இரு கடிதங்கள்

saravanan

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களை சந்திக்க வேண்டும் என்ற சந்தர்ப்பம் டெல்லிக்கு நீங்கள் சாகித்திய அகாடமி விழாவிற்கு வந்திருந்த போது கிடைத்தது. உவகை தரத்தக்க மகிழ்ச்சியான நேரங்கள், நான் விரும்பும் ஆதர்ச எழுத்தாளருடன் 2 மணி நேரம் என்பது எளிதாக கிடைக்க பெறாத ஒன்று.

இலக்கியம் அல்லாத பொது தகவல்களை சார்ந்தே இந்த சந்திப்பு அமைய வேண்டும் என்று விரும்பினேன். இலக்கியம் சார்ந்த அறிவார்ந்த உரையாடல் உங்களுடன் நிகழ்த்த குறைந்தபட்ச தயாரிப்போடு உங்களை அணுக வேண்டும் என்பதை உங்களிடமிருந்து கற்று கொண்டிருந்தேன். சராசரி மனிதர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு நாம் அறிய விரும்பும் ஒரு பொது தகவலின் மேல் 100 சதவீத உண்மை தரவுகளும், வரலாற்று பின்புலமும் அந்த விஷயத்தின் மேல் நுண்ணிய அவதானிப்புகளும் இல்லாமல் உங்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்காது என்பதே.

மனைவியின் ஊர் பெயர் சொல்ல வந்து, திருக்குறுங்குடிக்கு உள்ள வரலாற்று இடமும். அந்த ஊரின் ஒழுங்கிற்கான காரணமும், நம்பி மலையின் குதிரை பாதையும் அதன் தேவையும் பற்றி அறிய முடிந்தது.

புலிநக கொன்றை நாவலில் வரும் திருநெல்வேலியின் சுதந்திர போராட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து நீங்கள் தந்த விரிவான பார்வை, காங்கிரஸ் பேரியக்கத்தின் முதல் மாநாடு நெல்லையில் நடைபெற்றது பற்றி நீங்கள் சொன்னது. 100 ஆண்டு நிகழ்வாய் கொண்டாடப்பட வேண்டிய திருநெல்வேலி சுதந்திர செயல் திட்டத்தின் நிகழ்ச்சியை தவற விட்டதன் அறியாமையை நினைத்து வருத்தமுற்றேன். கம்யூனிஸ்ட் அரசியலின் வளர்ச்சி மீண்டும் திருநெல்வேலியில் 1940-1950 களில் உருவாக துவங்கியதையும், மொத்த தமிழ்நாட்டில் அதன் இடத்தை திராவிட காட்சிகள் நிரப்ப துவங்கியதையும். அதற்க்கு பின்னால் இருந்த பிராமண வெறுப்பு முழக்கமும், இன்று வரை அதை மட்டும் திரித்து பொய்யுரைத்து அவர்கள் நடத்தும் அரசியல் இயக்கம் பற்றியும் கூறினீர்கள். திராவிட அரசியல் ஒரு ஜனரஞ்சக திரைப்படம் போல் தன்னை வடிவமைத்து கொண்டதையும், அதனால் அறிவுத்துறையில் அக்கறை இல்லாத, பொறுப்பற்ற இரண்டு தலைமுறைகளை விலை கொடுத்துள்ள தமிழக மக்களின் அடிப்படை பொது அறிவை பற்றி சொன்னீர்கள்.

சகோதரத்துவம் பற்றி நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த உறவு நிலையின் புரிதல் பொருட்டு நீங்கள் சொன்ன சம்பவங்கள் அதன் மொத்த சித்திரத்தையும் எனக்குள் உருவாக்கி தந்தது. எல்லைக்கு உட்பட்ட, எல்லைக்கு உட்படாத உறவின் தளங்களை வாழ்வின் உதாரணங்கள் வழியாக விளக்கினீர்கள். சகோதரர்களுக்கு இடையே உள்ள கட்டுபாடுடைய பொறுப்பும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் சீசா விளையாட்டின் இரண்டு இருக்கைகள் போல் நிகழ்கிறது.  பெரும்பாலும் அண்ணன் கீழிருக்க தம்பி உயரத்திலே இருக்கிறான். அண்ணன் உருவாக்கும் தந்தையின் இடம் ஒட்டு மொத்த சமூகத்தின் பொது சிந்தனை வழியாக உருவாகி வருகிறது. உண்மை தான், ஆனால் இந்த வளர்ப்பு முறை திடமாய் முடிவெடுக்கும் ஒருவித பொறுப்பு மனநிலையுடைய ஒருவனையும். ஊசலாடும் மனம் நிறைந்த சார்ந்து ஒழுகும் தன்மையுடைய ஒருவனையும் உருவாக்கி விடுகிறது. இது தனிப்பட்ட முறையிலும், நான் ஆராய்ந்த வரையிலும் பெரும்பாலும் இந்த வேறுபாடு ஒரு பரிணாம மாற்றம் போல் எல்லா அண்ணன் தம்பிகளிடமும் இருக்கிறது.

