யோகம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

 

நேற்று நண்பர் ஒருவருடன் பைக்கில் குன்னூர் வரை மழையில் நனைந்தவாறே சென்று நனைந்தவாறே திரும்பினேன்.  கோவையிலும் மழை.  அதனால் நேற்றே உங்களுக்கு எழுத எண்ணியிருந்த கடிதத்தை எழுத முடியவில்லை.  உங்களது “யோகம்” நகைச்சுவை நன்றாக இருந்தது.  இதை முன்பே படித்திருக்கிறேன்.  சிரிப்பாக இருந்தது ஆனால் “நாட்டிய பேர்வழி” அளவுக்கு அவ்வளவு சிரிப்பாக இல்லை.  “நாட்டிய பேர்வழி” திரைப்படங்கள் வாயிலாக நீங்கள் நேரடியாக கண்ட காட்சிகள் அடிப்படையிலானது “யோகம்” கொஞ்சம் கற்பனை கொண்டது என்பதால் இருக்கலாம்.

 

எந்த ஒரு சத்குருவும் தமாஷானவர் தான் – பக்தாஸும் அப்படித்தான்.  வெறியும் துவேஷமும் கொண்ட அவதூறுகள் சில வரும்போது மட்டுமே பக்தாஸ் பதட்டம் அடைகின்றனர் அதுவும் என் போன்ற ஒண்ணாம்-இரண்டாம் படிகளில் நிற்கும் பக்தாஸ் மட்டுமே.  பத்தாம்-பதினெட்டாம் படி நிற்கும் பக்தாஸ் சிரித்துக்கொண்டே முன் நகர்ப்பவர்கள் தான்.  நான் புயல் என்று கருத்துபவற்றை ஒன்றுமில்லை என சிரித்துக்கொண்டே படகைச் செலுத்தும் சாமர்த்தியம் உள்ளவர்கள் தான்.  இங்கு பக்தாஸ் மட்டுமே யூதாஸ் யாருமில்லை என்பது தனிச்சிறப்பு.

 

வல்லத்தில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.  எனது அசட்டுத் துணிச்சலை நம்பி எனது படைப்பு என்று கொஞ்சம் எழுதவும் போகிறேன்.  நீங்கள் அதை ஒரு பொருட்டாகக் கொண்டு எது சொன்னாலும் தற்பெருமை கொள்வேன்.

 

அன்புடன்,

விக்ரம்,

கோவை

 

 

 

அன்புள்ள ஜெ

 

யோகம் கட்டுரை வாசித்தேன். சமீபத்தில் நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதிய ஒரு கட்டுரைத்தொடரை வாசித்து உங்களைப்பற்றி ஓர் எண்ணத்தை உருவாக்கி வைத்திருந்தேன். அந்த பிம்பம் உடனடியாக உடைந்தது. நீங்கள் எவரென்றே தெரியாமல் தவிக்கிறேன். இதுதான் உண்மை

 

 

ஜெயராஜ்

 

 

அன்புள்ள ஜெ

 

யோகம் கட்டுரையும்  கூடவே வந்த யோகம் பற்றிய மோசடி பற்றிய கட்டுரையும் ஒன்றுடன் ஒன்று அபாரமான தொடர்பைக்கொண்டிருந்தன.

 

என் நண்பன் ஒருவன் யோகம் பயிலப்போய் ஆறுமாதத்திலேயே மகான் போல பேச ஆரம்பித்தான். காசிக்கெல்லாம் போய் வந்தான். நண்பர்கள் அனைவரும் விலகிச்சென்றார்கள். ஆனால் ஒருவருடத்தில் சலித்துப்போய் திரும்பி வந்தான். இப்போதுகூட நண்பர்கள் நடுவே அவனுக்கு ஞானி என்றுதான் கேலிப்பெயர்

 

மாதவன் எஸ்

 

யோகம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36
அடுத்த கட்டுரைபிஞ்சர் ஒரு ரசனைப்பதிவு