முற்போக்கின் தோல்வி ஏன்? -2

முற்போக்கின் தோல்வி ஏன்? -1

images

 

ஜனநாயகத்தின் மூளை கருத்துக்களின் முரணியக்கம் நிகழும் அறிவுச்சூழல். முற்போக்குச் சக்திகள் முதலில் வென்றெடுக்கவேண்டிய இடம் அது என்கிறார் அண்டோனியோ கிராம்ஷி. இன்று அந்தக் கருத்துக்களத்தில் நிகழ்ந்துள்ள மாபெரும் சிக்கல் ஒன்றைச் சுட்டிக்காட்டவேண்டும். இதையெல்லாம் ஆராயும் அளவுக்கு முறையான ஆய்வுநோக்கு கொண்டவர்கள் எவரும் நம்மிடையே இன்றில்லை. ஆகவே வெறும் உளப்பதிவாகவே சொல்ல வேண்டியிருக்கிறது.

மிகச் சமீபகாலமாக உருவாகி வந்திருக்கும் இணைய கலாச்சாரம் நம் கருத்துச்சூழலையே பொருளற்றதாக ஆக்கிவிட்டிருக்கிறது. இணையக் கலாச்சாரம் அத்தனை சாமானியர்களும் பொதுவெளியில் வந்து பேச வசதி செய்து கொடுக்கிறது. பேசுபவனின் தகுதி என்ன, வாசிப்பு என்ன, பின்புலம் என்ன எதுவுமே முக்கியமில்லாமல் ஆகிறது. அனைத்துக் குரல்களுக்கும் ஒரே வகையான இடமளிக்கும் இணையத்தில் இயல்பாகவே ஓங்கி ஒலிக்கும் குரல்கள் முண்டி மேலெழுகின்றன. சமநிலை கொண்ட ஆராய்ச்சிப் பின்புலம் கொண்ட, முழுமையான வரலாற்று நோக்கு கொண்ட இணையப் பதிவுகள் மிகக்குறைவு அவற்றை வாசிப்பவர்கள் அதைவிட குறைவு.

வெறுப்பையும் தர்க்கமற்ற உணர்வுக் கொந்தளிப்புகளையும் கொட்டும் பதிவுகளே அதிகமாக விரும்பப்படுகின்றன. ஏனென்றால் அவை சுடச்சுட வாசிக்க ஏற்றவை. சுருக்கமானவை. மூளையுழைப்பு தேவையற்றவை. அனைத்தையும்விட மேலாக, வாசிக்கும் சாமானியனை தாழ்வுணர்ச்சி இல்லாமல் தானும் ஓர் அறிவுஜீவியே என மயக்கம் கொள்ளச்செய்பவை. அவனும் ஏதாவது சொல்ல வாய்ப்பளிப்பவை. ஒரு கீழ்மைநிறைந்த பதிவு நூறு பதிவுகளை உருவாக்குகிறது. அவை ஒட்டுமொத்தமாக வெற்றுக் கொந்தளிப்பு நிறைந்த ஒரு தரப்பை கட்டமைக்கிண்றன. அங்கு நடுப்போக்குகளுக்கு, நிதானமான பேச்சுக்களுக்கு இடமே இல்லை. ஏதேனும் ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு மறுதரப்பின் மேல் கக்கப்படும் கட்டற்ற வெறுப்பு மட்டுமே செல்லுபடியாகிறது.

இந்நிலை உண்மையான இடதுசாரிகளுக்கும் சுதந்திர ஜனநாயகவாதிகளுக்கும் மிக மிக எதிரானது. எப்போதும் தர்க்கபூர்வமான நிலைபாடு எடுத்தாகவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அவர்கள். உக்கிரமான வலதுசாரி வெறுப்பு அவர்களையும் இந்த உணர்வுக் கொந்தளிப்புக்குள் கொண்டுசெலுத்துகிறது. அவர்கள் வெறுப்பைக் கக்குபவர்களாக மாற மாற தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொள்கிறார்கள். விளைவாக வலது சாரிகளுக்கான இடத்தை உருவாக்கி அளிக்கிறார்கள்.

