சந்திப்புகள் கடிதம் 4

1

 

அன்புள்ள ஆசானுக்கு,

நெடுநாட்களாக இவற்றை எழுதவேண்டுமென்பது எண்ணம். சோம்பேறித்தனத்தின் விளைவு எழுத விடவில்லை.

சில கடிதத் தொடர்பிற்கு பின்னர், கொல்லிமலை இளம் வாசகர் வட்ட சந்திப்பின் வழியே நேரில் உங்களை சந்தித்தேன். தலையை துவட்டியவாறே “அடுத்து யார் குளிக்க போறீங்க என்ற கேள்வியுடன் உள்ளறையில் இருந்து வெளியே வந்தீர்கள். ஒரு பரவசம், ஒரு மகிழ்ச்சி என்னுள்.

பொதுவான அறிமுகங்கள் என ஆரம்பித்து கதைகள், கவிதைகள், அரசியல் என நீண்ட விவாதத்தில் நான் கண்டுகொண்டது “edge” என்ற பதத்தை. இரு சாராரின் விவாதத்தை எது முன்னெடுத்து செல்கிறது என்பதை. ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் முன்பு அதைப் பற்றிய உள்ளார்ந்த அறிவு அவசியம்; இல்லாவிடில் அது வெறும் வெற்று அரட்டையாக முடிந்து போகும் என உணர்ந்து கொண்டேன்.

ஷாகுல் ஹமீதின் சிறுகதை வாசிப்பு, அது சார்ந்த அலசல்கள், டிராக்டர் மீதமர்ந்து மலைப்பயணம், பாதி புதைந்த சமணச்சிலை, அம்மன் தரிசனம், சிறு மலையேற்றம், மலைமீதமர்ந்து கண்ட சூரிய அஸ்தமனம்,  இருள் சூழுந்த மலைக்காட்டின் நட்சத்திரங்கள், மின்வெளிச்சம் பெற்ற நகர், அருமையான இயற்கையுணவு என அத்தனையும் நாளும் கணினிக்குள் தலையை சொருகித் திரியும் எனக்கு ஒரு புது அனுபவம்.

சிறு சிறு சங்கடங்கள் எழாமலில்லை. செறிவான விவாதங்கள் இல்லை என சிலர் குறைபட்டுக்கொண்டனர். மீனாம்பிகை அவர்களின் “எதோ பிக்னிக் போறமாதிரி வந்திருக்காங்க என்ற வரிகள் என்னை மிகவும் பாதித்தன. உண்மையில் தவறு என்னிடத்தில். உங்களை சந்தித்தால் போதுமென்று வந்துவிட்டேன். சுற்றிலும் புதியவர்கள். இயல்பாக பேச வரவில்லை. என்ன கேட்கவேண்டுமென்று கூட தெரியவில்லை. நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்றாலே நாலடி தள்ளி நிற்கும் எனக்கு, இந்த சூழலை முழுவதுமாக அனுபவிக்கும் வாய்ப்பு சற்றே குறைபட்டது. உங்களிடம் என்னை நிறுவிக்கொள்ளும் லாவகமும் தெரியவில்லை. அத்துணை பேர் இருந்தும் கொஞ்சம் தனிமையாய் உணர்ந்தேன். உங்களின் எழுத்துகளிடம் நெருக்கமான எனக்கு உங்களிடம் நெருங்க இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை போலும்.

முதல் நாள் இரவில் சரியான தூக்கமில்லை. அருகில் படுத்திருந்தவர் சிறிது நேரத்திலேயே குறட்டை என்ஜினை ஆன் செய்துவிட்டார். பெரிய மலைப்பாம்பு போல உருண்டு உருண்டு படுத்து படுத்தி எடுத்துவிட்டார். மறுநாள் காலை மிளகுத் தோட்டத்தின் ஊடேயான மலையேற்றம் புத்துணர்வு அளித்தது. தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கோம்பை, ஜெர்மன் ஷெப்பர்டு நண்பர்களை சற்று நேரம் கவனித்துக் கொண்டிருந்தேன். மிளகின் கொடிகளை தடவிக்கொண்டே இன்னும் நான் நிறைய வாசிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். உணவு சமைத்துக் கொடுத்த அம்மாக்களிடம் சென்று நன்றி கூறிவிட்டு உள்ளே வந்தேன்.

