சங்க(ச்) சித்திரங்களில் உங்கள் சுயபுராணமே அதிகம், உண்மைப் பொருள் கடைசியில் கொஞ்சமே கொஞ்சம் என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
சங்கப்பாடல்களின் ‘பொருள்’ என்ன என்ற கேள்வியுடன் பதவுரை பொழிப்புரை படிக்கவேண்டுமென்றால் தமிழில் முன்னோடி அறிஞர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான பெரும் நூல்கள் உள்ளன. ஆய்வு என்றால் அனந்தராம அய்யர், அவ்வை துரைசாமிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் நூல்கள் உச்சங்களைத் தொட்டுள்ளன. இத்துறையில் தமிழில் நிகழ்ந்துள்ள அறிவார்ந்த செயல்பாடு தமிழ்வாசகன் பெருமை கொள்ளத்தக்கது.
ஆனால் இவ்வாய்வுகள் சங்கப்பாடல்களை வெறும் ஆய்படுபொருட்களாக மட்டுமே கண்டன. பாடல்களுக்கு ‘சரியான பொருள்’ ஒன்று உண்டு என்றும் அதை அறிந்துகொள்ளலே வாசிப்பு என்றும் இவை நம்பின. அது ஆய்வின் இயல்புதான். ஆனால் இதன்மூலம் சங்கப்பாடல்களை வெறும் தொல்பொருட்களாக எண்ணும் போக்கு உருவாகியது. கவிதைச்சுவைக்காக அவற்றை வாசிப்பவர் அருகினர். மேலும் சங்கப்பாடல்களின் கவிதைநுட்பம், மறைபிரதி [sub text] இவ்வாய்வுகளால் தவறவிடப்பட்டது. கவிதை சொல்வதென்ன என்று பார்த்தார்கள், சொல்லாதவற்றால் ஆனதே கவிதை என்பதை மறந்தார்கள்.
‘சங்கசித்திரங்கள்’ சங்கப்பாடல்களை கவிதைகளாக அணுக முயன்றது. கவிதை காலம் கடந்தது. இன்றைய நவீன கவிதையை எப்படி வாசிக்கிறோமோ அப்படியே சங்கக் கவிதையையும் வாசிக்கலாம் என்றும் அப்போதும் சங்கக் கவிதையின் வலிமை சற்றும் குறையாது என்றும் அது காட்டியது.
நவீன கவிதைகளை வாசிக்கும்போது சில அடிப்படைகள் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை
1] கவிதை என்பது அதன் சொற்கள் மற்றும் சொல்லிடைவெளிகளில் உள்ள மௌனம் ஆகியவையே. மற்றபடி அதன் மீது காலத்தால் ஏற்றப்பட்ட அடையாளங்கள், விளக்கங்கள், அடிக்குறிப்புகள் ஆகியவை அதன் பகுதிகளல்ல. இதை பிரதித்தன்மை [Textuality] என்கிறது நவீன திறனாய்வு.
2] சாத்தியமான குறைந்தபட்சப் பொருள் என்ன என்று பார்ப்பதல்ல கவிதை வாசிப்பு. சொற்களில் இருந்து கற்பனை மூலம் விரிந்து செல்வதே. அதிகமான பொருள்களை அளித்தபடி தொடர்ந்து விரியும் படைப்பே சிறந்த ஆக்கம். இதை பன்முகவாசிப்புத்தளம் [Multiplicity of reading] என்கிறது நவீன திறனாய்வு.
3] கவிதையைத் தன் சொந்த வாழ்வனுபவங்களைக் கொண்டே வாசகன் அணுகவேண்டும். அவன் அந்தரங்கத்தில் உள்ள அனுபவ மண்டலத்தில் அது அளிக்கும் பொருளே முக்கியமானது.
அவ்வகையில் நவீன புதுக்கவிதைகளைப் போல சங்கப்பாடல்களை அணுகிய வாசிப்பு சங்கசித்திரங்களில் இருந்தது. உரையாசிரியர்கூற்றுகள் மட்டுமல்ல திணை துறை ஆகியவைகூட பாடலின் பகுதிகளல்ல என்று நிராகரித்திருந்தேன். உரையாசிரியர் கூற்றுகள் பிற்காலச்சோழர்காலத்தைச் சார்ந்தவை. கலித்தொகை போன்ற பிற்கால நூல்கள் தவிர பிறவற்றுக்கு திணை துறை அடையாளங்களும் அப்போது போடப்பட்டவையே. அதாவது சங்கப் பாடல்கள் உருவாகிப் பத்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு! குறுந்தொகைக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பின்னத்தூர் நாராயணசாமி முதலியார் திணை துறை வகுத்தளித்தார் என்கிறார் ஆய்வாளர் வேதசகாயமுமார். சங்கப்பாடல்களில் கணிசமானவை கறாராகத் திணைக்குள் பொருந்தி நிற்பவையும் அல்ல. ஆகவே இவற்றை ஒட்டியே வாசிப்பு அமையவேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஏன், முதல் தொகையாசிரியர்கூட கவிதைக்கு ஆசிரியர் அல்ல. அவரது குறிப்பும் தொகைமுறையும்கூட கவிதையின் பகுதி அல்ல.
