32. விண்பறந்து வீழ்தல்
இந்துமதி கருவுற்ற நாள் முதலே அவள் இறப்பாள் என்பது ஆயுஸின் உள்ளத்தின் ஆழத்தில் தெரிந்தது. அவள் அஞ்சியும் பதைத்தும் தன்னுள் நிகழ்வதை சொல்ல முயல்வதையெல்லாம் உவகையுடனும் எதிர்பார்ப்புடனும் பேசி அதை அவன் கடந்து சென்றான். சோர்ந்து வெளுத்து உலர்ந்து உடல்கிழிந்து அவள் இறந்தபோது அவ்வண்ணம் நிகழவே இல்லையென்பதுபோல் பிறிதொரு எல்லையில் தன்னை விலக்கிக்கொண்டான். தெற்குக்காட்டில் எரியுண்டு அவள் மறைந்தபோது அனல் வைத்து வணங்கி மீண்டுவரும் வழியில் ஒவ்வொரு காலடியிலும் அவளை தன் உள்ளத்தின் ஆழத்தில் அழுத்திச் செலுத்தி மறைத்துவிட்டு பிறிதொருவனாக அரண்மனைக்குள் நுழைந்தான்.
மூன்று நாள் ஒருபொழுதும் தனிமையும் நோற்றான். பதினாறாவது நாள் உயிர்மீட்பு விருந்தும் நாற்பத்தோராவது நாள் விண்ணேற்றச் சடங்கும் முடிந்தபிறகு அவன் அவளை எண்ணவேயில்லை. அதற்குள் அக்குழந்தை அவனை முழுமையாக ஆட்கொண்டது. அதன் ஒவ்வொரு கணமும் அவனுள்ளம் நிறைந்தது. குழந்தை வளர்வதன் முறைமைகள் குறித்து மருத்துவர்கள் சொன்ன அனைத்தையும் கடந்து எழுந்துகொண்டிருந்தது அது. நூறு ஓநாய்களின் பசி, நூறு குதிரைக்குட்டிகளின் துடிப்பு, நூறு யானைக்குட்டிகளின் ஆற்றல் என்று அதைப்பற்றி அவைப்புலவன் பாடினான்.
அரசுப் பணிகள் அனைத்தையும் ஆயுஸ் துறந்தான். அமைச்சர்களிடம் அவையை ஒப்படைத்துவிட்டு பொழுதும் இரவும் கனவும் மைந்தனுடனேயே இருந்தான். மடியில் மைந்தனை படுக்கவைத்து பொற்கிண்டியில் பாலை பரிந்து அணைத்து அவன் ஊட்டுகையில் அக்கிண்டி முலையென்றே ஆகும் விந்தையை சேடியர் கண்டு விழி பரிமாறிக்கொண்டனர். இரவில் மைந்தனை தன் அருகிலேயே படுக்கவைத்து துயில்கொண்டான். ஆழ்துயிலிலும் இடக்கை துயிலாது மைந்தனை தொட்டுக்கொண்டிருந்தது. சிற்றொலியிலேயே எழுந்து மைந்தன் முகம் தொட்டு கனிந்த கனவுக்குரலில் “என்ன, என் செல்வமே?” என்று அவன் கேட்டான். தாயுமானவன் என்று அவனை அவன் குடி வாழ்த்தியது.
பிறந்து நினைவறிந்த நாள்முதல் ஒருபோதும் அறிந்திராத பேருவகையை மைந்தனூடாக ஆயுஸ் அறிந்தான். “பிறிதொன்றிலாது ஒன்றில் ஆழ்ந்திருத்தலின் பெயர்தான் உவகை என்பது. அதை இப்போது அறிகிறேன்” என்று அவன் அமைச்சனிடம் சொன்னான். “விண்ணில் தெய்வங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோற்றத்தில் எழுந்தருளுகின்றன, அரசே” என்றான் சுதர்மன். “பொன்னென்றும், பொருள்மிக்க நூலென்றும், உறவென்றும், உயிர்மீட்பென்றும் தெய்வங்கள் இறங்கி வரலாம். பிள்ளையென்று வருகையில் மட்டுமே அவை முழுமை கொள்கின்றன” என்று மலர்ந்த சிரிப்புடன் அரசன் சொன்னான்.
