‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28

28. மலர்திரிதல்

“புரூரவஸ் பன்னிரண்டு ஆண்டுகாலம் குரங்குகளுடன் அந்தக்காட்டில் இருந்தான் என்கின்றன கதைகள்” என்று முண்டன் சொன்னான். “காட்டில் அவன் பிறிதொரு குரங்கென்றே ஆனான். அறத்தின்பொருட்டு காமத்தையும் பொருளையும் விட்டவன் பின்னர் அவையிரண்டின்பொருட்டு அறத்தை விட்டான். பின்னர் மூன்றையும் விட்டு விடுதலை ஆகி விலங்கென்று மகிழ்ந்திருந்தான். சூரியன் சமைத்ததை உண்டான். மரங்கள் நெய்ததை உடுத்தான். பாறைகள் கட்டியதற்குள் துயின்றான்.  இருகாலமும் இல்லாமல் இருந்தான். நினைவுகளோ கனவுகளோ இல்லாமல் திளைத்தான்.”

“முதற்கதிரை நெஞ்சில் அறைந்து ஒலி எழுப்பி எதிர்கொண்டான். அந்தி அமைவை தனிக்கிளையில் அமர்ந்து ஊழ்கத்தில் மூழ்கி அனுப்பி வைத்தான். இருசுடர்களுக்கு பொழுதுகளை அவியாக்கி வேள்வி இயற்றினான். கற்றதனைத்தையும் அங்கு அவன் மறந்தான். கற்றலில்லாமல் இருந்த உள்ளம் உணர்தலை மேலும் மேலுமென கூர்தீட்டிக்கொண்டது. உணரப்பட்ட காடு அவன் உள்ளென்றாகியது. அதிலெழுந்தன சுனைகள், ஓடைகள், ஆறுகள். உயர்ந்தன மலைகள். குளிர்முகில்சூடி நின்றன. பெருமழையில் குளிர்ந்தது நிலம். தளிரும் மலரும் சூடியது பசுமை” முண்டன் தொடர்ந்தான்.

பீமன் அவன் முன் கைகளை மார்பில் கட்டியபடி ஊர்வசியின் ஆலயத்தின் படியில் அமர்ந்து சிறியவிழிகள் கனவிலென தணிந்திருக்க அப்பேச்சை கேட்டிருந்தான். “அந்நாளில் ஒருமுறை குரங்குகளுடன் அவன் கிளைவழியாகச் செல்கையில் சுனை சூழ்ந்த அச்சோலையைக் கண்டான். அங்கு சென்று சுனைக்கரை சேற்றில் இறங்கி நீரருந்த குனிந்தபோது தன் முகத்தை நோக்கி மின்பட்டது என தான் என்னும் உணர்வை அடைந்து திகைத்து எழுந்து நின்றான். நினைவுகள் அலையென வந்தறைய மூச்சுவாங்கினான். அகன்று மறைந்த எடையனைத்தும் வந்து அவன் தோளில் அமர உடல்குனித்தான்.”

“என்ன?” என்றது பெருங்குரங்கு. “இங்குதான் அவளைக் கண்டேன்” என்றான். “இங்கா?” என்றது குரங்கு. “ஆம், இங்கே…” என்று அவன் சொன்னான். “நெடுங்காலம் முன்பு. ஒருவேளை அவள் வந்து சென்ற தடம்கூட இங்கிருக்கலாம்.” மூக்கைச் சுளித்தபடி முகர்ந்து அலைந்த குரங்கு ஒரு மூக்குமலரைக் கண்டெடுத்து “இது அவளுடையதா?” என்றது. புரூரவஸ் அதை ஒருகணம் நோக்கியதுமே உடல் அதிர்ந்து விழிமங்கலடைந்தான். கால்கள் நடுங்கி நிலம் கவ்வாமலாயின. பின்னர் மூச்சைக் குவித்து சொல்லென்றாகி “ஆம், அவள் அணிந்திருந்தவைதான்” என்றான்.

