டெக்ஸ்வில்லர் பாணி கௌபாய் படக்கதைகள் ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்குமுன் எனக்கு அறிமுகமானவை. மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே கதையை திரும்பத்திரும்பப் படித்திருக்கிறேன். எனக்கு வன்மேற்கு பற்றிய பெரியதொரு கனவை அவை உருவாக்கின. நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் அந்நிலத்தை அசையும் காட்சிகளாக மெக்கன்னாஸ் கோல்ட் படத்தில் பார்த்தேன். உண்மையில் அதைப் பார்க்கும்போது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. கருப்பு வெள்ளை கோட்டுப்படங்கள் வழியாகவே நான் உருவாக்கிக் கொண்டிருந்த நிலம் மேலும் பன்மடங்கு விரிந்தது உக்கிரமானது.
இப்போது முத்து காமிக்ஸ் வெளியிட்ட அந்நூல்கள் மீண்டும் வெளிவருகின்றன. பல்லாண்டுகள் கழித்து அந்நிலத்தின் வழியாக பயணம் செய்த போது அக்கற்பனையைக் கடந்து அந்நிலம் விரிந்து கிடப்பதைக் கண்டேன். நிலம் கடவுள் போல. மனிதனின் எல்லாக் கற்பனைக்கும் அப்பால் தன் மாபெரும் தோற்றத்துடன் அது நின்றிருக்கிறது. மனிதனை துளியாக, தூசியாக மாற்றித் தன்னுள் வைத்துக் கொள்கிறது.
வன்மேற்கு உண்மையில் ஒரு புனைவு. புகழ்பெற்ற கௌபாய்களின் காலகட்டம் 1800-களின் தொடக்கத்தில் அதிகம் போனால் ஒரு முப்பது ஆண்டுகாலம் இருந்திருக்கலாம் என்கிறார்கள். அதுவும் அங்குசென்ற ஐரோப்பியப் பயணிகளின் குறிப்புகள் வழியாக வடக்கு அமெரிக்க எழுத்தாளர்களாலும் ஐரோப்பிய எழுத்தாளர்களாலும் உருவாக்கப்பட்ட புனைவுகளை ஒட்டித்தான் அது உருவானது. அவர்களின் மிகைக்கற்பனை அதில் பெரும்பங்கு வகிக்கிறது. அரசு ஆவணங்களும் சரி தொழில்முறையாக அங்கு பயணம் செய்தவர்களும் சரி மேற்கைப்பற்றி அளிக்கும் சித்திரம் இப்புனைவின் சித்திரங்களுடன் ஒத்துப்போவதல்ல.
ஐரோப்பாவின் சாகசமோகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பனைநிலமே கௌபாய்களின் வன்மேற்கு என்பது இன்று பரவலாக ஏற்கப்படுகிறது. இத்தகைய ஒரு நிலத்தை மேலைமனம் கட்டமைத்துக்கொண்டது ஏன், அதற்கான காரணிகள் என்றெல்லாம் விரிவான ஆய்வுகள் வந்துள்ளன.
சாகசம் என்றைக்குமே மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அது ஒரு குழந்தை மனநிலை. கையூன்றி எழுந்தமரும் குழந்தை தன் உடலும் சூழலும் அமைக்கும் எல்லைகளை தன் உயிர்விசையால் மீறிச்செல்லும் பெருமுயற்சியிலேயே எப்போதும் இருந்துகொண்டிக்கிறது. சாளரங்களில் தொற்றி ஏறுகிறது. நாற்காலிகளின் கைப்பிடிகளை பற்றி ஏறி விழுகிறது. வீட்டை விட்டுக் கிளம்பிச் செல்கிறது. மிருகங்களின் வால்களைப்பற்றி இழுக்கிறது. சாகசம் அதன் நீட்சிதான்.
ஒற்றை வரியில் சொல்லப்போனால் தன் எல்லைகளை மீறுவதற்கான மானுடனின் துடிப்பும் கனவுமே சாகசம் எனப்படுகிறது. தன்னால் எளிதாக முடியும் ஒன்றை சாகச விரும்பிகள் செய்வதில்லை. மலை ஏறுகிறார்கள். அலைகளில் சறுக்குகிறார்கள். பள்ளங்களில் பாய்கிறார்கள். விமானங்களில் பறக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் முந்தைய எல்லையில் இருந்து சற்றேனும் முன்னால் சென்று தன்னை எண்ணி மகிழ்கிறார்கள்.
