அன்புள்ள ஜெமோ,
சமீபத்தில் படித்த ஒரு அற்புதமான சிறுகதை போல் இருக்கிறது இந்த பேட்டி. அசோகமித்திரன் பேட்டி
தொடங்குவதே அவருடைய சிறுகதை போலத்தான், முதுமையின் இயல்பால் இந்த மனுஷனுக்கு ஞாபகமறதி வேணும்னா வரலாம் ஆனா பழக்க தோஷத்துல அவருடைய படைப்பு வந்துகிட்டேதான் இருக்கும் போல..
வழக்கம்போல கிண்டலுக்கும் குறைவே இல்ல ஆனா அது கிண்டல்னு நினைக்க முன்னாடியே வேற ஒன்னு சீரியஸா சொல்லி நகர்ந்துறாரு.
(‘இதுவரை உங்களுக்குக் கிடைத்ததில் சிறந்த அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள்?’
சாந்தோம் அவார்டு.. ஒண்ணு கிடைச்சது….ஒரு திரைப்படத்துக்கும்கூட இந்த விருது கொடுத்தாங்க… ரஜினிகாந்த் நடிச்ச படம், அதுலகூட ஒரு பாட்டு வருமே, ‘சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா’னு (நினைவுபடுத்திக் கொள்கிறார்) ராஜா சின்ன ரோஜா.. ;
‘பெண் படைப்பாளிகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள்?’
‘ஆர். சூடாமணி. இப்போ கூட அவங்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்தாங்க..)
பேட்டி எடுத்த பத்த்ரிக்கையாளர் சுற்றி சுற்றி இந்த மீனை பிடிக்க முயல்கிறார். மீன் நழுவி நழுவி போகிறது.., போகட்டும்னு விடவும் முடியாம திரும்பவும்வந்து சின்னதா கடிக்கிறது. (காந்தியை பற்றி, கவிதை பற்றி, பின்நவீனத்துவம் பற்றி.) ரொம்பவும் சின்னதாதான் கடிக்கும் அதிலிருந்து அந்த மீனின் வாயையும் அந்த மீனையும் புரிந்துகொள்ள முடியாமல்.
இடையில் இப்படி வேறு போடுகிறார், “யார் வேண்டுமானாலும் எழுத்தாளராகிடலாம். ஆனா, மிகக் கூர்மையான அறிவு உடையவங்கதான் பத்திரிகை ஆசிரியராக முடியும்.”
குறுக்கும் நெடுக்குமாக ஒரு நான்லீனியர் சிறுகதை போல் செல்லுமிது, இறுதியில் அந்த எழுத்தாளன் தனது படைப்புலகின் அரியணை மேலிருந்த அதே காலத்தில், அந்த அரியணை தலைகீழாக சுழன்று பாதாளத்தை காட்டும் ஒரு காட்சியை சட்டென காட்டிவிட்டு. .அதற்க்கு மேலும் சிறுகதையின் இலக்கணமான ‘முடிவில் தொடங்கும்.’ இடத்தில் அத்தனைக்கும் காரணமான அந்த புத்தகத்தை பற்றி சொல்லி முடிக்கிறார்.
படித்து முடித்ததும், அந்த அறையும் அதிகம் பாடாத அந்த டேப்ரிக்கார்டரும், உலகத்தை பார்க்கும் அந்த ஜன்னலும், அங்கு பறந்து போய்விட்டிருந்த அந்த பறவையின் அமைதியும். .எதோ ஒரு நாவலை படித்த பாரத்தை தருகிறது.
ஆனந்தகுமார்
அன்புள்ள ஆனந்தகுமார்,
அப்பேட்டியை முன்னரே வாசித்தேன்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப்பற்றிய என் எண்ணத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்செயல்பாட்டாளர்கள் முதுமை எய்தியபின் வரும் பேட்டிகள் மற்றும் சந்திப்புப் பதிவுகளுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அவை அவர்களை சற்றே அனுதாபத்திற்குரியவர்களாக, , கனிவுக்கு தகுதியானவர்களாக காட்டுகின்றன. வாசகன் அவர்களைப் பரிவுடன் குனிந்து பார்க்கிறான்.
ஆகவே இம்மாதிரியான பேட்டி, பதிவுகளை ‘ரசிப்பது’ குறித்த நம் மனநிலையை நாம் சற்றே குரூரமாக மதிப்பிட்டுக்கொள்ளவேண்டும். என்னதான் நீ மேதை என்றாலும் வயதானால் நீ பலவீனன், என் பரிதாபத்திற்கு உரியவன் என நம் அகந்தை அவர்களிடம் சொல்கிறதா? அவர்களை நாம் கனிவுடன் ரசிப்பதற்குப்பின்னால் இருப்பது அந்த சிறுமைதானா?
