ஊமைச்செந்நாய் -வாசகர் கடிதம்

umai

மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

நலம் தானே. உங்களுக்கு ஒரு வாசக கடிதம் எழுதச்சொல்லி என்னை பல முறை வற்புறுத்தியவர் வானவன் மாதேவி அக்கா, எனக்கு தான் உங்களிடம் எழுதுவதில் ஒரு தயக்கம் அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்த வாசக கடிதத்தை எழுதுகிறேன்.

இனி நான் எழுத இருப்பதில் ஏதேனும் இலக்கண, இலக்கிய பிழை இருப்பின் என்னை மன்னித்து விடுங்கள்.

“ஊமைச்செந்நாய்” உங்கள் கதைகளின் தலைப்பே என்னை எப்போதும் கவர்ந்து விடும் “வணங்கான் “,”சோற்றுக்கணக்கு” தலைப்பே கதைக்குள் இட்டு செல்லும் கருவியாக இருக்கிறது.

ஊமைச்செந்நாய் கடைசி வரையில் ஊமையாகவே இருந்துவிடுகிறான்

துரை அவனிடம் ஏன் பேசாமல் இருக்கிறாய் என்றதற்கும் நான் ஒரு ஊமைச்செந்நாய் என்றே பதில் கூறுகிறான்.

ஒரு காட்டில் வேட்டையாடி வருகின்ற அனுபவத்தை இந்த கதை கொடுத்தது. காட்டை மிகவும் அழகாக சித்தரித்து இருந்தீர்கள். பின் அந்த காலத்து அடிமைத்தனத்தை மிகச்சிறந்த முறையில் சொல்லி இருந்தீர்கள்.

கதையில் அமைந்த உவமைகள் எல்லாம் ஊமைச்செந்நாயின் பார்வையில் இருந்து காண்பித்து இருந்தது மிக அருமை . ஒரு காட்டை மட்டுமே அறிந்த ஒருவனாக அவன் காண்பவற்றை அனைத்தையும் விவரிக்கிறான். எடுத்துக்காட்டாக

கதையை ஆரம்பிக்கும் போதே அந்த யானைத் துப்பாக்கி என்று பின் அதை ராஜநாகம் போல் இருக்கிறது என்றது. பின் அந்த வாத்துகழுத்து குப்பி, பூனைக்கால் கரண்டி, கொக்குக்கால் கோப்பை, கொக்கின் கால் விரல்கள் போன்ற வேர்கள், தூக்கணாங்குருவிக்கூடு உவமை. மேகப்பொதிகளை வெண்முயல்கள் என்றும், யானையின் துதிக்கையை மலைப்பாம்பு என்றது இது அனைத்தும் ஒரு காட்டிலிலே வாழ்ந்த ஒருவன் பார்க்கும் பார்வையாக அமைந்தது படிக்கும் எவருக்கும் அதே பார்வை கிடைக்கிறது. அந்த பார்வை தான் உங்களின் தனி அம்சம் என்று தோன்றுகிறது,

மேலும் ஒரு உவமை அந்த கோழைமான் இறக்கும் தருவாயில் அதன் கண்களையும் ஊமைச்செந்நாய் சோதியுடன் புணர்ந்த போது அவள் கண்களையும் ஒப்பிட்டு கூறியது ஒரு மன அதிர்வை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். அவள் உச்சத்தை அடையும் போது அவள் கண்களும் அந்த கோழைமான் இறக்கும் போது அந்த சோர்ந்து மூடும் கண்கள் அவை என்னுள் ஒரு அதிர்வை உண்டு பண்ணியது. அதை கற்பனை செய்யும் போது எவ்வளவு உன்னிப்பான வர்ணனை என்று தோன்றுகிறது.

உங்கள் நீர், நிலம், நெருப்பு ஆவணப்படத்தில் உங்கள் கதைகளில் எப்போதும் யானையும், பாம்புகளும் வருவது இயல்பானது என்று கூறியுள்ளீர்கள் இங்கும் யானையும் பாம்பையும் மிக அருமையாக சித்தரித்து இருந்தீர்கள் யானையும் பாம்பையும் சேர்த்து ஒரு வர்ணனை அந்த யானையின் துதிக்கையை, “மலைப்பாம்பு தந்தங்களின் நடுவில் இருந்தது” போல என்றது மிக நேர்த்தியாக இருந்தது.