மைந்தனுக்கு விளையாடுவதற்காக மணிமுடியை சகடமென உருட்டிவிட்டான். அரசக் கணையாழியை நூலில் கட்டி ஆட்டிக் காட்டி நகைக்க வைத்தான். குரங்குபோல மார்பில் பற்றியிருக்கும் குழவியுடன் நகருலாவுக்குச் சென்றான். “இத்தகைய பெரும்பற்று பெருந்துயரையே கொண்டுவரும். அரசே, நாம் பற்றுவதெதுவும் நம்மையும் பற்றிக்கொள்வனவே. மீட்சியை விழைந்தால் அதை உடையுங்கள்” என்று அவன் குலமூத்தார் சொன்னார். “அமைச்சரே, அரசரிடம் சொல்சூழும் அணுக்கம் எவரையும்விட தங்களுக்கே உள்ளது” என்றார். “சென்று சொல்க, அவர் கால்கள் புதையத் தொடங்கிவிட்டன!” சுதர்மன் “நான் இதை அறியேன். இப்போதுதான் மணம் கொண்டிருக்கிறேன். மைந்தரைப் பெற்ற மகிழ்வை இதுவரை அறிந்திலேன். நான் சொல்லும் எச்சொல்லும் அவர் செவிக்கு பொருள்கொள்ளா. சிறுவர் குழறலென்று நோக்கி சிரித்துக் கடந்துசெல்வார்” என்றான்.
“ஆம், எச்சொல்லும் சென்றடையாத இடம் ஒன்றுள்ளது. அங்கு மட்டுமே மனிதர்கள் பெரும் உவகையில் இருக்கிறார்கள். இங்கு சூழ்ந்துள்ள அனைத்தும் உள்ளூறும் அவ்வுவகையை நீர்த்துப்போகவே செய்கின்றன என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்” என்றார் முதிர்ந்து விழிபழுத்த குலமூத்தார் ஒருவர். அனைவரும் திகைப்புடன் திரும்பி அவரை நோக்கினர். “அரசர்மேல் வீற்றிருக்கிறது பிள்ளைத்துயர் என்னும் தீச்சொல். அவர் கேட்டுப்பெற்ற தந்தைக்கொடை அது” என்று ஒருவர் சொல்ல பிற அனைவரும் அவரை திரும்பி நோக்கினர்.
“என்ன நிகழப்போகிறது என்று அறியேன். இப்பிள்ளையை அவர் இழக்கப்போவதில்லை என்பது மட்டுமே ஆறுதலளிக்கிறது. ஏனெனில் இந்திரனை வெல்லும் மைந்தன் இவர் என்று நிமித்திகர்கள் மீண்டும் மீண்டும் உரைக்கிறார்கள். அதுவே நிகழட்டும்” என்றான் சுதர்மன். “அரசரிடம் சொல்வோம், கடிவாளமற்ற புரவி தேரை கவிழ்த்துவிடும்” என ஒருவர் சொல்ல “அது எவ்வகையிலும் கவிழும் தேர் என நாம் அறிவோம். முடிந்தவரை அது ஓடட்டும், செல்லும் இன்பத்தையாவது அவர் அடையட்டுமே!” என்றார் பிறிதொருவர். எவரும் எதுவும் சொல்லவில்லை.
ஏழு மாதம் ஆயுஸ் தன் இருத்தலின் கூர்முனையின் ஒளிமட்டுமென இருந்தான். ஒருநாள் மைந்தனை கூடத்தில் விளையாடவிட்டு அப்பால் அமர்ந்து அவன் ஆடலைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். உருண்டு செல்லும் களித்தேரை கையால் தட்டி தவழ்ந்து பின்தொடர்ந்து, செல்லும் வழியிலேயே சிமிழ் ஒன்றை கையில் எடுத்து, அதை வாயில் வைத்து கடித்துச் சுழற்றி அப்படியே நழுவவிட்டு, பாய்ந்து சென்று மரயானை ஒன்றை எடுத்துச் சுழற்றி அப்பால் எறிந்து, குனிந்து தன் இடை அணிந்த சங்கிலியைப்பற்றி இழுத்து, பிறிதொரு எண்ணம் தோன்ற திரும்பி அவனை நோக்கி சிரித்தான் நகுஷன்.
பித்தன் என மலர்ந்த முகத்துடன் அவனை நோக்கிக்கொண்டிருக்கும் தந்தையின் அக்காட்சியை அன்றி பிறிதொன்றையும் அவன் கண்டதே இல்லை. “ந்தை, ந்தை” என்றபடி கைகளை நிலத்தில் ஓங்கி அறைந்தபடி எச்சில்குழாய் நெஞ்சில் ஒழுக அவனை நோக்கி வந்தான். மைந்தனை எடுத்து தூக்கிச் சுழற்றி நகைத்து நெஞ்சோடணைத்து இரு கன்னங்களில் முத்தமிட்டான் தந்தை. “உணவூட்ட வேண்டும், அரசே” என்றாள் அப்பால் நின்ற சேடி. “கொண்டு வருக! நான் ஊட்டுகிறேன்” என்றான். பொற்கிண்ணத்தில் பருப்பும் பாலும் நெய்யும் விட்டுப்பிசைந்த அன்னத்தை சேடி கொண்டுவர கைகளால் அள்ளி விரல்களால் மசித்து அதை மைந்தனுக்கு ஊட்டினான். அவ்வுதடுகளில் கைபடுந்தோறும் அவன் விரல்கள் கனிந்து குழைந்து உருகிய நெய்யாலானவை என்றாயின.