இணையத்தில் வெறுப்பைக் கக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்தவர்கள். மிகச்சாதாரணமான அன்றாட வாழ்க்கை வாழ்பவர்கள். இச்சமூகத்தின் முதலாளித்துவ அமைப்பின் அனைத்து நலன்களையும் பெற்றுக் கொள்பவர்கள். எங்கோ இருக்கும் குற்ற உணர்ச்சி, எவரின்மீதோ எழும் ஊமைத்தனமான எரிச்சல், அன்றாட வாழ்க்கையின் சலிப்புக்கு எதிரான ஒரு ரகசியக் கிளர்ச்சி, தன்னை பிறிதொருவனாக புனைந்து கொள்ளும் ஆர்வம் என பல்வேறு காரணங்களால் இவர்கள் இணையத்தில் மிகையுணர்ச்சிகளைக் கொட்டி வெறுப்பைக் கக்குகிறார்கள். அதன் வழியாக எந்த தரப்பை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களோ அதை தர்க்கமற்ற ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

எது ஒன்றும் தர்க்கமற்ற உணர்வாக வெளிப்படும்போது நிகரமதிப்பாக மெல்ல மெல்ல மூர்க்கமான வலதுசாரித்தனமே வெல்கிறது. இடதுசாரித்தனம் பொருளிழந்து அழிகிறது. ஜனநாயக பண்பு என்பது மாற்றுக் கருத்தை செவிகொடுக்கும் நிலையில் இருத்தல். எப்போதும் விவாதிக்க முனையும் மனநிலையில் இருத்தல். வரலாற்று முழுமையை கணக்கில் கொண்டு அணுகுதல். இன்று இணையத்தில் இத்தகைய குரல்களாக ஒலிப்பவை எவை?

இங்கே மூன்றுவகை குரல்கள். ஒன்று வலதுசாரிகள். மதம், சாதி, இனம், மொழி என அடிப்படைவாதம் பேசும் எவரும் வலதுசாரிகளே. அவர்கள் ஒருசில தளங்களில் இடதுசாரிக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டிருக்கலாம், அது அவர்களை இடதுசாரிகளாக ஆக்குவதில்லை. இனவெறியரான சீமான் மத எதிர்ப்பு எடுப்பது முற்போக்கு அல்ல. அது பிற்போக்கின் இன்னொருவகை பேதம், அவ்வளவுதான். இன்னொரு தரப்பு இடதுசாரிகள். இவர்கள் அனேகமாக கண்ணுக்கே படவில்லை.

இரண்டுக்கும் நடுவே உள்ள மாபெரும்தரப்பு போலி இடதுசாரிகள். ஜனநாயகம், பகுத்தறிவு, மனித உரிமை, சூழியல் என அத்தனை முற்போக்குக் கோஷங்களையும் தங்கள் சொந்த காழ்ப்புகளுக்கு ஆதாரமாக, இடமும் தருணமும் நோக்கி மாற்றி மாற்றிக் கையாளும் ஒரு பெருங்கூட்டம். அவர்கள் சசிகலாவை எதிர்க்கையில் முற்போக்கின் அத்தனை ஒலிகளும் கிளம்பும், ஆனால் மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக பேசும்போது முற்போக்கை பொத்திக்கொள்வார்கள். கெயில் குழாய் பதிப்புக்கு எதிராக கூச்சலிடுவார்கள், மணல் வைகுண்டராஜனின் அமைப்புக்களில் சென்று கைநீட்டி காசு வாங்கிக் கொள்வார்கள். மதத்தை எதிர்ப்பார்கள். ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்குக் கூலிக்குக் குற்றேவல் செய்வார்கள்.

