ஜக்கி கடிதங்கள் – பதில் 3

ja

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வெண்கடல், விசும்பு படித்து விட்டு செறிவான சொற்கள் கொண்ட நீலம் வாசித்தேன்.  உங்களுக்கு முன்பு சில கடிதங்கள் எழுதி இருக்கிறேன், ஒன்று உங்கள் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டது – நல்லவேளையாக மற்றவை வெளியிடப்படவில்லை.  இனி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுமுன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது “நீலம்”  தெரியாமல் எதையும் பேசக்கூடாது என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியது.  இப்போது ஈஷாவில் சில வகுப்புகள் கற்றவன் என்ற முறையிலும், பதினைந்து ஆண்டுகள் தன்னார்வத் தொண்டனாக பல்வேறு நிகழ்வுகளில் இருப்பவன் என்ற முறையிலும் என் எண்ணங்கள் சிலவற்றை கூற விரும்புகிறேன்.  முதலில் நடுவுநிலை நின்ற உங்களுக்கு நன்றி.  ஈஷாவின் வகுப்புகளின் வாயிலாக உடல்-மனம் ஆரோக்கியம் சார்ந்த பயன்களை நான் பெற்றேன் என்பது உண்மை – அவற்றை இங்கு விவரிப்பது தேவையற்றது என்பதால், ஈஷாவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை மற்றும் அணுகுமுறை பற்றி மட்டும் என் கருத்துக்களை சிலவற்றை பதிவு செய்கிறேன்.

 

ஈஷாவின் மீதான என் ஈடுபாடு என் சொந்த பாட்டிக்குக் கூட எரிச்சல் ஏற்படுத்தியது “நமக்கு குரு மஹாபெரியவர் தான்,  அப்பழுக்கற்ற ஞானி அவரை விட்டு விட்டு போயும் போயும் இவரா உன் குரு ? ஆதிசங்கரர் தான் ஜகத்குரு இவரெல்லாம் ஜகத்குருவா? -எதுவுமே தெரிந்து கொள்ள விரும்பாமல் கடுமையான எதிர்ப்பு காட்டினார்.  “அவர் தன்னை ஒருபோதும் ஜகத்குரு என்று சொல்லவில்லை, சத்குரு என்று மட்டுமே சொல்கிறோம்.  ஆனால் நீங்கள் இப்படி சொல்வதால் நான் அவரை ஜகத்குரு என்றும் சொல்வேன்.  இந்தியாவிற்கு வெளியே சென்றிராத ஆதிசங்கரர் ஜகத்குரு எனும்போது உலகின் பல்வேறு பாகங்கள் சென்று வகுப்புகள் எடுக்கும் என்குரு அதற்கு அதிகம் பொருத்தமானவர்”  என்றேன்.  உறவினர் வட்டத்தில் என்மீது ஒரு கேலியான நோக்கு உண்டு.

 

 

பல ஆண்டுகள் முன்னமே கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் பரப்பப்பட்ட “கஞ்சா” என்ற ஒரு பொய் அடிக்கடி  சிலர் மீண்டும் மீண்டும் கூறுவார்கள்.  “நான் வகுப்புகள் சில செய்திருக்கிறேன்.  பல நிகழ்வுகளில் பங்கு பெற்றிருக்கிறேன்.  எந்த நிகழ்வும் இல்லாத போதும் ஆசிரமத்தில் தங்கியும் இருக்கிறேன்.  இதுவரை அங்கு உணவிலோ, அருந்திய நீரிலோ, வேறு எவ்வகையிலோ தவறாக ஏதும் கண்டதில்லை.  ஒருவேளை அவ்வாறு நான் ஏதும் உணர்ந்தால் நானே வெளியே சென்று அவை பற்றி பரப்பத் தொடங்கி இருப்பேன்.  இல்லாத ஒன்றை ஏன் மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள் ? இங்கு தங்கி வகுப்புகள் பயின்று சென்ற பல்லாயிரம் பேர்களும் அறிவிலிகள் அல்லது நேர்மையற்றவர்கள் என்று கருதுகிறீர்களா?.  உங்களுக்கு பிடிக்காது என்ற ஒன்று மட்டுமே கொண்டு தீயது என்பீர்களா ?.  – பதில் சொல்லி மாளாது எனக்கு.

 

“ஈஷாவில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா ?”

