டியர் சார் அலைவரிசை ஊழல் பற்றிய உங்கள் பதிவை ஒட்டியது இந்தக் கடிதம். உங்களுக்கு நிகழ்கால அரசியலில் விவாதங்களில் விருப்பம் இல்லை என்பதை அறிய முடிகிறது. எனினும் இதைத் தங்களிடம் கேட்க ஆசை. அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிடும் விகிலீக்(WikiLeaks) பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஜனநாயகத்தில் பத்திரிகைகளுக்கு கட்டுபாடற்ற சுதந்திரம் என்பது சாத்தியம்தானா? ரகசியங்கள் இல்லாத அரசு என்பது இருக்க நடைமுறையில் சாத்தியமே இல்லாதபோது, அரசின் ரகசியங்களை வெளியிடும் அளவுக்கு சுதந்திரமான பத்திரிகை சுதந்திரம் அரசுக்கே அல்லது நாட்டிற்கே தொல்லையாக ஆகிவிடாதா? பத்திரிக்கைகளுக்கு என்னதான் அளவுகோல்? Self-censorship எனப்படும் சுயக்கட்டுப்பாடு தானா? சுயக்கட்டுப்பாடு என்பது ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடும் விஷயம் இல்லையா? ஒரு சராசரி மனிதனின் சுயக்கட்டுப்பாடு காந்தியின் சுயக்கட்டுப்பாடு ஒப்பிடமுடியுமா? இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு அரசு தனது ரகசியங்களைப் பாதுகாப்பதற்கு இன்னும் அதிகமாக மெனக் கெட வேண்டியிருக்கும். தண்டனை இல்லை, புகழ் அதிகம் என்ற நிலையில் இன்னும் அதிகமான பத்திரிக்கைகள் இதைச் செய்ய விரும்பலாம். இதன்மூலம் அரசின் பாதுகாப்பிற்கான இன்னும் செலவுகள் அதிகமாகலாம். இன்னொரு விஷயமும் இருக்கிறது, அரசின் கட்டுப்பாடு அதிகமாகும்போது, பல அத்து மீறல்களும் நடக்கிறது. இப்போது இந்தியாவில் வெளிவந்திருக்கும் அலைவரிசை ஊழல் சம்பந்தமான அரசால் ஒட்டுக் கேட்கப் பட்ட ஒலிப்பதிவுகள் போன்றவை. இதைப் பற்றிய தங்கள் கருத்து என்ன என்று அறிய விரும்புகிறேன்.
அன்புடன் வேழமுகன்
அன்புள்ள வேழமுகன்,
ஜனநாயகத்தைப் பற்றி நான் எனக்கே உரியமுறையில் புரிந்து வைத்திருக்கிறேன். தப்போ சரியோ இது காலப்போக்கில் நானே உருவாக்கிக்கொண்ட ஒரு கருத்து. இது எனக்கு பல விஷயங்களை விளங்கிக்கொள்ள உதவுகிறது. ஓரளவு நேரடி அனுபவங்களும் எனக்கு உதவியிருக்கின்றன ஜனநாயகம் என்றால் என் நோக்கில் ஒரு வகையான ’காட்டுநியாயம்’தான். காட்டில் எல்லா இயற்கைச்சக்திகளும் தங்களுக்குரிய வகையில் செயல்படுகின்றன. அவற்றின் மோதல் மூலம் சமநிலைகள் உருவாகி காடு செயல்படுகிறது. அங்கே புலி ஆட்டை கொல்வதும் ஆடு புல்வெளிகளை மொட்டையாக்குவதும் எல்லாம் நியாயமே. எல்லா காலகட்டத்திலும் சமூக அதிகாரம் இப்படித்தான் இருந்துள்ளது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் மக்கள் சிறிய குழுக்களாக திரண்டு வன்முறைமூலம் தங்கள் அதிகாரப்பங்கீட்டுக்காகப் போராடினர். ஜனநாயகம் மக்கள் பெருந்திரளாக, வன்முறை