2

இவர்களின் குரலே இணையத்தில் ஓங்கி ஒலிக்கிறது. இந்த வெற்றுக்கும்பலால் உண்மையில் இங்குள்ள உண்மையான முற்போக்குத்தரப்பு முழுமையாகவே மூடப்பட்டுவிட்டது. முற்போக்கு என்றாலே மக்களுக்குத் தெரிவது காழ்ப்பைக் கக்கிக்கொண்டே இருக்கும் கூலிப்படையின் முகமே. அவர்கள் மேல் மக்கள் கொள்ளும் ஆழமான அவநம்பிக்கை முற்போக்குத்தரப்பு மேல் படிகிறது. விளைவாக வலதுசாரிகள் வெல்கிறார்கள்.

நமது தொலைக்காட்சி விவாதங்கள் இணைய விவாதங்களின் அடுத்த கட்டமாக மாறியுள்ளன. இணையத்தில் கூச்சலிடுபவர்களில் இருந்து எவர் அதிக கூச்சல் போடுகிறார்களோ அவர்களை தேர்ந்தெடுத்து தொலைக்காட்சிகளில் அமரவைக்கிறார்கள். தொலைக்காட்சிகளைக் கூர்ந்து பார்த்தபோது சென்ற இரண்டாண்டுகளில் நிதானமான குரலில் பேசும் இடதுசாரிகள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டு வெறுப்பைக் கக்கும் நாலாந்தர இடதுசாரிக் கூச்சலாளர்களே அமர வைக்கப்படுவதையும், அவர்களுக்கெதிராக நாலாந்தர வலதுசாரிகள் அமரவைக்கப்பட்டு தொடர்ச்சியான உச்சகட்டமோதல் ஒன்று திட்டமிட்டு நிகழ்த்தப்படுவதைக் காணலாம். விளைவாக செய்தி வெறும் கேளிக்கை என்று ஆகிறது. வெறும் உச்சகட்ட உணர்ச்சி மோதல் என்றாகிறது. அதில் கற்றலுக்கும் புரிதலுக்கும் இடமில்லை. இலட்சியவாதமே இல்லை. வாதத்திறன், தொண்டைத்திறன், கூச்சநாச்சமில்லாமை மட்டுமே வெல்கிறது. இச்சூழலின் லாபமும் வலதுசாரிகளுக்கே.

இங்கே ஆக முற்போக்கு என நம் முன் வந்து நிற்கும் பல இயக்கங்க்கள் அப்பட்டமான அடிப்படைவாத அமைப்புக்கள் என்பதும் எது முற்போக்கு என்பதில் மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்குகிறது. உதாரணமாக, ஓர் இயக்கம் தமிழ்ப்பெருமிதம், தமிழ்த்தூய்மை, தமிழ் இனவாதம் ஆகியவற்றை ஓங்கிக் கூவுகிறது. தமிழர்கள் அப்பழுக்கற்றவர்கள் அதன் எதிரிகள் இந்தியதேசியமும் இந்தியாவின் பிற மக்களும்தான் என சொல்கிறது. அது ஃபாஸிஸம் அன்றி வேறென்ன? அதற்கும் ஐ.எஸ்.ஐ.எஸுக்கும் என்ன வேறுபாடு? நவீன ஜனநாயக விழுமியங்களுக்கு அது முழுமையாகவே எதிரிதானே?

 

ஆனால் நாம் அதை முற்போக்கு என்போம். ஏனென்றால் நாம் வெறுக்கும் ஒன்றை அதுவும் எதிர்க்கிறது. அந்நிலைபாட்டினூடாக முற்போக்குக்கும் பிற அமைப்புகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நிறுவப்படுகிறது. முற்போக்கு அமைப்பு என்பது எந்தவகையான விழுமியங்களும் உள்ளதல்ல, இரண்டின் இயல்புகளும் ஒன்றே, எதிரிகள்தான் வேறுவேறு என்றாகிறது

 

இந்தச் சூழலில் முற்போக்குத் தரப்பிலேயே அதியதிதீவிரப்பாவலா முற்போக்கு ஒன்று உண்டு – உதாரணம் வினவு கோஷ்டி. அவர்கள் இங்குள்ள பிரிவினைவாத, ஃபாசிஸ அமைப்புகளிடமிருந்து கோஷங்களை கடன்வாங்கி வெறுப்பையும் காழ்ப்பையும் கக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு பத்துநாள் படிக்கும் ஒருவன் அரசியல்ரீதியாக அதற்கும் ஃபாஸிஸத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றே நினைப்பான்

