நந்தலாலா,இளையராஜா, ஷாஜி

அன்புள்ள் ஜெ,

நந்தலாலா பற்றி ஒரு சந்தேகம். உங்கள் நண்பர் ஷாஜி அதிலே இசை சரியில்லை, ராஜாவுக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் சொல்லியிருந்ததாக சாரு நிவேதிதா எழுதி வாசித்தேன். ஷாஜியைப்பற்றி நீங்கள் கொஞ்சம் சீரியஸாகவே யோசிக்க வேண்டும். அவருக்கு உங்களைப் போன்ற உயிர் நண்பரின் உதவி தேவைப் படுகிறது இப்போது. சாருவைப்பற்றி பயமில்லை. அது ஒரு சர்க்கஸ். ஒருவருடம் முன்பு இதே நந்தலாலாவை பார்த்துவிட்டு இளையராஜாவின் இசை மேதமையைப்பற்றி கண்ணீர் மல்க எழுதினார். கேட்டு அழுதேன் என்றார். இன்று அந்த இணைப்பையே எடுத்துவிட்டார். ஷாஜியை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும். நல்ல மனிதர் என்று நினைக்கிறேன்

நந்தகுமார், சென்னை

அன்புள்ள நந்தகுமார்

இந்த ஆட்டத்துக்கே நான் இல்லை. ஆளை விடுங்கள்.

ஷாஜி என்னிடம் இளையராஜாவின் பின்னணி இசை சர்வதேசத்தரம் கொண்டதாக, மனதை உலுக்குவதாக இருப்பதாகத்தான் சொன்னார். அதேசமயம் கடைசியில் பாடல் வருவதும், சில இடங்களில் இசை மேலே ஏறி ஒலிப்பதும் தனக்கு கொஞ்சம் மிகையாக தெரிவதாகச் சொன்னார்.

நான் அவருக்கு படத்தின் ஒலிக்கலவையின்போது இயக்குநர்தான் அதை முடிவுசெய்கிறார் என்று விளக்கினேன். பின்னணி இசை எந்த அளவுக்கு ஒலிக்கவேண்டும், எங்கே அமைதியாகவேண்டும், எங்கே ஒலிவிளைவுகள் மேலே எழ வேண்டும், எங்கே சூழல் ஒலிகள் கேட்கவேண்டும், எங்கே வசனம் ஒலிக்கவேண்டும் என்று இயக்குநரும் ஒலிநிபுணரும் சேர்ந்து தான் தீர்மானிக்கிறார்கள். பின்னணி இசை பல படிகள் முன்னரே அளிக்கப்பட்டுவிடும்.

ஷாஜி அதை தொலைக்காட்சியிலும் சொல்லியிருக்கிறார். அவர் எவரிடமும் மாற்றுக்கருத்து எதையும் சொல்லவில்லை என்றும், தவறான முறையில் தன் கூற்று கொடுக்கப்பட்டிருப்பதை விலக்கிக்கொள்ள கேட்டிருப்பதாகவும் சொன்னார்