மெல்ல உளம் மின்ன “அவள் வந்தபோது அணிகள் இல்லாத காட்டுப்பெண்ணாக இருந்தாள். இது நான் அவளுக்கு அளித்த அணிகளில் ஒன்று. அவளுடைய சின்னஞ்சிறு மூக்கை இது அழகுபடுத்தியது. அனைத்து அணிகளையும் அவள் கழற்றிவிட்டுச் சென்றாள். ஆனால் எஞ்சிய அந்நகைகளில்  இது இருக்கவில்லை என இப்போது உணர்கிறேன். அன்று அந்நகைகளை நோக்கவே என் நெஞ்சுகூடவில்லை.” குரங்கு அதை வாங்கி நோக்கி “இதை ஏன் அவள் கொண்டு சென்றாள்? ஏன் இங்கே விட்டாள்?” என்றது.

அவன் மறுமொழியில்லாமல் அதை நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகள் நெஞ்சுலையச் செய்தன. “அவள் முகம் இம்மண்ணுக்குரியதல்ல என்று என் உள்ளாழம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவள் ஒரு கானணங்கு என்று ஐயம்கொண்டிருந்தேன். அணுக்கத்தில் அரையிருளில் அவள் முகத்தை நோக்குகையில் கருவறைத்தெய்வம் போலிருந்தாள். அறியா நோக்கு ஒன்று அவள் விழிகளை அச்சுறுத்துவதாக ஆக்கியது. ஆகவே இந்த மூக்குமலரைச் செய்து அம்முகத்தில் அணிவித்தேன். அவளை என் குடிக்குள் நகருக்குள் அரண்மனைக்குள் கொண்டுவந்து சேர்த்தது இது.” அதைச் சுழற்றி நோக்கியபின் “அவளை பெண்ணென்று மண்ணில் நிறுத்தியது இந்த அணியே” என்றான்.

“அவள் யார்?” என்றது குரங்கு. “அவள் சென்றபின் கடுந்துயரில் துயில்கெட்டு அரைமயக்கில் சித்தம் சிதறி அலைய எங்குளோம் என்றில்லாது இருந்த நாட்களில் ஒருமுறை அவளை என் கனவில் கண்டேன். பிறிதொரு நிலம். பொன்னொளிர் பாறைகள். அந்திச்செவ்வொளி. அவள் பூத்த மலர்மரத்தின் அடியில் நின்றிருந்தாள். நான் நன்கறிந்த அந்த மணம். அதுதான் என்னை அங்கு இட்டுச்சென்றது. அவளை தொலைவிலேயே கண்டு ஓடி அருகணைந்தேன். கைகளை பற்றிக்கொள்ளச் சென்றபோது அவள்  பின்னடைந்தாள். விழிகளில் என்னை மறுக்கும் அயன்மை.”

கூரிய குரலில் “மானுடனே, நான் ஊர்வசி. விண்மகள். உன் கையணைந்ததும் வாழ்ந்ததும் கனிந்ததும் இங்கு நான் கண்ட ஒரு கனவு. நீ என்னை தீண்டலாகாது. ஏனென்றால் இது உன் கனவு” என்றாள். நான் மேலும் அறியாது ஓர் அடி எடுத்துவைக்க “என் ஒப்பின்றி தீண்டினால் உன்னை சிதறடிப்பேன்” என்றாள். நான் அஞ்சி பின்னடைந்தேன். அவள் நானறிந்தவள் அல்ல என விழியும் செவியும் சொல்லிக்கொண்டிருந்தன. அவளே என உள்ளம் தவித்தது.

விண்ணவனின் அமராவதிப்பெருநகரின் ஆடற்கணிகை அவள், நாரதரின் தீச்சொல்லால் மண்ணுக்கு வந்தவள் என்று அறிந்தேன். “அறிந்து கடந்தேன் அங்குள்ள வாழ்க்கையை. இனி மீளமாட்டேன், செல்க!” என அவள் சொன்னபோது ஒருகணம் என் அச்சத்தைக் கடந்து பாய்ந்து சென்று அவள் கைகளைப் பற்றினேன். அவை அனலென்றாகி பற்றி எரிந்தன. என் உடல் அழல்கொண்டு எரியலாயிற்று. பின்னர் இரவும் பகலும் எரிந்துகொண்டிருந்தேன்.