உண்மையான முற்போக்குத்தரப்பே வலதுசாரித்தனத்தை வெல்லமுடியும். ஏனென்றால் வலதுசாரிகள் பேசும் அடிப்படைகள் மதம், இனம், சாதி, மொழி போன்றவை மிகநீண்ட வரலாறுள்ளவை. மக்களிடம் அடிப்படையாகவே வேரூன்றியவை. பிறன் பற்றிய ஐயத்தை உருவாக்கி மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்பு அடையச்செய்வது மிகமிக எளிது. மக்கள் எவரையேனும் வெறுக்கவும் தங்கள் பிரச்சினைகளுக்கு எதிரிகளே காரணம் என நம்பவும் எப்போதுமே தயாராக இருப்பவர்கள். ஆகவே உண்மையான இலட்சியவாதத்தை முன்வைக்கும் இடதுசாரிக்குரல்களே அதை எதிர்கொள்ளமுடியும். வெற்றுக்காழ்ப்பாக அவர்கள் வெளிப்பட்டால் அவர்கள் பொருளிழந்துபோவார்கள். நிதானமான குரல்கள் அழிய அழிய இடது சாரிகளின் அடிப்படை லட்சியவாதம் அழிகிறது.

மூன்றாவதாகபல்லினத்தேசியம் என்னும் நவீன விழுமியத்தின் தற்காலிகத் தோல்வி., இது ஒரு மெல்லிய ஐயம் என்றே சொல்வேன். ஒரு கொள்கையாகச்ச் சொல்லுமளவுக்கு என்னிடம் தரவுகள் இல்லை. நூறாண்டுகளுக்கு முன்பு உலகளாவிய நவீனதேசம் குறித்த நோக்கு ஒன்று உருவாகிவந்தது. ரஸ்ஸல், ஏ.என்.வைட்ஹெட் போன்ற தத்துவஞானிகளால் முன்வைக்கப்பட்ட கனவு அது. உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தேச எல்லைகள் இல்லாத சர்வதேசிய அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற அந்த இலட்சியம் வலுப்பெற்றது. ஆனால் பனிப்போர் முடியும் காலம் வரைக்கும் தேசியஎல்லைகள் மிக இறுக்கமாக இருந்தன. ஆகவே அனைத்து தேசிய இனங்களும் கலந்த பெருந்தேசியம் என்னும் எண்ணமும் உலகளாவிய நவீனத் தேசியம் மற்றும் தேசஎல்லைகளற்ற உலகம் என்ற கனவும் கொள்கை அளவிலேயே இருந்தன.

பனிப்போர் முடிந்த பிறகு பல நாடுகள் அக்கனவை நடைமுறையாக்கத் தொடங்கினார்கள். ஆஸ்திரேலியா ஓர் உதாரணம். பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உதாரணம். அனைத்து இன மக்களும் சேர்ந்து வாழும் ஒரு வாழ்நிலமாக தங்கள் நாட்டை அமைக்க வேண்டும் என்ற கனவு நடைமுறைக்கு வந்தது பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் குடியுரிமைகள் அளிக்கப்பட்டன. உலகெங்கிலும் இருந்து பஞ்சத்தாலும் போர்களாலும் புலம்பெயர்ந்த மக்களுக்கு அச்சமூகங்களில் இடமளிக்கப்பட்டது.

