«

»


Print this Post

ஜக்கி -இறுதியாக…


ja

ஜக்கி – அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1

ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2

ஜக்கி விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இந்த வகையான விவாதங்கள் நான் அடிப்படையான சிலவற்றை சொல்வதற்குரிய தருணங்கள் மட்டுமே.

இறுதியாக மின்னஞ்சலில் வந்த சில வினாக்கள்.

இந்து மதத்திற்கு அமைப்பு தேவையில்லை, அதுவே அதன் வல்லமை என்றீர்கள். இப்போது அமைப்பு வேண்டும் என்கிறீர்களா?

நம் சூழலில் ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்பதுமுறை சொல்லவேண்டியிருக்கிறது. ஆகவே மீண்டும்.

இந்துமதத்திற்குள் அமைப்புகள் என்றும் இருந்தன. நம் மடங்கள் அனைத்தும் அமைப்புகளே. மூன்றடுக்காக அமைப்புக்கள் உருவானதைப் பற்றி நான் முன்னரே பேசியிருக்கிறேன். . சிருங்கேரி மடம் ஓர் அமைப்பாகச் செயல்பட்டு எப்படி இந்துமதத்தைக் காத்தது என்றே சங்கரர் உரையிலும் விரிவாக சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இந்துமதமே ஓர் அமைப்பு என ஆவது இந்துமதத்தை அழிக்கும். இந்துமதத்திற்கு ஒரு மைய அதிகார அமைப்பும் , ஊர்தோறும் அதனால் நேரடியாக கட்டுப்படுத்தப்படும் கிளைகளும், உறுப்பினர் பட்டியலும், அவர்கள் மேல் அமைப்பின் நேரடி அதிகாரமும்,  தீர்ப்பளிக்கும் அதிகாரம் கொண்ட மதகுருக்களின் சபைகளும் ஒருபோதும் உருவாகக்கூடாது.

ஆகவே இந்துமதத்தை எதனடிப்படையிலேனும் ஒற்றை அமைப்பாகத் திரட்டும் எம்முயற்சியையும் எதிர்க்கிறேன். இந்துக்களின் பிரதிநிதிகளாக நின்று பேசும் எவரும் அதிகாரபூர்வமானவர்கள் அல்ல என்கிறேன். முன்பும் பலமுறை சொன்னது இது.

இந்துமதம் கிளைத்துப்பரவுவது. ஏனென்றால் இது பன்மையிலிருந்து மையங்களால் தொகுக்கப்பட்டது. உட்கூறுகள் தனித்தரிசனங்களாக, மதங்களாக, வழிபாட்டுமுறைகளாக பிரிந்துகொண்டும் இருக்கும். இதற்கு வேரிலும் முளைக்கும் செடி என ஓர் உவமையைக்கூட முன்னர் சொல்லியிருந்தேன். ஆனால் எல்லா அமைப்புக்களும் இந்துமதத்தின் கிளைகளாக, உட்பிரிவுகளாக எழுந்தவை மட்டுமே. எவையும் ஒட்டுமொத்தமாக இந்துமதத்திற்கான அமைப்புகள் அல்ல.

ஆகவேதான் இந்துமதத்திற்குள் இருந்து ‘எதுவும்’ கிளைத்துவர அனுமதிக்கப்படவேண்டும் என்கிறேன். இஸ்லாமியப் பண்பாட்டுக் கலப்புள்ள ஷிர்டி சாயிபாபா  வழிபாடு, மெய்வழிச்சாலை ஆண்டவர் அமைப்பு போன்றவைகூட. அவை விவாதிக்கப்படவேண்டும். மறுதரப்பால் மறுக்கப்படவேண்டும். ஆனால் தடைசெய்யப்படக்கூடாது. எல்லா வகை மீறல்களுக்கும் இதற்குள் இடமிருக்கவேண்டும். ஏனென்றால் ஞானத்தின் பாதை கட்டற்றது.

ஜக்கி சைவத்தை மாற்றியமைக்கிறார், இதை சைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? சிவனுக்கு எங்குமே சிலைகள் இல்லையே?

அதை சைவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்? அவரை பின்தொடர்பவர்கள் ஏற்றுக்கொண்டால்போதும். அது அவரது தரிசனம், அவர் உருவாக்கும் அடையாளம். அவர் தன் நோக்கில் சைவம், யோகம் எதையும் மறுவரையறை செய்யலாம். அப்படி மறுவரையறை செய்யப்பட்ட பலநூறு மரபுகள் இப்போது உள்ளன.

அந்தப்போக்குக்கு எப்போதுமே அனுமதியுண்டு இந்துமரபில். அதைத்தான் சொல்கிறேன். மரபான சைவர்கள் அதை மறுக்கலாம், சைவசித்தாந்திகள் எதிர்த்துவிவாதிக்கலாம். அது நிகழவேண்டும் என்கிறேன்.

இஷ்டப்படி சிலைகளை உருவாக்கலாமா? கட்டுப்பாடே இல்லையா?

