முற்போக்கின் தோல்வி ஏன்? -1

index

ஜெ,

காந்தியம் இன்று உரையை அதிகாலையில் கேட்டேன் மீண்டும். உலகச்சிந்தனை போக்கு முதல் அது இந்தியாவுக்கு வந்தது வரை ஒரு வரலாற்று சித்திரத்தையும் அளித்த உரை. கேட்கும்போது தோன்றியதும், பதில் தெரியாததுமான கேள்வி இது.

சிந்தனையும் சமூகமும் முன்னேதானே செல்லும்? தன் எல்லா போதாமைகளுடனும் இடதுசாரிச் சிந்தனை உலகை நல்ல விஷயங்களை நோக்கித்தானே முன்னகர்த்தியது? நம் காலத்தில் நாம் மேலும் முன்னல்லவா நகரவேண்டும்?

ஜனநாயகம் உள்ள தேசங்களில் மக்கள் என்ன நினைகிறார்கள் என்பதை வாக்குகள் மூலமாவது அறிய இயல்கிறது, பிரிட்டனின் ஐரோப்பிய துண்டிப்பு, டிரம்ப் வெற்றி, இங்கே சமூகம் மோதியை தேர்தெடுத்தது எல்லாமே உலகம் வலதுசாரி கருத்தியலையும் தேசியவாதத்தையும் தேர்தெடுப்பதை தெளிவாக்குகிறது, பிரான்ஸ் சாய்ந்துவிட்டால் அதுதான் முற்றுப்புள்ளி.

ஏன்? இது முன்னேற்றம் அல்ல என தெரிகிறது, ஆனால் வலதுசாரிகளைத் தேர்ந்தெடுக்கும் மக்களை முட்டாள்கள் என வையத்தோன்றவில்லை, அல்லது இது கும்பல் ஜனநாயகமேதானா?

அரங்கா

1
ஜவகர்லால் நேரு பல்கலையில் ஒரு ஆஸாதி நடனம்

 

அன்புள்ள அரங்கா,

உங்கள் கேள்வியை முன்னரும் நேர்ப்பேச்சில் ஒருமுறை கேட்டிருக்கிறீர்கள். அன்று அதற்கு விளக்கமாக விடையளித்து உரையாட முடியவில்லை. இப்போதும் இந்த வினா மிகப்பொதுவாகவும், ஒட்டுமொத்த வரலாற்றைப்பற்றிய ஒற்றை வரியை சொல்லுமிடத்திற்கு நம்மைத் தள்ளுவதாகவும் உள்ளது. வரலாற்றைப்பற்றி அப்படி ஒற்றை வரியைச் சொல்வது எப்போதுமே சரியாவதில்லை. ஞானியர் சொல்லும் தரிசனங்களும் கூட. அவை குறிப்பிட்ட கோணத்தில் நம்மை யோசிக்க வைக்கின்றன என்ற அளவில் மட்டுமே முக்கியமானவை.

ஆகவே இப்படி யோசித்துப் பார்க்கலாமே என்ற எண்ணத்தில் இதைச் சொல்கிறேன். அறியப்படாத அபூர்வ உண்மைகளை நோக்கிச் செல்ல வேண்டுமென்று அறிவுஜீவிகளுக்கே எழும் இயல்பான உந்துதலைத் தவிர்த்து, மிக வெளிப்படையாக கண்முன்னே தெரியும் யதார்த்தத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இதற்கான விடையை சொல்ல முடியுமா என்று யோசிக்கிறேன்.

ஏனென்றால் இன்றைய சூழலில் அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்கள் சாமானியருக்குத் தெரியாத விஷயங்களைச் சொல்லியாகவேண்டும் என துடிப்பு கொண்டிருக்கிறார்கள். நினைத்துப் பார்க்கமுடியாத கோணங்களில் எல்லாம் யோசித்து சாமானியரை ஆச்சரியப்படுத்துகிறார்கள். ஆழ்ந்த தனிப்பட்ட காழ்ப்புகளும், சுயநல நிலைபாடுகளும், மத இன மொழி வட்டார வெறிகளும் இல்லாத அறிவுஜீவிகள் குறைவு. ஆகவே அவர்களுடைய கருத்துக்கள் எல்லாமே திரிபுபட்டவைதான். இந்த ஒட்டுமொத்த சொற்குப்பை உள்ளங்கை போல உள்ள உண்மையைக்கூட கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிடுகிறது.