நோயில்  கிடந்தபோது என் விழிதொடும் எல்லையில் சொல்தொடா தொலைவில் அழியாது நின்ற அவள் தோற்றத்தை மட்டுமே நோக்கிக்கொண்டிருந்தேன். ஒருகணமும் பிறிதிலாத வலி. என் அலறல்களுக்கும் அரற்றல்களுக்கும் விம்மல்களுக்கும்  அப்பால் அவள் தெய்வவிழிகளுடன் புன்னகைத்து நின்றிருந்தாள். நான் ஏங்கி எரியும் வன்பால் என அவளுக்குக் கீழே விரிந்திருந்தேன். துளித்து உதிராமல் முத்தென ஒளிவிட்டபடி இருந்தாள் அவள்.

என்னை என் நகர்மக்கள் மூங்கில் பாடையில் தூக்கிக்கொண்டு போகும்போது தலைக்கு மேல் அவள் புன்னகைத்தபடி வந்து கொண்டிருப்பதையே நான் பார்த்தேன். அவர்கள் சிதை மேல் என்னை வைப்பதையும் சந்தனப்பட்டைகளால் என் உடலை மறைப்பதையும் இசையும் வாழ்த்துக்களும் முழங்க ஈமச்சடங்குகளில் ஈடுபடுவதையும் உடலில் எங்கோ இருந்த அறியா விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தேன். உண்மையில் அவையெல்லாம் விரைவில் முடிந்து என் உடல் எரிகொள்ள வேண்டுமென விழைந்தேன். முள்ளில் சிக்கிய பட்டாடை என எனது சித்தம் அவ்விழிந்த உடலில் மாட்டி துடித்துக்கொண்டிருக்கிறதென்று தோன்றியது. திமிறுந்தோறும் சிக்கி பறக்கும்தோறும் கிழிபட்டுக்கொண்டிருந்ந்தேன்.

இதுதான் அந்த தருணம். இதோ, இன்னும் சிறு பொழுது. இன்னும் சில கணங்கள். என் மைந்தன் சிதையை வணங்கி சுற்றிவருவதை உணர்ந்தேன். என் கால் தொட்டு தொழுதபின் தயங்கிய அவனை குடிமூத்தார் கைபற்றி ஊக்க அனற்கலயத்தை அவன் வீசினான். அரக்கில் நெருப்பு பற்றிக்கொண்ட திப்பெனும் ஒலியைக் கேட்டு ஒருகணம் விதிர்த்தேன். என் காலை அனல் வந்து தொட்டபோது மீண்டும் ஒரு முறை விதிர்த்தேன். இரு விதிர்ப்புகளுக்கு நடுவே நான் அவளை மீண்டும் கண்டேன். இதே சுனைக்கரையில், இதே சோலையில்.

இங்கே அவள் இலைநிழலசைவுக்கு நடுவே விழிமாயமோ எனத் தெரிந்தாள். அவளைக்கண்டதும் எழுந்த உவகையால் விழுந்துவிடுபவன்போல நடுங்கினேன். பாய்ந்து அருகே சென்று அவளை  ”சியாமை!” என அழைத்தேன். திரும்பி நோக்கியபோது அவள் என்னை அறியவில்லை என்று தோன்றியது.  ”சியாமை, நான் புரூரவஸ்… உன்னை மணந்தவன்!” என்றேன்.

அவள் அருகே வரும்தோறும் சியாமை எனும் உருவம் மென்பட்டு ஆடையென அவள் உடலில் இருந்து நழுவிச் சரிந்து அவள் ஊர்வசி என்றானாள். என் முன் வந்து நிற்கும்போது பெண்மையின் அழகும் தேவர்களின் மிடுக்கும் கலந்து முந்தையோர் குகைகளில் வரைந்த வண்ண ஓவியம் போலிருந்தாள். மானுடரைக்கடந்து அப்பால் நோக்கும் தேவவிழிகள். அவளை முன்பு எப்போது கண்டேன் என உள்ளம் தவித்தது. பின் அது கனவிலென உணர்ந்தேன். இதுவும் கனவா என திகைத்தேன்.