இல்லாத மோதல்கள் மற்றும் கருத்தொருமிப்பு மூலம் தங்கள் அதிகாரங்களைப் பங்கிட்டுக்கொள்ள வழியமைக்கிறது என்பதே வேறுபாடு. காட்டில் எல்லா இயற்கைச்சக்திகளுக்கும் முழுமையான சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒன்றின் சுதந்திரத்தை இன்னொன்று கட்டுப்படுத்துகிறது. எல்லா சுதந்திரங்களும் ஒரு சூழலில் சாத்தியமாகும் சமநிலைப்புள்ளி வரை மட்டுமே செல்ல முடியும். ஆடு எவ்வளவு வேண்டுமானாலும் குட்டிபோட்டு பெருகலாம், புல்வெளியை அழிக்கலாம், புலி அனுமதிக்கும் எல்லை வரை. ஜனநாயகத்தில் உள்ள சுதந்திரமும் இப்படிப்பட்டதே. இங்கே ஒரு குறிப்பிட்ட கால இடச் சூழலில் எல்லா அதிகார சக்திகளுக்கும் சாத்தியமான எல்லா ஆற்றல்களையும் செயல்படுத்திக்கொள்ளும் சுதந்திரம் உள்ளது. அச்சுதந்திரம் இன்னொன்றால் கட்டுப்படுத்தப்படுகிறது அவ்வளவுதான். ஆகவே இங்கே எந்த ஒரு அதிகாரசக்தியையும் அதன் எதிர் சக்தியை கணக்கில் கொள்ளாமல் நாம் விவாதிக்க முடியாது. பத்திரிகைகள் செய்வது சரியா என்றால் அவை எதிர்கொள்ளும் அதிகாரசக்திகள் செய்வது மட்டும் சரியா என்பதே கேள்வி. டாட்டாவும் அம்பானிகளும் செய்யும் அதிகார அரசியலை எதிர்கொள்வதற்கான மாற்றுத்தரப்பாகவே நான் இதழ்களின் செயல்பாடுகளைக் காண்கிறேன். அவர்கள் அறங்களின் எல்லைகளைத் தாண்டும்போது இவர்களும் தாண்டுகிறார்கள். என்னைப்பொறுத்தவரை ஒவ்வொன்றையும் அதன் எதிர் தரப்புடன் முரண்படும் விசையாகவே காண்கிறேன். ஒன்றைப்பற்றி பேசாமல் இன்னொன்றைப்பற்றி விவாதிக்கமுடியாது. இந்த தேசத்தில் இருந்து பல்வேறுவகைகளில் சேர்க்கப்பட்டு மையம் நோக்கிச் செல்லும் நிதியை அனைத்து வழிகளினூடாகவும் அதிகாரச் சக்திகள் முட்டி மோதி பங்கிட்டு உண்கின்றன. அந்த அதிகாரச் சக்திகளை ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ள வேண்டிய எதிர் அதிகாரச் சக்தியாகவே இங்கே மக்கள் இருக்கிறார்கள். மக்கள் தங்கள் அதிகாரவல்லமையை எப்படி உருவாக்கிக் கொள்வது? எப்படி பெருக்கிக் கொள்வது? ஜனநாயகத்தில் தகவல்கள் பெரும் ஆற்றல் கொண்டவை. அவை மக்களுக்கு உண்மை நிலையைக் காட்டுகின்றன. அவர்களைத் தங்களுக்குச் சாதகமாகத் திரட்டிக்கொள்பவர்கள் உருவாக்கிய பிரமைகளைக் களைய அவை வழிகாட்டுகின்றன. தங்கள் நலன்களுக்காக ஒன்றாகத் திரண்டு பொருண்மையான சக்தியாக மாற அவை அவர்களுக்கு உதவுகின்றன. தகவல்கள் கட்டுப்படுத்தப்படும்போது மக்கள் சக்தி கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவேதான் எல்லா சர்வாதிகார அரசுகளும் தகவல்கள் மேல் முதல்கட்ட அடக்குமுறையை ஏவுகின்றன. சீனா முதல் மலேசியா வரை சர்வாதிகார