இதுசார்ந்த விவாதங்கள் வேறு இதழ்களில் நிகழ்ந்தபோது மூத்த தமிழறிஞர்களுக்கு எப்படி ஒரேபாடல் வெவ்வேறு உரையாசிரியர்களால் முற்றிலும் வெவ்வேறுமுறையில் பொருள்கொள்ளப்பட்டது என்பதை எடுத்துக் காட்டியுள்ளேன். எல்லா கவிதைகளையும்போலவே நுண்வாசிப்புக்கான இடைவெளிகள் விடப்பட்டு எழுதப்பட்டவை சங்கக்கவிதைகள். சோழர்காலத்தில் அவை வாசிக்கப்பட்டபோது அன்றைய பேரரசு சார்ந்த, பெருமதம் சார்ந்த அறநெறிகள் வாசிப்பில் செல்வாக்கு செலுத்தின. அதேபோல அவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாசிக்கப்பட்டபோதும் தமிழ்பெருமிதமீட்பு சார்ந்த நோக்கம் வாசிப்பை தீர்மானித்தது. வேறுவகையான நவீன வாசிப்புகள் சாத்தியம் என்பதை இன்றைய சூழலில் காட்டுவதே சங்கசித்திரங்களின் நோக்கமாக இருந்தது.
அவ்வாறு வாசிக்கும்போது கவிதையின் சொற்கள் மூலம் உருவாகும் மௌனங்களை கற்பனை மூலம் நிரப்பவும், கவிதையின் குறியீடுகளையும் படிமங்களையும் கற்பனைமூலம் விரித்தெடுக்கவும் வாசகன் முயலவேண்டும். உதாரணமாக ‘உன் தலைவனின் மலையை நீ நன்றாகப்பார்க்கும் பொருட்டு ஊஞ்சலில் உன்னை அமரச்செய்து வேகமாக ஆட்டிவிடுகிறேன்’ என்ற தோழிக்கூற்றை வாசிக்கும்போது காதலின் தீராத அலைக்கழிப்பை, மனம் ஆடி உச்சம் கொள்ளும் எழுச்சியை அது உணர்த்துகிறது என்று வாசிப்பதே கவிதைவாசகனின் இயல்பாக இருக்க இயலும். மலையைப் பார்க்க வேறு வழிகளா இல்லை?
இவ்வாறான வாசிப்பு ஒரு வாசகனால் அந்தரங்கமாக நடத்திக் கொள்ளப்படுவது. பிறிதொரு வாசகனுக்கு பிறிதொரு வாசிப்பு நிகழலாம். இப்படித்தான் கவிதை வாசிக்கப்படுகிறதென கவிதையனுபவம் உடையவர்கள் அறிவார்கள். சங்கசித்திரங்கள் ‘சரியான’ வாசிப்பை நிகழ்த்த முயலவில்லை. அப்படி ஒரு வாசிப்பு கவிதைக்கு இல்லை. வாசிப்பின் சாத்தியம் ஒன்றைக் காட்டி அதைப்போல பல சாத்தியங்கள் அதற்கு உண்டு என்று உணர்த்துகிறது. மகத்தான கவிதை முடிவின்றி வாசிக்கப்படும்
இப்படி அந்தரங்கமான வாசிப்பை நிகழ்த்த உதவுவது எது? வாசகனின் சொந்த அனுபவ மண்டலம். சங்கசித்திரங்கள் என் சுய அனுபவ மண்டலத்திலிருந்து தொடங்குகிறது. அதைப்போல வாசகன் தன் அனுபவ மண்டலத்திலிருந்து தொடங்கலாம். அப்படி நம் அந்தரங்க மனதை கவிதை நோக்கித் திருப்பிக் கொண்டால் நல்ல கவிதை நம்முள் மிகஆழமான ஒரு பகுதியை நுட்பமாகத் தீண்டி அதிர்வை உருவாக்குவதை உணரலாம். சட்டென்று ஒரு கணத்தில் நிகழும் இத்தீண்டலில் நம் மனம் விரிந்து பலவிதமான கற்பனைகளை எண்ணங்களை உணர்வுகளை அடைவதற்குப் பெயரே கவிதையனுபவம். அது நம் சொந்த வாழ்வனுபவம் குறித்த புரிதலை முற்றாக மாற்றித் தொகுத்துவிட்டிருப்பதைக் காணலாம். அன்றி, ஆராய்ந்து பிய்த்து அடுக்குவது அல்ல கவிதை வாசிப்பு.
கவிதையில் எப்போதும் மிக மௌனமான ஒரு உயிர்முனை உள்ளே இருக்கும். விதைக்குள் நுண்வடிவில் இருக்கும் ஆலமரம் போல. அதுதான் கவிதையின் மையம். சங்கசித்திரங்களில் நான் அதை வாசகனுக்குச் சுட்ட முனைகிறேன். அதைச் சொல்லி விளக்கி விட முடியாது. சொன்னபிறகு அதற்கு மதிப்பில்லை. உணரும்போதுதான் கவிதை நிகழமுடியும். நான் சொந்த அனுபவங்களைச் சொல்லும் நோக்கம் வாசகனை அக்கவிதையின் மௌனமுனை நோக்கித் தள்ளுவதே என்பதை அக்கட்டுரைகளைப் படிப்பவர்களில் ஒருசாரார் உணர முடியும். கணிசமானோர் அப்படி உணர்ந்தமையினால்தான் அப்பகுதி அத்தனை பிரபலமடைந்தது. மது.ச.விமலானந்தம் முதல் ஆ.இரா.வேங்கடாசலபதி வரை மூன்று தலைமுறையினரான பற்பல தமிழறிஞர்களால் வாழ்த்தப்பட்டது. இன்று அதேபோன்று சங்கப்பாடல்களை அணுகும் பல கட்டுரைத்தொடர்களை பல இதழ்களில் காண்கிறேன். பிறிதொரு சாராருக்கு அதை உணர முடியாமல் போகலாம். அவர்கள் மேற்கொண்டு சங்கசித்திரங்களைப் படிக்கவேண்டியதில்லை. அவர்களுக்காக அது எழுதப்படவில்லை.