இளஞ்சுடர் நெய்யேற்பதுபோல் உண்ணும் மைந்தனை அப்போது பிறர் நோக்கலாகாதென்று நினைத்தான். சுவர் நோக்கி திரும்பி அமர்ந்து உணவை ஊட்டி முடித்த பின்னர் உடலெங்கும் உணவு சொட்டியிருந்த மைந்தனுடன் எழுந்து “என்னவென்றறியேன். இப்போதெல்லாம் அவன் நன்கு உண்பதேயில்லை. நான்கு வாய் உண்டான். எஞ்சியதை நான் உண்டேன்” என்றான் சேடியிடம். அவனை அறிந்திருந்த முதுசேடி “ஆம், அவர் உண்பது குறைந்துவிட்டது. மருத்துவரிடம் சொல்ல வேண்டும்” என்றபின் “கொடுங்கள் அரசே! கழுவித் துடைத்து வருகிறேன்” என்றாள்.
மைந்தனை அளிக்கையில் அவன் கைகால்களை உதைத்து முகம் சுளித்து வீரிட்டழுதான். அவ்வாறு அவன் அழுவதில்லை என்பதனால் “என்ன என்ன?” என அவன் உடலை நோக்கினான் ஆயுஸ். “நகை குத்தியிருக்கும்… நான் நோக்குகிறேன்” என்றாள் முதுசேடி. அவனுக்கு உகந்த முதுமகள் என்பதனால் எப்போதும் சிரித்தபடி உடன்செல்லும் நகுஷன் கைநீட்டி கண்ணீர் வழிய சிறுஉதடு குவிந்து விதும்ப அழுதபடியே சென்றான். அவன் உடலின் பொன்னகை ஒளியை தொலைவுவரை நோக்கியபின் உரக்க “நான் உடை மாற்றவேண்டும். விரைந்து கொண்டு வருக!” என்றபின் ஆயுஸ் அறைக்குச் சென்றான்.
ஏவலனிடம் பிறிதொரு உடை வாங்கி அணிந்து கைமெய் கழுவி வெளிவந்தபோது மைந்தனை சேடி கொண்டு வரவில்லை என்று கண்டான். “எங்கே மைந்தன்?” என்று அங்கு நின்ற காவலனிடம் கேட்டான். “மெய்கழுவ கொண்டுசென்றார்கள்” என்றான் அவன். “அதை நான் அறிவேன், அறிவிலியே! சென்று நெடுநேரமாயிற்று, என்ன செய்கிறாள் என்று பார்த்து வா!” என்றான் ஆயுஸ் எரிச்சலுடன். சென்று மீண்ட காவலன் “அரசே, மைந்தனை பிறிதொரு சேடியிடம் கொடுத்திருக்கிறார் முதுசெவிலி. உடல் ஈரத்தை துடைத்து எடுத்து வரச்சென்ற அவள் எங்கோ மைந்தனுடன் விளையாடச் சென்றுவிட்டாள்” என்றான்.
“விளையாடச் சென்றாளா? எவருமறியாமலா? இக்கணமே மைந்தனையும் அச்சேடியையும் இங்கு கொண்டு வருக! என் அறிதலின்றி மைந்தனை எங்கும் கொண்டுசெல்லலாகாதென்று எத்தனை முறை ஆணையிட்டிருக்கிறேன்!” என்று கூச்சலிட்டான். தன் உடல் பதறிக்கொண்டிருப்பதை உணர்ந்ததுமே எப்போதும் அணையாமல் ஆழத்திலிருந்த அச்சத்தை பேருருவாக கண்டான். அத்தனை பெரும் பித்தெழுவதற்கு அதுவே அடிப்படை என்று உணர்ந்தான். “இக்கணமே என் மைந்தன் இங்கு வரவேண்டும்… செல்க!” என்று அவன் கைவீசி கூவினான்.
அவனுடைய சினத்தை காவலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்பால் சென்று “விரைந்து குழவியை அரசரிடம் கொண்டுசெல்லுங்கள். உடல் தீப்பற்றியதுபோல அங்கு நின்று கூச்சலிடுகிறார்” என்றான். முதுசேடி “எங்கு சென்றாள் அவள்? என் ஆடையை மிதித்து அவிழச்செய்துவிட்டார். ஆகவேதான் அவளிடம் அளித்தேன். ஆடை திருத்துவதற்குள் கொண்டுசென்றுவிட்டாள்” என்றாள். “கன்னியருக்கு மைந்தரென்றால் பித்து” என்றாள் ஒருத்தி. குழந்தையுடன் சென்றவளை சிரித்தபடியும் எரிச்சல்கொண்டபடியும் தேடியவர்கள் மெல்ல அச்சம்கொண்டனர்.