மானுடர் அறியமுடியாத  புன்னகை கொண்ட உதடுகள். தழலென முகில்கீற்றென அணுகிவந்தாள். “அரசே, நான் யாரென்று முன்னரே சொன்னேன். எதன் பொருட்டு இவை நிகழ்ந்தன என்றும் சொன்னேன். மீண்டும் ஏன் என்னைப்பார்க்க வந்தாய்?” என்று கேட்டாள். நான் கைகூப்பி கண்ணீருடன் “ஆம், தேவி. ஏன் இந்த ஆடல் என்று உன் ஆடலைச் சொன்னாய். இதில் நான் ஆற்றும் பணி என்ன என்று நான் இன்னும் அறியவில்லை. இவ்வாடலினூடாக நான் எங்கு செல்கிறேன்? எதை வென்று எங்கு அமையப்போகிறேன்? அதை சொல், நான் விடுதலைபெறுவேன்” என்றேன்.

அவள் என் விழிகளை நோக்கி “மானுடர் ஊழும் தேவர்களின் ஊழும் வெவ்வேறு திசை கொண்டவை. மானுடர் சிறுபூச்சிகள், புகைச்சுருள்கள், மகரந்தப்பொடிகள்.  தேவர்கள் அவர்களைச் சுமந்து சுழன்று செல்லும் பெருங்காற்றுகள்.  நானறிந்தவற்றால் உங்களுக்கு பயனேதுமில்லை” என்றாள். “நீ ஆற்றுவதை நீயும் அறியமாட்டாயா என்ன? உன் ஊழை சொல். அதன் துளியே என்னுடையதும்” என்றேன். “எவருக்காயினும் ஊழ் அறியாப்பெருவலையே” என்றாள்.

“நான் உன்னிடம் கேட்க வேண்டிய வினா ஒன்றே. அதற்கு மட்டும் மறுமொழி சொல். அவ்வினா இருக்கும் வரை என் உடல் விட்டு உயிர் எழமுடியாது. அனைத்தும் அமையும் முழுமையின் முடிவிலியில் பிறிதிலாது என்னால் பொருந்தவும் இயலாது” என்றேன். “சொல்க!” என்று அவள் சொன்னாள். “நான் உன் முன் ஆடையின்றி வரலாகாதென்று என்னை ஏன் கோரினாய்? அதன்பொருட்டு என்னை ஏன் பிரிந்தாய்?” என்றேன்.

அவள் புன்னகை மாறுபட்டது. விழிதிருப்பி “முன்பு உன் மூதன்னை தாரையை சந்திரன் ஏன் விழைந்தான்? அவளை வியாழன் ஏன் ஏற்றுக்கொண்டான்? மீண்டும் அவள் ஏன் சந்திரனுடன் சென்றாள்? ஏன் அவள் செருக்கி மகிழ்ந்து யானைமேல் அமர்ந்திருந்தாள்?” என்றாள். நான் திகைத்து “அறியேன்” என்றேன். “ஒவ்வொரு முறையும் அக்கதைகளை நான் எண்ணியதுண்டு. எண்ணம் சென்று எட்டியதே இல்லை” என்று தவிப்புடன் சொன்னான்.

“நீ இதை அறியும் கணம் இன்னமும் கூடவில்லை” என்றாள் ஊர்வசி. “சொல்!” என்று கை நீட்டி அவள் தோளைப்பற்றினேன். அங்கு வெறுமையை என் கை உணர்ந்தது. அத்தருணத்தில் என் காலை என் மைந்தனின் கைள் பற்றின. விறகுக்கட்டைகள் சரிய சிதையிலிருந்து புரண்டு கீழே விழுந்தேன். மண் என்னை இரும்புப்பலகை போல எழுந்து ஓங்கி அறைந்தது. என் நெஞ்சுக்குள் மூச்சு வெடித்தெழுந்தது.

புரூரவஸ் அந்த மூக்குமலரை கைகளால் மெல்லச்சுழற்றியபடி நோக்கிக்கொண்டிருந்தான். பொன்னிலும் மணியிலும் அமைந்த வாடாச்சிறுமலர் அதைச்சூழ்ந்து வெறும்வெளியை விழிகளால் செதுக்கி ஒரு முகத்தை உருவாக்கிவிட முயல்பவன் போலிருந்தான். குரங்கு அவனை நோக்கி விழிசிமிட்டியும் சிறுசெவி மடித்தும் உடல்சுரண்டியும் அமர்ந்திருந்தது.