இந்த சாகச உணர்வே மானுடப் பண்பாட்டைக் கட்டமைத்தது என்றால் மிகையாகாது. இறுதிப்பனிக்காலத்தில் மனிதர்கள் உறைந்த கடல்கள்மேல் நடந்தே ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறார்கள். ஐஸ்லாந்து வழியாகச் சென்று தென்னமெரிக்கா வரைக்கும் சீனத்து மஞ்சளினம் குடியேறியிருக்கிறது. அவ்வகையில் பார்த்தால் மனித இனத்தின் சாகசங்களின் உச்சங்கள் அனைத்தும் அப்போதே நிகழ்த்தப்பட்டுவிட்டன. அனைத்து எதிர்ச்சூழல்களையும் கடந்து மானுட இனம் இப்புவியை ஆள்வதற்கு இந்த சாகச உணர்வே அடிப்படை என்று தோன்றுகிறது.
பெருவிலங்குகளை வென்று வயப்படுத்தவும், இயற்கைச் சக்திகள் களியாடும் விரிநிலங்களை வென்று ஆளவும் மனிதனை தூண்டியது அதுவே. சாகச உணர்வே போர் என்றும் கொலை வெறி என்றும் திரிபடைகிறது என்பதும் உண்மை மாவீரர்களை உருவாக்கும் அதே உணர்வுதான் கொடுங்கோலர்களையும் கொள்ளையர்களையும் கட்டமைக்கிறது. குற்றங்களை நோக்கி ஈர்க்கப்படும் மனிதர்களின் உளவியலைப் பார்த்தால் சாகசமே அவர்களைக் கவர்கிறது என்று தெரியும். அன்றாட வாழ்க்கையின் சாகசமற்ற இயல்பு நிலையில் சலிப்புற்றே பெரும்பாலும் அவர்கள் அங்கு செல்கிறார்கள்.
ஒரு வங்கிக் கொள்ளையன் அதை விட அதிகப்பணம் கிடைத்தாலும் நிதிமோசடி செய்வதை விரும்ப மாட்டான். சாகசத்தின் பிறிதொரு வடிவமே சூதாட்டம். தன் இறுதி உடைமையையும் சூதாட்டக்களத்தில் வைத்துவிட்டு அந்த சதுரங்கக் காயை நோக்கி அமர்ந்திருப்பவனில் தெறிப்பது சாகச உணர்வுதான். பல நாடுகளில் ஆறுக்கு ஐந்து குண்டுகள் இடப்பட்ட துப்பாக்கியை மும்முறை சுழற்றிவிட்டு தலையில் வைத்து இழுத்து அதை ஒரு சூதாட்டமாக ஆடும் வழக்கம் உள்ளது. கௌபாய்க் கதைகளில் கௌபாய்கள் சுட்டுக்கொள்ளாதபோது சூதாடுவதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய மனதில் இரண்டையும் பிரிக்கமுடியாது. ஜேம்ஸ்பாண்ட் ஒரு நவீன கௌபாய். அவரும் மாபெரும் சூதாடிதான்.
பல்வேறு விடுதலைப்போராட்டங்கள் மக்கள் புரட்சிகள் இளைஞர்களின் சாகச உணர்வினால் மட்டுமே எழுந்தவை. நாம் போற்றும் பல புரட்சியாளர்களை சிந்தனையின் கிளர்ச்சிக்கு நிகராகவே சாகசத்தின் கிளர்ச்சியும் செயலுக்கு உந்தியிருக்கிறது. கால்நடையாக இந்தியாவைச் சுற்றிவந்த சங்கரரோ விவேகானந்தரோ காந்தியோ சாகசத்தையே முதன்மை நாட்டமாகக் கொண்டவர்கள்தான்.
அன்றாட வாழ்க்கையில் நாம் அறியும் நமது எல்லைகள் அளிக்கும் சோர்வைக் கடக்க உதவுகிறது சாகசம். அதில் நம்மை நாமே கண்டுபிடிக்கிறோம். நமது உச்சநிலைகளில் வாழ்கிறோம். மனிதகுலம் உருவாக்கிய மாபெரும் காவியங்கள் பெரும்பாலும் சாகசங்களைப் பேசுபவை. ராமனோ கிருஷ்ணனோ சாகசங்களினூடாக தெய்வமானவர்கள்தான். அர்ஜுனனும் பீமனும் அனுமனும் சாகசங்களினூடாக நம் பண்பாட்டில் நிலைநிறுத்தப்படுகிறார்கள். ஹெர்குலிசும் யுலிசஸும் ஐரோப்பாவை ஆளும் வடிவங்களானது சாகசங்களினூடாகவே.
