«

»


Print this Post

அலைவரிசை ஊழல்-கடிதங்கள்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் தங்கள் இணையதளத்தை தொடர்ந்து படித்து வருபவன்.

சமீபத்தில் அலைவரிசை ஊழல் சம்பந்தமாக தங்கள் நீண்ட விளக்கத்தை படிக்க நேர்ந்தது.

மிக அருமையான தெளிவான நிதாமான பதிலை அந்த வாசகருக்கு அளித்துள்ளீர்கள்.

தங்கள் தெளிவு, கருத்துக்களை முன்வைக்கும் பாங்கு, இவைகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கட்டுரை எனக்கு மிகத் தெளிவான பார்வையும், உண்மையில் அரசாங்கம் இயங்கும் முறையையும் தெளிவாக்கியது.

தொடர்ந்து எழுதவும் (இடையில் நீங்கள் எழுதுவதை ஒரு கட்டத்தில் நிறுத்த வேண்டி வரும் என்று சொல்லியிருந்தீர்கள், அதற்கு பல வாசகர்கள் வருத்தம் தெரிவித்து எழுதிருந்ததையும் படித்தேன், அதில் என்னையும் சேர்த்துக் கொள்ளவும்)

இப்படிக்கு
இரா. கண்ணன்

அன்புள்ள கண்ணன்

நன்றி. ஒட்டுமொத்தமாக விஷயங்களைப் பார்க்கையில் ஒரு வகையான சமநிலை உருவாகும். அது தெளிவுகளையும் கொஞ்சம் சோர்வையும் உருவாக்கும். ஆனாலும் அது நல்லதே.

ஜெ

====================================

டியர் ஜெயமோகன் sir,
ஆகவே வெளிவந்த ஒரு ஊழலை வைத்து அதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைவதற்கு ஏதுமில்லை’.
இவை எதிர்பார்க்காத வார்த்தைகள். இதைத் தாண்டி இன்று BSNL இன் நிலைமை உங்களை வருத்ததிற்குள் ஆக்கவில்லையா?

பல வேர்கள் பரவி அழுத்தமாக ஊன்றியுள்ள ஓர் ஆலமரம் கண்முன்னே சரிந்து விடுமோ என அதிர்கிறதே அந்த அதிர்ச்சி அலை பரவவில்லையா?
ஒரு கோட்டின் அருகே அதை விடப் பெரிய கோடு போடுவதால் அதைச்சின்னதாக்கி விட முடியாது. ஆனால் நமது நாட்டின் சாபக் கேடு இது தான். எதையும் மறைய வைக்க அதை விடப் பெரிய
விஷயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டால் போதும்.
வருத்தத்துடன்
rufina

அன்புள்ள ராஜ்

நான் ஊழலைச்  ‘சாதாரணமாக’ எடுத்துக்கொண்டு பேசவில்லை. அதை விரிவான வரலாற்றுப்புலத்தில் வைத்துப் பார்க்கிறேன். வெளிப்பட்ட இந்த ஒரு ஊழலுக்கு எதிர்வினையாற்றுவதை விட வெளிப்படாமல் எங்கும் எப்போதும் நிகழும் ஊழலை என்ன செய்யலாம் என்று பார்க்கிறேன்.  என்னுடைய வழிமுறை என்பது இந்த நிதிப்பங்கீட்டில் பெரும்பகுதியை தான் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு, அதிகாரச் சக்திகளை அதற்காக எதிர்த்து பேரம்பேசி நிற்கும் அளவுக்கு, குடிமைச்சமூகம் [சிவில் சொசைட்டி] ஒற்றுமை பெறுவதே. அதற்கு இந்த ஊழல் வெளிபடுத்தல்கள் உதவும் என்பதே என் எண்ணம்

ஜெ

=========================
உங்களின் அலைவரிசை ஊழல் பற்றிய கட்டுரை படித்தேன்.

கடந்த இரண்டு நாட்களாக எல் ஐ சி ஹவுசிங்க், பேங்க் ஆப் இந்தியா, செண்ட்ரல் பேங்க் ஆகிய நிறுவனங்களில் நடைப்பெற்றுள்ள ஊழல்களை பற்றிய செய்திகளை விமர்சகர்கள் மிக பெரிய ஊழலாக கருதவில்லை என்பதும் அது தனிப்பட்ட சிலர் லஞ்சம் வாங்கியது பற்றியது எனவும், இது பொதுவாக சகஜமான ஒன்று தான் எனவும் கூறியிருக்கின்றனர். உங்கள் கட்டுரையும் இதனுடன் ஒத்து போகிறது.

மஞ்சூர் ராசா

அன்புள்ள மஞ்சூர் ராசா அவர்களுக்கு

பெயருடனேயே பச்சைமலைவரிசைகள் நினைவுக்கு வருகின்றன. மஞ்சூர் வழியாக சமீபத்தில் மீண்டும் சென்றுவந்தேன்.

அலைவரிசை ஊழல்களை மக்கள் ஏன் பெரிதாக நினைக்கவில்லை? காரணம் இன்னமும் ஜனநாயகத்தின் அடிப்படைப்புரிதல் அவர்களுக்கு ஏற்படவில்லை. அந்த பணம் தங்களுடையது என அவர்கள் நினைக்கவில்லை.

அந்தப் புரிதல் படித்தவர்களிடமே கூட இல்லை. அவர்கள் அப்படி நினைக்க அவர்களின் சொந்த நேர்மையின்மைதான் காரணம்.

ஊழல்களைப்பற்றிய பிரச்சாரம் அந்தப்பணம் வரிவசூலாகத் தங்களிடமிருந்து கொண்டுசெல்லப்படுவதென அவர்கள் புரிந்துகொள்ளச்செய்வதாக இருந்தால் ஜனநாயகத்துக்கு நல்லது

ஜெ

===============================

அலைவரிசை ஊழல் குறித்த தங்கள் பதிவு அரசியல், அதிகாரம், ஊழல், ஜனநாயகம் போன்ற சொற்களையே புதிய கோணத்தில் உணரச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஜனநாயக அமைப்பு குறித்து ஏற்படும் மனச்சோர்வையே போக்கிவிட்டது என்றால் மிகை இல்லை. நன்றி

ஸ்ரீனிவாசன் (கேள்வி கேட்ட ஸ்ரீனிவாசன் அல்ல)

அன்புள்ள ஸ்ரீனிவாசன்

நம் கண்முன் உள்ளது, நாம் அறிந்தது ஜனநாயகம் மட்டுமே. அதற்கு முந்தைய பல அட்சிமுறைகள் உருவாக்கிய அழிவை தாண்டி மானுட குலம் அடைந்ததே ஜனநாயகம்.  ஜனநாயகத்தில் உள்ள எல்லாக் குறைபாடுகளும் மக்களின் குறைகளே– ஆள்வோரின் குறைகள் அல்ல. எல்லாக் குறைகளையும் களைய மக்களுக்கு வாய்ப்புள்ளது. அதை அவர்கள் செய்யாமல் இருந்தால் அது ஜனநாயகம் என்ற கருத்தின் குறை அல்ல

அதன் குறைகளை நாம் அதைவிட மேலான ஒன்றைக்கொண்டு நிரப்ப எண்ணலாம். ஆனால் பலர் அதைப் பின்னால் கொண்டுசெல்லவே நினைக்கிறார்கள். அது வரலாற்று அறியாமை

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/9604/

1 ping

  1. ஊழல், முதலாளித்துவம்

    […] அலைவரிசை ஊழல்-கடிதங்கள் | jeyamohan.in […]

Comments have been disabled.