மானுடம் உருவாக்கிய மிகப்பெரிய கனவுகளில் ஒன்று அது. மாபெரும் லட்சியவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் அது. ஆனால் நடைமுறையில் அது தோல்வி அடைந்து வருவதையே உலகம் காட்டுகிறது. தோல்வியடையலாகாது என்றே நான் விழைகிறேன். புல்வெளிதேசம் போன்ற பயணநூல்களில் பெரும் மன எழுச்சியுடன் இந்த நவீன சமூகத்தைப்பற்றிய என் நம்பிக்கையைப் பதிவுசெய்துமிருக்கிறேன். ஆனால் யதார்த்தம் வேறு

images

 

2005ல் முன் ஆஸ்திரேலியாவில் பிரதமர் எத்தியோப்பியாவிலிருந்து குடியேறிய அகதிகளை நோக்கி உளமுருக்கும் ஒரு விண்ணப்பத்தை வைத்தார். எத்தியோப்பியப் பஞ்சத்தின் போது அங்கிருந்த பல்லாயிரம் கறுப்பின இஸ்லாமியர்களுக்கு ஆஸ்திரேலியா இடமளித்தது. அவர்கள் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாத வாய்ப்புகளை அளித்தது. வெற்றிகரமான வாழ்க்கையை அவர்களுக்கு உருவாக்கியது. ஆனால் ஒரு தலைமுறை தாண்டியபோது அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக கற்பனை செய்து கொண்டார்கள். தங்கள் நாட்டிலிருந்து மதவெறியைக் கக்கும் மதகுருக்களை வரவழைத்து ஆஸ்திரேலியாவின் நவீன ஜனநாயக விழுமியங்களுக்கும் மத ஒற்றுமைக்கும் எதிரான முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஆஸ்திரேலியாவில் தங்களுக்கு ஷரியத் சட்டம் வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதுமட்டும் அல்ல மொத்த ஆஸ்திரேலியாவையும் ஷரியத் சட்டப்படி ஒர் இஸ்லாமிய தேசமாக கைப்பற்றும் வரை அங்குள்ள இஸ்லாமியர்கள் அமைதியடையக்கூடாது, ஒரு நிலையிலும் அங்குள்ள கூட்டமைப்பை நிரந்தரமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அவர்களின் மதகுரு சொன்னார். பன்மதத் தேசியம் என்பது இஸ்லாமுக்கு எதிரானது என்று அறைகூவினார்.

தங்களுடைய நம்பிக்கை தோற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ‘உங்களுக்கு நாங்கள் இத்தனை வாய்ப்புக்களை அளித்தோம் அதற்குப்பதிலாக நீங்கள் அளிப்பது இதுதானா?’ என்று கேட்டிருந்தார். ‘ஷரியத் சட்டத்தை விரும்புபவர்கள், ஆஸ்திரேலியாவின் நவீன ஜனநாயக அரசில் நம்பிக்கை அற்றவர்கள் வெளியேறலாம்’ என்றார்.

ஓர் இலட்சியவாதத்தின் வீழ்ச்சியைக் கண்ட துயரம் அது. ஆனால் அது நடைமுறை யதார்த்தம் பிரான்ஸிலும் ஐரோப்பாவின் பலநாடுகளிலும் பயணம்செய்யும்போது அங்கு குடியேறி இருக்கும் மத்திய ஆசிய இஸ்லாமிய மக்கள் எவரும் அங்குள்ள பண்பாட்டுடன் இணைத்துக் கொள்ளவில்லை என்பதை நாங்கள் கண்டோம். தங்களை அவர்கள் தனித்த அடையாளத்துடன் ஒதுக்கிக் கொள்கிறார்கள் அதன் பிறகு மிக உச்சகட்ட வெறுப்பை அங்குள்ள நவீனப் பண்பட்டின்மேல் உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்நாட்டை தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப வென்றெடுப்பதைப் பற்றிய கனவுகளை வளர்க்கிறார்கள். பிரான்ஸில் அப்படி கோரிக்கையை எழுதி கையில் தட்டியாகப் பிடித்துக்கொண்டு நிற்பவர்களையே கண்டேன்.