சாகசங்கள் கதைப்பாடல்களாகின்றன. மாவீரர்களை பாணரும் சூதரும் குலப்பாடகரும் பாடி நிலைநிறுத்துகிறார்கள். அந்த சாகசங்களுக்கு தத்துவார்த்தமான அர்த்தங்கள் அளிக்கப்படும்போது பெருங்காவியங்கள் உருவாகின்றன. சீவகனின் சாகசங்கள் ஆன்மப் பயணங்களாகி சீவகசிந்தாமணியெனும் காவியமாயின. யுலிசஸின் பயணம் தன்னைக் கண்டுபிடிப்பதற்கான அலைவு. அதையே தாந்தேயும் விர்ஜிலும் தங்கள் காவியங்களில் குறியீடுகளாக்கி மேலும் விரிவு படுத்தினார்கள்.
உலகெங்கும் அகவயப் பயணங்கள் மாவீரனின் சாகசப்பயணங்களுடன் இணைத்து புனையப்பட்டு காவியங்களாக்கப்பட்டுள்ளன. தன்னுள் சென்று தன்னைக் கண்டடைந்த ஞானி மகாவீரர் என்று சமணத்தில் அழைக்கபடுவது அதனால்தான். வீரனின் பயணம் உள்ளும் புறமும் எல்லைகளைக் கடப்பதற்காகவே. கையில் அம்புடன் சுனையில் மிதக்கும் மீனை நோக்கி குறிவைக்கும் அர்ஜுனன் அவனுள் மிக ஆழத்தில் எங்கோ இருக்கும் ஒரு இலக்கை நோக்கி அம்பை பொருத்தியிருக்கிறான்.
கீழைநாட்டுச் சூழலில் நாட்டுப்புறக் கதைகளாகவும் தொன்மங்களாகவும் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் சாகசக் கதைகள் நிரம்பி வழிகின்றன. மாயாண்டி சாமியும் சுடலைமாடனும் மாபெரும் சாகச நாயகர்கள். களம் நின்று பட்ட வீரர்களின் கதைகளால் நிரம்பியிருக்கின்றன பழங்குடி வாழ்க்கைகள். ஆனால் மேலும் மேலும் நவீன மயமான ஐரோப்பா அதன் சாகசத் தொன்மங்களின் பெரும்பகுதியை முன்னரே இழந்துவிட்டிருந்தது. பேகன் மதத்தை முற்றாக அழித்து அங்கே தன்னை நிறுவிய கிறிஸ்தவம் பல்லாயிரம் ஆண்டுகளாக அது திரட்டி வைத்திருந்த வீரசாகசக்கதைகளின் பெரும்பகுதியை இழந்துவிட்டது.
ஆனால் சாகசக்கதைகள் வாழும். கிறித்தவத்தில் எஞ்சியது மதம் பரப்புவதற்கான பயணங்கள் மட்டுமே. தன் 35 ஆவது வயதில் சார்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவக்ககல்வியை முடித்து கிளம்பி பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்திற்கு வந்து அறியாமக்களிடம் மதப்பணி ஆற்றிய தூய சவேரியாரை இயக்கியது கிறித்தவத்தின் ஆன்மிகச் செய்தி மட்டுமல்ல, இளைமையின் சாகசத்தன்மையும் கூடத்தான்.
பின்னர் ஐயோப்பிய மறுமலர்ச்சி எழுந்த போது கிரேக்க சாகசக்கதைகள் மீண்டு வந்தன. ஆங்காங்கே அழியாது எஞ்சிய பேகன் மதத்தின் வீர நாயகர்கள் மறுஆக்கம் செய்யப்பட்டனர். வாக்னரின் இசைநாடகங்களில் பெருகியெழும் பாகன் தொன்மங்களின் சாகசத்தன்மை புத்தெழுச்சி கொண்ட ஐரோப்பா தன் அழிந்த மரபை கனவிலிருந்து மீட்டு எடுக்க முயன்றதைக் காட்டுகிறது
ஆயினும் வாசிப்பு பெருகிய அந்த மறுமலர்ச்சிக் காலகட்டத்திற்கு அந்தக் கதைகள் போதவில்லை. ஆகவேதான் ஐரோப்பா புதிய சாகசக்கதைகளை கற்பனையால் உருவாக்க ஆரம்பித்தது. புதிய தொன்மங்கள், புதிய வீர கதைகள், புதிய காவியங்கள் உருவாகி வந்தன. அந்த சாகச மோகத்தை நக்கலடிக்கும் டான்குவிசாட் போன்ற நாவலும் எழுந்தது.