உங்கள் குறிப்பிலேயே நீங்கள் ரசிக்கும் பலவிஷயங்கள் முதுமையின் தடுமாற்றங்கள். அவருக்கு அவருடைய காலகட்டத்தைச் சேர்ந்தவை மட்டுமே நினைவில் நிற்கின்றன. அவருடைய சிந்தனையின் தொடர்ச்சி அறுபட்டுள்ளது. ஆகவே கருத்துக்களை கோவையாகச் ச்சொல்லமுடியவில்லை. அதையெல்லாம் நாம் ரசித்தால் நாம் அசோகமித்திரனை உண்மையில் கௌரவிக்கிறோமா?
எதற்குச் சொல்கிறேன் என்றால் இவ்வாறு முதுமையில் அந்த மனிதர் நொய்மை கொண்டிருக்கும் அந்த நிலையில் வைத்து அவர்களின் ஆளுமையை வகுத்துக்கொள்ளும் ஒரு போக்கு நம்மிடம் உள்ளது. இதன் மிகச்சிறந்த பலி என்றால் நகுலன்தான்
நானறிந்த நகுலன் கூர்மையான அங்கதமும், சினமும், அறிவார்ந்த தேடலும் கொண்டவர். நாஞ்சில்நாடனின் என்பிலதனை வெயில்காயும் நாவலின் கைப்பிரதி அவரிடம் சென்றபோது வாசித்துக்கொண்டே வந்தவா ஓர் இடத்தில் நிறுத்தி எஞ்சிய பகுதிகளைக் கிழித்து அப்பால் வீசி நாஞ்சிலிடம் ‘நாவல் முடிந்துவிட்டது” என்றார். அவ்வளவுடன் நாஞ்சிலும் நிறுத்திவிட்டு நாவலை பதிப்பித்தார். அதை நாஞ்சில் எழுதியிருக்கிறார்
நகுலன் அந்நாவலில் மேலும் என்ன எழுதப்பட்டிருந்தது என்று வாசிக்கக்கூட இல்லை. இன்னொருவரின் நாவல் என்று எண்ணவும் இல்லை. அது கூருணர்வும் தன்னம்பிக்கையும் கலந்த ஒரு தெனாவெட்டு. அதுதான் நகுலன்.
ஆனால் அவர் முதுமையில் அல்ஷைமர் நோயால் அவதிப்பட்டபோது அதையே அவரது ஆளுமையாகச் சித்தரித்து மிஸ்டிக் கிழவராக, உளறிக்கொட்டும் முதியவராக, கேலிப்பொருளாக ஆக்கிவிட்டனர். இன்று அவரை முன்பின் தொடர்பின்றிப்பேசும் முதிய எழுத்தாளராகவே வாசக உலகம் நினைவில்கொண்டிருக்கிறது.
முதல் இந்திய இடதுசாரிக்கிளர்ச்சியின்போது கட்சியை வழிநடத்திய பெருந்தலைவர் ஜோஷியை டெல்லி கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலத்தில் மறதிகொண்ட ,தன்னிலையழிந்த, பிறர் உதவியால் வாழும் முதியவராகக் கண்ட அனுபவத்தை ஓ.வி.விஜயன் ஒரு கட்டுரையில் பதிவுசெய்கிறார். அவரை ஒரு குழந்தைபோல நடத்தும் இளையதோழர்களின் அகங்காரம் எங்கே நிறைவடைகிறது என அவர் கேட்கிறார். இளவயதில் வாசித்த அந்தக்கட்டுரை என்னுள் இந்த எண்ணத்தை உருவாக்கியமையால் நான் மூத்தபடைப்பாளிகளின் முதுமையை கொண்டாட முற்பட்டதேயில்லை.
என்வரையில் எழுத்தாளன் அவன் வாசகர்களால் கனிந்தும் குனிந்தும் நோக்கப்படும் நிலையில் இருக்கலாகாது. அவன் ‘ஒரு திண்ணைத் தாத்தா’ அல்ல. ஓர் எழுத்தாளனை ‘நம்ம சொந்தத் தாத்தாமாதிரி ஃபீல் பண்ணினேன்’ என ஒரு வாசகன் சொல்வான் என்றால் அவன் உடைவாளை அரிவாள்மணையாக எண்ணுகிறான். அது மிகப்பெரிய அவமதிப்பு.
எழுத்தாளனின் நிமிர்வை தமிழ்ச்சமூகம் ஏற்பதில்லை. அரசியல்வாதிக்கும் நடிகருக்குமே அந்த உரிமையை தமிழ்ச்சமூகம் அளிக்கிறது. ஆனால் அதே எழுந்தாளன் வறுமையில், நோயில், முதுமையில் நலிந்து தணிந்தால் அது கனிவு கொள்கிறது. அரவணைக்கிறது. மெல்லிய புன்னகையுடன் பாராட்டி மகிழ்ந்துகொள்கிறது.
எழுத்தாளன் வாசகன் மனதில் அவன் எழுதியவற்றின் குறியீட்டுவடிவாகவே நீடிக்கவேண்டும். அவன் எழுத்துக்களை வாசிக்கையில் நம்முள் ஒரு முகம் எழுகிறதே அதுதான் அவன். அவ்வண்ணமே அவன் இருக்கையிலேயே அர்த்தம் கொள்கிறான்.