ஜெ

அன்புள்ள ஜெ,
நந்தலாலா படம் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட ஐயத்தை தீர்த்துக்கொள்ள நீங்கள் சரியான நபர் என்பதால் உங்களுக்கு முதன் முதலாக கடிதம் எழுதுகிறேன் . நந்தலாலா நல்ல முயற்சி. முதல், கடைசி காட்சி ( புல் தண்ணீர் காட்சி) அந்திரே தர்கோவிஸ்கி சொலாரிஸ் ‘ படத்தில் இருந்து தழுவப்பட்டது.அன்றே தர்கொவ்ச்கியின் ரசிகன் என்பதால் அவர் படங்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இயக்குனர் அதை பற்றி பேட்டியில் வாய்திறக்கவில்லை . நந்தலாலா படத்தில் இரண்டு சிறுவர்கள் அதில் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் தங்கள் தாய்யை தேடி பயணம் மேர்க்கொள்கிறார்கள் . காவல் அதிகாரி வருகிறார் ,பார்க்கிறார் பின்பு விட்டு விட்டு செல்கிறார். பல மனிதர்கள் வருகிறார்கள் , உதவுகிறார்கள் ஆனால் யாரும் அவர்களை இயக்குநர் சொல்வது போல் இரண்டு குழந்தைகள் அதில் ஒன்று மன நிலம் குன்றிய மனிதனை அவர்கள் தாயிடம் விடவில்லை . இது எதை காட்டுகிறது ? நாம் இந்திய மனிதநேயம் குன்றி விட்டதா ? அல்லது ஜப்பானிய , ருஸ்ஸிய பாதிப்பில் இயக்குநர் முதல் காட்சி போல் புனைந்த கதையா? புனைந்த கதையெனில் கதையின் அடித்தளம் அறுந்துவிடுகிறது அல்லவா? விளக்கவும் ? படைப்பாளி என்பவர்கள் ‘ ரஷ்ய , ஜப்பானிய ‘ நாவல்களை மட்டும் படித்து விட்டு நம் இந்தியனின் மனதை அறிய பயணம் மேற்கொள்ளாமல் படைப்பது நல்ல படைபாளிக்கு அழகா ? இல்லை ‘போலி அறிவு ஜீவிகளா ?.இவர்களின் படைப்பு நல்ல முயற்சி என்றாலும் அது சரியான திசையை நம்மக்கு காட்டுகிறதா ? 16 வயதினிலே படத்தில் ‘ குறை கூறும் அழகு ‘ ரசிக்கவைகிறது . அமீர் , மிஸ்கின் போன்றோர்கள் பேசிக்கொண்டே இருகிறார்கள் இருந்தும் இயக்குனர் பாலாவையும், இசைஞானியையும் இன்னும் எட்ட முடியவில்லை . traveloague நம் கலாச்சாரத்தில் அதிகம் உள்ளதா ? நான் சிலப்பதிகாரம் கவுந்தியடிகள் பற்றி கேட்கவில்லை . , இரண்டு நூற்றாண்டு முன்னர் முதல் சம காலம் வரை கேட்கிறேன் .தங்கள் பதில் ஏன் மன கேள்விக்கு விடை அளிக்கும் என்று நம்புகிறேன்

இப்படிக்கு
உதயசூரியன்

அன்புள்ள உதயசூரியன்,

இந்த விஷயத்தில் இருந்து நான் முற்றாக விலகிக் கொள்கிறேன். வந்து குவியும் கடிதங்கள் சோர்வூட்டுகின்றன. இது என்னுடைய இடமே அல்ல. எனக்கு படம் பிடித்திருந்தது. எழுதினேன். பொதுவாக எந்தப்படத்தைப்பற்றியும் எழுதுவதில்லை. இந்தப்படம் ஒரு தொடக்கமாக அமையுமோ என்ற எண்ணம் எழுதச்செய்தது. அவ்வளவே. இனிமேல் இல்லை.போதுமா?

ஜெ

திருவாளர் ஜெ,

மிஷ்கின் படத்துக்கு வசன வாய்ப்பு வருகிறதா? எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது அல்லவா? வாழ்த்துக்கள். பேசாமல் சாரு போல பக்கவாட்டிலேயே விளம்பரம் கொடுக்கவேண்டியதுதானே?

சிவகுமார்

சிவகுமார்,

நந்தலாலா போன்ற படத்தை பாராட்டுவது சினிமா வசனம் எழுதுபவர்களுக்கு தற்கொலை போன்றது. பாராட்டியவர்கள் சினிமா வசனம் எழுதுபவர்கள் மட்டும் அல்ல.

சினிமா வம்பே நம்மவர்களுக்கு லட்டு. அதிலும் சொந்த வாழ்க்கையில் அனைத்து அயோக்கியத்தனங்களுக்கும் உறைவிடமானவர்கள் புகுந்து பிறரின் நேர்மையை வசைபாடி தங்கள் தோல்வியுணர்ச்சியையும் வன்மத்தையும் தீர்க்க வாய்ப்பு கிடைக்கையில் விடுவார்களா என்ன?

நான் விலகிக் கொள்கிறேன். இனிமேல் நந்தலாலா பற்றி மூச்சே இல்லை

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்