“எங்கே? என் மைந்தன் எங்கே? இக்கணம் இங்கு வரவில்லை என்றால் தலைகளை வெட்டி உருட்ட ஆணையிடுவேன்” என்று அரசன் கூவினான். ஏதோ ஒருகணத்தில் அனைவரும் அறிந்தனர், பிழை ஒன்று நிகழ்ந்துவிட்டது என்று. முகங்கள் அனைத்தும் மாறின. “மைந்தனை காணவில்லை. அரண்மனையில்தான் எங்கோ இருக்கிறான். தேடிக்கொண்டிருக்கிறோம்” என்றான் காவலர்தலைவன். “அமைச்சரை அழையுங்கள்! அமைச்சரை அழைத்து வாருங்கள்!” என்று கூவியபடி இடைநாழியில் ஓடினான்.
அரசனின் பதற்றம் எதனால் என்று தெரியாத அமைச்சர்கள் ஒருவரோடொருவர் விழிதொட்டுக் கொண்டு இதழ் விரியாது புன்னகைத்தனர். இயல்பாக வெளியே சென்று “எங்கே அந்தச் சேடி? அரசர் கேட்கிறார். அவளை ஒளித்துவிட்டு மைந்தனை மட்டும் கொண்டுவரச் சொல்லுங்கள். வாளை உருவி அவள் தலையை கொய்துவிடுவார் போலிருக்கிறது” என்றார் சிற்றமைச்சர். ஆனால் சேடியர் முகங்களில் இருந்த அச்சம் அவரை பாதியிலேயே சொல் முறியச்செய்தது.
“அரண்மனையின் அகத்தளங்களில் எங்கும் மைந்தனுடன் அச்சேடியை பார்க்கவில்லை. இவ்விடைநாழி வழியாக சென்றால் மூன்று வாயில்கள் உள்ளன. ஒரு வாயில் நெடுங்காலமாக பூட்டியுள்ளது. அதைத் திறக்க தச்சரால் அன்றி முடியாது. பிற இருவாயில்களிலும் சேடியர் நின்றிருந்தனர். எவரும் மைந்தனுடன் சென்ற சேடியை பார்க்கவில்லை” என்றார் பெண்மாளிகையின் காவலரான ஆணிலி. ஐயம் எழ முதுசேடி “இத்திறவா வாசலை திறந்து பாருங்கள்” என்றாள். ஆணிலிகளின் தலைவி வந்து திறந்தபோது அக்கதவு இயல்பாக விரிந்தது. முன்னரே அதை உடைத்து வைத்திருந்தார்கள் என்று தெரிந்தது.
“வஞ்சம்! ஏதோ வஞ்சம் நிகழ்ந்துவிட்டது” என்று முதியசேடி கூவினாள். கதறியபடி நிலத்தில் விழுந்து தலையிலறைந்துகொண்டு அழுதாள். “இல்லை, அன்னையே! பார்ப்போம்… பொறுங்கள்” என்று ஆணிலி சொன்னாள். அவ்வாயிலைத் திறந்து மறுபக்கம் சென்றபோது அங்கு செறிந்திருந்த செடிகளுக்கு நடுவே இளவரசனின் அணிகளும் ஆடைகளும் சிதறிக்கிடப்பதை கண்டனர். செவிலியர்தலைவி ஓடி வந்து காவலர்தலைவனிடம் “இளவரசரை யாரோ கவர்ந்து சென்றுவிட்டார்கள்” என சொல்லி அழுதாள். அவன் “முரசுகள் முழங்கட்டும். கோட்டைக்காவல் அனைத்தும் கூர் கொள்ளட்டும். இளவரசருடன் செல்லும் அச்சேடியை உடனடியாக பிடித்தாக வேண்டும்” என்றபடி ஓடினான்.
செய்தி அறிந்ததும் சுதர்மன் “ஆம்” என்னும் சொல்லை தன்னுள் உணர்ந்தான். எதிர்நோக்கியிருந்தது அதுவே. சொல் சொல்லாக தன் உள்ளத்தை கோத்துக்கொண்டு அரண்மனைக்குள் சென்றான். இடைநாழிகளிலும் அறைகளிலும் பதறியபடி ஓடி காண்போரிடமெல்லாம் கூச்சலிட்டு “என் மைந்தன்! என் மைந்தன்!” என்று தவித்துக்கொண்டிருந்த ஆயுஸை கண்டான். இதற்குத்தானா எனும் சொல்லென அவன் உள்ளம் மாறியது. அச்சொல் மீள மீள ஒலிக்க அவன் நீள்மூச்செறிந்தான். வெளிவந்து “நகரெங்கும் எவ்வடிவிலும் எக்குழந்தையும் வெளிச்செல்லலாகாது. இந்நகரின் அனைத்துக் குழந்தைகளையும் அரண்மனை முகப்புக்கு கொண்டுவர ஆணையிடுங்கள்” என்றான்.
