மீண்டும் அறிவியலுக்கு…

Ivan Illich / Foto Duesseldorf 1977
இவான் இல்யிச்

 

அன்புள்ள ஜெ

இன்று அஜிக்கு ரூபெல்லா தடுப்பூசி கொடுத்தோம்,அருகில் உள்ள அரசு மருத்துவமனையில்…

ஏதேனும் அவசர உதவி தேவை என்றால், அழைக்க செவிலியர்களின் செல்பேசி எண்ணும் எழுதப்பட்டு, அட்டையும் கொடுக்கப்படுகிறது.

எங்கள் குடும்ப மருத்துவர், அஜிக்கு இந்த ஊசியை முன்னமே கொடுத்திருந்தார்.. 4000 ரூபாய் கட்டணத்தில்… அவரிடம் கேட்டு, இன்னொரு முறை கொடுப்பதில், பிழை இல்லை என்று தெரிந்து கொண்டோம் முதலில்…

ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் பயனாளர்களுக்கு, இந்த தடுப்பு மருந்தை இலவசமாக கொடுக்க, அரசு திட்டமிட்டுளது. இறுதி நாள் நெருங்கியும், இதுவரை எழுபத்தி ஐந்து இலட்சம் பேர் மட்டுமே மருந்து எடுத்து கொண்டுள்ளனர்.. அரசு இன்னும் பதினைந்து நாட்களுக்கு, இந்த திட்டத்தை நீட்டியுள்ளது…

ஏன் / எங்கிருந்து இவ்வளவு எதிர்ப்பு குரல் வருகிறது? வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே போடப்படும் இந்த தடுப்பு ஊசியை, அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக வழங்கினால், இந்த ஊசியை தயாரித்து விற்கும் / பயனாளர்களுக்கு வழங்கும் கார்ப்பரேட்டுகள் மற்றும் மருத்துவர்களின் மொத்த வியாபார இழப்பு (4000 x 17500000) 7000 கோடி ரூபாய்…

தங்கள் வியாபார நலனை முன்னிட்டே, இத்தகைய பொய் பிரச்சாரம் கார்ப்பரேட்டுகளினால் விதைக்கப்படுகிறது.

குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக வாட்சாப்பில் வரும் தகவல்கள் உண்மையாக இருந்தால், குழந்தைகளின் பெயர் / பள்ளியின் பெயர் /தாய் தந்தையர் விவரம் என எதுவும் ஏன் இல்லை? தொலைகாட்சிகளிலோ /பத்திரிக்கைகளிலோ ஏன் குழந்தைகள் பாதிக்கப்பட்ட தகவல் வரவில்லை…

தமிழக அரசாங்கம், அதன் மக்களுக்கு செய்யும் மிக மிக குறைந்தபட்ச மருத்துவ நலத்திட்டம் இது. இதையும் வீணடிக்காமல், உபயோகித்து பயன் பெறுவது நம் உரிமை…

பிரசாத்

சேலம்

***

அன்புள்ள பிரசாத்,

20 ஆண்டுகளுக்கு முன்னர் இவான் இலியிச் எழுதிய Medical Nemesisஎன்ற நூலுக்கு ஒரு விரிவான அறிமுகத்தை நான் எழுதினேன். அந்த நூல் காந்திய இயக்கம் ஒன்றால் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. அப்போது சுந்தர ராமசாமிக்கும் எனக்கும் ஒர் உரையாடல் நிகழ்ந்ததை நினைவுகூர்கிறேன்

ராமசாமி சொன்னது இது

தமிழ்ச் சமூகம் அடிப்படை அறிவியலையே அறியாதது. அறிவியல் மனநிலை என்பது இங்கே அறிவியல் கல்வி கற்றவர்களிடம் கூட இல்லை. நாம் வாழ்வது மதம் உருவாக்கிய அடிப்படை மனநிலைகளில். மதத்தின் அகவயமான, நம்பிக்கை சார்ந்த அணுகுமுறைக்கு மாற்றாக அறிவியலின் புறவயமான, தர்க்கம் சார்ந்த அணுகுமுறை இங்கே இன்னும் அறிமுகமாகவே இல்லை.

மதத்தை எதிர்க்கும் ஈவெரா கூட இன்னொரு மதத்தையே உருவாக்கினார். அவரை தந்தைப் பெரியார் என எப்போது பெயர் சொல்லாமல் அடையாளப்படுத்த ஆரம்பித்தார்களோ, எப்போது சிலைக்கு மாலை போட ஆரம்பித்தார்களோ அப்போதே அதுவும் இங்கிருக்கும் பலவகையான மதங்களில் ஒன்றாக மாற ஆரம்பித்துவிட்டது.