ஆகவே அரசியல் சார்ந்து நான் எப்போதும் மிக நடைமுறை வாய்ந்த, மிகப்பொதுப்படையான உண்மையையே சொல்ல முயல்கிறேன். சாமானியனின் உண்மை அது. பொதுவெளியில் அதைச்சொல்லவே இன்று ஆளில்லை. எழுத்தாளன் சாமானியன் காணாதவற்றைச் சொல்லும் குரலாக ஒலித்த காலம் மறைந்து அவன் சமானியனின் குரலாகவே ஒலிக்கவேண்டியிருக்கிறது. அதுவே இந்த வினாவுக்கு தற்காலிகமான விடையாக இருக்கும். மேலும் பொருத்தமான விடைகள் வரும்போது இதைக் குறைத்துச்சென்று முடிந்தால் இறுதியில் தவிர்த்தும் கூட செல்லலாம்.

தற்போது எனக்கு மூன்று கூறுகள் கண்களுக்குப் படுகின்றன.

ஒன்று, உலகளாவ எழுந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அறைகூவல்.

இரண்டு ,முற்போக்குத்தரப்பு தன் விழுமியங்களை தானே அழித்துக்கொண்டிருப்பது.

மூன்று ,பல்லினத்தேசியம் என்னும் நவீன விழுமியத்தின் தற்காலிகத் தோல்வி

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அறைகூவல்-அதைத் தவிர்த்துவிட்டு மேலே செல்லவே முடியாது. அது இங்கே சில கூலிப்படையினராலும் போலி முற்போக்கினராலும் சொல்லப்படுவதுபோல ஊடக மாயையோ கட்டமைக்கப்பட்ட அரசியல் ஊகமோ ஒன்றும் அல்ல. நாம் அன்றாடம் சந்திக்கும் யதார்த்தம். அதை எவரும் சொற்களால் இல்லையென்றாக்கவோ குறைத்துக்காட்டவோ முடியாது.

உலகின் பல நாடுகளில் பரவியிருக்கும் ஒரு பெருமதம் இஸ்லாம். இஸ்லாமின் அடிப்படையிலேயே ஒரு சர்வதேசக்கனவு உள்ளது. மெக்காவை மையமாக்கி உலகத்தை ஓர் இஸ்லாமிய நாடாக்க வேண்டுமென்ற அறைகூவல். இஸ்லாமிய மெய்யியலில் இருந்து எளிதில் பிரிக்க முடியாதபடி அது அமைந்துள்ளது. அது எங்கே என்று அறிவுஜீவிகளைப்போல தேடவேண்டியதில்லை, ஏதேனும் ஓர் இஸ்லாமிய தொலைக்காட்சியை அரைமணிநேரம் பார்த்தாலே போதும்

உண்மையில் எல்லாத் தீர்க்கதரிசன மதங்களிலும் அத்தகைய உலகைவெல்லும் கனவு இருக்கும். பௌத்தமோ கிறித்தவமோ அந்தக் கனவிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டன. மாறாக இஸ்லாமில் சென்ற நூறாண்டுகளுக்குள், எண்ணைச் செல்வத்தின் ஆதரவுடன், அந்தக் கனவு மிக வலுவாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டு எழுந்துள்ளது. உலகம் முழுக்க வேகமாகப் பரவிவருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். அதன் உக்கிரமான முகம். ஆனால் எல்லா இஸ்லாமியப் பிரிவுகளும் வெவ்வேறு அழுத்தத்தில் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இக்கனவு இஸ்லாமிய மதம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் முன்னரே உருவாகி நிலைபெற்றிருக்கும் தேசியங்களுடன் இஸ்லாமியர்களை மோதவைக்கிறது.இந்தியத்த்தேசியத்தில் மட்டுமல்ல அத்தனை நவீன தேசியங்களுடனும் இஸ்லாம் மோதுவதைக் காணலாம். இங்கே இன்று தமிழ்த்தேசியர்கள் இஸ்லாமியத் தேசியத்தின் ஆதரவாளர்கள். ஆனால் இலங்கையில் தமிழ்த்தேசியம் உருவானதுமே முதல் முரண்பாடு இஸ்லாமியத்தேசியத்துடன்தான் உருவானது.