அருகிலிருந்த ஒற்றனிடம் “அரச மைந்தனாக அவர் வெளிக்கொண்டு செல்லப்பட மாட்டார். உருமாற்றப்பட்டிருப்பார்” என்றான். “எனவே குழவிகளும் குழவிவடிவு கொண்ட எதுவும் குழவியை வைக்கத்தக்க எக்கலமும் நோக்கப்படவேண்டும்” என்றான். “ஆம்” என்று உரைத்த ஒற்றன் விரைந்தான். நகரெங்கும் எச்சரிக்கை முரசுகள் முழங்கலாயின.
திகைத்து முரசுமேடைகளுக்கு முன் கூடிய மக்களிடம் இளவரசனை எவரோ கவர்ந்து சென்ற செய்தி சொல்லப்பட்டது. கிளர்ந்தெழுந்த மக்கள் எவரிடம் சினம் கொள்வதென்றறியாது கூச்சலிட்டனர். ஒருவரோடொருவர் பூசல் கொண்டனர். செய்தி அறிந்ததுமே அன்னையர் பாய்ந்து சென்று தங்கள் மைந்தரை அள்ளி நெஞ்சோடணைத்து நடுங்கலாயினர். கோட்டை வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. கோட்டைக்கு வெளியே இருந்த குறுங்காடுகளிலும் கால்வழிகள் அனைத்திலும் ஒற்றர்களும் காவலர்களும் புரவிகளில் ஏறி கூர் நோக்கியபடி அலையத் தொடங்கினர்.
மாபெரும் வலையொன்று குருநகரியிலிருந்து கிளம்பி எட்டுத்திசைக்கும் விரிந்து சென்றது. பரல்மீன் அள்ளும் சிறுவலையென காவல் படையொன்று நகரைச் சூழ்ந்து குறுகி அணைத்து ஒவ்வொரு இடமாக நோக்கி, ஒவ்வொரு குழந்தையாக தொட்டு அறிந்து அரண்மனையை அணுகி வந்தது. அத்தொன்மையான கட்டடத்தின் கருவூலங்களையும் கரவறைகளையும் சுரங்கங்களையும் மறைவிடங்களையும் பொந்துகளையும் நீர்நிலைகளையும் ஆராய்ந்தது.
மைந்தன் சென்ற பாதையை வந்து பார்த்த காவலர்தலைவன் அங்கு மண்ணில் பதிந்த காலடியை கூர்ந்து நோக்கினான். “இது அப்பெண்ணின் காலடியா?” என்றான். “ஆம், இங்கு பிறர் வருவதில்லை” என்றாள் ஆணிலியர் தலைவி. நிமித்த கணிகன் வந்து குனிந்து நோக்கி “இது நாகர் குலத்துப்பெண்” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் காவலர்தலைவன். “மரங்களில் ஏறும்பொருட்டு சிறுவயதிலேயே கால்களை பழக்குபவர் அவர்கள். ஆகவே பாதங்கள் வெளிப்பக்கமாக திரும்பியிருக்கும்” என்றான் நிமித்த கணிகன்.
காவலர்தலைவன் சிலகணங்கள் விழிநிலைத்துவிட்டு மீண்டு “நாகர் குலப்பெண் கவர்ந்து சென்றாள் என்றால் மைந்தனை மீட்பது எளிதல்ல. தனித்து வந்திருக்கமாட்டாள். வெளிச்செல்லும் வழியொன்றை அமைக்காமல் உள்ளே நுழைந்திருக்க மாட்டாள். நாகம் வளைபுக வல்லது. தலையை வாயிலில் வைத்தபின்னர் உடலை வளைத்து உள்ளிழுப்பது. கட்செவிகொண்டது. இங்கிருந்து தன் நகர்வரை மைந்தனை கொண்டுசெல்லும் தொடரமைப்பொன்று முன்னரே உருவாக்கப்பட்டிருக்கும். நம் கால்களுக்குக் கீழே அல்லது கண்களுக்குத் தெரியாமல் அது அமைந்திருக்கும்” என்றான்.
