ஹிந்து பைபிள்

நரசிம்மலு நாயுடுவின் ஹிந்து பைபிள் அந்தப்பெயர் சுட்டுவதுபோல பைபிளை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல் அல்ல. பைபிள் மூலநூல்களின் பெருந்தொகை. அதில் வரிகள், அல்லது வசனங்கள், எண்ணிக்கையிடப்பட்டு அளிக்கப்பட்டிருக்கும். இந்நூல் நரசிம்மலு நாயுடு அவர்களின் சொந்த நூல்தான். இந்து ஞான மரபைப் பற்றிய தன்னுடைய விரிந்த வாசிப்பை அவர் இந்நூலில் தொகுத்தளித்து கூடவே மூலநூல்களின் பல பகுதிகளையும் மொழியாக்கம் செய்து அளித்திருக்கிறார்.

இந்நூல் ஒரு பெரிய கலவை. முதற்பகுதியை பெரிய அறிமுக உரையாக எழுதியிருக்கிறார் நரசிம்மலு நாயுடு. இந்து ஞானமரபு என்ற மரத்தை வேர்முதல் கிளைகள் வரை அறிமுகம்செய்கிறார். இதை கருத்துக்கள் அல்லது மதங்களின் வளர்ச்சிப்போக்காக பார்க்காமல் குருபரம்பரையின் ஞானமாகவே அவர் காண்கிறார். அது பிரம்மஞான சங்கத்தின் அணுகுமுறை. மனுவை முதல் குருவாகவும் விஷ்ணுவை இரண்டாம் குருவாகவும் கொண்டு இருபத்திரண்டாம் குருவாக போதாயனரை நிறுத்தி ஒரு பட்டியலை அளித்து அவர்களைப்பற்றி சுருக்கமாகச் சொல்கிறார்

நரசிம்மலு நாயுடு பல்லாயிரம் வருடங்களாக இந்து ஞானமரபுக்கு உருவாக்கப்பட்டுள்ள அதே பாடவரிசையைத்தான் பின்பற்றுகிறார். வேதங்கள், மூன்று தத்துவங்கள், ஆறு தரிசனங்கள்,ஆறுமதங்கள். வேதங்களை விளக்கியபின் வேதாங்கங்கள். ஆறுசாஸ்திரங்கள் அல்லது ஆறு தரிசனங்களை அறிமுகம் செய்தபின்னர் பிரம்மசூத்திரம் கீதை உபநிடதங்கள் என மூன்று தத்துவநூல்கள். அதன் பின் பதினெட்டு புராணங்கள். அதன் பின்னர் ஆகமங்கள் நிகமங்கள் குறித்த அறிமுகம். அதன்பின்னர் தாந்த்ரீக நூல்களைப்பற்றிய அறிமுகம். பின்னர் இரு இதிகாசங்களைப்பற்றி விரிவாகப் பேசுகிறார். இந்த அறிமுகங்கள் சுருக்கமாக இருந்தாலும் தேவையான தகவல்களுடன் மூலநூல்களை ஒட்டியே உள்ளன என்பதை காணமுடிகிறது.

பிரம்மசமாஜம் இந்துமதத்தின் ஞானமரபை முன்னெடுக்க முயன்ற இயக்கம். அந்த வகையில் இந்திய ஞானமரபை விரிவாக அறிமுகம் செய்தபின்னர் அடுத்த அத்தியாயத்தில் இந்து வழிபாட்டு முறைகளைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் நரசிம்மலு நாயுடு. பிரம்மஞான சங்கத்தினரில் ஒரு சாரார் உருவ வழிபாட்டை முழுமையாக இகழ்ந்து நிராகரிப்பது வழக்கம். அன்றைய கிறித்தவ பாதிரிகளின் குரல் அது. ஆனால் நரசிம்மலு நாயுடு உருவவழிபாட்டை நிராகரிக்கவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதை ஞானமரபின் வெளிவிளக்கமாக விளங்கிக்கொள்ள நரசிம்மலு நாயுடு முயல்கிறார்.