ஷாகுல் ஹமீதுக்கு போட்டியாக இன்ஸ்டன்ட் சிறுகதையொன்றை ஒருவர் வாசிக்கத் துவங்கினார். முடிவில் செவுளில் ஓங்கி அறைவீர்கள் என்று காத்திருந்தேன். “சுத்த நான் சென்ஸ் என்பதோடு நிறுத்திக்கொள்ள ஈரோடு கிருஷ்ணன், சந்திப்பை நிறைவு செய்து வைத்தார். கொண்டுவந்த “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” நூலில் கையெழுத்து வாங்கிக்கொண்டது சந்திப்பை முழுமையாக்கியது. தாகூர் அவர்களின் முகம் பொறித்த நாணயத்தை உங்களிடம் கொடுத்தது ஆசானுக்கான காணிக்கையானது.

உடனே இக்கடிதத்தை எழுதக்கூடாதென ஒரு எண்ணம். இதோ சந்தித்தது ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆகவே எழுதினேன். இடையில் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவிற்கான மின்னஞ்சலழைப்பு உங்களிடமிருந்து. நிச்சயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. தவறுதான். கண்ணாடி முன்னின்று எதிரே தெரிந்த உருவத்தில் காரி உமிழ்ந்து கொண்டேன். கிறிஸ்துமஸ்; கிறிஸ்துவன்; பெற்றோர் கண்முன் வர விழா வருகை இயலாமல் போனது. நீங்கள் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. ஒதுக்கிவிடமாட்டீர்கள் என்று எண்ணிக்கொண்டேன். பிராயச்சித்தமாக இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் “விஷ்ணுபுரம்” வாங்கிவிட்டேன். படித்துவிட்டு என் அவதானிப்பை எழுதுகிறேன்.

என்றும் அன்புடன்,

ஜி எஸ் லெனின்

கள்ளக்குறிச்சி

gsleny

அன்புள்ள லெனின்

இத்தகைய சந்திப்புகளில் ஒரு பொதுவான தயக்கம் உருவாவது இயல்பே. ஒன்று, வந்துள்ளவர்களில் பெரும்பாலானவர்களைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. புதியவர்கள் நடுவே ஒரு பெரிய தயக்கம் உருவாவது இயல்பு. ஈரோடு சந்திப்பில்கூட மதியத்திற்குப்பின் வந்திருந்தவர்கள் கொஞ்சம் நெருக்கம் கொண்டு அதன் பிறகே பேசலானார்கள். இன்னொன்று, நாம் சந்திப்பு குறித்தும் நபர்கள் குறித்து கொண்டுள்ள உளச்சித்திரங்கள் நேர்ச்சந்திப்பில் கலையும். இவற்றுக்கெல்லாம் தயாராகவே வரவேண்டும். தயக்கம், தனிமைப்படுதல் ஆகியவற்றின் வழியாக இழக்கப்படுவது நம் நேரமும் உழைப்பும்தான்.

இத்தகைய சந்திப்புகளில் குறைந்தது பேசுவதற்குச் சிலவற்றை தயாரித்துக் கொண்டு வரலாம். முக்கியமாக கூடுமானவரை நேர்மையாக, தீவிரமாக இருக்கவேண்டும். போதும் மற்றபடி ‘தகுதிகள்’ ஏதும் தேவையில்லை. சந்திப்புகள் சிலசமயம் வேடிக்கையாக, சிலசமயம் தீவிரமாக, சிலசமயம் நட்பார்ந்தவையாக இருக்கும். கொல்லிமலைச் சந்திப்பில் அந்த மலைப்பாறைமேல் அமர்ந்து பேசியது அற்புதமான அனுப்வம். அன்று பேசியவையும் முக்கியமானவைதான்.

ஜெ

முந்தைய கட்டுரைஇசை -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–26