மேயோ கிளினிக்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்
இலக்கியம் அரசியல் என்றெல்லாம் செல்லும்போதும் நீங்கள் அவ்வப்போது மருத்துவம் உடல்நலம் பற்றியெல்லாம் பேச ஆரம்பிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேயோ கிளினிக் போன்ற நூல்கள் நமக்கு மிக மிக அவசியம். மருத்துவம் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்று நம்முடைய மக்கள் இத்தகைய நூல்கள் வழியாகத்தான் அறிந்துகொள்ள முடியும். நல்ல மருத்துவம் என்பது நோயாளிக்கு உடல்நலத்தைக் கற்பிப்பதாகவே அமையும் என்று சொல்வார்கள். அந்த கல்வி இப்போது குறைந்துகொண்டே வருகிறது. அதை மீட்டெடுத்தாகவேண்டும்
பிரபாகர்

அன்புள்ள ஜெ!
நான் திருநெல்வேலியைச் சேர்ந்த மன நல மருத்துவன்.தாங்கள் நவீன மருத்துவம் பற்றி எழுதியதை நான் பெரும்பாலும் ஒத்துக் கொள்கிறேன்.என்னிடம் வரும் நோயளிகளிடம் நான் தமிழில் விளக்கியதும் பெரும்பாலானோர் இதுவரை யாரும் இப்படிச் சொன்னதில்லை என்று கூறும் போது டாக்டரிடம் என்ன தான் பேசினார்கள் என்று வியப்பதுண்டு.
ஒரு டீ குடிப்பதற்கு முன் டீக்கடைக்காரரிடம் ஆயிரம் கேள்வி கேட்கிறோம்.ஆனால் மருத்துவரிடம் நாம் பயப்ப்டுகிரோம்.இன்னும் நாம் மருத்துவர்களை தந்தை,முதலாளி,கடவுள் போன்ற ஸ்தானத்தில் வைத்திருக்கிறோம்.அது தேவையற்றது.
காசு கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் கேள்வி கேட்கும் அடிப்படை உரிமை இருக்கிறது.எதற்காக இந்த மருந்து ?ஏன் இந்த பரிசோதனை?என்ன பிரச்சனை என் உடலில்?சிகிச்சை முறைகள் என்னென்ன?ஒவ்வொன்றும் என்ன செலவாகும் என்றெல்லாம் விளக்க மருத்துவர் கடமைப் பட்டவர். இன்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் அதிகரித்திருப்பதாலும்,மக்களின் கொடுக்கும் திறன் குறைவாக இருப்பதாலும்,குறிப்பிட்ட காலத்துக்குள் பல நோயளிகளைப் பார்க்கின்றனர்.வெளிநாடுகளில் ஒரு மருத்துவர் ஒரு நாளில் 6 முதல் 10பேஷண்ட் களை மட்டுமே பார்ப்பார்கள்.நோயாளிகளுக்கு இன்ஷூரன்ஸ் கம்பெனி பணம் கொடுக்கும்.அல்லது அரசாங்கமே கொடுக்கும்.
அது போன்ற நிலமை இங்கு வந்தால் தான் பரஸ்பரம் இருவருக்கும் சிறந்ததாக இருக்கும்

அன்புடன்
Dr.இராமானுஜம்

அன்புள்ள ராமானுஜம் அவர்களுக்கு
மிக அருகே இருந்து ஒரு கடிதம் வரும்போது உண்மையிலேயே மகிழ்ச்சி அதிகமாக இருக்கிறது. பயணத்தில் இருந்தமையால் கடிதம் போட தமாதம். தாங்கள் கூறுவது உண்மையே. நாம் எல்லா விஷயங்களிலும் விரிவாக விசாரிக்கிறோம், மருந்துகள் மருத்துவம் தவிர. அதேபோல இன்னொரு பக்கம் நம் மருத்துவர்கள் அவர்களிடம் ஐயங்கள் கேட்பதை விரும்புவதில்லை. அதை நாம் மருத்துவரை ஐயப்படுவதாகவே எடுத்துக்கொள்கிறார்கள். எளிய கேல்விகள் கேட்டு நான் அவமானப்பட்டிருக்கிரேன். நமது நோயாளிகளும் மருத்துவர்களை ஒரு ‘சர்வீஸ் புரவைடர்’ என்ற நிலையில் வைத்துப்பார்க்க இன்னும் பழகவில்லை. மருத்துவர் இன்னமும் இங்கே அற்புதங்கள் நிகழ்த்தும் தேவதூதர்தான். அதை நம் மக்கள் மருத்துவரைப்பற்றிச் சொல்லும் கதைகளில் உள்ள அற்புதச்சுவை மூகம் அறியமுடிகிறது
ஜெ

முந்தைய கட்டுரைஅழிமுகம்:மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழியம்,ஞானி:கடிதங்கள்