இவான் இலியிச் மேலைச் சமூகத்திற்காகப் பேசியவர். அங்கே அறிவியல் பொது உண்மையாக நிறுவப்பட்டுவிட்டது. அதன் அடுத்தகட்டமாக அறிவியல் செயல்படும் முறையில் உள்ள சில குறைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதை கடந்து செல்லவேண்டுமென சிலவற்றைச் சொல்கிறார். அதையும் அறிவியலின் மொழியிலேயே சொல்கிறார்.

ஆனால் இங்கே இந்த அணுகுமுறைகள் எல்லாமே அறிவியலுக்கு எதிரான, மேலும் பின்னகரும் போக்குகளாகவே புரிந்து கொள்ளப்படும். நாம் அலோபதியையே மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய நிலை இங்குள்ளது. இன்னமும் நாட்டுமருத்துவம் போலிமருத்துவம் இங்கே ஓங்கியிருக்கிறது. இவான் இலியிச்சை கொண்டு வந்து வேப்பிலை அடிக்க வைத்துவிடுவார்கள்

அன்று சுரா சொன்னதை எதிர்த்து நான் வாதாடினேன். அலோபதி மேல் எனக்கு இன்றும் கடுமையான விமர்சனங்கள் உண்டு. மாற்றுமருத்துவம் மேல் ஏற்பும் உண்டு. அதேபோல சூழியல், இயற்கை வேளாண்மை, இயற்கை சிகிழ்ச்சை ஆகியவற்றில் எல்லாம் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. இவற்றைச் சார்ந்த ஆரம்ப கட்ட நூல்கள் சிலவற்றை நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். பல துண்டு பிரசுரங்களை மொழியாக்கம் செய்திருக்கிறேன்

ஆனால் இன்று சுந்தர ராமசாமி சொன்னது சரியோ என எண்ணிக் கொண்டிருக்கிறேன். இங்கே இயற்கை வேளாண்மை, மாற்று மருத்துவம், சூழியல் பாதுகாப்பு குறித்த அனைத்துப் பேச்சுக்களுமே வெறும் மூடநம்பிக்கைகளாகவும் வெற்று வெறுப்புரைகளாகவும் மாறிவிட்டிருக்கின்றன. இதைச்சார்ந்து பேசுபவர்களிடம் உள்ள நம்பிக்கை சார்ந்த மனநிலை, அறிவியல் மறுப்பு என்னை கசப்படையச்செய்கிறது. சமீபத்தில் ஜல்லிக்கட்டு நாட்டுமாடு சார்ந்தெல்லாம் பேசப்பட்டவற்றைக் கேட்டபோது தமிழகம் வெற்றிகரமாக பதினெட்டாம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது என தோன்றியது.

உண்மையில் நான் இருபதாண்டுக் காலமாக நம்பி செயல்பட்ட அனைத்து விஷயங்களையும் இப்போது மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறேன். நவீன வேளாண்மை நம் பசியைப் போக்கியது, ஆனால் அதில் தவறுகள் உள்ளன, அது நச்சுக்களை பயன்படுத்துகிறது, நீரை வீணடிக்கிறது, அதற்கான மாற்றுக்களைக் கண்டடையவேண்டும் – இது அறிவியல். நவீன வேளாண்மையே ஒரு சதிவேலை என்பது அறிவியல் அல்ல, மூடநம்பிக்கை. உலகின் மூத்தகுடியாகிய தமிழனை அழிப்பதற்காக ஐரோப்பியன் கண்டுபிடித்த சதி அது என்பது மூடநம்பிக்கையின் உச்சம்.

இந்தத் தளத்தில்தான் இன்று அலோபதிக்கு எதிரான பேச்சுக்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எவருக்கும் அறிவியல் என்னும் பேரமைப்பு சென்ற ஐநூறாண்டுகளாக தன்னைத்தானே திருத்தி மேம்படுத்திக் கொண்டு உருவாகி வந்தது என்பது தெரியாது. அதன் பலன்கள் மேல்தான் அவர்களின் அன்றாட வாழ்க்கையே அமைந்துள்ளது என்று தெரியாது. அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்கு மாற்று கூட அறிவியலின் தர்க்கப்படி அமையவேண்டும் என்பது தெரியாது. ஒட்டுமொத்த அறிவியல் நிராகரிப்பு.

எதையும் மூர்க்கமான ஒற்றைப்படையான கோஷமாக ஆக்கி உணர்ச்சிக் கொந்தளிப்புடன் சொன்னால் நம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்த ஊசி விஷயத்திலும் அதுவே நிகழ்கிறது. பகுத்தறிவு பேசி மதத்தை எதிர்ப்பவர்கள் கூட இந்த வகையான மாற்று நம்பிக்கைகளில் மத மூர்க்கத்தையே வெளிப்படுத்துகிறார்கள்

இத்தருணத்தில் அறிவியலைப்பற்றி மட்டும் பேசலாம் என்றும் நாமும் சதிகளைப் பற்றிப் பேச வேண்டாம் என்றும் படுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஊட்டி வேதாந்த வகுப்பு – ஒரு நினைவுப்பதிவு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–34