பொதுவாக இந்து வழிபாட்டுமுறைகளை குறியீட்டுத்தளத்தில் பார்ப்பது மிகவும் பிற்பாடு உருவான ஒரு அணுகுமுறை. அந்த அணுகுமுறை நரசிம்மலு நாயுடு அவர்களிடம் இருப்பது வியப்பூட்டுகிறது. உருவவழிபாடு ஞானவழியில்செல்லும் அறிவுத்திறன் இல்லாதவர்களுக்குரியது என்றே நரசிம்மலு நாயுடு அவர்களும் கருதுகிறார்கள். உருவற்ற அறியமுடியாத பிரம்மமே அவரைப் பொறுத்தவரை இறைவடிவம். ‘நிராஹார பிரம்மத்தை காலபோதத்தால் உய்த்துணர சக்தியற்ற பாமர ஜனங்களுக்கு பரமேஸ்வரனுடைய இருப்பைக் காட்ட விக்ரக ஆராதனையை ஒரு முதல்படியாக நியமித்தார்கள்’ என்று அவர் சொல்வது இந்த கோணத்திலேயே

நரசிம்மலு நாயுடு வைணவர். ஆனாலும் ஆனந்தக்குமாரசாமியை அடியொற்றி உருவ வழிபாட்டின் தத்துவ நுட்பத்தை விளக்க நடராஜ தத்துவத்தையே முதலில் எடுத்துக்கொள்கிறார். உடுக்கை நாதத்தில் உருவாகும் பிரபஞ்சங்கள் வடவைத்தீயில் அழிவதையும் நடுவே தீரா பெருநடனமாக நடராஜர் ஆடுவதையும் விளக்குகிறார்.

அதன்பின் அதே முறைமையைக் கொண்டு வேணுகோபாலர் தோற்றத்தை விளக்குகிறார். ‘பிருந்தாவனம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் அதற்கு நெருஞ்சி முள் நிறைந்த காடு என்ற பொருளும் இருக்கிறது. ஆகவே காமகுரோத மோகாதிகள் நிறைந்த காடாகிய உலகம் அல்லது தேகம் என்று அதற்கு பொருள்’ என்று சொல்லும் நரசிம்மலு நாயுடு அந்த காட்டில் இனிய புல்லாங்குழல் நாதத்துடன் தாயின்வடிவமாகிய பசுவுடன் தோன்றும் பரம்பொருளாக வேணுகோபாலனை உருவகம்செய்கிறார்.

அதன் பின் பண்டிகைகள் குறித்த விளக்கம். தீபாவளியை ஞான ஒளியின் விழாவாகவும் பொங்கலை சூரிய ஒளியின் விழாவாகவும் விளக்குகிறார். அவரைப்பொறுத்தவரை எல்லா பண்டிகைகளுமே அறிவார்ந்த உட்பொருள் கொண்டவை. ஞானத்தேடலின் அடிபப்டைகளை குறியீடுகள் மூலம் அன்றாட வாழ்க்கைக்குக் கொண்டுவர முயல்பவை அவை.

அதன்பின் விரிவாக முன்செல்லும் இந்து பைபிள் அறிமுகத்தில் சொல்லப்பட்டவற்றை வினாவிடை வடிவில் விரிவாக விவாதிக்கிறது. முதல் வினா ‘இந்து மதத்தினரின் தெய்வம் எது?’ ‘பரப்பிரம்மம்’ என அதற்கு விடையளிக்கும் நரசிம்மலு நாயுடு பரம் என்றால் என்ன பிரம்மம் என்றால் என்ன என்று விளக்குகிறார்.வேதங்கள் வேதாங்கங்கங்கள் அனைத்தைப்பற்றியும் விரிவாக விளக்கிச் செல்கிறார்.

இப்பகுதியை தொடர்ந்து உபநிடதங்கள், பல்வேறு பக்தி நூல்களில் இருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளை தொகுத்து மொழியாக்கம் செய்து அளித்தபடியே செல்கிறார். இப்பகுதிகளின் வழியாக அவர் முன்வைக்கும் கோணம் ஒன்றே. இந்துமதம் என்பது உருவற்ற பரப்பிரம்மம் என்ற தத்துவ தெய்வ உருவகத்தை மையமாகக் கொண்ட ஒன்று. அதை பல்வேறு வழிகளில் அன்றாட வாழ்க்கையில் வழிபட அது வழியமைக்கிறது. ஆனால் உருவவழிபாடு ஆரம்பகட்டம் மட்டுமே. அதன் வழியாக ஞானவழியை வந்தடைந்தால் மட்டுமே முழுமை அல்லது முக்தி கிடைக்கும்.