ஐரோப்பாவின் சாகச களங்களில் முதன்மையானது கடல் பயணம்தான். நவீன ஐரோப்பா கடற்பயணங்களில் ஊடாக உருவானதென்பதில் ஐயமில்லை. காற்றை நம்பிக் கலமேறி அறியாத நிலங்களுக்குச் சென்று புதையல் கொண்டு வரும் கனவு முந்நூறு ஆண்டுகாலம் ஐரோப்பிய உள்ளங்களை ஆட்டிப்படைத்திருக்கிறது. எத்தனை கடல்சாகசக் கதைகள். கடற்கொள்ளையர்கள், தீவுகள், அரக்கர்கள். என் இளமையில் சார்லஸ் கிங்ஸ்லியின் வெஸ்ட்வேர்ட் ஹோ என்னை பித்துப்பிடிக்கச் செய்திருக்கிறது
பீகிள் என்ற கப்பலில் ஏறி உலகத்தைச் சுற்றி வந்த டார்வினின் சாகச உணர்வுதான் பரிணாமக் கொள்கையாக மாறியது. கொலம்பஸொ மாகெல்லனோ புதிய நிலங்களைக் கண்டுபிடித்தது சாகத்தேடலால்தான். தன் 22 வயதில் திருவிதாங்கூரில் வந்து இறங்கிய பெனெடிக்ட் டி லென்னாயை எண்ணி நான் வியக்காத நாளில்லை.
எப்போதுமே புதையல் தேட்டம் ஐரோப்பிய மனங்களைக் கொள்ளை கொண்டுள்ளது. அறியாத்தொலைநிலங்களில் பெரும் செல்வம் புதைந்துள்ளது அதை வென்று வருவது குறித்த கனவு அவர்களிடம் எழுந்தது. பெருஞ்செல்வம் என்பது அதை வெல்லும் திராணி உடையவனுக்கு உரிமைப்பட்டது என்னும் சிந்தனை அதற்குப் பின்னால் இருந்தது. அதுவே இந்தியாவை ஆஸ்திரேலியாவையோ ஆப்பிரிகாவையோ வெல்வதற்கான மனநிலை அமைத்தது
தங்க வேட்டை ஐரோப்பாவின் சாகசக்கதைகளின் ஒரு முக்கியமான கரு. புதிய நிலங்களைத் தேடிச் செல்லுதல் என்னும் கனவின் ஓரு பகுதி அது. அவ்விரு சாகசக் கருக்களும் சேர்ந்து மேலும் உருவாகி வந்ததே வன்மேற்கு. வென்று அடையவேண்டிய புதிய நிலம். அங்கே புதையுண்டிருக்கும் தங்கம். அந்நிலத்தை உரிமை கொண்டு நின்று எதிர்க்கும் பழங்குடிகள் தோற்கடிக்கப்படவேண்டிய இயற்கைச் சக்திகள் மட்டுமே. அங்கே எரியும் கடும் வெயிலைப்போல, இரக்கமற்ற பாலைநிலத்தைப்போல, உருண்டு சரியும் நிலையற்ற மலைகளைப்போல, கொள்ளைநோய்களைப்போல. அதற்கப்பால் அவர்களை மனிதர்கள் என்றோ ஒரு மானுட அறத்தின்படி அம்மண்ணுக்கு உரிமை அவர்களுக்கே என்றோ தொடக்க கால வெள்ளைமனம் உணர்ந்ததில்லை.
அப்பார்வையின் அடிப்படையில் சமைக்கப்பட்டன ஆரம்ப கால கௌபாய் கதைகள். திரும்பத் திரும்ப அக்கதைகளில் அந்நிலத்தின் இரக்கமற்ற விரிவே சித்தரிக்கப்படுகிறது. பாலைவனத்தைக் கடக்கும் சாகசம், தனித்து அலைவதன் அறைகூவல், எதிராபாராத இறப்பு ஆகியவையே கௌபாய் கதைகளின் ஆதார நிகழ்வுகள். அந்நிலம் மக்களை அவ்வாறே ஆக்கிவிடுகிறது. அவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் இயற்கைச்சக்திகளாக ஆகிவிடுகிறார்கள்.