 

“என்ன நடக்கிறது ? நீங்கள் அங்கு போயிருக்கிறீர்களா ?”

 

“சேச்சே நான்லாம் ஏன் அங்க போறேன் ?” – இப்படி சிலர்.

 

எல்லாவற்றுக்கும் விளக்கமாக பதில் சொன்னால், “உங்களையெல்லம் மூளை சலவை செய்து வைத்திருக்கிறார்” என்பார்கள்.  “உங்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.”

 

“யார் மூளை  சலவை செய்யப்பட்டவர்கள் ?.  எதையும் உள்ளபடி நோக்க முடியாமல் ஐரோப்பிய, சீனத்து மாசேதுங் போன்றவர்களின் கருத்துக்களுக்கு மூளையை அடகு வைத்து விட்டு, வெறும் வெறுப்பை மட்டுமே கக்க பயிற்றுவிக்கப்பட்ட நீங்கள் தான் மூளை  சலவை செய்யப்பட்டவர்கள்.   எதிர்ப்பில் – முரண்படுவதில் தவறே இல்லை.  அடிப்படை நேர்மை வேண்டாமா ? – காழ்ப்பின் பின்னணியில் எப்போதும் ஏதோ ஒரு வேற்றுமத அடிப்படைவாத அமைப்பு அல்லது வறட்டு நாத்திக இடதுசாரி அமைப்பு – அதெல்லாம் ஆராய்வது இங்கு குப்பையை கிளறும் வேலை.  உங்கள் நேரத்தை தவறியும் வீணாக்க விளைய மாட்டேன்

 

கடந்த ஆண்டு நெருக்கடி மிகுந்ததாக இருந்தது.  பொய்கள் புயல் வேகத்தில் பரப்பப்பட்டன.  திருமண மண்டபங்களில் நடக்கும் ஏழு நாள் வகுப்பு – எங்கள் பகுதில் நாங்கள் வைத்த அட்டைகள் கிழிக்கப்பட்டன.  பலவிதமான அச்சறுத்தல்கள் இருந்தன.  குருவிடம் இருந்து ஒரு உறுதியை நான் எதிர்பார்த்தேன், அதேவிதமான எதிரிபார்ப்பு பல்லாயிரம் ஈஷா அன்பர்களிடமும் இருந்தது.  வெளியூரிலிருந்து திரும்பிய சத்குரு ஊடகங்களில் பொய்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.  அடுத்து வந்த சத்சங்கத்தில்,  எங்கள் யோக அன்பர்களில் ஒருவர் கேட்ட முதல் கேள்வி  “என்ன சத்குரு ஏழாயிரம் கிட்னி திருடிடீங்க ?” என்பதுதான் .  சத்குருவின் சிரிப்பு அடங்க ஓரிரு நிமிடங்கள் ஆனது.  “இன்னும் அதிகமா சொல்லி இருக்கலாம்.  இவ்வளவு பேர் இருக்கீங்க வெறும் ஏழாயிரம் தானா?.  ஆமாம்  நீங்க எல்லாருமே உங்க கிட்னியை உங்க பேண்ட் பாக்கெட்ல தானே போட்டு கொண்டுவறீங்க ? இத சொன்னவருக்குத்தான்  யாரோ மூளை திருடிட்டாங்க போல இருக்கு”  என்றார்.  தொடர்ந்து சத்சங்கத்தில் நான் எதிர்பார்த்த எதிர்வினையும்  உறுதியும்  தரப்பட்டது.

 

கடந்த ஆண்டின் அவதூறுகளுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே 112 அடி ஆதியோகி சிலை அமைக்கப்படுவதை சத்குரு எங்களுக்கு தெரிவித்து விட்டார்.   மொத்தம் நான்கு ஆதியோகி சிலைகள் இந்தியாவின் நான்கு திசைகளில், வட நாட்டில் ஒன்று, மேற்கு-கிழக்கே  ஒவ்வொன்று  என்று.