அத்தனைதேசியங்களுடனும் இஸ்லாமிய உள்ளம் மோதுகிறது.அதற்குள் தங்களை அந்நியர்களாக உணர்கிறது.  . அவர்கள் ஒதுங்கும்போது மேலும் அந்நியப்படுகிறார்கள். இவ்வுணர்வு மிக எளிதில் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்னும் கற்பனைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது. அவர்களுக்கு முழுமையான பொருளியல் உரிமையும், அரசியல் உரிமையும் அளிக்கப்படும் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட சராசரி இஸ்லாமியரின் எண்ணம் தாங்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட இனம் என்பதும், ஒர் இஸ்லாமிய நாட்டில் மட்டுமே தாங்கள் முழு உரிமையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கமுடியும் என்பதுமாகும். இதை அவர்கள் அத்தனை ஊடகங்களிலும் பதிவும் செய்திருப்பார்கள் –ஐயமிருந்தால் ஏதேனும் இஸ்லாமிய இதழை எடுத்து சாதாரணமாகப்புரட்டி அதன் தலையங்கத்தைப் பார்த்தாலே தெரியும்.

1
முகமில்லா முகம் ஐ. எஸ் .ஐ. எஸ்

 

மதகுருக்களும் பிரச்சாரகர்களும் அடங்கிய இஸ்லாமிய மதத்தின் ஒற்றைப்பேரமைப்பு மொத்த இஸ்லாமியச் சமுதாயத்தையும் கட்டுப்படுத்துகிறது. திரும்பத் திரும்ப இவ்வெண்ணங்களை அவர்களுக்குள் விதைக்கிறது. மிக விரிவான வாசிப்பும், வரலாற்றுப் புரிதலும், உள்ளார்ந்த ஆன்மிக வல்லமையும் உள்ள ஒருசிலர் தவிர பிறர் இந்த ஒற்றைப்பெரும் பிரச்சாரத்திலிருந்து தப்புவது இயலாத நிலை ஒன்று.

இந்த அம்சம் உலகமெங்கும் இஸ்லாமை ஒரு மோதல் நிலையிலேயே வைத்துள்ளது. இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள மலேசியா போன்ற நாடுகளில்கூட இன்று அங்கிருக்கும் பிற இனத்தவரையும் மதத்தவரையும் ஓரளவுக்கு உள்ளடக்கிய நவீன இஸ்லாமியத் தேசியத்திற்கு எதிராக பிற அனைவரையும் முழுமையாக வெளியே தள்ளவேண்டும் என கோரும் அடிப்படைவாத இஸ்லாமியத் தேசியம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக எழுந்து மோதலை உருவாக்குகிறது.