இன்று பார்க்கையில் நவீன அமெரிக்காவை ஆக்கிய அடிப்படை மனநிலைகள் பலவும் கூர்மையாக வெளிப்படும் ஒரு களமாக கௌபாய்உலகைப் பார்க்க முடியும். தணிக்கமுடியாத உலகியல் வேட்கை, தனிமனிதனின் உளஉறுதியும் தாக்குப்பிடிக்கும் தன்மையும், தன்னை மேலும் மேலும் கூர்தீட்டிக்கொண்டு வெல்ல முடியாத ஆயுதமாக மாற்றிக் கொள்ளுதல், வேட்டைக்காரனின் நீடித்த பொறுமை ஆகியவை கௌபாயின் அடிப்படை இயல்புகள்.
அமெரிக்கா விவசாயியால் அல்ல வேட்டைக்காரனால் உருவாக்கப்பட்ட நாடு என அதன் அரசியலும் வணிகமும் சொல்கிறதோ என ஒரு எண்ணம் எனக்குண்டு. அமெரிக்காவின் மனநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்தியவர்கள் என நான் எண்ணும் ஜாக் லண்டன், ஹெமிங்வே, ஃபாக்னர் போன்ற படைப்பாளிகள் அடிப்படையில் கௌபாய்மனநிலை கொண்டவர்கள் என எண்ணிக்கொள்வேன்
கௌபாய்களில் திறன்வாய்ந்தவர்கள் அனைவருமே தன்னை ஒரு சிறந்த படைக்கலமாக மாற்றிக் கொண்டவர்கள்தான். துப்பாக்கி ஒரு ஆயுதம். ஆனால் அத்துப்பாக்கியைக் கையாண்டு அதுவே ஆகி மாறியவர்கள் டெக்ஸ் வில்லர், டியுராங்கோ போன்றவர்கள். துப்பாக்கி ஒருவிதை, அது முளைத்து மரமானது போல் இருக்கிறார்கள் அவர்கள். தன் தனித்திறனால் தொடர்ந்து வென்று கொண்டே செல்கிறார்கள். அதே சமயம் ஒவ்வொரு தருணமும் சாவின் எல்லை வரைக்கும் சென்று தற்செயலாக மீள்கிறார்கள்.
அவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் கடவுளை நம்புவதில்லை என்பது மிக முக்கியமானது. உச்சகட்டங்களில் கூட அவர்கள் பிரார்த்தனை செய்வதில்லை. ஒவ்வொரு கணமும் தற்செயலை நம்பியிருக்கும்போது கூட விதியை நம்புவதில்லை. முழுக்க முழுக்க தங்கள் கையிலிருக்கும் அந்த ஆயுதத்தைத் தான் நம்புகிறார்கள். அதுவே அவர்களுடைய கடவுள். அவர்களை வாழ வைப்பதும் கொல்வதும் அதுதான் வெறிபிடித்த பக்தர்களைப்போல் துப்பாக்கியை ஆராதிக்கிறார்கள். அவர்களின் ஆலயத்தின் மையச்சிலையாக அதுவே அமர்ந்திருக்கிறது.
ஆயிரமாண்டுக்காலம் கடவுள் என்னும் சொல்லால் ஆளப்பட்டது ஐரோப்பா. ஐரோப்பிய மறுமலர்ச்சி என்பது அந்தக் ஒற்றைக்கடவுளின் மேலாதிக்கம் என்னும் கருத்திலிருந்து அச்சமூகம் அடைந்த விடுதலைதான். வாக்னரின் இசைநாடகங்கள் அந்த திமிறலின் துயரையும் குருதிப்பெருக்கையுமே சித்தரிக்கின்றன. இயற்கைவழிபாடு போன்ற மாற்று ஆன்மிகங்கள் முதல் முழுமையான நாத்திகவாதம் வரை பலவகையான ஒற்றைத்தெய்வ மறுப்புகள் ஐரோப்பாவில் எழுந்து உலகமெங்கும் பரவின
கடவுளின் பிடியிலிருந்து விடுதலை அடைந்த ஐரோப்பிய உள்ளத்தின் கொண்டாட்டமே கௌபாய் கதைகள் எனத் தோன்றுகிறது. கடவுளற்ற உலகின் களியாட்டம். சூது, காமம், கொள்ளை, கொலை, அவையனைத்திற்கும் எதிரான வீரம். ஐரோப்பிய உள்ளத்திலிருந்து இந்தக் கடவுளற்ற நிலம் மறைவதே இல்லை. வெவ்வேறுவகையில் இந்நிலம் மறுபிறப்பு எடுத்துக்கொண்டே இருக்கிறது. அணுப்பேரழிவுக்கு பின்னர் உருவாகும் உலகமாக, வேற்றுக்கிரகங்களின் சமூகங்களாக கௌபாய்களின் நிலமே அவர்களின் புனைவுகளில் தோன்றுகிறது. வாட்டர்வேர்ல்டும் சரி, அவதாரும்சரி சற்றே உருமாறிய கௌபாய் கதைகள்தானே?
