ஜக்கி கடிதங்கள்-1

adi

ஜக்கி – அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1

ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2

ஜெமோ

பீட் தலைமுறை என்னும் சொல்லைத்தான் புரியாமல் பீட்டில்ஸ் தலைமுறை எனச் சொல்கிறீர்களா? இணைய அறிவுஜீவி ஒன்று சொல்லியிருந்தது, அதனால் கேட்டேன்

சாரதி

*

அன்புள்ள சாரதி,

பீட்டில்ஸ் தலைமுறை என்பது பொதுவாக ஹிப்பி தலைமுறையைக் குறிக்க பயன்படுத்தப்படும் கௌரவமான சொல். நடராஜகுரு அதைப் பயன்படுத்தியிருக்கிறார். வேண்டுமென்றால் ஆலன் மார்ட்டனின் பீட்டில்ஸ் தலைமுறை என்னும் நூலை வாசித்துப் பார்க்கலாம் [The Beatles Generation- Alan Morton] அந்த மனநிலை புரியும். ஹிப்பி இயக்கம் பற்றி அமெரிக்கச் சொற்கள் பெரும்பாலும் எதிர்மறையானவை. அவர்களின் இசையார்வத்தை மையமாகக் கொண்டு இடப்பட்ட இப்பெயர் நேர்நிலையில் அவர்களை அணுகுகிறது.

பீட் தலைமுறை என்பது ஒரு சமூக இயக்கம் அல்ல, அது ஓர் இலக்கிய இயக்கம். அதை முன்னதுடன் குழப்பிக் கொண்டால் மிக நுணுக்கமான புரிதல் சிக்கல்கள் ஏற்படும். ஒற்றை வரி வேறுபாடு இதுதான் – பீட் தலைமுறை எழுத்தாளர்களுக்குச் சமூகமாற்றம் குறித்த நம்பிக்கை உண்டு. பீட்டில்ஸ் மனநிலையில் அது இல்லை.

இதைப்பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். பீட் தலைமுறை இலக்கிய இயக்கம் காலத்தால் முந்தையது. ஆலன் கின்ஸ்பர்க், வில்லியம் பரோஸ் போன்றவர்கள் அதன் முன்னோடிகள். எழுபதுகளில் தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் அதைப்பற்றி நிறைய பேசப்பட்டுள்ளது. அன்று அது ஒரு மோஸ்தர்.

பொதுவாக இந்த மனநிலையை இணையத்தில் பார்க்கிறேன். தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழல் சார்ந்த அறிவியக்கம் பற்றிய மிக மிக்க் குறைவான ஒரு மதிப்பீடு இவர்களிடமுள்ளது. இங்கே பேசப்பட்ட எவை குறித்தும் இவர்களுக்குத் தெரியாது. கூகிளில் இவர்கள் எடுக்கும் எளிமையான தகவல்கள்கூட முன்னோடிகளுக்குத் தெரிந்திருக்காது என நம்புகிறார்கள்

ஜெ

***

ஜெ

ஜக்கி குறித்த கட்டுரை அபாரமானது

ஜக்கியின் நிலஉரிமை, கட்டிட விதிமீறல்கள் பற்றி மட்டும் சொல்கிறேன். அவர்களின் மொத்த நிலமும் பட்டாநிலம். முறையாக விலை கொடுத்து வாங்கப்பட்டது. ஆனால் காருண்யா தினகரனின் கைவசநிலம் பெரும்பகுதி பட்டா இல்லாத வன ஆக்ரமிப்பு. இன்றுவரை அதைப்பற்றி ஒருகுரல் எழுந்ததில்லை.

ஜக்கி அமைப்பு செய்த பிழை என்னவென்றால் கட்டிடம் கட்ட பஞ்சாயத்து அனுமதி மட்டும் பெற்றது. அதற்கு நகர்விரிவாக்க அனுமதி தேவை என அறிந்திராமல் இருந்தது. அதுவே சட்டச்சிக்கலை உருவாக்கியது. அது அவ்வமைப்பின் நிர்வாகத்தில் நிகழ்ந்த ஒரு பிழை.

பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. ஜக்கி அமைப்பு அனைத்து ஆதாரங்களுடனும் நீதிமன்றத்தை அணுகுகிறது. வழக்குகளில் ஒன்று ஆதாரமில்லா குற்றச்சாட்டு என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னொன்று விசாரணையில் உள்ளது.

ஜெயராமன்

***

ஜெ

உலகிலேயே ஜக்கி வாசுதேவ்தான் பணக்காரர் என ஒரு வாட்ஸப் செய்தி. ஜக்கி அமைப்புதான் உலகிலேயே பணக்கார மத அமைப்பு என ஓர் இணையதளம் செய்தி வெளியிடுகிறது – அந்த இணையதளமே இஸ்லாமியப் பின்னணி கொண்டது.

ஜக்கி 1971ல் கோவையில் கஞ்சா விற்றார் என ஒரு செய்தி. அப்போது அவருக்கு வயது 13.

எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வளவு பெரிய அவதூறுகள் வெறுமே தன்னிச்சையாக எழாது. இதற்குப் பின்னால் உள்ள நிதியாதாரங்கள், அமைப்புகள் என்ன என்பதைக் கண்டறியவேண்டும்

ராமச்சந்திரன்

***

ஜெ,

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் குறித்தான விளக்க கட்டுரை வாசித்து பல சரியான தகவல்களை தெரிந்துகொண்டேன் . நன்றி. . .

வாட்சப்பும் பேஸ்புக்கும் வரப்போய் மனிதர்கள் எல்லோரும் தகவல் சொல்லியாக மாறிவிட்டார்கள். எந்தவொரு நிகழ்வையும் அது நல்லதோ கெட்டதோ பலவிதமான கருத்துகளை முன்வைத்து வாதம் செய்கிறார்கள். அவை பெரும்பாலும் யூகங்கள் அடிப்படையில் அவர்களை வந்தடைந்ததாக இருக்கும். ஆனால் வாட்சப்பாளர்களும் பேஸ்புக் போரளிகளும் யூகங்கள் உண்மையென்றே வாதிடுகிறார்கள். பல வரலாற்று குறிப்புகளையே இவர்கள் கேள்வியாக்கும் போது நம்பிவிட தோன்றி பழைய கருத்து இப்படி இருந்தது என்று சொன்னால் அது பொய் அதில் பல அரசியல் இருக்கிறது என நம்மையே குழப்புகிறார்கள். வரலாறாய் இருந்தாலும் கேள்விக்குள்ளாக்கி விவாதிப்பது நல்லதென்றே எனக்கும் தோன்றுகிறது. ஆனால் ஆளுக்காள் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இணைப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதைவேறு நம்ப வேண்டுமென கட்டளையும் இடுகிறார்கள். பொதுவாகவே நான் அரைகுறை இப்போ பேஸ்புக்கையும் வாட்சப்பையும் கவனித்து கால்குறையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

நன்றி. .

பிரின்ஸ்

***

திரு ஜெமோ

சத்குரு பற்றிய உங்கள் கட்டுரையை வாட்ஸப் வழியாக வாசித்தேன். சத்குரு இன்றைய யுகத்துக்கான ஞானத்தை அளிப்பவர். அவர் அளிக்கும் ஞானத்தை குறைசொல்ல உங்களுக்கு என்ன தகுதி? நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களுக்குத்தான் நஷ்டம். உங்கள் ஆணவத்தைக் களைந்து யோசித்துப்பார்க்கவும்

சீனிவாசன்

முந்தைய கட்டுரைஜக்கி -அவதூறுகள், வசைகள், ஐயங்கள் -2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–27