 

 

இப்போது போட்டோஷாப் போட்டு முகநூலில் அவதூறு பரப்புரை செய்பவர்கள்.  “உங்கள் குரு தனக்குத் தானே சிலை வைத்துக்கொண்டு சிவன் சிலை என்று சொல்கிறார்” என்று.  பார்ப்பவர்கள் அத்தனை பேரும் அறிவிலிகள் என்ற ஒரு எண்ணம் அவர்களுக்கு.  கண்களை மூடி முகத்தை சற்று  மேல் நோக்கி வைத்து தாடி தலைப்பாகையுடன் இருக்கும் யாருடைய முகத்தையும் அதற்கு பொருத்திக் காட்ட முடியும். மன்மோகன் சிங்கின் தாடி தலைப்பாகை பொருத்தி அது மன்மோகன் சிங்கின் சிலை என்று சொல்லிவிடலாம். ஏன் ஒசாமா பின்லாடனின் தாடி தலைப்பாகை பொருத்தி அது அவரது சிலை என்று கூட சொல்லலாம்.  போகட்டும்.  நேர்மையும் நடுவுநிலமையும் கொண்ட உங்களைப் போல் சிலர் இருப்பது மகிழ்வு தருகிறது.

 

உங்கள் நேரத்தை நான் வீணடித்திருந்தால் மன்னித்துவிடுங்கள்.  ஒன்றே  ஒன்று – உடுமலை டாட் காமில் இருந்து “நீலம்” என் வீட்டிற்கு வந்த நாள் தற்செயலாக பிப்ரவரி 14, காதலர் தினம்.  அன்று முகநூல் நுழைந்த போது சத்குருவின் இணையப் பக்கத்திலிருந்து அன்றய கருத்தாக ராதையின் காதல் – பேரன்பு  பற்றி கூறப்பட்டிருந்தது.  அடர்த்தியான சொற்களின் பெருக்கான நீல நதி என்னையும் தன் பெருக்கில் இழுத்துக் கொண்டது.  நீலத்தின் தொடர்ச்சியான மௌனத்தை இப்போதுதான் கலைத்தேன்.

 

அன்புடன்

விக்ரம்,

கோவை

 

அன்புள்ள விக்ரம்

 

நான் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களாக இன்றிருப்பவர்கள் என நினைக்கும் பத்துபேரில் ஐவர் ஜக்கி குருகுலத்துடன் பல்லாண்டுகளாக தொடர்புடையவர்கள். அங்கே பயிற்சிசெய்தவர்கள். நான் மிக மதிக்கும் பத்து அறிவுஜீவிகளில் நால்வர் அங்கே சென்று பயிற்சி மேற்கொண்டவர்கள். அறிவார்ந்த தேடலும் கூர்மையும் கொண்ட என் வாசகர்கலில் கணிசமானவர்கள்  அக்குருகுலத்துடன் தொடர்புடையவர்கள்

 

நான் ஆசிரியர் என மதிக்கும் எழுத்தாளர் தன் வாழ்க்கையின் இறுதியில் மகளின் இறப்பால் நிலைகுலைந்து துயிலின்மையும் சோர்வும் கொண்டிருந்தார். அப்போது ஜக்கி குருகுலத்துடன் தொடர்புடைய உணவக உரிமையாளர் ஒருவரால் அவர் ஜக்கியிடம் அழைத்துச்செல்லப்பட்டார். மிக எளிய சிலவகுப்புகள், பயிற்சிகளுக்குப்பின் அவர் தேறி மீண்டுவந்தார். அதை அவரே பதிவுசெய்யவில்லை என்னும்போது நான் பெயர்குறிப்பிட முடியாது. ஆனால் நண்பர்கள் அனைவரும் அறிந்த செய்தி இது.

 

இவர்கள் அனைவரையும் முட்டாள்கள் என்றும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் மதிக்கத்தக்க ஒரு விமர்சனத்தை, பொருட்படுத்தத்தக்க ஒரு குற்றச்சாட்டைக் கூட முன்வைக்காமல் வெறுமே காழ்ப்பையும் அவதூறையும் கக்கும் கும்பலையே மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் அல்லது விலைபோனவர்கள் என நினைக்கிறேன்

 

குறிப்பாக சில இணையதளங்கள் தொடர்ச்சியாக  அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. அவற்றின் பின்புலங்களை விசாரித்தபோது பெரும்பாலானவற்றில் மாற்றுமத அடிப்படைவாதிகளின் தொடர்பு இருப்பதைக் காண்கிறேன். உண்மையில் இதுவே அச்சுறுத்துகிறது. இப்படி சமூக ஊடகங்களைக் கைப்பற்றிக்கொண்டிருக்கும் இந்தச்சிறிய கும்பலால் ஒரு பெரிய பாதிப்பை உருவாக்கமுடிவது மிக ஆபத்தானது.