“எவ்வண்ணம் இதை அரசரிடம் சொல்வது?” என்று குலத்தலைவர் ஒருவர் சொன்னார். “சொல்லியாக வேண்டுமென்பது நமது கடமை. அவர் எதிர்பார்த்திருந்ததும் இப்பெருந்துயரை அல்லவா?” என்றார் பிறிதொருவர். “அதை சொல்லியே ஆகவேண்டும்… நம் வாழ்வில் இப்பெருங்கடனையும் அடைந்தோம் என்றே கொள்க!” என்றார் இன்னொருவர். சொல்லவேண்டியதென்ன என அவர்கள் செய்யுள் யாப்பதுபோல் சொல்சேர்த்து சமைத்துக்கொண்டனர்.
ஆனால் அவர்கள் அணுகியதுமே கண்ணீரும் சிரிப்பும் சிந்த ஓடிவந்த அரசன் “கிடைத்துவிட்டானா? கிடைத்துவிட்டான் அல்லவா? நன்று நன்று. நான் அறிவேன்… கிடைத்துவிடுவான் என நான் முன்னரே அறிந்திருந்தேன். என் மூதாதையரும் தெய்வங்களும் என்னை கைவிடுவதில்லை. நான் அறத்திலமர்ந்தவன் என அவர்கள் அறிவார்கள்” என்று கூவியபடி அவர்களின் கைகளை பற்றிக்கொண்டான். மூத்த குடித்தலைவர் “ஆம் அரசே, கிடைத்துவிட்டதுபோலத்தான். செய்திகளுக்காக காத்திருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு திரும்பி வந்தார்.
ஏழுமுறை அவர்கள் செய்தியை சொல்லும்பொருட்டு அவனை அணுகினர். அவர்களால் அதை அவனிடம் சொல்லவே முடியவில்லை. அவர்கள் சுதர்மனிடமே சென்று அதை சொன்னார்கள். “அவரே அறிவார். அவர் அறிந்ததில் அவர் மெல்ல சென்று அமரட்டும். நாம் அவரை ஏன் பிடித்து அதன்மேல் தள்ளவேண்டும்?” என்றான் சுதர்மன். அவர்கள் சிலகணங்கள் நோக்கி அமர்ந்தபின் நீள்மூச்சுடன் எழுந்துசென்றார்கள்.
காற்றில் கரைந்தழிவதுபோல இளமைந்தன் குருநகரியிலிருந்து முற்றிலும் மறைந்து போனான். பதினைந்து நாட்கள் எறும்புகள்போல கொசுக்கள்போல குருநகரியின் படைவீரர்களும் ஒற்றர்களும் அந்நிலத்தை அணுவிடை வெளியின்றி தேடிச் சலித்தனர். ஒவ்வொருவரும் மும்முறை உசாவப்பட்டனர். ஒரு பொந்தோ புழையோ எஞ்சாமல் துழாவப்பட்டது. பின்னர் உறுதியாயிற்று மைந்தன் மீளப்போவதில்லை என.
உண்மையில் தேடத் தொடங்குகையிலேயே ஒவ்வொருவரும் உள்ளூர அதை அறிந்திருந்தார்கள். தங்கள் விழைவால் அதை தள்ளி பின்னால் செலுத்தி இதோ எழுந்துவிடுவான், இங்கு இருப்பான்போலும் என்று உள்ளத்தை பயிற்றுவித்தனர். ஆகவே தேடும் இடங்களில் அவனில்லாதபோது எழுந்த ஏமாற்றம் அவர்களுக்கு துயரளிக்கவில்லை. மேலும் மேலும் என நம்பிக்கையை ஊட்டிக்கொள்ளவே அது பயன்பட்டது. தேடத் தேட அச்செயலே அவர்களை பயிற்றுவித்தது. பின்னர் நம்பிக்கையின் பொருட்டோ எதிர்பார்ப்பின் பொருட்டோ அன்றி அச்செயலை முழுதுறச் செய்வதன் பொருட்டே அதை செய்யலாயினர்.
ஆனால் ஏதோ ஒரு கணத்தில் அந்நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் முற்றாக அணைந்தன. அக்கணமே அச்செயல் வீணென்றாயிற்று அவ்வுணர்வு அந்தத் தேர்ச்சியை பொருளில்லாமலாக்கியது. மேலும் சில நாள் நிகழ்ந்தபோது அது வெறும் சடங்கென்று ஆகியது. அலைநீரில் கட்டி நிறுத்தப்பட்ட மீன்வலையென நகரம் பொருளில்லாமல் நெளிந்துகொண்டிருந்தது.