மெல்ல அவன் அருகே அவளிருக்கும் உணர்வை அடைந்தான். நிமிர்ந்து நோக்கியபோது கரிய உடலில் நிலவொளி மிளிர அப்பால் சுனைக்கரையில் முழங்கால் மடித்து முட்டுகளில் முகம்சேர்த்து நீள்கூந்தல் வழிந்து நிலம்வளைந்திருக்க அமர்ந்திருக்கும் அவளைக் கண்டான். அவன் கையிலிருந்த மூக்குமலர் அவள் மூக்கில் இருந்தது. அதன் ஒளியில் அவள்  முகம் மையம்கூர்ந்திருந்தது.

புலிக்கால்முண்டன் பீமனின் அருகில் வந்தான். “மாமல்லரே, இப்போது ஒரு வாய்ப்பு. புரூரவஸ் என்றாகிச் சென்று அவளிடம் அவர் விழைந்த வினாவைக்கேட்டு அறிந்து மீள்க! அவள் மறுமொழி சொல்வாளெனில் நீங்கள் கொண்ட முடிச்சொன்றும் அவிழலாம்.” கைகளைக் கட்டி ஊர்வசியின் ஆலய கற்சுவரில் சாய்ந்து துயிலிலென சரிந்திருந்த பீமன் திடுக்கிட்டவன்போல எழுந்தான். பின்னர் “ஆம்” என்றான். பெரிய பற்களைக்காட்டி புன்னகைசெய்து “செல்க!” என்றான் முண்டன்.

பீமன் சருகுகளில் காலடிகள் ஒலிக்க மெல்ல நடந்து ஊர்வசியின் அருகே சென்று நின்றான். நீரில் அவன் உருவைக்கண்டு சற்று திடுக்கிட்டு தலை தூக்கி பார்த்தாள். பின்னர் விழிகளில் நகை எழ எழுந்து அவன் அருகே வந்து புன்னகைத்தாள். “நீயா?” என்றாள். “குரங்கெனவே மாறிவிட்டாய்.” பீமன் “ஆம், நான் கொண்டவை ஆனவை கருதியவை அனைத்தும் எங்கோ உதிர்ந்துவிட்டன. பிறிதொருவனாக இங்கிருக்கிறேன். இங்கிருந்தும் உதிர்த்துச் செல்ல ஒன்றே உள்ளது” என்றான்.  மானுடம்கடந்த நோக்கு வெறித்த விழிகளுடன் “என்ன?” என்று அவள் கேட்டாள்.

“முன்பு நான் கேட்ட அதே வினாதான், விண்மங்கையே. ஆடையின்மையை நீ அஞ்சியது ஏன்?” அவள் அவன் கண்களை நோக்கி துயருடன் புன்னகைத்தாள். “இல்லை, அவ்வினாவுடன் அனைத்தும் முடிந்துவிடக்கூடும். பிறிதொன்று தொடங்கலுமாகும். அதைச்சொல்ல பொழுது கனியவில்லை, பொறுத்தருள்க!” என்றாள். “சொல், நீ என்னை ஏன் பிரிந்தாய்?” என்று அவன் உரக்கக்கூவியபடி முன்னால் சென்றான்.

“எனில் இவ்வினாவுக்கு விடை சொல்க! புதனில் அமைந்த இரு தந்தையரின்  குருதியில் இளையை விரும்பியது எது? இளனை விரும்பியது எது?” என்றாள் அவள். “ஆணென்றும் பெண்ணென்றும் உன்னை கருசுமந்தனர். மூன்று முதலறங்களில் அறத்தை உனக்களித்தது யார்? பொருளையும் இன்பத்தையும் உனக்களித்தவர் யார்?” அவள் மேலும் அணுகி வந்து புன்னகை சிரிப்பென ஆக, விழிகளில் சிறு நஞ்சொன்று குடியேற “சந்திரகுலத்தவனே, உன்னிலமைந்த எதை விழைந்து வந்தாள் விண்மகள்?” என்றாள். “அவற்றுக்கு விடையறிந்தால் அவள் சென்றதென்ன என்றும் அறிவாய்.”