பிரான்ஸோ ஜெர்மனியோ கடந்த முந்நூறு ஆண்டுகளில் எத்தகைய மாபெரும் பண்பாட்டுக் கொந்தளிப்புகளை அடைந்திருக்கின்றன, என்னென்ன மகத்தான லட்சியங்களைக் கண்டடைந்திருக்கின்றன, எத்தனை தத்துவப் பரிணாமங்களினூடாக அவை இன்றிருக்கும் இடத்தை அடைந்திருக்கின்றன என்பதைப்பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. தங்கள் மதம், தங்கள் இனம் கொண்டிருக்கும் அடையாளம் மட்டுமே மெய்யானது, சரியானது என்று அவர்கள் நம்புகிறார்கள். பிரெஞ்சுக்காரர்களோ பிரிட்டிஷ்காரர்களோ தங்கள் பண்பாட்டுக்கு மிகக்கீழ்நிலையில் இருக்கும் மக்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு பொய்யான தன்னம்பிக்கையை அளிக்கிறது

சென்ற ஆண்டுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பிரான்ஸில் ஈஃபில் கோபுரத்திலும் ஜெர்மனியின் கொலோன் நகர் சதுக்கத்திலும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே இரவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள்  பதிவாகியிருக்கின்றன என்கிறார்கள். அவற்றில் மிகப்பெரும்பாலானவற்றில் சமீபத்தில் அங்கு குடியேறிய மத்திய ஆசிய இஸ்லாமிய அகதிகள் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பது பதிவாகியிருக்கிறது. பிரெஞ்சுக்காரர்களால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தங்கள் சொந்த நாட்டில் வாழ வழியின்றி தவிக்கும் மக்களுக்காகத்தான் அவர்கள் வாசல் திறந்து கொடுத்தார்கள். வாய்ப்புகளை அளித்தார்கள் .தங்கள் வளங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இருந்தும் கூட தங்கள் மேல் இவ்வளவு காழ்ப்பையும் வன்முறையையும் இவர்கள் மேல் ஏன் செலுத்துகிறார்கள் என்று மீள மீளக் கேட்கப்படுகிறது.

1

 

அந்த திகைப்பை ஐரோப்பா முழுக்கவே காணமுடிந்தது. நான் லண்டனிலும் ஐரோப்பாவிலும் சுற்றிக் கொண்டிருந்தபோதுதான் பிரிட்டன் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும்படி வாக்களித்தது. டிரம்ப் முன்னேறி வந்துகொண்டிருந்தார். அங்கிருந்த பொதுமனநிலையை கண்டு டிரம்ப் வெல்லக்கூடும் என நான் அப்போதே நண்பர்களிடம் சொன்னேன், எழுதவும் செய்தேன்.

பல்லினச்சமூகம், தேச எல்லைகள் அற்ற உலகம் என்னும் கனவு மகத்தானதுதான். ஆனால் உலகெங்கும் ஜனநாயக மனிதாபிமானக் கருத்துக்கள் ஓரளவேனும் சென்று சேர்ந்து, ஓரளவேனும் சமானமான பண்பாட்டுக்கல்வி நிகழாதவரைக்கும் அதை நடைமுறைப்படுத்த முடியாது. குறிப்பாக இஸ்லாமிய உலகம் நவீன ஜனநாயப் பண்புகளை சற்றேனும் கற்றுக்கொள்ளாமல், நவீன நீதிமுறையும் நவீன மானுட சமத்துவ நோக்குள்ள சமூக அமைப்பும் அங்கெல்லாம் உருவாகாமல்அதற்கென முயல்வதுஒரு தற்கொலை முயற்சியாகவே முடியும். ஐரோப்பா அதைக் உணர்ந்து வருகிறது. மிகமிகக் கசந்து அதை ஏற்றுக்கொள்கிறான் முற்போக்கான ஐரோப்பியன்.