அரசுகள் இன்று எப்படி தகவல்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளன என நாம் காண்கிறோம். நூறாண்டுக்காலம் ருஷ்யாவில் தகவல்கள் மீதிருந்த கட்டுப்பாட்டைக் கோர்பசேவ் தளர்த்திக்கொண்டபோது அந்த சர்வாதிகார அரசின் அடித்தளத்தையே உடைத்து வீசிய மக்கள் எழுச்சி எப்படி நிகழ்ந்தது என்றும் கண்டோம். நான் அரசாங்கத்தின் உறுப்பாக மக்களைக் காண்பவன் அல்ல. மக்களால் உருவாக்கப்பட்ட அரசு கூட மக்களுக்கு எதிரான ஒன்றாகவே செயல்பட முடியும். மக்கள் அதனுடன் நிரந்தரமாக போராடித்தான் தங்கள் உரிமைகளை வெல்ல முடியும். அரசு என்பது அதிகார சக்திகளின் சமநிலைப்புள்ளி. எந்த அரசும் அப்படித்தான். அந்த அரசுடன் மோதி தன் நலன்களை காக்கும் ஒரு மாற்று அதிகார சக்திதான் மக்கள். அந்த அரசு எப்படிச் செயல்படுகிறது என்ற தகவல் மக்களுக்கு மிக முக்கியமானது. அந்த தகவல்தான் அவர்களின் ஆயுதம். ஆகவேதான் அரசு எப்போதும் தகவல்களைக் கட்டுப்படுத்துகிறது. இன்றும்கூட உலகின் மிகச்சிறந்த ஜனநாயக அரசிலும்கூட அரசாங்க நிகழ்வுகளின் பெரும்பகுதி ரகசியங்களால் ஆனதே. ஏதாவது ஓர் அரசாங்க அமைப்புடன் தொடர்பிருந்தால் இது எளிதில் புரியும். ஒரு தாலுகா அலுவலகத்தில்கூட அங்கே வரும் கடிதங்களில் கணிசமானவை ‘மந்தணம்’ என்று முத்திரையிடப்பட்டவையாக இருக்கும். நிர்வாகம் என்றும் ரகசியங்களால் ஆனது. அது ரகசியமாக இருக்கும்தோறும் அரசைக் கையாளும் தரப்பு வலிமையுடன் இருக்கிறது. ரகசியம் அழியும்தோறும் மக்கள் தரப்பு வலிமையடைகிறது. எனவே எல்லா ரகசிய வெளிப்படுத்தல்களும் மக்களுக்குச் சாதகமானவையே. உடனடியாக சில சமயம் அவை எதிர்விளைவுகளை உருவாக்கக் கூடும். ஆனாலும் ஒட்டுமொத்தமாக அவை மக்கள் தரப்புக்கு வலிமை சேர்ப்பவையாகவே இருக்கும். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் நவீன முதலாளித்துவ அரசை அமைத்த காலம் முதல் அவ்வரசின் அதிகாரத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது செய்திதான். செய்தியமைப்புகளுக்கு எதிராகத்தான் பிரிட்டிஷ் காலகட்டத்தின் மிக மோசமான அடக்குமுறைச் சட்டங்கள் பல உருவாக்கப்பட்டன. செய்தியை கைப்பற்றிக்கொண்டு அதையே ஆயுதமாகக் கொண்டு காந்தி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடினார். அரசு செயல்படும் விதத்தை தொடர்ந்து மக்கள் முன் அம்பலப்படுத்தியதே காந்தியின் வழிமுறை. இந்தியாவை பிரிட்டிஷ் அரசு எப்படி சுரண்டுகிறது என்ற ரகசியத்தை அன்னியத்துணி புறக்கணிப்பு முதல் உப்புகாய்ச்சுதல் வரை தன் போராட்டங்கள் வழியாக அப்பட்டமாக்கி அதன் மூலம் மக்களை ஒருங்கிணைத்து காந்தி தன் போராட்டத்தை நிகழ்த்தினார் சுதந்திரத்துக்கு பின் இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமான மக்கள் போராட்டங்கள் எல்லாமே அரசின் ரகசியங்களுக்கு எதிரான போராட்டங்களே என்று சொல்லலாம். அறுபதுகளில் இந்திய வனங்கள் எப்படி அரசால் அழிக்கப்பட்டன என்ற தகவல்கள்கூட ரகசியமாக இருந்தன.