அவன் திகைத்து நிற்க அவள் மென்காலடி வைத்து பின்னால் சென்று இலைகளினூடாக வந்த ஒளிக்கதிர்களால் பின்னப்பட்ட காற்றுவெளியினூடாக தன் வண்ணங்களைக் கலந்து கரைந்து விழிவிட்டகன்றாள்.  அவள் கேட்ட வினாக்கள் உண்மையில் சொல்வண்ணம் கொண்டனவா என அவன் உள்ளம் வியந்தது. அவள் மறைந்தபோது சொற்களும் இழுக்கப்பட்டு உடன் சென்று மறைய அவன் உள்ளம் வெறுமைகொண்டது. விலகி அந்நிகழ்வைக் காட்டிய காலவெள்ளப்பரப்பு இருவிளிம்புகளும் இணைந்து ஒற்றைப்பெருக்கென்றாகியது.

பீமன் திடுக்கிட்டு விழித்து “சென்றுவிட்டாள்” எனக்குழறினான். உடனே தன்னை உணர்ந்து தன் கைகளால் தரையை அறைந்து “சென்றுவிட்டாள்! சென்றுவிட்டாள்!” என்று கூவினான். “விழிதிறவுங்கள், பாண்டவரே. நீங்கள் இருப்பது நெடுந்தொலைவில், நெடுங்காலத்துக்குப்பின்” என்றான் முண்டன். பீமன் எழுந்து அவன் தோளைப்பற்றி உலுக்கி “நான் அவ்வினாவை கேட்டேன். அவள் மறுமொழி அளிக்கவில்லை” என்றான். “அதை அறியுமிடத்தில் நானில்லை என்று அவள் எண்ணினாள். மறுவினாக்களினூடாக கடந்துசென்றாள்” என்றான்.

முண்டன் புன்னகைத்து “உங்கள் மூதாதை மண்ணில் மூன்று முறை ஊர்வசியைப் பார்த்ததாக கதைகள் சொல்கின்றன. எனவே மீண்டும் அவ்வினாவை சென்று அவளிடம் கேட்க உங்களுக்கு வாய்ப்புள்ளது. அவள் விடையுரைத்தாகவேண்டும்” என்றான். “ஏனென்றால் மூன்றாம் முறை புரூரவஸ் அவள் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார். அவள் அளித்த விடையால் நிறைவடைந்து மீண்டார் என்கின்றன நூல்கள்” முண்டன் சொன்னான்.

“அவர் காட்டில் கல்லாலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தன்னுள் வேர் செலுத்தி  ஆழ்ந்தார். புதுத்தளிர்கொண்டு எழுந்தார். அவரை முழுமைகொண்ட முனிவர் என அறிந்தனர் குருநகரியின் குடிகள். அவருடைய மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் குடிகளும் திரண்டு வந்து அவரை அடிபணிந்து வணங்கினர். நெற்றியில் நிலவெழுந்து அவர் விசும்பு என்றானபோது அவரை பேரறச்செல்வர் என கல்நிறுத்தி தங்கள் குலதெய்வமென வணங்கினர். அவர் ஊர்வசியைக் கண்ட அச்சுனைக்கரையில் அவளுக்கு சிற்றாலயம் ஒன்றை அமைத்து சிலைவடித்தனர்.”

“இங்கிருந்து நீங்கள் அங்கே செல்லமுடியும்” என முண்டன் சொன்னான். “இம்முறை விடைபெற்று மீள்வீர்கள். புரூரவஸ் பெற்ற விடைகள் நூலில் இல்லை, அவற்றை ஊழ்கத்தால் மட்டுமே அறியலாகும் என்கிறார்கள். அவ்வூழ்கம் இன்று உங்களுக்கு அமையட்டும்.” பீமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். அவன் கைகட்டி ஆலயப்படியில் மீண்டும் அமர அவனருகே வந்த முண்டன் “உளம் அமிழுங்கள். மீண்டும் அத்தருணத்தை சென்றடையுங்கள்” என்றான்.