ஐரோப்பாவின் இடதுசாரிகள் காலம் முதிரும் முன்னரே தொடங்கப்பட்டுவிட்ட பல்லினச்சமூகம் என்னும் கனவை ஒரு லட்சிய வெறியுடன் வலியுறுத்துகிறார்கள். அதைக்கண்டு அங்குள்ள எளிய மக்கள் அச்சம் கொள்வதைக் காண முடியவில்லை அவர்களால். உலகெங்கும் இடது சாரிக்கருத்துக்கள் பலவீனமடைந்து வலது சாரிக்கருத்துக்கள் மேலோங்குவதற்கு காரணங்களில் இதுவும் ஒன்று என்று சொல்ல முடியும். இடதுசாரிகள் தங்களை மூர்க்கமாக ஆக்கிக்கொண்டு கனவுலகு ஒன்றை முன்வைக்கும் சில குறுங்குழு மத அமைப்புகளாக ஐரோப்பாவில் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். பிரான்ஸிலும் ரோமிலும் அவர்கள் தெருமுனைகளில் தட்டிகளுடன் நிற்பதைக் கண்டபோது அவ்வெண்ணமே உருவாகியது.

இறுதியாகச் சொல்ல வேண்டியது நவீனக் காட்சி ஊடகம். முன்பும் ஊடகங்கள் இருந்தன. அவை மொழியூடகங்கள். ஆனால் காட்சியூடகத்தின் பெருக்கம் கடந்த முப்பதாண்டுகளாகத்தான். அதை இன்று நிகழ்த்துவது நுகர்பொருள் வணிகம். நேற்று பெங்களூரில் ஒரு விடுதியறையில் ஓரிரவு மட்டும் தொலைக்காட்சியைப் பார்த்தேன் எவ்வளவு நுகர்பொருட்களின் விளம்பரங்கள் சாமானியனின் தலைக்கு மேல் கொட்டப்படுகின்றன என்று பார்த்தேன். வாங்கு, நுகர், வாங்கு, நுகர் — பிறிதொன்றுமில்லை வாழ்க்கையில் என்று அவை அறைகூவிக்கொண்டே இருக்கின்றன. நுகர்பொருட்களால் நிறைந்த ஒரு உலகக்கனவை அவர்கள் மேல் கொட்டுகின்றன.

சென்ற காலங்களில் மனிதர்கள் மதங்களுக்குள் பிறந்து வளர்ந்தார்கள். மதம் அளிக்கும் நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நவீன ஐரோப்பா உருவானபோது ஐரோப்பிய லட்சியங்களின் மடியில் குழந்தைகள் பிறந்து வளர்ந்தார்கள். இந்திய மறுமலர்ச்சிக்காலத்தில் அந்த ஐரோப்பிய இலட்சியவாதத்தின் இந்தியவடிவம் தங்களைச் சூழ்ந்திருக்க அவர்கள் வளர்ந்தனர். இன்றைய தலைமுறைகள் நுகர்வுவெறியில் பிறந்து வளர்கிறார்கள். பிறிதொன்றும் அவர்கள் அறிவதேயில்லை.

இன்று இருபத்தைந்து வயதான இளைஞனைப் பார்க்கையில் அவனுக்கு நுகர்வு தவிர எதிலும் ஆர்வமோ அடிப்படைப் பயிற்சியோ இல்லையென்பதைப் பார்க்கலாம். இசைகேட்கவோ, நூலைப்படிக்கவோ, சிந்தனை செய்யவோ, விவாதங்களில் ஈடுபடவோ அவனுக்குப் பயிற்சி இல்லை. தன் சொந்த இயல்பால் லட்சத்தில் ஒருவரே விதிவிலக்காக அமைகிறார்கள்.

இவ்வளவு நுகர்வுவெறி கொண்ட ஒரு சமூகம் எந்த லட்சியங்களையும் நோக்கி செல்லாது. அந்நுகர்வை மேலும் மேலும் வாக்குறுதி அளிக்கும் அரசியலையே அது விரும்பும். இலட்சியங்கள் எல்லாம் கேலிப்பொருளாகும். கேலி ஒரு மைய உணர்வாகவே நீடிக்கிறது. நுகர்வோனாக தன்னை உணர்பவன் ஒருவகையில் உயர்வுமனநிலை கொண்டவன், நேற்று அவன் முன்னோர்கள் அடையாத எல்லாமே அவனைச் சூழ்ந்திருக்கிறது. இன்னொருவகையில் தாழ்வுணர்ச்சி கொண்டவன், அவனுக்கு சிந்திக்கவோ புதிதாக எதையேனும் செய்யவோ ஆற்றல் இல்லை. ஆகவே அவன் நையாண்டி வழியாக அதைக் கடந்துசெல்கிறான்.