கௌபாய்களில் கெட்டவர்கள் இரக்கமற்றவர்கள். அறமற்றவர்கள். எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அவர்களை எதிர்ப்பவர்களும் அதே எல்லைக்கு எளிதில் செல்கிறார்கள். கௌபாய் கதைகளில் முன்னர் குற்றவாளியாக இருந்தவனே ஷெரீஃபாகவும் ரேஞ்சராகவும் ஆவதைப்பார்க்கலாம். அவர்களுக்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை. குற்றவாளி செல்வத்தாலும் போகத்தாலும் துரத்தப்படுகிறான். ரேஞ்சராகும்போது தான் ஒரு ரேஞ்சர் எனும் ஆணவத்தால் இயக்கப்படுகிறான். வேட்டைக்காரனும் வேட்டை மிருகமும் ஒரே ஆளுமையின் இருபக்கங்கள். ஒரே நாடகத்தில் மாறி மாறி வேடமிடும் ஒரே நடிகர்கள்.
கௌபாய் கதைகளின் மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எவரும் எவரிடமும் இரக்கத்துக்காக மன்றாடுவதில்லை என்பது. ஏனென்றால் இரக்கத்திற்கு அங்கே செல்மதிப்பு இல்லை. கொல்வது எளிதாக இருப்பது போலவே கொல்லப்படுவதும் இயல்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வேட்டைச் சூழலில் சட்டத்தை நம்புபவர்கள், அடிப்படை அறம் மீது பற்றுகொண்டவர்கள் அனைவரும் பலமற்றவர்களாகவும் கோமாளிகளாகவும் குழந்தைத்தனமானவர்களாகவும் தெரிகிறார்கள்.
கௌபாய்களின் நிலம் முழுக்க முழுக்க ஆண்களின் உலகம் பெண்கள் பெரும்பாலும் அங்கு வேசிகள்தான். ஆண்களின் குரூரத்தை தங்கள் காமத்தைக் கொண்டு எதிர்கொள்ளத் தெரிந்தவர்கள். தங்கள் உடலைக் கொண்டு அவர்களை ஏமாற்றிப் பணம் பறிப்பவர்கள். வன்மேற்கில் மதம் பெரும்பாலும் ஒரு கேலிக்குரிய விஷயமாகவே இருக்கிறது. கட்டற்ற கௌபாய்களையோ செவ்விந்தியர்களையோ மதமாற்ற வரும் பாதிரியார்கள் ஒன்று இறுக்கமான மத நம்பிக்கையாளர்களான குரூரமான மனிதர்கள். அல்லது ளிதில் ஏமாற்றப்படும் கோமாளிகள். கௌபாய்களால் குருவிகளைப்போலச் சுட்டுத்தள்ளப்படுகிறார்கள்
வன்மேற்கின் கதைகளில் மூன்றுவகைத் தீயவர்கள் வருகிறார்கள். முதல் வகைத் தீயவர்கள் பணத்திற்காக, குடிக்காக, காமத்திற்காக குற்றங்களை இழைக்கிறார்கள். கோச் வண்டிகளைத் தாக்குகிறார்கள். வங்கிகளைக் கொள்ளையிடுகிறார்கள். வீடுகளுக்குள் புகுந்து திருடுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் உதிரிக் கொள்ளையர்கள். தங்கள் தொழிலுக்கேற்ப தங்களை எளிய வேட்டை விலங்குகளாக மாற்றிக் கொண்டவர்கள். அவர்களின் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் முழுக்க இந்தக் குற்றங்களில் தான் இருக்கிறது. ஒரு கொலைக்குப்பின் கூவி நகைத்தபடி தன் குதிரையில் செல்லும் கௌபாய் தன் வாழ்க்கையின் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறான். திரும்பத் திரும்ப ரேஞ்சர்களாலும் ஷெரீஃபுகளாலும் உதவாக்கரைகள் பொறுக்கிகள் என்று இவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். எந்த மறு எண்ணமும் இல்லாமல் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள்.
