இலக்கியப்பெண் -ஜன்னல் தொடர்-கடிதம்

புதுமைப்பித்தன்

இனிய ஜெயம்,

பாரதி நவீனத்தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய் எனினும் வாவேசு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் கதையை பெண் தொடரின் முதல் அத்யாயத்திலேயே நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என எண்ணுகிறேன். பாரதியைக் காட்டிலும் சிறுகதை எனும் வகைமை மீது ”பிடி கிட்டி” யது ஐயருக்கே என விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். மேலும் குளத்தங்கரை அரசமரம் முன்வைக்கும் அன்றைய பெண்ணின் யதார்த்தம் [ கைம்பெண் நாயகி  வாழ வகையின்றி தற்கொலை செய்து கொள்கிறாள்] முன், சமகாலத்தில் பெண் குறித்த பாரதியின் விருப்பக் கற்பனையை முன் வைத்தால் பாரதியின் மீனா கதாபாத்திரம் மீதான ஆய்வுக்கு ஆழம் கூடுவதாக இருக்கிறது.

முதல் அத்யாயம் ”புறத்தில்”[சமூக வெளியில்] பெண் என்னவாக இருக்கவேண்டும் என்ற விருப்பம் என வகுத்துக் கொண்டால், கமலாம்பாள் சரித்திரம் குறித்த இரண்டாம் அத்யாயம் ”அகத்தில்” [வீட்டின் உள்ளே] பெண் எனும் விருப்பக் கற்பனையாக வகுத்துக் கொள்ளலாம். சங்க இலக்கியத்தில் முகமறியா இளைஞன், முகவரி அறியா புதிய வீட்டில் எந்த விசாரணையும் இன்றி உள்ளே வருகிறான், அவனுக்கு அவ் வீட்டின் இளம்பெண் அருந்த நீர் அளிக்கிறாள். கண்ட முதல் கணமே விளையாட்டு. அங்கே துவங்கிய நாம் கமலாம்பாள் நாவலில் வீட்டுக்குள் கணவனும் மனைவியும் தோழமையாக ,களி பேசிக் சிரிப்பதே விருப்பக் கற்பனையாக எழுதிப்பார்க்கும் இடத்துக்கு வந்து சேர்ந்து இருக்கிறோம்.

மூன்றாவது அத்தியாயம் வீட்டுக்குள் இருக்கும் பெண்களின் மற்றொரு முகம் குறித்து பேசுகிறது. பத்மாவதி சரித்திர கதாபாத்திரத்துக்கு பால்ய விவாகம் , இல்லத்துப் பெண்கள் மாப்பிள்ளை பெண்ணை , சரசம் பேசி வெட்க வைக்கிறார்கள், மாப்பிள்ளைக்கு வெட்கம் மொய்க்கிறது, [ பாரதிக்கும் பால்ய விவாகம் , நம்மாள் ரம்ய ஆராதகன் அல்லவா, மனைவிக்கு முத்தம் தந்து தருணத்தை கொண்டாடுகிறான். இது நிஜம் அல்ல கதை என கொண்டாலும், பாரதியின் ஒரு அம்சம் அந்த கதைக்குள் இலங்குவதால் அது அழகான கதையாகிறது] வீட்டுப் பெண்களின் உள்ளே கனலும் ஒன்றினை இந்த அத்யாயம் பேசினாலும் ,அந்த அத்யாயத்தில் வரும் உப கதை வலி மிக்கது. பால்ய விவாகம் செய்து கையளிக்கப்பட்ட பெண், பூப்படையாததால் அவளது கணவனின் பயன்பாட்டுக்காக அவளது கன்னிமை கிழிக்கப்படும் சித்திரம்.

புதுமைப்பித்தன் அவதானிப்பில் பெண் குறித்த நான்காவது அத்யாயம் தனித்துவமானது. சாபவிமோசனம் கதையின் உதாரணபுருஷன் ராமன், பெண்ணுக்கு நெருப்புக் குழியை அளிக்கிறான். பிரம்மநாயகம் எனும் அப்ராணிக் கணவன் பெண்ணுக்கு இருள் அறையாக இருக்கிறான்.

குறிப்பாக சாபவிமோசனம் கதை அது இன்றும் முக்கியமான கதை . ராமனின் நடத்தையை கேள்வி கேட்பவள் சீதை அல்ல. அகல்யை. உத்தமமான புருஷனின் பாதம் பட்டால் அவள் சாபம் நீங்கும். அவள் சாபத்தை நீக்கிய உத்தம புருஷன் ராமன். நீ உத்தம புருஷனே ஆனாலும் பெண்ணின் கற்பு நிலையை சோதிக்க நீ யார் என்று அகல்யை கேட்கும் கேள்வி ஆழமானது. நீ ஒழுக்கமற்றவள் என்றே கவுதமர் சபித்தார். உன் ஒழுக்கம் ஊர் அறியட்டும் என்றே ராமன் தீ இறங்க சொன்னான். ஒன்று பெண் ஊருக்கு அல்லது கணவனுக்கு ஒழுக்கமாக இருக்க வேண்டும். இந்த அடிப்படைக் கோணல் ஒரு நிரந்தர சாபம் இல்லையா? அந்த சாபம் கொண்டே அகல்யை மீண்டும் கல் ஆகிறாள்.

