ஜக்கி கடிதங்கள் 4

adi

ஜெ,

நான் ஈஷா யோக மையத்திலும் அருகே ஆதியோகி சிலை நிறுவப்பட்ட இடத்திலும் சென்று தேடுதேடென்று தேடினேன். அருகே எங்குமே காடு என ஏதும் இல்லை. காட்டை அழித்து சிலை நிறுவப்பட்டது என விகடன் செய்தி சொல்லி ஒரு படம் காட்டுகிறது சுற்றிலும் நெடுந்தொலைவுக்கு சோளக்காடு. சோளக்காடு எப்படி காடாக ஆகும்? அந்தப்பக்கம்கூட சோளக்காடுதான்.அது எப்படி ரிசர்வ் ஃபாரஸ்ட் ஆகும்? அப்படியென்றால் காட்டை அழித்து ஆக்ரமித்து சோளம்போட்டவர்கள் யார்? அவர்களெல்லாம் தண்டிக்கப்பட்டாயிற்றா?

ஆதியோகி சிலைக்கு பல கிலோமீட்டர் தொலைவில் நீலமாகத் தெரிவதுதான் மலை. அந்த ஏரியாவே விவசாய பூமியாக ஆகி ஐம்பதாண்டுகள் கடந்துவிட்டன. பட்டா நிலத்தை பணம்கொடுத்து வாங்கி அந்தச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.  அது காடா? அப்படியென்றால் காட்டை பட்டாபோட்டுக்கொடுத்தவர்கள் யார்? ஒருவேளை இந்தச் சோளக்கொல்லைகளை உருவாக்கியவரே ஜக்கி என்கிறார்களா?

ஒரு செல்போன் போட்டோவைக்கொண்டே புரிந்துகொள்ளமுடியும் இந்த உண்மையை யார் எதற்காக இப்படி வெறிகொண்டு ஊடகம் முழுக்கப் பரப்புகிறார்கள்? இவர்களின் சுற்றுச்சூழல் அக்கறையின் உண்மையான பெறுமதி என்ன? இவர்களின் லாபம்தான் என்ன?

முருகேசன் சண்முகம்

***

அன்புள்ள முருகேசன் சண்முகம்,

திடீரென்று உருவாகிவந்துள்ள இந்த மரப்பாசம், இயற்கைப்பற்று ஒருவகையில் நல்லதுதான். இதைக்கேட்கும் ஆயிரத்தில் ஒருவராவது மற்ற இயற்கை அழிவுகளைப்பற்றி கொஞ்சமேனும் செவிகொடுக்கக்கூடும்

சென்ற திமுக ஆட்சியில் மதுரைக்குள் குடியிருப்புகளாக ஆன ஏரிகள் எத்தனை தெரியுமா? தமிழகம் முழுக்க அரசியல்வாதிகளின் பொறியியல் கல்லூரிகள் ஆக்ரமித்துள்ள வனபூமி [100 வருட லீஸ் ] எவ்வளவு தெரியுமா?

சென்ற பல ஆண்டுகளில் தெங்குமராட்டா போன்ற இடங்களில் உண்மையிலேயே சட்டவிரோதமகா காடுகளை ஆக்ரமித்து அமைக்கப்பட்ட குடியிருப்புகள், விளைநிலங்களை கையகப்படுத்த சட்டநடவடிக்கைகளை அரசு எடுக்கும்போது அதற்கு எதிராக போராடுவது யார்?

இந்த கும்பலின் கூச்சலைக் கேட்டு ஒரு பத்துபேர் அதைக்கணக்கெடுக்க ஆரம்பித்தாலே நாட்டுக்கு நல்லதுதானே?

ஜெ

முந்தைய கட்டுரைஜக்கி கடிதங்கள் – பதில் 3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28