அந்த பச்சைப்பாம்பு துரையின் கையில் சிக்கி தவிக்கும் நிலை ஊமைச்செந்நாய் தன் நிலைப்போல கொள்ள முடிகிறது. பின் இந்த கதைகளில் என்னை கவர்ந்த வாக்கியங்களை எப்படி சொல்லாம் இருப்பது “வெயில் காற்றில் ஆடுவதை காட்டில் தான் காண முடியும்”, “பொறுமை விளையாட்டில் மிருகங்களை வெல்ல எந்த மனிதனாலும் முடியாது”, ” மிருகம் சாவின் மூலம் மனிதனை வென்றுவிடுகிறது”. கடைசி வாக்கியம் மிருகத்திற்கு மட்டும் அல்லாமல் மனிதனுக்கு கூட பொருந்தும் அல்லவா. நாமக்கு துன்பம் தந்த ஒருவரை நம் சாவின் மூலம் வென்று விட முடியும் தானே?? இதை கதை முடிவில் காண முடிந்தது.

பின் அந்த துரையின் அதிகார தன்மையை மிக நன்றாக கூறியிருந்தீர்கள். அவன் தன் துப்பாக்கி மேல் கொண்ட பற்று எல்லையற்றது. தான் புணர்ந்த ஒரு பெண்ணை தன் அடிமை புணர்ந்தான் என்று தெரிந்தும் அவன் அவனை ஒரு நான்கு அடிகள் அடித்துவிட்டு செல்கிறான். ஆனால் தன் துப்பாக்கியை அவன் தொட்டான் எப்பதற்காக அவன் அவனைக் கொல்லவும் தயங்க மாட்டேன் என்கிறான். துப்பாக்கியை அவன் ஒரு பெண் போலவே பாவிக்கிறான்.

ஊமைச்செந்நாய் பெயருக்கு ஏற்றாற்போல அதிகம் பேசவே இல்லை தன் மனதிற்குள் பேச அதை துரை புரிந்துகொள்கிறான். எல்லா இடங்களிலும் அடிபணிந்தும் செல்கிறான். இறுதியில் துரையை அவன் காப்பாற்றிய பிறகு அவன் தன் நிலை இன்னது என்று புரிந்து கொள்கிறான்.

செந்நாய்களால் ஊமைச்செந்நாய் மரணத்தருவாயில் இருக்கும் இடம் ஒரு பொருள் மயக்கநிலை என்று எண்ணுகிறேன். இப்போது அவன் துரையின் உதவியை மறுத்து உயிர் துறக்கிறான்.

உங்கள் கதை முடிக்கும் மிக நேர்த்தியானது அது உங்கள் தனி “ஸ்டைல்” என்று சொல்லாம் “காடு என்னை நோக்கி பொங்கி வர ஆரம்பித்தது” மிக அருமையான வரிகள். இந்த” ஊமைச்செந்நாய் என்ற மிருகம் சாவின் மூலம் துரையை வெல்கிறான் ” இது அவன் அடையும் வெற்றி தானே? இதற்கு பின் துரை எப்படி உயிர் வாழ்வான் அவன் வாழும் போதே நரகத்தைதான் அனுபவிப்பான்.

ஒரு கதைக்கு நான் தெளிவாக எழுதும் முதல் வாசக கடிதம் இது, எனவே என்னுடைய மொழியில், மொழிநடையில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி

பா. சுகதேவ்

***

அன்புள்ள சுகதேவ்

முதல்கடிதம் என்னும் வகையில் நோக்கினால் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாசகர்கடிதம் என்பது உண்மையில் ஒரு தொடக்கம். சிந்தனைகளை எழுத்துக்களாக ஆக்கும் பயிற்சியை அதன் வழியாக மேற்கொள்ளவேண்டும்

அதற்கு சில விதிகளை வரையறைசெய்துகொள்ளுங்கள்

1 ஒரு கதை அல்லது கட்டுரையைப்பற்றி நீங்கள் சொல்வதற்கான ஒரு கருத்தைக் கண்டடையுங்கள். ஒரு தரப்பு, ஒரு மதிப்பீடு, ஒரு புரிதல். ஊமைச்செந்நாய் எதைக்குறிக்கிறது என நினைக்கிறீர்கள், அதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன என தொகுத்துக்கொள்வீர்கள் -அதுதான் தொடக்கம்

2 அந்த கருத்தை வலியுறுத்தவும் உதாரணம் காட்டவும் கதை, கட்டுரையின் அம்சங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எப்படி சான்றுகளையும் தர்க்கங்களையும் எடுத்துவைப்பார் என்று நினைக்கிறீர்களோ அப்படி

3 மொத்தமாக ஒரு கடிதம் அல்லது கட்டுரைக்கு ஒரு வடிவம் இருக்கவேண்டும். அது சொல்லவேண்டிய விஷயங்களை வரிசையாகச் சொல்லி முடிவாக ஒன்றை உரைத்து முடியவேண்டும்.

தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து உங்களை தொடரட்டும்

வாழ்த்துக்களுடன்

ஜெ

 

முந்தைய கட்டுரைசீனுவுக்கு இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைசதுரங்க ஆட்டத்தில்