இரண்டாம் வகை எதிரிகள் செவ்விந்தியர்கள். அவர்கள் தங்கள் நிலங்களைக் காக்கப்போராடுபவர்களாகவே பெரும்பாலும் பிற்காலத்திய கௌபாய் கதைகளில் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் அதேசமயம் தங்கள் பழங்குடித் தன்மையினாலேயே இரக்கமற்றவர்களாக இருக்கிறார்கள் அவர்கள். கொல்லப்பட்டவர்களின் மண்டைத்தோலைக் கிழித்துச் செல்கிறார்கள் அபாச்சேக்கள். உடல்களைச் சிதைக்கிறார்கள். அவர்களின் நோக்கில் தங்கள் மண்ணுக்குள் நுழையும் வெறுக்கத்தகுந்த, நாற்றமடிக்கும் உயிர்களாகவே வெள்ளையர்கள் தென்படுகிறார்கள்.
மூன்றாம் வகைக் குற்றவாளிகள் மெக்சிகோவிலும் கொலம்பியாவிலும் வாழும் தங்களின் கலப்பின மக்களுக்கு ஒர் அரசை அமைப்பதற்காகவோ அல்லது ஒரு கொடுங்கோலனிடம் இருந்து விடுதலை பெறுவதற்காகவோ போராடுபவர்கள். அத்தகைய இலட்சியவாதிகள் இக்கதைகளில் அடிக்கடி வருகிறார்கள். அவர்களும் கொள்ளையடிக்கிறார்கள்.ரேஞ்சர்களால் கௌபாய்களாக கருதப்பட்டு வேட்டையாடப்படுகிறார்கள்
ஆனால் அனைவரையும் விட கொடுமையான, முதன்மையான குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுபவர்கள் மூன்றுதரப்பினர். பெரும்பாலும் அவர்கள் அதிகாரம் கொண்டவர்கள், செல்வந்தர்கள். அனைத்துப்பிரச்சினைகளுக்கும் அடியில் அவர்களே இருப்பார்கள். அந்த அராஜகச் சூழலில் தங்களுக்கென்று தனிஅரசுகளை உருவாக்க முயலும் ஆதிக்கவாதிகள் ஒருசாரார். கொலம்பியாவிலோ மெக்சிகோவிலோ சிற்றரசுகளை உருவாக்க விழையும் ராணுத்வ தளபதிகள் அல்லது ஒரு கிராமத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் பண்ணையார்கள் அல்லது பெரும் செல்வத்தை திரட்டிக் கொண்டு செனட்டர்கள் ஆகி அரசியலில் மேலெழத் துடிப்பவர்கள்.
இன்னொரு சாரார் சுரங்க உரிமையாளர்கள், வங்கியாளர்கள் போன்றவர்கள். மூன்றாம்சாரார், ஆயுதவணிகர்கள், கடத்தல்காரர்கள். கௌபாய் கதைகளில் முற்றிலும் தீமை நிறைந்தவர்களாக முழுமையாக ஒழிக்கத் தக்கவர்களாக எப்போதும் இவ்விரு சாராருமே காட்டப்படுகிறார்கள். மற்ற அனைவருக்குமே அவர்களுக்குரிய நியாயங்கள் உண்டு, நியாயமே அற்றவர்கள் இந்தச் சுயநலவாதிகள்தான்
ஆச்சரியம் என்னவென்றால் உண்மையில் இவர்கள் அனைவருமே அந்த அராஜகவெளியில் ஏதேனும் நிலையான அமைப்பை உருவாக்க முனைபவர்கள். ஒரு வட்டத்திற்குள் தங்கள் அதிகாரத்தை உருவாக்க நினைத்தாலும் அதற்குள் ஒரு ஒழுங்கையும் அரசாட்சியையும் கட்டி எழுப்புகிறார்கள். வன்மேற்கில்ன் அராஜகமே இயல்பான மதமென்பதனால் நேர் எதிர்த்தரப்பினராக இவர்கள் காட்டப்படுகிறார்கள். கௌபாயின் கதாநாயகர்களால் இறுதியாக சுட்டுத்தள்ளப்படுபவர்கள் இந்த ஆட்சியாளர்களும் முதலாளிகளும் அரசியல்வாதிகளும்தான்.