நூலின் பிற்பகுதியில் பல்வேறு ஆசாரங்களைப்பற்றிய விரிவான விளக்கங்கள் உள்ளன. இந்து மரபுக்கு ஏற்ப சுருதிகள் என்னும் மெய்ஞான நூல்களில் ஆரம்பித்து ஞானமையங்களை வகுத்தபின்னர் ஸ்மிருதிகள் என்னும் அன்றாட அற-ஒழுக்க நூல்களை நோக்கி வருகிறார்.ஆகவே இந்நூலின் பாதிக்குமேற்பட்ட பகுதி இந்து வாழ்க்கைமுறை என்பதை எப்படி அமைத்துக்கொள்வது என்பதைப்பற்றியதாகவே உள்ளது

அன்றாடவாழ்க்கையில் செய்யத்தக்க செயல்கள் அவற்றுக்கு நூல்மரபு அளிக்கும் இலக்கணங்களைப்பற்றிய விளக்கம் இது. பிறப்பு முதல் மரணம் வரையிலான எல்லா தருணங்களையும் ஆசார நூல்கள் எவ்விதம் வகுத்தளிக்கின்றன அவற்றுக்கான நோக்கம் என்ன என்று விளக்குகிறார் நரசிம்மலு நாயுடு. அதற்கு பண்டைய நூல்கள் முதல் சமகால ஞானியரின் ஆக்கங்கள் வரை அனைத்தையும் பயன்படுத்திக்கொள்கிறார். சுகாதாரம் பற்றி பேசும் இடத்தில் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் கூற்றை முழுமையாகவே ஒர் அத்தியாயமாக கொடுக்கிறார்

அன்றாட ஆசாரங்களுக்குப் பின்னர் முக்திக்கான வழிகளாகிய யோகம், பக்தி இரண்டையும் விரிவாக விளக்குகிறார் நரசிம்மலு நாயுடு. யோகநூல்களில் இருந்து தேவையான பகுதிகள் மொழியாக்கம்செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. பக்திநூல்களில் இருந்தும் ஏராளமான பகுதிகள் உள்ளன. பக்திப்பாடல்களும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நூல் கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் காலகட்டத்தில் வெளிவந்த மிக முக்கியமான ஒன்றாக இருந்திருக்கலாம். இன்று இந்து மரபு , இந்து வாழ்க்கை பற்றிய பிரம்மஞானசங்க அணுகுமுறையை அறிவதற்கான பொதுநூலாக தோன்றுகிறது. இந்துஞான மரபை ஆசிரியர் ஆங்கிலம் வழியாக, அதிகமும் ஐரோப்பிய இந்தியவியல் அறிஞர்களின் நூல்களிநூடாக, அறிந்திருக்கலாம். மூலநூல்கள் சிதறி தனித்தனி குருகுலங்களில் ரகசியமாக இருந்த காலகட்டத்தில் ஒரு நூலில் அனைத்தையும் தொகுத்தளிக்கும் இந்த முயற்சி முக்கியமானதுதான்.

இன்றும் ஒட்டுமொத்த இந்துமதம் குறித்த அறிமுகம் தேடுபவர்களுக்கு உதவியான நூலாகவே இது உள்ளது. நரசிம்மலு நாயுடு அவர்களின் நடை நூற்றைம்பது வருட பழமையானது. நூல் சரியான முறையில் துணைத்தலைப்புகளுடன் தொகுக்கப்படவில்லை. அக்குறைகளை தாண்டி வாசிப்பவர்களுக்கு மிக உதவியான நூல் இது. முழுமையாக வாசிப்பதற்கல்ல, அவ்வபோது எடுத்து வாசித்துக்கொண்டே இருப்பதற்கானது இந்நூல்.

மறுபதிப்பாக இப்போது வந்துள்ள இந்நூலை ஆசிரியர் பற்றிய குறிப்புகள், பொருளடக்கம், சொல்லடைவு, பொருளடைவு ஆகியவற்றுடன் பதிப்பிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இத்தகைய பெருநூல்களுக்கு அது இன்றியமையாத ஒன்றே

[இந்து பைபிள். சே.ப.நரசிம்மலுநாயுடு. S.P.Narasimhalu Naidu Estate Trust Crescent Cottage 86 Mill Road Coimbatire 641001 India]

நரசிம்மலு நாயுடு விக்கி

திண்ணைகட்டுரை

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகோவைக்கு அழைப்பு