அவை வெளிப்படுத்தப்பட்டமையே இங்கே சூழலியல் இயக்கங்கள் உருவாகி இயற்கையை பேணும் பிரக்ஞை உருவாக வழி வகுத்தன. இன்றும் அணுஉலைகளுக்கும் பசுமைப்புரட்சிக்கும் எதிரான போராட்டம் என்பது அரசு மறைக்கும் ரகசியங்களுக்கு எதிரான போராட்டமேயாகும். ஆகவே விக்கிலீக்ஸ் முதல் நீரா ராடியா உரையாடல் வெளியீடு வரை அனைத்தையும் நான் ஒட்டுமொத்தமாக மக்களுக்குச் சாதகமான செயல்பாடுகளாகவே காண்கிறேன். அரசுகளுக்கு அவை நெருக்கடிகளை கொடுக்கலாம். சிலசமயம் அவை அவ்வரசுகளைச் சார்ந்துள்ள மக்களுக்கும் தற்காலிக நெருக்கடிகளைக் கொடுக்கலாம். ஆனாலும் அவை தங்கள் அரசுகள் எப்படிச் செயல்படுகின்றன என்ற உண்மைச்சித்திரத்தை மக்களுக்கு அளிக்கின்றன. அரசுகள் மக்களை எப்போதுமே பொய்யான கோஷங்கள் பொய்யான வாக்குறுதிகள் புனைவான வரலாற்றுக் கற்பிதங்கள் வழியாகவே திரட்டி அதிகார மையத்தைக் கட்டியுள்ளன என்பதனால் உண்மைத்தகவல்கள் அந்த அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் என்பது உறுதி. அரசுக்கு எதிர்நிலையில் செயல்படும் மக்கள்சக்திகளை அவை வலிமை கொள்ளவும் செய்யும்.இவ்வாறு பல காலகட்டங்களிலாக வெளியான பல தகவல்கள் மூலமே உலக அளவில் ஜனநாயகம் வலிமையாக உருவாகி வந்தது. நியூரம்பர்க் விசாரணை ஆவணங்கள் முதல் வியட்நாம் போர் ஆவணங்கள், ருஷ்ய கே.ஜி.பி ஆவணங்கள் வரை உதாரணம் காட்டலாம். இந்தியாவில் ஒருபோதும் வெளிவராது போன ரகசியங்களே அதிகம். சீனப்போர் குறித்த ஆவணங்கள், பாகிஸ்தான் போர்களைப்பற்றிய ஆவணங்கள், இந்தியா உலகவங்கியுடனும் பிற பொருளியல் அமைப்புகளுடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் பற்றிய தகவல்கள் என வெளியாக வேண்டிய தரவுகள் பல்லாயிரம் உள்ளன. அவை வெளியாவது இந்திய ஜனநாயகத்துக்கு உயிர்கொடுக்கும் இந்த இதழ்களுக்கு ’கட்டற்ற’ சுதந்திரம் உள்ளதா என்றால் இல்லை, சூழலே சுதந்திரத்தின் எல்லையை தீர்மானித்துக்கொள்ளும் என்று சொல்வேன். இந்த இதழ்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது சி.ஐ.ஏ அல்லது ரத்தன் டாட்டாவின் சுதந்திரத்தை கட்டவிழ்த்துவிடுவதாகும் என்பேன். என்றாவது ரகசியங்கள் மிகமிகக் குறைந்த ஓர் அரசு உருவாகலாம். அதை ஜனநாயகத்தின் முழுமைக்காலம் என்று சொல்லமுடியும் ஜெ ஊடகங்கள், அரசியல், விவாதங்கள் கேரள வன்முறைஅரசியல்-நாகார்ஜுனன் எனது அரசியல் காய்கறியும் அரசியலும்