தேடலை நிறுத்தலாம் என்று சுதர்மன் சொன்னபோது “ஏன், அது நிகழ்ந்து கொண்டிருக்கட்டுமே?” என்றார் குலமூத்தார் ஒருவர். “என்றோ ஒருநாள் நம் மைந்தன் கிடைப்பார் என்றே நான் எண்ணுகிறேன். நிமித்த நூல்படி இந்நகரை அவர் ஆள்வார். ஆகவே அவர் கிடைத்துதான் ஆகவேண்டும்” என்றார். “அதை நானும் நம்புகிறேன்” என்றான் சுதர்மன். “ஆனால் நம்பிக்கை இழந்தபின் இத்தேடல் வெறும் சடங்கென்றே ஆகும். அதில் ஒருபோதும் மைந்தன் சிக்கப்போவதில்லை. மாறாக தேடுதலை முழுமையாக நிறுத்திக்கொண்டுவிட்டபின் நம் உள்ளம் அதை மறக்க ஆழம் எடுத்துக்கொள்ளும். நம் புலன்களை அது ஆளும். மிகச்சிறிய தடயத்தைக்கூட அது கண்டு சிலிர்த்தெழும்.”
“நாம் தேடாமலாகும்போது மைந்தனை கொண்டுசென்றவர்கள் இயல்பு மீளக்கூடும். எவ்வண்ணமோ அவன் இங்கு மீள அது வழிவகுக்கும்” என்றான். “எனக்கு இது புரியவில்லை. ஆயினும் தங்கள் ஆணை” என்றார் குலமூத்தார். தேடல் நிறுத்தப்பட்டது. அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, ஏனென்றால் தேடுவதை நிறுத்துவது அனைவரிலும் குற்றவுணர்ச்சியை உருவாக்கும் என்றும் அதை வெல்ல பிறர்மேல் பழிசார்த்த முயல்வார்கள் என்றும் அவர்களுக்கு அரசே முதல் பழிநிலை எனத் தோன்றும் என்றும் சுதர்மன் சொன்னான். தேடும் பணியிலிருந்த ஒற்றர்கள் நாளுக்கொருவராக வேறு பணிக்கு அனுப்பப்பட்டனர். மெல்ல எவருமறியாமலேயே தேடல் நின்றது. ஆனால் ஒவ்வொருவரும் எங்கோ தேடல்நிகழ்வதாகவும் தாங்கள் மட்டும் வேறுபணிக்கு சென்றதாகவும் எண்ணிக்கொண்டார்கள்.
அரசன் முதலில் பல நாட்கள் வெறியன்போல எதிர்ப்படும் அனைத்து வீரர்களையும் அறைந்தும் செவிலியர்களை மிதித்தும் அரண்மனையை சுற்றி வந்தான். அரண்மனையிலேயே எங்கோ மைந்தன் இருக்கிறான் என்னும் எண்ணத்தை அவன் தன்னுள் அணையாது வைத்திருந்தான். பல நாட்களுக்குப் பின்னர் ஒருநாள் கனவுகண்டு மைந்தன் நகருக்குள் எங்கோ இருப்பதாகச் சொல்லி இறங்கி ஓடினான். அவனைத் தொடர்ந்து காவலரும் அமைச்சரும் ஓடினர். “இங்கிருக்கிறான்… ஆம், நான் அறிவேன்! மூடர்களே, இங்கே!” என்று அவன் கூவினான். மூடிய கதவுகளைச் சுட்டி “இங்கே… இதை உடையுங்கள்!” என்று ஆணையிட்டான். அவன் ஆணைப்படி நூற்றுக்கணக்கான கதவுகள் உடைக்கப்பட்டன. சுவர்கள் இடிக்கப்பட்டன.
நகர் முழுக்க அவன் கூச்சலிட்டபடி அலைந்தான். கண்ணில்பட்ட குழந்தைகளை எல்லாம் மைந்தன் என எண்ணி கைநீட்டியபடி ஓடினான். அவனைக் கண்டதுமே அன்னையர் குழவியருடன் ஓடி ஒளிய அவன் வாளை உருவி கூவியபடி அவர்களை துரத்திச்சென்றான். பின்னர் நகரிலிருந்து வெளியேறி காட்டுக்குள் தேடலானான். பல நாட்கள் அவனும் படைவீரர்களும் புறக்கோட்டைக் காடுகளுக்குள் அலைந்தனர். மெல்ல அவன் அடங்கலானான். கொந்தளிப்பு அடங்கி சொல் நின்றது. அதற்கு உண்ணாமல் உறங்காமலிருந்தமையால் அவன் உடல் அடைந்த சோர்வே வழிகோலியது. எலும்புருவாக ஆன அவன் புரவிமீது அமரும் ஆற்றலை இழந்தான். தேரில் அமர்ந்தாலும் சோர்ந்து துயிலலானான்.
