நமது சினிமா எழுத்துக்கள் – பிஞ்சர் குறிப்பை முன்வைத்து

பிஞ்சர் பற்றி நண்பர் சேலம் பிரசாத் எழுதிய குறிப்பை ஒட்டி நான் அவருக்கு எழுதிய கடிதம். ஒரு தனிப்பதிவாக இருக்கலாமே எனத் தோன்றியது

amruta
அமிர்தா ப்ரீதம்

 

அன்புள்ள பிரசாத்

எப்படி உலகப்போரும் ஜெர்மானிய வதைமுகாம்களும் அணுகுண்டுவீச்சும் அதுவரை ஐரோப்பா எதிர்கொள்ளாத மானுடம் குறித்த வினாக்களை எழுப்பினவோ அதைப்போலவே பிரிவினையும் அதைத் தொடர்ந்த வன்முறைகளும் கற்பழிப்புகளும் இந்தியாவின் இலக்கியப்பரப்பில் முக்கியமான மானுட அறக்கேள்விகளை உருவாக்கின

சதத் ஹுசெய்ன் மன்றோ அதை ஒருவகை ஓங்கியடிக்கும் அதிரடிகளாக எழுதியவர். ஏறத்தாழ அதே தளத்தைச் சேர்ந்த எழுத்து என  பீஷ்ம சாஹ்னி [ தமஸ் ]  மனோகர் மால்கோங்கர் [ கங்கையில் ஒருவளைவு]  போன்றவர்களைச் சொல்லலாம்.  வெகுஜனத்தன்மை கொண்ட எழுத்து குஷ்வந்த்சிங் போன்றவர்கள் எழுதியது [பாகிஸ்தானுக்குச் செல்லும் ரயில்]

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  சல்மான் ரஷ்தியின் [மிட்நைட் சில்டிரன்] ரோஹிண்டன் மிஸ்திரி [ எ ஃபைன் பேலன்ஸ்]   போன்றவை பெரும்புகழ்பெற்றவை. ஆனால் மேலைநாட்டினரின் ரசனைக்காக எழுதப்பட்ட பாசாங்கான ஆக்கங்கள் அவை. விதிவிலக்கு அமிதவ் கோஷின் நிழல்கோடுகள்.

மேலும் நுட்பமாகவும் உணர்ச்சிகரமாகவும் இஸ்மத் சுக்தாய், அமிர்தா பிரீதம், ராஜேந்திரசிங் பேதி போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். பிஞ்சர் தமிழிலும் வெளிவந்துள்ளது என ஞாபகம்.

ஆனால் வங்கப்பிரிவினையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகத்தான வங்கநாவல்களுடன் ஒப்பிடும்படி தரமானவை அல்ல இவை. உதாரணம், அதீன் பந்யோபாத்யாயவின்  நீலகண்டப்பறவையைத் தேடி

இவற்றை ஒட்டி நிறைய சினிமாக்களும் வந்துள்ளன. பல வகையில் அமைந்த படங்கள் அவை. பலவற்றை நான் பார்த்ததில்லை. ஆனால் இந்த சினிமாக்களைப்பற்றி இங்கே நிறைய எழுதப்படுகின்றன. நான் குறிப்பிடவிரும்புவது இந்த சினிமா எழுத்தைத்தான்

சினிமா பார்த்து எழுதப்படும் எந்தக்கடிதத்தையும் நான் வெளியிடுவதில்லை. ஏனென்றால் அந்த சினிமா ‘நன்றாக இருக்கிறது’ என்னும் அபிப்பிராயம் மற்றும் கதைச்சுருக்கம் ஆகியவற்றுக்கு அப்பால் அவற்றில் எதுவுமே இருப்பதில்லை. தமிழில் சினிமா பற்றி எழுதும் மூத்த எழுத்தாளர்கள்கூட இதே தரத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் ஒரு முன்னுதாரணத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.

imat
இஸ்மத் சுக்தாய்

 

சினிமா விமர்சனம் என்பது சினிமாவிமர்சகர்களால் செய்யப்படவேண்டியது. அவர்கள் அதை ஒரு தொடர்ச்செயல்பாடாக வைத்திருக்கிறார்கள். அதனூடாக ஒரு தரநிர்ணயத்தைச் செய்திருக்கிறார்கள். அந்த அளவுகோலில் ஒரு படம் என்ன இடத்தை அடைகிறது என வாசகன் கவனிக்கலாம். அந்த அளவுகோல்மேல் நம்பிக்கை இருந்தால் பார்க்கலாம்.