பீமன் தோள்தளர்ந்தவனாக அப்படிகளில் நீர்ப்படலம்போல் படிந்தான். திரும்பி கருவறையில் அமர்ந்த ஊர்வசியின் தெய்வ முகத்தை பார்த்தான். பொழுது சற்று மாறியிருந்தமையால் ஒளிக்கோணம் மாறுபட்டு நோக்கு பிறிதொன்றென ஆகிவிட்டிருந்தது. அதில் இருந்த கனவு அகன்று மானுட அன்னையருக்குரிய கனிவு குடியேறியதாகத் தோன்றியது. “ஆம், அமிழ்க!” என்று முண்டன் சொன்னான். பீமன் கண்களை மூடிக்கொண்டான். முண்டன் கைநீட்டி அவன் இருபுருவங்களுக்கு நடுவே மெல்ல தொட்டபோது மாபெரும் சுட்டுவிரலொன்றால் சுண்டித் தெறிக்கவிட்டு இருள் வெளிக்குள் சென்றுகொண்டே இருக்கும் உணர்வை அடைந்தான்.

மீண்டும் குரங்குடன் அச்சுனைக்கரையை அடைந்தான். முன்பெனவே அவள் அங்கு அமர்ந்திருந்தாள். மேலும் தனிமையும் துயரும் கொண்டிருந்தாள். அவன் காலடி ஓசையைக்கேட்டு திரும்பிப்பார்த்து துயர் படர்ந்த புன்னகையுடன் “நீயா?” என்றாள். “ஆம் நானேதான்” என்று அவன் சொன்னான். எழுந்து அவன் அருகே வந்து “மீண்டும் ஒருமுறை உன்னை நான் காண்பேன் என்று வகுக்கப்பட்டுள்ளது. இன்று நீ வருவாய் என்றும் அறிவேன்” என்றாள்.

பீமன் “ஆம்” என்றான். “நான் உன்னிடம் ஒரு வினாவை கேட்க வந்துள்ளேன்.” அவள் புன்னகையுடன் “கேள், அதுவே இறுதிவினா அல்லவா?” என்றாள். அவன் “இங்கிருந்து நீ முற்றிலும் உதிரவில்லையா என்ன? ஏன் மீண்டும் இச்சுனைக்கரைக்கே வந்தாய்? விண்ணவளே உன்னில் எஞ்சியிருப்பதென்ன?” என்றான்.

அவள் விழிகள் மாறுபட்டன. இமை தாழ்ந்து, முகம் பழுத்தது. நீள்மூச்சுடன் முலைகள் எழுந்தமைந்தன. ஒரு சொல்லும் உரைக்காமல் திரும்பி நடந்தவளை அவன் பின்னால் சென்று அழைத்து “சொல்!” என்றான். அவள் சொல்லற்ற விழிகளால் நோக்கியபின் அணையும்சுடர் என மறைந்தாள்.

பீமன் விழித்தெழுந்து “இம்முறையும் நான் அதை கேட்கவில்லை. பிறிதொன்றை கேட்டேன்” என்றான். “ஆனால் அவ்வினாவுக்கான விடை எனக்குத் தெரியும்” என்றான். முண்டன் “அதுவே உங்கள் மூதாதையை விடுவித்த சொல்லாக இருக்கக்கூடும்” என்றான் முண்டன். “நூல்கள் என்ன சொல்கின்றன?” என்று பீமன் கேட்டான். முண்டன் பெரிய பற்களுடன் புன்னகைத்து “இளவரசே, மானுடன் உண்மையிலேயே அறியத்தக்க எதுவும் நூல்களில் எழுதப்பட்டதில்லை. நூல்கள் புதையலுக்கு வழிசுட்டும் வரைபடங்கள் மட்டுமே” என்றான்.

பீமன் நீள் மூச்சுடன் தலையசைத்து “நன்று! இது இவ்வாறுதான் நிகழமுடியும்” என்றான். எழுந்தபோது அவன் முகம் தெளிவடைந்திருந்தது. “நாம் இங்கிருந்தும் கிளம்பியாகவேண்டும் எனத் தோன்றுகிறது. நான் உணர்ந்த இன்மலர் மணம்  இதுவல்ல.” முண்டன் புன்னகைத்து “ஆம், நீங்கள் முன்னரே உளம்கிளம்பிவிட்டீர்கள்” என்றான்.

முந்தைய கட்டுரைஜக்கி கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைஜக்கி -கடிதங்கள் 5