இஸ்லாம் பிற மதங்களைப்போல தன்னை ஒரு ஆன்மிக வழிமட்டுமாக அடையாளம் கண்டு கொண்டு அதில் இன்று மேலோங்கி இருக்கும் உலகளாவிய இஸ்லாமிய தேசம் என்னும் கனவை உதறினால் மட்டுமே உலகம் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். இதை அவர்களை நோக்கிச் சொல்லும் முற்போக்காளர்கள் வேண்டும். அவர்கள் சொல்வதைச் செவிகொடுக்கும் முற்போக்காளர்கள் இஸ்லாமுக்குள் உருவாகி வரவேண்டும். இஸ்லாம் உலகப் பண்பாட்டுக்கு அளித்த கொடைமேல் மதிப்பு கொண்டவர்கள், இஸ்லாமின் அடிப்படையான ஆன்மிகம் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் இதைச் செய்யவேண்டும். அதற்கு இஸ்லாம் அமைப்பு சார்ந்து இயங்குவதிலிருந்து தனிமனிதனின் ஆன்மிகமான தேடலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக ஆகவேண்டும். இன்று மதகுருக்களால் ஆளப்படும் மதமாக உள்ளது இஸ்லாம். அவர்கள் பழமைவாதிகளாகவும் தங்கள் அதிகாரத்தை எவ்வகையிலும் இழக்க விரும்பாதவர்களாகவுமே இருப்பார்கள். அவர்களிடமிருந்து விடுபட்டு இஸ்லாமின் ஆன்மிகசாரம் மேலெழவேண்டும்.

இன்று சௌதிஅரேபியாவை மையமாகக்கொண்டு ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பல்வேறு நாடுகளில் எழுந்துள்ள வன்முறை இயக்கங்களுக்கு அடிப்படையாக அமைவது உலகளாவிய இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற அந்தக் கனவுதான். அது இஸ்லாம் இருக்கும் நிலங்களில் ஒரு கணமும் ஓயாத குருதிப்பெருக்காக மாறியுள்ளது. அங்கு நிகழும் அழிவுகளில் பெரும்பாலானவை அவர்கள் தங்களுக்குள்ளே நிகழ்த்திக் கொண்டவை. நாளை உருவாகவிருக்கும் அந்த இஸ்லாமிய அகிலத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பது சுன்னிகளா ஷியாக்களா, உதிரி இஸ்லாமிய நம்பிக்கையாளர்களை என்ன செய்வது போன்றவை துப்பாக்கி முனையில் தீர்க்கப்படுகின்றன.

இஸ்லாம் அல்லாத உலகம் அறத்தை மையமாக்கியது என்றோ, முற்றிலும் நேர்மையான உலகப்பார்வை கொண்டது என்றோ ஒரேயடியாகச் சொல்ல நான் முன்வரமாட்டேன். ஆனால் சென்ற முந்நூறாண்டுகளாக ஐரோப்பா உருவாக்கிய சில விழுமியங்களே நவீன உலகின் அடிப்படைகள். ஜனநாயகம், மானுடசமத்துவம், தனிமனித உரிமை போன்றவை. அவை இஸ்லாமோ, கிறித்தவமோ, இந்துமதமோ, பௌத்தமோ உருவாக்கிய பழைய சமூகங்களைவிட இன்னும் அழகிய ஆரோக்கியமான சமூகங்களை நிறுவி உலகத்துக்கே முன்னுதாரணமாக அமைந்தவை. இந்தியர்களாகிய நாமும் ஐரோப்பாவின் அந்த விழுமியங்களையே முன்னுதாரணமாகக் கொண்டுள்ளோம். அதுவே இந்திய சுதந்திரப்போராட்டமாக மாறியது, நவீன இந்தியாவாகவும் உருமாறியது. விவேகானந்தரும், காந்தியும், நேருவும், அம்பேத்கரும் அந்த மரபில் எழுந்தவர்களே.