யார் கட்டுப்படுத்துவது? அப்படி ஒரு மையம் இருந்ததில்லை, இருக்கக்கூடாது என்றுதான் சொல்கிறேன். ஏனென்றால் இங்கே அமைப்பு என்பதே இல்லை. சென்ற சில ஆண்டுகளில் நீங்கள் பார்த்த பல சிலைகள், வடிவங்கள் புதிதாக உருவானவையே. உதாரணம், கண்திருஷ்டி கணபதி.

சேலம் அருகே கந்தாஸ்ரமம் என்னும் மலையில் அதை உருவாக்கிய சாந்தானந்த சுவாமிகள் நிறுவிய சொர்ண ஆகர்ஷண பைரவர், பஞ்ச முக ஆஞ்சநேயர், மனைவியுடன் கூடிய நவக்கிரகங்கள் என வேறெங்குமில்லாத சிலைகள் உள்ளன. புராணங்களும் சிலைகளும் ஒரு மீமொழி [meta language] எனலாம். தங்கள் குறியீடுகளால் அவை அவற்றை நிறுவியவரின் தரிசனத்தை பேசுகின்றன. இந்துமதம் இந்தச் சுதந்திரமான தேடல் வழியாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் சாமியார்கள்தான் இனிமேல் எதிர்காலமா?

அல்ல. நான் நம்பும் சிந்தனைகளுக்கு கார்ப்பரேட் அமைப்பு தேவையில்லை. ஆனால் வேறுதரப்புகளும் இங்குள்ளன. நவீனவாழ்க்கை சார்ந்தவை. அவற்றுக்கு அவ்வமைப்பு தேவையாக இருப்பதனால் அவை உருவாகின்றன.

நித்தியை எதிர்த்த நீங்கள் ஏன் ஜக்கியை ஆதரிக்கிறீர்கள்?

நித்யானந்தா செய்வது நோய்குணப்படுத்துதல். டிஜிஎஸ் தினகரன் , சாது அப்பாத்துரை, மோகன் சி லாசரஸ் செய்வதுபோல. அவர் தன்னை கடவுள் என்கிறார். அது மோசடி. ஆகவே எதிர்த்தேன், வசைபாடவில்லை, தடைசெய்யக்கோரவுமில்லை. கவனம் என அறிவுறுத்தினேன். ஜக்கி செய்வது ஒரு கருத்தைப் பரப்புதல். அதனுடன் விவாதிப்பதோ புறக்கணிப்பதோ அறிவுடையோர் செயல். வசைபாடுவதல்ல.

மூடநம்பிக்கைகளை பரப்பாதவரை, நோயை குணப்படுத்தல் என்றெல்லாம் அறிவியலுக்கு எதிரான பேச்சுக்களை பரப்பாதவரை, பழமைவாதத்தில் ஊன்றி சாதியக்காழ்ப்பை முன்வைக்காதவரை அவை செயல்படும் உரிமைகொண்டவையே.

ஜக்கி மீதான எதிர்ப்பை இந்துமதம் மீதான எதிர்ப்பாக ஆக்குகிறேனா?

இல்லை. ஜக்கி என்றல்ல, இந்துமதத்தின் எந்த ஒரு அமைப்பும் நிலமோசடி செய்தால், சூழலை அழித்தால், பொதுநன்மைக்கு எதிராக செயல்பட்டால் ஜனநாயகமுறைப்படி எதிர்க்கப்படலாம். எதிர்த்தும் போராடலாம்.

ஆனால் வெறும் அவதூறுகள் வசைகள் அத்தகைய பொதுநன்மை சார்ந்த அக்கறையை காட்டவில்லை. ஜக்கி வெறுப்புக்காக மட்டுமே சூழியலை கையிலெடுக்கும் கும்பல்கள் அப்பட்டமான மாபெரும் சூழியல் அழிவுகளை, பொதுச்செல்வக்கொள்ளைகளை ஆதரிப்பவர்கள், காணாமல் கடந்துசெல்பவர்கள்.  ஆகவே அவர்களின் நோக்கத்தை திறந்துகாட்டுகிறேன்.

அப்படி இல்லை என்றால் அவர்களே சொல்லட்டுமே, ஜக்கியை எதிர்க்கிறோம் இந்துமதத்தை அல்ல என்று. இன்றுவரை ஒருவர்கூட அப்படி சொல்லவில்லையே.

ஜக்கி கடிதங்கள் 8

ஜக்கி கடிதங்கள் 7

ஜக்கி கடிதங்கள் 6

ஜக்கி கடிதங்கள் 5

ஜக்கி கடிதங்கள் 4

ஜக்கி கடிதங்கள் 3

ஜக்கி கடிதங்கள் 2

ஜக்கி கடிதங்கள் 1

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/95868/

1 ping

  1. யோகமும் மோசடியும்

    […] நித்தியை எதிர்த்த நீங்கள் ஏன் ஜக்கிய… […]

Comments have been disabled.