ஆனால் துயரம் நிறைந்த வரலாறென்பது இறுதியாக இவர்களே வென்றார்கள் என்பது தான். கௌபாய் கதைகளிலேயே அது திரும்ப திரும்ப வருகிறது. அங்கே மிக விரைவாக அழிந்து கொண்டிருக்கும் இனம் கௌபாய்களும் செவ்விந்தியர்களும்தான். செவ்விந்தியர் எப்படி வெள்ளையர்களுக்கு எதிராக போராடி அழிந்து கொண்டிருக்கிறார்களோ அதே போல உருவாகி வரும் முதலாளித்துவத்திற்கு எதிராக போராடி அழிந்து கொண்டிருக்கிறார்கள் கௌபாய்கள். மிக விரைவிலேயே அமெரிக்க முதலாளித்துவம் வென்றது. சுரங்க முதலாளிகளும் பண்ணையார்களும் இணைந்து உருவான அமெரிக்கக் குடியரசு அமைப்பு தன் ராணுவத்தால், தகவல் தொடர்பால், போக்குவரத்தால் மொத்த நிலத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தது.
பெரும்பாலான கௌபாய் கதைகள் இந்த வரலாற்று பரிணாமத்தை எப்படியோ சுட்டித்தான் முடிகின்றன என்பது மிக ஆச்சரியகரமான ஒன்று. எளிமையான சாகசக்கதைகள் இவை. ஆனால் வரலாற்றுச் சித்திரம் ஒன்றை ஒட்டுமொத்தமாக நமக்கு அளித்துவிடுகின்றன. ஏதோ ஒருவகையில் இன்றைய அமெரிக்காவை புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன.
இன்றைய அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்குள் அந்த கௌபாய் மனநிலைகள் உள்ளே ஊடுருவி இருக்கின்றன என்று சொல்லலாம். கௌபாய் உலகம் என்பது தலைக்கு மேல் ஓர் அரசோ, அறமோ, கடவுளோ இல்லாத மோதல்வெளி. வெறும் ஆற்றல் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு வாழ்க்கைப்பரப்பு. மூளைத்திறன், பயிற்சி, உடலாற்றல் ஆகிய மூன்றும் மட்டுமே அங்கே செல்லுபடியாகும் விசைகள். நட்பு, அன்பு, நம்பிக்கை போன்றவற்றுக்கு இடமே இல்லை. அது வேட்டைக்களம். நீ இரையா ஊனுண்ணியா என்பது மட்டுமே வினா
இன்று அமெரிக்கபாணித் தொழில்துறையில் ஒருவகையில் அவ்வகை வாழ்க்கைதான் இருக்கிறதென்று தோன்றுகிறது. சட்டதிட்டங்களாகவோ நெறிகளாகவோ நீதிமன்றங்களும் அரசும் அவர்களுக்கு மேல் இருக்கலாம். ஆனால் அவை நெடுந்தொலைவில் உள்ளன. தொழில் – வணிகத்துறையில் இருப்பது ஆற்றல் மட்டுமே வெல்லும் என்ற ஈவு இரக்கமற்ற நெறி. அங்கு பண்டைய கௌபாய் உலகின் உளநிலைகளே செயல்படுகின்றன.
கௌபாய் உலகின் அடிப்படை விதிகள் நான்கு.
அ. தனித்திறனை முடிந்தவரை வளர்த்து அதன் உச்சத்தை அடைவது.
ஆ. தற்காலிகமான நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு குழுவாக செயல்படுவது. அதே சமயம் எப்போதும் எவரையும் முழுமையாக நம்பாமல் இருப்பது.
இ. வெற்றி ஒன்றே குறி. அதற்காக எந்த எல்லைக்கும் செல்வது. அதன் பொருட்டு நெறிகளையோ முறைமைகளையோ மிக இயல்பாக மீறிச்செல்வது.
ஈ. உச்சகட்டங்களில் முழு உயிராற்றலையும் கொண்டு தாக்குப் பிடிப்பது. பாலைவனத்தில் கைவிடப்படும்போதோ, பனிவெளியில் உருட்டி விடப்படும்போதோ, துப்பாக்கிமுன் நிற்கும்போதோ, தூக்குக்கயிற்றை கழுத்தில் அணிந்திருக்கும்போதோ ஒரு கணம் கூட விட்டுக் கொடுக்காமல் வெல்லவும் வாழவும் முயல்வது.
கௌபாய் கதைகள் வழியாக கட்டமைக்கப்படும் அமெரிக்காதான் உண்மையான அமெரிக்காவோ என்ற எண்ணம் இக்கதைகளை வாசிக்கையில் உருவாகிறது. அமெரிக்கக் குடிமகன் தன் இளமைப்பருவத்தை இக்கதைகளினூடாகவே கடக்கிறான். அவனுடைய அடிப்படைக் குணாதிசயங்கள் பலவும் இக்கதைகளினூடாகவே வார்த்தெடுக்கப்படுகின்றன. அதை ஒருவகை Quick Gun culture என்றே சொல்லிவிடலாம்போலும்.