இந்துமதமும் கிறிஸ்தவமதமும் பௌத்தமும் அந்த நவீன விழுமியங்களுக்கு எதிராகவே ஆரம்பத்தில் நிலைகொண்டன. ஏனென்றால் அவை சென்ற காலத்திற்குரியவை. ஆனால் அவற்றுக்குள் சீர்திருத்தவாதிகள் தோன்றி அந்த மதங்களை நவீன விழுமியங்களை நோக்கிக் கொண்டு சென்றனர். ராஜா ராம்மோகன் ராய் முதல் காந்தி வரையிலான இந்துமதச் சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு இது. மாறாக இஸ்லாம் இந்த இருநூறாண்டுகளில் முளைத்து உலகெங்கும் பரவியிருக்கும்  அந்த  நவீன விழுமியங்களுக்கு எதிரான சமரசமற்ற போரையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன்வழியாக சென்ற முந்நூறாண்டுகளில் உலகமெங்கும் மெல்ல உருவான முற்போக்கு நகர்வுகள் அனைத்தையும் பின்னுக்கிழுக்கும் மாபெரும் எடையாக அது மாறிவிட்டிருக்கிறது. அதன் பிரம்மாண்டமான அமைப்புவல்லமை, அதில் மதகுருக்களுக்கு இருக்கும் முதன்மை இடம், அதுபரவியிருக்கும் நாடுகளில் ஜனநாயக அரசுகளே இல்லாமல் பெரும்பாலும் மன்னராட்சியே நிலவுவது, அதன் எண்ணைச்செல்வம் என பலகாரணங்களால் இந்தப்போர் மிக வலுவானதாக அமைந்துள்ளது.

அந்தப்போர் வலுக்கும் தோறும் உலகெங்கும் சுதந்திர- ஜனநாயக சமூகங்களின் மக்கள் அச்சம் கொள்கிறார்கள். தங்கள் முன்னோடிகள் முந்நூநூறாண்டுகள் கருத்தியல் தளத்திலும் சமூகதளத்திலும் போராடி தேடியளித்த அனைத்தும் அழிக்கப்பட்டுவிடுமோ என்ற பதற்றம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த யதார்த்தத்தையும், மக்களின் இந்தப் பதற்றத்தையும் முற்போக்காளர்கள் அடையாளம் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். ஒர் உயர்ந்த லட்சியவாத நிலையில் நின்று கொண்டோ அல்லது கண்மூடித்தனமான வலதுசாரிஎதிர்ப்பு எனும் வெறுப்பு நிலை எடுத்தோ அல்லது முற்போக்கு அமைப்புகளுக்குள் ஊடுருவியிருக்கும் கைக்கூலிகளின் கருத்துகளுக்கு இடமளித்தோ அவர்கள் தொடர்ச்சியாக உலக நாகரிகத்திற்கு எதிராக எழுந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதனுடன் சமரசம் செய்து கொள்கிறார்கள். அதுவே அவர்களின் முதல் தோல்வி.

இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகெங்கும் நவீன குடியரசுகள் உருவாக்கி இருக்கும் தனிமனித உரிமைகளையும், ஜனநாயக அமைப்புகளையும், நீதிமுறையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மேலெழுகிறது என்பது கண்கூடு. இவ்வரசுகளால் இதன்பொருட்டு தாங்களே உருவாக்கிக்கொண்ட, நீண்ட வரலாறுகொண்ட, ஜனநாயக அமைப்புக்களை நிராகரிக்கவும் முடியாது. விளைவாக சாமானிய மக்கள் நவீன ஜனநாயக அமைப்புகளே இஸ்லாமியத் தீவிரவாதம் என்னும் உலகளாவிய ஆபத்தை எதிர்ப்பதற்குத் திராணியற்றவை என நம்பத்தலைப்படுகிறார்கள்

உதாரணமாக இந்தியாவைப் பொறுத்தவரை மிக விரிவான நீதிமன்ற அமைப்பு இங்கு உள்ளது. இங்கு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட முறையாக விசாரிக்கப்பட்டு சாட்சிகளின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வமைப்பை அடிப்படைவாத வன்முறை அமைப்பு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் இந்திய அரசு அதை எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. இங்கே மிகமிக அரிதாகவே தீவிரவாதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் மாபெரும் அமைப்புக்கு எதிராக எழுந்துவந்து எந்த சாமானியன் சாட்சி சொல்லமுடியும்?