நான் கேட்க நினைத்தது இந்த கேள்வியை தான். நீங்கள் விளக்கிய அத்தனை உதாரணங்களும் இந்த கேள்வியை தாண்டிய ஒரு புரிதலை எனக்கு தந்தது.  கடமையும் பொறுப்பும் கொண்ட ஒருவரிடத்தில் அதிகாரத்தின் குரல் சேர்ந்தே ஒலிக்கும். இது குடும்பம், சமுதாயம், நிர்வாகம் என எங்கும் அப்படிதான். இந்த புரிதல் ஒரு இலக்கிய வாசகனை அவன் நுண்ணுணர்வு வழியாக எளிதாக அடையும் என்று நீங்கள் சொல்லியது என்னை ஒரு நிமிடம் உணர வைத்தது. ஒரு இலக்கிய வாசகன் எந்த நிகழ்வையும் அசட்டு தனமாக சட்டை செய்யாமல் அதன் இயல்பின் தீவிரத்தை உணர்ந்து கொள்வான் என்ற உங்கள் வார்த்தை எனக்கு இந்த குணாதிசயத்தை மேல் உள்ள வரலாற்று பார்வையை உருவாக்கியது. இந்த கடமை என்பது நம் குடி கொண்டுள்ள அறம். அந்த இடம் அதன் இயல்பை எல்லாரிடத்திலும் இருந்து எடுத்து கொள்கிறது. அந்த புள்ளி தான் அந்த குடும்பத்தின் துவக்கம். இப்போது உணர்கிறேன் எங்கள் வீட்டில் அண்ணன் முதலில் வாங்கி குடுத்த கைபேசி என்பது அவனின் முதல் வெற்றி, அது எங்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. உங்கள் மொத்த பயணங்களையும் திருவட்டாரு வீட்டில் இருந்து பின்தொடர்ந்து கொண்டே இருக்கும் அண்ணனின் கண்கள் தான், யாவரும் கைவிட்டு தனிமையில் நிற்கும் போது நம் வருகையை நோக்கி காத்திருக்கும் கண்கள்.

என்றும் வாசிப்புடன்

சரவணன்

***

அன்புள்ள சரவணன்

சந்திப்பு மிக மகிழ்ச்சியாக இருந்தது. டெல்லியில் சற்றே தனிமையில் இருந்தேன். உங்கள் வருகை அம்மனநிலையை மாற்றியமைத்தது.

மீண்டும் சந்திப்போம்

ஜெ

***

sipi

 

வணக்கம்,

நான் சிபி சென்னையிலிருந்து, நேற்று இரவு சுமார் பதினோரு மணியளவில் என் மனைவி, ” ‘தஞ்சாவூர் சந்திப்பு’னு போட்டு ஒரு மெயில் வந்துருக்கு என்று கூறியவுடன் வேகமாக வீடடைந்து அம்மின்னஞ்சலை வாசித்தேன்; பல நாள் கணா நனவாகும் என பூரித்தேன்; வெற்றி என்பதை தன் பார்வதிபுரம் தமிழால் வெற்டி என கூறுபவரை காணபோகிறோம் என அகமகிழ்ந்து அலாரம் அலறியது கூட தெரியாமல் தூங்கினேன்.

இன்று கல்லூரி அடைந்ததும், என் சகா ரிச்சர்ட் அந்த குண்டை சுமந்து தேநீர் இடைவேளையில் வந்தார், “சார் அடுத்த சனி லீவ, இந்த சனிக்கு ப்ரிபான்ட் பண்ணீட்டாங்க சார். 15க்கு மேல எப்பவேனாலும் இன்ஸ்பெக்ஸன் இருக்கும் சார்” என்றார்.

உணவு இடைவேளையின் பொழுது திரு. கிருஷ்ணன் அவர்களை அழைத்து என்னை பற்றிய குறு அறிமுகத்துடன், “சார், 18 வர முடியாது, 19 காலை வந்துடரேன், அவர பாக்கணும்” என்றேன். அவர் பண்பாக மிரட்டும் மிலிடரி அதிகாரி போல, “அப்படியெல்லாம் முடியாது சார், அனௌன்ஸ் பண்ணுணதுலயே போட்டுருக்கே, உங்க பேர சொல்லுங்க லிஸ்டுல இருந்து தூக்கிடலாம் என்றார்.

“சார், அவர பாக்கரதுக்கு மட்டுமாவது வரனே” என்றேன் மீண்டும்.

“இன்னொரு அக்கேஷன்ல பாத்துக்குங்க, வீட்ல கூட போய் பாருங்க” என்றார், இந்த முறை நம் வீட்டு டாக்டர் மாமா போல பேசினார்.

இராணுவத்திலிருந்து வரும் அப்பாவுக்காக காத்திருக்கும் குழந்தைக்கு, இம்முறை அப்பாவுக்கு விடுப்பு கிட்டவில்லை என வரும் கடிதம் போல இருந்தது எனக்கு. அடுத்த வாசகர் சந்திப்பிர்க்கு காத்திருக்கிறேன்.

சரி தஞ்சை என்றால் தஞ்சை, ஹரிதமென்றால் ஹரிதம், சந்தித்தே தீர வேண்டும்.

சிபி

***

அன்புள்ள சிபி

சில கட்டுப்பாடுகளை ஏன் அமைக்கிறோம் என்றால் அது பிறருடைய இடத்தை நேரத்தை அபகரிக்கக்கூடாது என்பதனாலும் சந்திப்பு வீணாகிவிடக்கூடாது என்பதனாலும்தான். நானே நேரத்தையும் பணத்தையும் செலவழித்தே வருகிறேன்

மீண்டும் சந்திப்போம்

ஜெ

***

முந்தைய கட்டுரைஒற்றைக்காலடி
அடுத்த கட்டுரைநிழற்தாங்கலில் “ஜெயமோகனுடன் ஒரு நாள்’