இக்கேள்விகளை நக்கல் கிண்டல்களுடன் பலர் எழுதியிருந்தனர். ஆகவே சுருக்கமாக நானே விளக்கம் சொல்லிவிடுகிறேன். எனக்கு இப்போது கொஞ்சம் நேரமிருப்பதனால். என் பயணம் ஒன்று ரத்தாகிவிட்டது
அ நீங்கள் அறிவியல் பற்றிய கட்டுரையில் சதிக்கொள்கைகளைத் தேடவேண்டியதில்லை என்கிறீர்கள். ஆனால் இந்தியாவுக்கு எதிரான பிளவுபடுத்தும் சதிகளைப்பற்றி நீங்கள்தான் பேசுகிறீர்கள்
அறிவியல் கொள்கைகள், கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றை வெறும்சதிகளாகப் பார்க்கையில் அறிவியல்விவாதங்களுக்கும் அதுசார்ந்த முடிவுகளைநோக்கி செல்வதற்கும் வாய்ப்பில்லாமலாகிறது என்பது நான் சொன்னது
ஆகவே அரசியல் உட்பட எங்கும் சதிகளே இல்லை என்றா பொருள்? அரசியல்களத்தில் இந்தியாவை துண்டாடுவதற்கான முயற்சிகள் ஒன்றும் ரகசியமானவை அல்ல. அவை அதியூகங்களும் அல்ல. மிகவெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளாகவே அவை நம்மைச்சூழ்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நான் அவற்றையே எப்போதும் சுட்டிக்காட்டுகிறேன். அவற்றால் எவருக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே கவனிக்கச் சொல்கிறேன்
ஆ. ஜக்கி தன்னை அவ்வாறு அழைக்கக்கூடாது என்று குமுறுகிறாரே உங்கள் கருத்து என்ன?
ஒருவர் தன்னை எப்படி அழைக்க வேண்டும் என சொல்ல உரிமை கொண்டவர். அவர் தனக்கெனச் சூட்டிக்கொண்ட பெயரை அழைக்கவேண்டும் என்பது முறை. அசோகமித்திரனை தியாகராஜன் என்றே அழைப்பேன் என எவரும் சொல்லமுடியாது
அந்தப்பெயர் புகழ்மொழியாக, அடைமொழியாக இருக்கிறது ஏற்கமுடியாது என்பவர்கள் அதை தெரிவித்து சரியான பெயரில் அழைக்கலாம்.
ஆனால் இதற்கெல்லாம் பொங்குகிறவர் யார்? ஈவேரா வை தந்தை பெரியார் என்று அழைக்காவிட்டால் மனம் புண்படுகிறவர்கள். சி.என்.அண்ணாத்துரை என்றோ மு.கருணாநிதி என்றோ சொல்லிவிட்டால் கொந்தளித்து எழுபவர்கள். ஒருமுறைகூட அவர்களை பெயர் சொல்லிக் குறிப்பிடத் திராணியற்றவர்கள்
நான் ஜக்கி என்றே அழைப்பேன். ஏனென்றால் நான் சி.என்.அண்னாத்துரை, மு.கருணாநிதி என்றே அவர்களைச் சொல்கிறேன். வாரம் ஒரு வசைக்கடிதம் வரப்பெறுகிறேன். நான் இ.எம்.எஸ் என்றே அவரைச் சொல்கிறேன். நித்ய சைதன்ய யதி என்றே என் ஆசிரியரைச் சொல்கிறேன். மற்ற வாலாட்டி விலங்குகள் பொத்திக்கொண்டிருப்பதே உசிதம்
மு.கருணாநிதியை அவ்வாறு அழைக்கும் துணிவுள்ள ஊடகவியலாளர் ஜக்கியை அவர் பெயர்சொல்லி ஜக்கி என்றே அழைக்கலாம். அல்லது அவர் துறவு பூணும்போது சூடிய பெயரால் அழைக்கலாம்.
இ. நீங்கள் தசாவதாரத்தை பகடி பண்ணி எழுதிய கட்டுரையை பாபநாசத்திற்கு வாய்ப்பு கிடைத்ததும் எடுத்துவிட்டதாக ஒரு பிராமண அவதூறு உங்கள் முன்னாள் நண்பரின் முகநூல் பக்கத்தில் இருந்தது. உங்கள் விளக்கம் என்ன?
அந்தக்கட்டுரை [தவசதாரம்] அங்கேயேதான் உள்ளது. சமீபத்தில் வெளிவந்த அபிப்பிராய சிந்தாமணி நூலிலும் அது உள்ளது. அது நண்பர் கமலஹாசனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல்.
தங்கள் இயல்பை பிறரிலும் காண்பது ஒரு வழக்கமான கீழ்மை.
*
இந்த விவாதங்களெல்லாம் முகநூலில் நிகழ்கின்றன என தோன்றுகிறது. பழைய காலத்தில் பல்லு போன கிழவிகள் புளியங்கொட்டையை நாள் முழுக்க ஈறில் வைத்து மென்று இன்பம் காண்பது போல ஓர் உல்லாசத் திளைப்பில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன் வாழ்க