அவ்வாறு அபூர்வமாகத் தண்டிக்கப்பட்டால் உடனே இங்குள்ள மனிதஉரிமை அமைப்புகள் கொதித்து எழுகின்றன. இங்கே தனிமனித உரிமைக்கான அனைத்துக் கோரிக்கைகளும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தண்டிக்கப்படும்போது மட்டுமே எழுகின்றன என்பதை சாமானியன் அறிவான். மனித உரிமை அமைப்புக்கள் நடைமுறையில் தீவிரவாதத்திற்கான ஐந்தாம்படைகளாகவே செயல்படுவதை அவன் காண்கிறான். ஒவ்வொரு முறையும் இதைக்காண்கையில் அவன் நம் ஜனநாயக அமைப்புமேல் நம்பிக்கை இழக்கிறான். மனித உரிமைப் போராளி என்ற பேரில் செயல்படும் கூலிஅறிவுஜீவிகள் உண்மையில் ஜனநாயக அடிப்படைகளையே அழிப்பது இவ்வாறுதான். இவையனைத்துமே மனித உரிமைகளே தேவையில்லை என வாதிடும் வலதுசாரி அமைப்புக்கு சாதகமானவையாக மாறுகின்றன. உலகமெங்கும் நிகழ்வது இதுதான்.

ஐரோப்பிய நாடுகள் அவர்களுடைய மனிதாபிமானச் சட்டங்கள் காரணமாக அகதிகளை அனுமதிக்கிறார்கள். அவர்கள் வாழ அடிப்படை நிதி வழங்குகிறார்கள். மெல்ல தங்கள் சமுதாயத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்தப் பெருந்தன்மையையும் அதன் மூலம் கிடைக்கும் உரிமையையும் மிகப்பெரும்பாலும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தவறாகவே பயன்படுத்திக் கொள்கிறது. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலுமே அகதிகளாக உள்ளே நுழைந்த இஸ்லாமியர்கள் அங்கு ஒர் அடிப்படைவாத சமுதாயத்தை உருவாக்குகிறார்கள். ஒரு தலைமுறை கடப்பதற்குள்ளேயே அந்நாடுகளுக்குள் இஸ்லாமிய அகிலமொன்றை கனவு காணும் தனித்தேசியமாக தங்களைக் கட்டமைத்துக் கொள்கிறார்கள்.

இதுவே இந்தியாவிலும். எண்பதுகளின் உச்சகட்ட பஞ்சங்களின்போது இந்தியாவுக்குள் வந்த கிழக்கு வங்க அகதிகளை இந்தியசமூகம் ஏற்றுக்கொண்டது. எல்லை காக்கும் ராணுவத்தின் ஊழலும் காங்கிரஸ் அரசின் ஓட்டரசியலும் அதற்கு உதவின. ஆனால் ஒருதலைமுறைக்குள் அஸாமிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் அந்த இந்தியக் குடியுரிமை பெற்ற இஸ்லாமிய அகதிகள் இந்தியாவுக்கு எதிரான ஒரு சமூகமாகத் திரண்டுள்ளனர். அந்த உள்ளூர்மக்களுக்கு எதிரான வன்முறையாளர்களாக உள்ளனர். சென்ற வடகிழக்குப் பயணத்தில் பல ஊர்களில் வெளிப்படையாகவே பாகிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை நாங்கள் பார்த்தோம் [நாங்கள் சென்றுவந்த சிலமாதங்களில் அங்கே வன்முறை வெடித்தது]. இந்தியா முழுக்க தீவிரவாதம் அவர்களால் பரப்பப்படுகிறது. ஆனால் ஒரு சொல் கூட அதைப்பற்றிப் பேசமுடியாது, பேசினால் அது இந்துமத அடிப்படைவாதம் என இங்குள்ள கூலிப்படை ஒன்று கூச்சலிடத் தொடங்கும்.