பின்னர் அவன் நாளெல்லாம் மஞ்சத்திலேயே கிடந்தான். எண்ணி நெஞ்சுகலுழ்ந்து அழுதான். பின் கனவுகளில் எதையெதையோ கண்டு “தெற்குவாயிலுக்கு அருகே ஒரு சுரங்கப்பாதை உள்ளது… சென்று நோக்குக… அறிவிலிகளே… உடனே செல்க!” என்று ஆணைகளிடத் தொடங்கினான். பின்னர் ஆணைகள் குறைந்து விழிநீர் மட்டும் வழிந்துகொண்டிருக்க வெறித்த முகத்துடன் படுத்திருந்தான். நாட்பட அந்த அழுகையே அவன் முகமென்றாகியது. தன்னை சாளரத்தருகே அமரச்செய்யும்படி கைகாட்டினான். அவனை ஆணிலிச் சேடியர் தூக்கி சாளரத்தட்டில் அமர்த்தினர். அவன் இரவும் பகலும் அங்கேயே அமர்ந்திருந்தான்.
பெருந்துயர் தான் அமர்வதற்கான இடத்தை உருவாக்கும்பொருட்டு பிறிதனைத்தையும் அழித்துவிடுகிறது என்றார் நிமித்திகர். அவன் உள்ளத்தில் பழைய நினைவுகளும் அன்றாட நிகழ்வுகளும் நாளைக் கனவுகளும் விலகின. சூழலை புலன்கள் உள்வாங்கவில்லை. முகங்களை அறியவில்லை. ஒழிந்த அவன் உளவெளியில் அத்துயர் அன்றி பிறிதொன்றும் இருக்கவில்லை. “அது தெய்வத்துயர். அதற்கு மானுடர் செய்வதற்கு ஒன்றுமில்லை. நாம் காத்திருப்போம்” என்றார் மருத்துவர்தலைவர்.
இரவும் பகலும் மாறாநோக்குடன் சாளரங்களின் அருகிலேயே அமர்ந்திருந்த அரசனை பேண ஆணிலிக் காவலரும் சேடியரும் அடங்கிய குழு ஒன்று அமைந்தது. மருத்துவர் நாள்தோறும் வந்து அவனை நோக்கினர். நிமித்திகர் ஒவ்வொரு நாள்நகர்வையும் கணித்தனர். “வரவிருப்பது ஒன்றே. எதிர்பாராதபோது அது எளியதோர் காற்று. வழிநோக்கி நின்றிருந்தால் பேருருக்கொண்டு எழும் கொடுந்தெய்வம்” என்றார் நிமித்திகர். “உடலை எண்ணியே நான் வியக்கிறேன். அது எவ்வளவுதான் தாங்கிக்கொள்கிறது!” என்றார் மருத்துவர்.
ஆயுஸின் உடல் மெலிந்து எலும்புக்குவை என்று ஆயிற்று. ஒற்றைக்காவலன் அவனை எளிதாக தூக்கிச் சென்று நீராட்டி ஆடை அணிவித்து அரண்மனையின் சாளரங்கள் அருகே அமரச்செய்ய முடிந்தது. உந்திய கன்னஎலும்புகளும், எலும்புவிளிம்புடன் குழிந்த கண்களும், உள்ளடங்கிச் சுருங்கிய வாயும், மெலிந்து குரல்வளை புடைத்த கழுத்தும், எலும்புச் சட்டமென்றான தோள்களுமாக மூன்றாக மடிக்கப்பட்ட தொன்மையான மரச்சட்டம் போல அவன் அசையாமல் நாள் முழுக்க அமர்ந்திருந்தான். “அவ்வுடலுக்குள் உள்ளமென ஒன்று இயங்குகிறதா? இல்லை என்றால் அப்புலன்கள் எங்கிருந்து ஆணைபெறுகின்றன?” என இளமருத்துவர் ஒருவர் வியந்தார். “உள்ளம் என்பது உள்ளிருப்பதன் ஆடை மட்டுமே. அதை களைந்துவிட்டது அது” என்றார் முதிய மருத்துவர்.
அரசன் இமைப்பதே இல்லை என்பதை முதிய மருத்துவர்தான் கண்டடைந்தார். “விந்தைதான். இமையா விழி மிக விரைவிலேயே நோக்கிழந்துவிடும். நீர் படர்ந்து வீங்கும். இவர் விழிகள் நெற்றுகள்போல வறண்டுள்ளன. விழிகள் அசைவதுமில்லை” என்றார். இளமருத்துவர் “அவ்வுடலில் மூச்சு ஓடுவதே தெரியவில்லை. முன்னரே இறந்த உடல் ஒன்று எதன்பொருட்டோ உறுதிபூண்டு தன்னை காற்றில் தொடுத்துக்கொண்டு அமைந்திருப்பதுபோல் தெரிகிறது” என்றார். “பெருந்துயர்! பிறிதொன்றும் சொல்வதற்கில்லை… எதன் பொருட்டென்றாலும் பெருந்துயர் என்பது ஒன்றே. எவ்வடிவு கொண்டாலும் தெய்வம் ஒன்றே என்பதுபோல” என்றார் நூறாண்டு கடந்த குலமூத்தார் ஒருவர்.