சிம்மம்போல் இருந்த ஜெயகாந்தன் இறுதிச்சிலநாட்களில் நோயுற்று மறதிகொண்டு நலிந்திருந்தபோது நான் சென்று நோக்கவே இல்லை. இப்போது ஆற்றூர் ரவிவர்மாவும் கோவை ஞானியும் அப்படி இருக்கிறார்கள்.அவர்கள் எப்படி அவர்களின் எழுத்தில் வெளிவந்தார்களோ அந்தத் தோற்றமே அவர்களுக்கு இருக்கட்டும் என எண்ணினேன். அதைப்பதிவும் செய்தேன்.
அசோகமித்திரன் நுண்ணிய கிண்டலும், யதார்த்தமான உலகப்பார்வையும், பரந்துபட்ட வாசிப்பும், கூரிய அபிப்பிராயங்களும் கொண்டவர். ஏ.எல்.பாஷாமின் வொண்டர் தேட் வாஸ் இண்டியா நூலை தொட்டு சிரிப்பே இல்லா முகத்துடன் ‘நல்ல கிரியேட்டிவிட்டி உள்ளவர். ஆனா பாருங்க ஹிஸ்டரியிலே பர்சனல் கிரியேட்டிக்கு எடமே இல்லை’ எனச் சொல்லும் அசோகமித்திரனின் நக்கலும் கூர்மையுமே அவர்
அவ்வாறே அவர் இருப்பதையே விரும்புகிறேன். இந்தப்பேட்டியில் அவை இல்லை. இந்தப்பேட்டி ஏன் ‘சிறுகதை’ போல தோற்றமளிக்கிறது? ஏனென்றால் இது ஓர் எளிய அசோகமித்திரனின் ஆளுமையைக் கட்டமைக்கிறது என்பதனால்தான். அது எளியவர்களாகிய வாசகர்கள் எந்த வியப்பும் இல்லாமல் பார்க்க ஏற்ற ஓர் ஆளுமை. எனவே அது அவர்களுக்கு பிடிக்கிறது. கூடவே முதுமைச்சித்தரிப்பு அளிக்கும் melancholy. அதைத்தான் கவித்துவம் என நாம் எண்ணிக்கொள்கிறோம்
அத்துடன் இந்தப்பேட்டியில்’நான் சாதாரணன்’ என அசோகமித்திரனின் சுயவிளக்கம் உள்ளது. நாம் உடனே பாய்ந்துபோய் ‘ஆமாமா, நீங்க ரொம்ப சாதாரணர்’ என்று சொல்லி அவரை கொண்டாடுகிறோம். ‘எவ்ளவு சாதாரணமா உண்மையா பேசுறார் பாருங்க. பாவாலாவே இல்லை. நான் ஒரு சாதாரணம்னு அப்டியே சொல்லிடறார்”. எழுத்தைப்பற்றி, கருத்தியக்கத்தைப்பற்றி அவர் முதுமைக்குரிய விலக்கத்துடன் கருத்துச் சொல்கிறார். சராசரித்தமிழ் மனம் விரும்பும் சொல்லாட்சிகள் அவை.
‘எழுத்தாளன் ஒன்றும் அபூர்வப்பிறவி இல்லை’ ‘ எழுத்து ஒன்றும் பெரிய விஷயம் இல்லை’ போன்ற வரிகள் அடிக்கடி தமிழில் சொல்லப்படுவன. அதைச் சொல்லிக் கேட்பது இயல்பிலேயே அறிவார்ந்த தாழ்வுணர்ச்சிகொண்டவர்களும், அறிவை அஞ்சுபவர்களுமாகிய தமிழர்களுக்கு மிகமிகப்பிடிக்கும். குறிப்பாக இங்குள்ள பேராசிரியர்களுக்கு. அதை அறிந்தே அதைச்சொல்லும் எழுத்தாளர்களே இங்கு மிகுதி. ஆனால் அவன் உள்ளூர அறிவான் அவன் சாதாரணன் அல்ல, அவன் எளிய மனிதனும் அல்ல என்று. அதை அறிந்தமையால்தான் அவன் எழுதுகிறான்.
ஞானத்தின் நிமிர்வுடன், நம் எண்ணங்களின் இறுக்கங்கங்களை சிதறடிக்கும்படி இப்பேட்டி இருந்திருந்தால் – இன்று தேவதேவனோ தேவதச்சனோ விக்ரமாதித்யனோ அத்தகைய ஒரு பேட்டியையே அளிப்பார்கள் – அப்பேட்டி பெரும்பாலானவர்களுக்கு ஒவ்வாமையையே அளிக்கும்
நாம் ஏன் ஒரு மாறுதலுக்காக கொஞ்சநாளைக்கு எழுத்தாளனையும் கவிஞனையும் நம்மைவிட சற்றுமேம்பட்டவன் என எண்ணக்கூடாது?
ஜெ