சினிமாவை ஒரு கலைவடிவாகக் கண்டு தொழில்நுட்ப அறிவுடன், சினிமாவரலாற்றறிவுடன் அணுகுவது இன்னொருவகை விமர்சனம். அது ஆனால் இங்கே அது மிகமிகக்குறைவு என சினிமாவின் தொழில்நுட்பத்தை அறிந்தவன் என்னும் வகையில் என்னால் சொல்லமுடியும்

மூன்றாம்வகை சினிமா இதழியல். அது சினிமா சம்பந்தமான சுவாரசியமான தகவல்களைச் சொல்லும் எழுத்து. சினிமாவின் பின்னணித்தகவல்கள், வரலாற்றுத்தகவல்கள் ஆகியவற்றால் ஆன எழுத்து

Rajinder_singh_Bedi_-_
ராஜேந்திரசிங் பேதி

 

இவை மூன்றுமே  இலக்கியவாசகன், எழுத்தாளன் செய்யவேண்டியவை அல்ல. அவன்  சினிமா பற்றி எழுதும்போது சினிமாவை ஒரு பண்பாட்டுநிகழ்வாகவே கொள்ளவேண்டும். அதன் சமூகவியல்பின்னணி, பண்பாட்டுப்பின்னணி, இலக்கியப்பின்னணி ஆகியவற்றை அவன் கொஞ்சம் முனைந்து ஆராயவேண்டும். அவற்றைக்கொண்டு அந்த சினிமாவை ஒரு விரிந்த பகைப்புலத்தில் நிறுத்தி வாசகனுக்கு அவன் அதுவரை அறியாத சித்திரத்தை அளிக்கவேண்டும்

அவ்வாறு ஒரு சினிமாவை விரிவான பகைப்புலத்தில் வைத்துப்பார்க்கும் எழுத்தாளன் அவனுக்கே உரிய தனிப்பட்ட அவதானிப்புகளை சென்றடைவான். அது வேறெங்கும் இல்லாத கோணமாக இருக்கும். அந்த தனிக்கருத்தே அவன் சினிமா பற்றி எழுதுவதை நியாயப்படுத்தும்.

உங்களை நான் இலக்கியவாசகனாக எண்ணுகிறேன். நான் உங்களிடம் எதிர்பார்ப்பது வேறு. பிஞ்சர் பற்றி எழுதுவதற்கு முன்  அந்நாவலை வாசித்திருக்கலாம். அப்பின்னணியைப் பேசும் ஆவண மதிப்புள்ள நூல்களை வாசித்திருக்கலாம். எச்.வி.சேஷாத்ரியின் ’பிரிவினையின் சோகக்கதை’, டமினிக் லாப்பியர் -லாரி காலின்ஸின் ‘நள்ளிரவில் சுதந்திரம்’ போன்ற நூல்களை வாசித்திருக்கலாம்.

மேலே நான் குறிப்பிட்டவற்றில் தமிழ்ப்பெயர்கள் உள்ள ஆக்கங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டவை. அவற்றில் சிலவற்றை வாசித்திருக்கலாம். அவற்றிலிருந்து ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கிக்கொண்டு அதன் பின்னணியில் பிஞ்சரை விரிவாக அணுகியிருக்கலாம். அப்போது நீங்கள் மட்டுமே சொல்லக்கூடிய சில அவதானிப்புகள் உருவாகி வந்திருக்கும்

அவ்வாறு எழுதப்பட்டால் இக்குறிப்பு ஒரு கட்டுரையாக ஆகியிருக்கும். ஐந்தாண்டு கழித்தும் வாசிக்கத்தக்க தகுதி கொண்டிருக்கும். இன்று இது ஒரு முகநூல் குறிப்பு, ஒரு டைரிப்பதிவு என்பதற்கு அப்பால் எந்த மதிப்பும் இல்லாமலிருக்கிறது. தமிழில் சினிமா பற்றிஎ ழுதப்பட்ட பெரும்பாலான எழுத்துக்கள், அவை தொகுக்கப்பட்ட நூல்கள் பயனற்ற வெறும் குறிப்புகள். அவற்றின் குப்பைக்குவியலில் உங்கள் வரிகளும் சென்று சேர்ந்தால் எனக்கு வருத்தமே. நான் உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன்

ஜெ

 

முந்தைய கட்டுரைபிஞ்சர் ஒரு ரசனைப்பதிவு
அடுத்த கட்டுரைமுன்புலரி