இந்த உண்மையான பிரச்னையை எதிர்கொள்வது எப்படி என்பது தான் இன்றைய கருத்துலக அறைகூவல். இதை வெற்று முற்போக்குக் கோஷங்கள் மூலம், இந்த உண்மையைச் சுட்டிக் காட்டுபவர்களை வலது சாரிகள் என்ற முத்திரை குத்தி வெறுப்பைக் கக்குவதன் மூலம், மிகையான மனிதாபிமான நாடகங்கள் நடிப்பதன் மூலம் முற்போக்காளர்கள் தவிர்க்கிறார்கள். ஆகவே அவர்கள் மீது ஆழமான அவநம்பிக்கையை சாதாரண மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொருநாளும் இந்த அவநம்பிக்கை வளர்ந்து வருகிறது.

இந்தியாவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி சுதந்திர ஜனநாயகவாதிகளும் இடதுசாரிகளும் அடங்கிய முற்போக்காளர்கள் வெறும் லட்சியவாதிகள், பலவீனமானவர்கள், அவர்களால் நவஉலகுக்கு எதிரான சக்தியாக எழுந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை தடுக்க முடியாது என்ற எண்ணம் சாதாரண மக்களுக்கு உருவாகியிருக்கிறது. இதுவே வலதுசாரிகள் மேலெழுந்து வருவதற்கு முதன்மைக் காரணமாகிறது. இந்த வரலாற்றுத் தருணத்தை நன்கு புரிந்து கொண்டவர்கள் வலதுசாரிகள். தங்களை மீட்பர்களாகவும், படைக்கலம் ஏந்திய முன்னணிப் போர்வீரர்களாகவும் காட்டிக் கொள்கிறார்கள். மிகச்சிறிய கடினநடவடிக்கைகள் சிலவற்றை எடுக்கிறார்கள். அவை பெரும்பாலும் குறியீட்டுத்தன்மை கொண்ட செயல்பாடுகள். மக்கள் ஆதரவு உருவாகிறது, வெல்கிறார்கள்.

தங்கள் வலதுசாரிக் கருத்துக்கள் மூலம் வேறு ஒருவகையில் வலதுசாரிகளும் முந்நூறு ஆண்டுகளாக ஐரோப்பாவும் நூறுஆண்டுகளாக இந்தியாவும் வளர்த்துக்கொண்ட ஜனநாயக மதிப்பீடுகளையும் மனிதாபிமான உரிமைகளையும் இல்லாமலாக்குகிறார்கள். அதாவது இஸ்லாம் எதை நிகழ்த்தும் என்று ஐயம் கொள்கிறார்களோ அதையே இவர்களும் அந்த ஐயத்தின் விளைவான அச்சத்தால் நிகழ்த்துகிறார்கள். எது அழிந்துவிடும் என அஞ்சுகிறார்களோ அதை அழிக்கும் சக்திகளுக்கே மக்கள் வாக்களிக்கிறார்கள். ட்ரம்ப் இன்னொரு வகையான ஜனநாய்க எதிர்ப்பு சக்தி என்பதில் ஐயமில்லை.

இந்தியாவில் இந்துத் தீவிரவாதம் ஒன்று உருவாகி வருவது கண்கூடு. இந்துத் தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் தன் மதத்திற்குள் என்ன செய்கிறதோ அதையே தன் மதத்திற்குள் செய்ய முயல்வதை நாம் பார்க்கிறோம். சிந்தனைச் சுதந்திரத்தை நசுக்கிறார்கள். சிறிய அளவிலேனும் மாற்றுக் குரல் எழுவதை வெறுப்புடனும் கசப்புடனும் பார்க்கிறார்கள். உச்சகட்ட வெறுப்பையே கருத்தியல் செயல்பாடாக நடத்துகிறார்கள். நமது மதம் பிற மதம் என்ற பிரிவினையை மீள மீள வலியுறுத்துகிறார்கள். ஒரு இஸ்லாமியர் ராமாயணத்திற்கு உரை எழுதியபோது கல்வி கற்றவர்களான கேரளத்தினரின் எதிர்ப்பை நாம் பார்த்தோம். இதுதான் உலகில் எழும் இக்கட்டு.

