். புலரிவரை வெறும் விலங்கென்றிருந்தான். முற்றிலும் உடல் களைத்தபோது விழுந்து துயின்று மறுநாள் உச்சியில் விழித்தெழுந்தான்.
நிகழ்ந்த அனைத்தையும் வெவ்வேறு துளிக்கனவுகளாக தொட்டுத் திரட்டி எடுத்தபோது ‘ஆம், இது ஒன்றே வழி’ என்னும் எண்ணமாக அது சுருங்கியது. வரியென்றாகி நுண்மொழியென்றாகி சித்தத்தின் தாளமாக மாறியது. நீராடச் செல்கையில் அணி புனைகையில் அரியணை வந்து அமர்கையில் உடனிருந்தது. ‘ஆம், இது ஒன்றே வழி’ என்றே அவன் உள்ளம் அமைந்திருந்தது. அரசவையை முன்னதாக முடித்துவிட்டு உடனே மஞ்சத்தறைக்குச் சென்று மீண்டும் இரு கணிகையரை வரச்சொன்னான்.
மாலையில் முதுசெவிலி வந்து வாயிலில் நின்றாள். அவன் கணிகையருடன் இருப்பதை ஏவலன் சொல்ல அவள் காத்து நின்றாள். எழுந்து நீராடி உடைமாற்றி தன் மந்தண அறைக்குச் சென்று அங்கே அவளை வரச்சொன்னான். அவள் உள்ளே வந்த ஓசைக்கு அவன் உடல் விதிர்ப்பு கொண்டது. அவள் உதடுகள் அசையும் ஒலியை கேட்டான். “அன்னையே, தீச்சொல் இடுவதென்றால் இடுக! உங்கள் முகம் நோக்கும் திறனற்றவன்” என்றான். “நான் எப்போதும் தீச்சொல்லிடப்போவதில்லை. அன்னையர் தீச்சொல்லிட்டால் இங்கே ஆண்கள் எஞ்சுவார்களா என்ன?” என்றாள் முதுசெவிலி. அவன் உதடுகளைக் கவ்வி மூச்சை மெல்லவிட்டு தன்னை தளர்த்திக்கொண்டான்.
“அரசி நோயுற்றிருக்கிறார், மருத்துவர் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் முதுசெவிலி. “சொல்க!” என்றான். “அவர் கொண்ட நோய் என்னவென்று சொல்லக்கூடவில்லை. நான் நோக்குகையில் உயரமொன்றிலிருந்து விழுந்து எலும்புகள் அனைத்தும் உடைந்துவிட்டவர் போலிருக்கிறார்” என்றாள். அவன் “நான் காட்டுமைந்தன். நெறியறியாதவன். அரசனென நான் அமையலாமா, அன்னையே?” என அவளை நோக்காமலேயே கேட்டான். “காட்டிலிருந்து எழுந்தவர்களே அனைத்து அரசர்களும்” என்று முதுசெவிலி சொன்னாள். “நீயே ஆளத்தக்கவன். உலகை வென்று இந்திரனின் அரியணையை வெல்பவன். உன் கொடிவழிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்பவன்.”
“விழைவே அரச இயல்பென்று வகுத்துள்ளனர் முன்னோர்” என்று அவள் சொன்னாள். “நீ கொண்ட விழைவு இந்நகரில் செல்வமென்றும் வளமென்றும் பெருகும்.” அவள் மேலுமேதோ சொல்லப்போகிறாள் என அவன் அறிந்திருந்தான். “அனைத்துக்கும் அடியில் பெண்களின் குருதியும் கண்ணீரும் இருக்கும். அரசே, ஆண்கள் அனைவருக்குள்ளும் அரசன் ஒருவன் வாழ்கிறான்.” நகுஷன் திரும்பி அவளை நோக்கவில்லை. அவன் உடல் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது.
அவள் செல்லத் திரும்புகிறாள் என காலடியோசை காட்ட அவன் திரும்பி “அன்னையே சொல்க, இப்பிழையை எவர் நிகர் செய்வார்கள்?” என்றான். “பிழைகள் அனைத்தும் பெருகுபவை” என்றாள் செவிலி. “நிகர்நிலைகொண்டிருந்தது முதலியற்கை என்பார்கள் சாங்கியர். மூவியல்பும் நிகரிழந்த முதற்கணம் முதல் தொடங்கியது இப்புடவிநிகழ்வுப் பெருக்கு. இது தன் நிகர்நிலை நாடும் தேடலாகவே பெருகிச்சூழ்ந்து சென்றுகொண்டிருக்கிறது.” அவன் தவிப்புடன் “அதுபோலவா?” என்றான். “ஆம், அது இயற்கையின் மாறாநெறி” என்றாள்.
“என் கொடிவழிகளுக்காக இன்று நின்று இரங்கி ஏங்குகிறேன், அன்னையே” என்றான். அவன் கண்கள் கசிந்து வழியலாயின. விம்மலை அடக்க அவன் உதடுகளை மடித்துக்கொண்டான். “அன்னையே சொல்க, என்னை முற்றிலும் பொறுத்து கருவிலிருக்கும் குழவிக்கு நிகராகக் கொள்ள உங்களால் இயலுமா?” அவள் அருகே வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டு “ஓர் அன்னையின் முழுவாழ்த்தேனும் என் குருதிவழிக்கு உள்ளதென்று நான் இன்று கருதிவைக்கலாமா?” என்றான். அவள் அவன் தலையை வருடி “இவையனைத்தும் அறியாப்பெருக்கொன்றின் அலைகள்மேல் எழுந்த குமிழிகள் என்று அறிந்த பின்னர் எவர் மேல் சினம்? நீ என் மைந்தன். என் கருவிலிருந்து நீ வெளியேறவே இல்லை” என்றாள்.
அவன் குனிந்து அவள் கால்களைத் தொட்டு சென்னிசூட விழிநீர்த்துளிகள் உதிர்ந்தன. அவள் அவன் தலைமேல் கைவைத்து “வெற்றியும் புகழும் சூழ்க!” என வாழ்த்தினாள். அவன் தோள்தொட்டு எழுப்பி நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.