தொலைக்காட்சியின் எழுச்சி உலகெங்கும் இடதுசாரிக்கனவுகளை இல்லாமலாக்கியது என்று சொன்னால் அது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்குமான முடிச்சாக இருக்காது என்று நினைக்கிறேன். மகத்தான ஒன்றுக்காக போராடுவதில், அதன் பொருட்டு தன்னை இழப்பதில் ஒர் இன்பம் உள்ளது என்பதை அறிந்த இளைஞர்கள் உலகெங்கும் மிகக்குறைந்து கொண்டிருக்கிறார்கள். கருத்துகள் எங்கும் எவரையும் கவராமல் ஆகின்றன. இடதுசாரிகள் என்றல்ல எந்த ஒரு இலட்சியமும் இன்றைய இளைஞனைக் கவர்வதில்லை. அப்பட்டமான உக்கிரமான வெறுப்பை கக்குவது மட்டுமே அவனுக்குச் சுவாரசியமாகப் படுகிறது. அதற்கு ஓர் இலக்கை உருவாக்கிக்கொடுத்தால்போதும். மதம், இனம், மொழி ஏதோ ஒன்று. தமிழகத்தை விட கேரளச்சமூகத்தின் மாற்றத்தைக்கொண்டே இதை நான் எழுதுகிறேன்.

ஆனால் வரலாற்றின் பரிணாமம் என்பது ஒற்றைப்படையான ஒரு முன்னகர்வு அல்ல என்றே ஹெகலையோ அல்லது மார்க்ஸையோ கற்றவன் சொல்வான். அது முரணியக்கம்தான். ஒவ்வொன்றும் நேர்எதிரான விசைகளுடன் முரண்பட்டு போராடி சமநிலைப்புள்ளிகளைக் கண்டடைந்து உருவாகும் கோடுவழியாகவே வரலாறு முன்னகரும். அதுவே உண்மையில் சரியான முன்னகர்வாக இருக்க முடியும். ஒற்றைப்படையான தாவல் என்பது அதே அளவுக்கு பேரிழப்பையும் உருவாக்கும்.

அதைப்பார்த்தால் அறுபது எழுபதுகளில் உலகெங்கும் உருவான இடது சாரி எழுச்சிகள் பெரும்பாலானவை எத்தனை இலட்சியவாத நோக்கு கொண்டனவோ அதேயளவு கண்மூடித்தனமான தாவல்களும்கூட. கியூபா போன்ற ஒரே ஒரு [அரைகுறை] விதிவிலக்கு தவிர மற்ற அத்தனை முயற்சிகளும் பேரழிவாகவே முடிந்தன. காங்கோ பொலிவியா இந்தோனேசியா இலங்கை இந்தியா என தோல்விகளின் அழிவுகள். கம்போடியா போல வெற்றிகளின் பேரழிவு அதைவிட பலமடங்கு.

அடுத்த அலை, எதிர்த்திசை நகர்வு இப்போது நிகழ்கிறது என்று தோன்றுகிறது. முந்தைய நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களின் பிழைகளை சரிசெய்வதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பாக இருக்கலாம். அக்கருத்துக்கள் உருவாக்கிய பல்வேறு பிரிவினைகளை மனிதர்கள் வென்று அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்காக இருக்கலாம். தொழில் நுட்பத்திலும் வணிகத்திலும் மானுடம் ஒரு பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கலாம் இது. இதன் எதிர்விசையாக மீண்டும் இடதுசாரி அலை, லட்சியக்கனவுகளின் ஒரு காலம் எழுந்து வருமென்றே எதிர்பார்க்கலாம்.

ஜெ

 

முந்தைய கட்டுரைதூய்மைவாதிகள் வருக!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–40