முற்போக்காளர்கள் தங்கள் பொய்யான லட்சியவாதத்திலிருந்து மீண்டு உண்மையை நேரடியாகப் பேசும் ஒரு காலம் வருமென்றால் மட்டுமே அவர்களால் வலது சாரிகளை எதிர்க்க முடியும். மாறாக வளர்ந்துவரும் வலதுசாரித் தரப்பைக் கண்டு அச்சம்கொண்டு அதை மூர்க்கமாக வசைபாடுவதும் வெறுப்பைக் கக்குவதுமே தங்கள் வழியாக அவர்கள் கொண்டார்கள் என்றால் வலது சாரிகளால் அவர்கள் மிக எளிதாக ஓரம் கட்டப்படுவார்கள். பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பிரான்ஸிலும் இதுவே நிகழ்கிறது. தொடர் தோல்விகளுக்குப் பிறகும் கூட இடதுசாரிகள் எதையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

எதார்த்தங்களை புரிந்து கொள்வதில் இடதுசாரிகளுக்கு சென்ற இருபதாண்டுகாலமாக மிகப்பெரிய சரிவுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்கள் தோற்கடிக்கப்படும் தோறும் மேலும் ஆங்காரம் கொள்கிறார்கள். அது அவர்களின் சமநிலையை இழக்கச் செய்கிறது. தங்களின் உண்மையான எதிர்நிலைகள் என்ன என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஏன் தாங்கள் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறோம் என்று வகுத்துக்கொள்ள முடிவதில்லை. ஆகவே தாங்கள் எடுக்கும் மூர்க்கமான ஒற்றை நிலைபாட்டுக்கு எதிராக ஒரு சொல் எழுந்தாலும் அவர்களை வசைபாடி உச்சகட்ட வெறுப்பைக் கக்குகிறார்கள். தங்களை மேலும் மேலும் ‘தீவிரமானவர்களாகக்’ காட்டிக்கொள்ளும் பொருட்டு மேலும் கண்மூடித்தனம் கொள்கிறார்கள்.

முட்டாள்தனங்களுக்கு இங்கு எல்லையே இல்லை. உதாரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு மனிதஉரிமை கோரிக்கைக்காக ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது அங்கே கூடவே சுதந்திர காஷ்மீருக்கான ஒரு குரலும் எழுகிறது. அதையும் ஒருவகை முற்போக்காக இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு மனித உரிமைப்போரில், ஜனநாயகச் செயல்பாட்டில் காஷ்மீரின் மதவெறியன் ஒருவன் கலந்துகொண்டாலே அது முழுமையாகப் பொருளிழந்துவிடுகிறது. அந்த ஒற்றைக்குரல் அந்த ஒட்டுமொத்த மனித உரிமை இயக்கத்தையுமே உலகளாவிய இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலுக்கு ஆதரவான கள்ளச்செயல்பாடாக மாற்றிவிடுவதை நம் இடதுசாரிக ளால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதைச் சுட்டிக்காட்டுபவர்களை உடனடியாக இஸ்லாமிய எதிரிகள் என்றோ இந்துத்துவ வெறியர்கள் என்றோ அவர்கள் வசைபாட ஆரம்பிக்கிறார்கள்.

மதஅடிப்படையிலான ஒரு தேசியத்துக்கான போராட்டத்திற்கும் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் இவர்கள். முந்தையது மனித குலத்தையே இருட்டுக்குள் இழுத்துச் செல்லும் பிற்போக்கு விசை என்பதை புரிந்து கொள்ள முடியாத இடத்தில் இடதுசாரிகள் இருக்கும்போது அவர்களிடமிருந்து மக்கள் அந்நியப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

[மேலும்]

முற்போக்கின் தோல்வி ஏன் – 2

முதற்பிரசுரம்Mar 10, 2017

முந்தைய கட்டுரைமுழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி – டி.ஏ.பாரி
அடுத்த கட்டுரைஅறிவுஜீவிகள்- கடிதங்கள்