புராண அகல்யை துவங்கி, சங்க இலக்கிய யுவதி தொடர்ந்து மீனா,கமலா,பத்மா வழியே பெண் என்னவிதமாக இங்கே கட்டமைக்கப்படுகிறாள், உருவாகி வருகிறாள், எதிர்கொள்ளப் படுகிறாள் என தமிழ் இலக்கிய வரலாற்றின் அறிமுகமாகவும், ஆய்வாகவும்,விவாதமாகவும் , ஒரே சமயத்தில் விளங்கி  முற்றிலும் புதிய வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது பெண் தொடர்.

நமது வாசகர்களில் பலர், தொடர்கள் ”வாங்கி” வாசிக்கும் பழக்கம் அற்றவர்கள். மொத்தமாக நூலாக வரும் போது வாசிக்கலாம் என்று இருப்பவர்கள். அவர்கள் இழப்பது முக்கியமான ஒன்றினை. ஒவ்வொரு அத்யாயத்தையும் பதினைந்து நாளுக்கு ஒரு முறை வாசிக்கையில், அந்த அத்யாயம் பேசும் அலகுகள் ”உள்ளே” எங்கோ உழன்று கொண்டே இருக்கும். வாசிப்பின் தலையாய இன்பமே அதுதான். பின் நூலாக வருகையில் நாம் நிகழ்த்துவது இரண்டாவது வாசிப்பு. இயல்பாக உள்ளே உழன்றவை இந்த வாசிப்புடன் இணைந்து இரண்டாம் வாசிப்பை ஆழமாக்கும்.

உதாரணம் இதில் வரும் பத்மாவதி சரித்திரம்,கமலாம்பாள் சரித்திரம் இரண்டுமே வெளியான குறுகிய நாளுக்குள் பல்கலை கழக பாடத் திட்டமாக மாறுவதாக ஒரு வரி வருகிறது. இதைக் கொண்டு ஒரு தனி ஆய்வு ஒன்றுக்குள் செல்லலாம். இத்தகைய முக்கியமான ஒற்றை வரிகளை நூலாக வாசிக்கையில் அதன் முதல் வாசிப்பில் தவறவிடவே வாய்ப்பு அதிகம்.

அவை போக ஒரு எழுத்தாளர் முழு நூலாகவே எழுதி ஒரு நூலை வெளியிடாமல் ஏன் பதினைந்து நாளுக்கு ஒரு அத்யாயம் எழுதி வெளியிட வேண்டும்? வணிக காரணம் தவிர்த்து அதில் இலங்கும் ஆசிரியரின் அவ்வமையத்து உணர்வுநிலை  ஒரு இலக்கிய வாசகனுக்கு முதன்மையானது. முதல் வாசிப்பாக கிடைக்கும் முழு நூலில், இந்த உணர்வு மிக மிக மெலிதாகி பின்தங்கி விட்டிருக்கும்.

வெண் முரசு வாசித்து அன்றன்றே உங்களுடன் ஒரு வாசகர் குழு உரையாடுவதைப் போல, இத் தொடரும் இங்கே வாசித்து விவாதிக்கப்பட்டால், அத் தொடருக்கு வெளியில் பேசப்பட வேண்டிய வேறு பல பரிமாணங்கள் பதிவு பெரும்.

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று… தொடருங்கள்..

***

அன்புள்ள சீனு,

ஜன்னல் இருமாத இதழ் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. இப்படி தொடராக எழுதாவிட்டால் இதை ஒரு நூல்திட்டமாகக் கொண்டு என்னால் எழுதிமுடிக்க முடியாது. மாதம் இரு கட்டுரை என்பதனால் அறியாமலேயே நூல் எழுதிமுடிக்கப்பட்டுவிடும். ஜன்னலில் முன்னர் நாட்டார் கதைகளைப்பற்றிய தேவர்கள் தெய்வங்கள் பேய்கள் என்னும் தொடர் வந்து முடிந்திருக்கிறது

வ.வே.சு அய்யரின் கதைகள் வடிவ ஒருமை உடையவை என்பதை மறக்கவில்லை. ஆனால் அவர் கதைகள் தழுவல்களோ என்னும் ஐயம் எனக்குண்டு. ஆகவே அவற்றை இதுவரை நான் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35
அடுத்த கட்டுரையோகமும் மோசடியும்