 

இந்துமதத்திற்குள் கிளைகள் எழுந்து விரிவது ஈராயிரம் வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. எப்படி ஓர் ஒருங்கிணைவு வழியாக இந்துமதம் உருவாகி வளர்ந்துகொண்டே இருக்கிறதோ அதற்கு நேர் எதிர்விசையாகச் செயல்படும் விசை அது. எந்த ஒரு ஐம்பதாண்டுக்காலத்திலும் இந்துமதத்திற்குள் துணைமதங்கள், வழிபாட்டுமரபுகள் [cults] மத அமைப்புக்கள் பிரிந்து எழுந்து செயல்படுவதையும் காணலாம். இந்து மதம் ஒற்றை அமைப்பாக செயல்படவே முடியாது. பன்மையே இதன் இயல்பு

 

அந்தப்பிரிவுகளுக்குள் விமர்சனமும் விவாதமும் நிகழவேண்டும். அவை கடுமையாகக்கூட இருக்கலாம். அந்த விவாதமே இது வெறும் அமைப்பாக, ஒற்றைநோக்கு கொண்டதாக தேங்கிவிடாமல் காக்கிறது. ஓஷோவோ ஜக்கியோ நாளை இவ்வாறு இன்னும் எழப்போகும் பலநூறு பிரிவுகளோ இதன் வளர்ச்சியை, உயிர்த்துடிப்பையே காட்டுகின்றன

 

ஆம், இத்தகைய ‘கட்டில்லாத ‘ வளர்ச்சி என்பது மோசடிகளும், பிழைகளும், ஊழல்களும் கொண்ட பல போக்குகளையும் உருவாக்கும். நாளைக்கே நீங்கள் ஒரு இந்துமதத் துணைப்பிரிவை தொடங்கமுடியும் என்னும்போது எந்த ஒழுங்கையும் எதிர்பார்க்கமுடியாது. காடு முளைத்துப்பரவுவதுபோலத்தான். இந்த ஒழுங்கின்மையிலுள்ள உயிர்த்துடிப்பே இந்துமதத்தின் வல்லமை. ஒழுங்கை உருவாக்கபோய் இதை ஓர் இயந்திரமாக, கட்டிடமாக ஆக்கினால் இதன் உயிர் அழியும்

 

ஆகவே இவ்வகை அமைப்புக்கள் அனைத்தையும் இந்து சமூகமே கூர்ந்த விமர்சனத்திற்கு ஆளாக்குவது அவசியம். அவற்றின் நடைமுறைகள் கண்காணிக்கவும் விமர்சிக்கப்படவும் வேண்டும். அவற்றின் தரிசனங்கள் மறுத்து விவாதிக்கப்படவேண்டும். தகுதியற்றவை வெளிச்சத்திற்கு வருவதன் மூலம் இயல்பான அழிவை அடைந்தாகவேண்டும். எப்படி புதிய கிளைகள் உருவாகின்றனவோ அப்படி பல பழைய கிளைகளும் அழிந்துகொண்டேதான் உள்ளன.

 

இது ஓர் அழியா உயிர்ச்செயல்பாடு . இப்படி இந்துமதத்தைப் புரிந்துகொண்டால் இதன் பிரிவுகளை சிதைவு அல்லது ஒழுங்கின்மை என எண்ண மாட்டோம். இதன் உள்முரண்பாடுகளை ஒற்றுமையின்மை என நினைக்கமாட்டோம். இதிலுள்ள படைப்பூக்கத்தன்மையைப் புரிந்துகொள்வோம்.

 

ஜக்கி குருகுலம் மீது திட்டவட்டமான தத்துவ, அரசியல் நிலைபாடுகளுடன் விமர்சனங்களை முன்வைக்கும் மாற்றுத்தரப்புகளும், பிழைகள் இருந்தால் ஆதாரபூர்வமான செய்திகளுடன் அவற்றை எதிர்ப்பவர்களும் உருவாகி வந்தால் இந்தக்குப்பைகள் விலகுமென்று நினைக்கிறேன்

 

ஜெ

 

ஜக்கி கடிதங்கள் விளக்கம் 1

ஜக்கி கடிதங்கள் விளக்கம் 2

 

முந்தைய கட்டுரைவெறுப்புடன் உரையாடுதல்
அடுத்த கட்டுரைஜக்கி கடிதங்கள் 4