‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–26

26. வாளெழுகை

மூதரசரின் எரியூட்டல் முடிந்த மறுநாளே மூதரசி அரண்மனையிலிருந்து கிளம்பினாள். எரியூட்டலுக்கு கால்நிலையா கள்மயக்கில் வந்த புரூரவஸ் சிதையில் எரி எழுந்ததுமே “களைப்பாக உள்ளது. ஏதேனும் தேவை என்றால் சொல்லுங்கள்” என்றபின் கிளம்பிச்சென்றான். எரியூட்டல் சடங்குகள் அனைத்தும் முடிந்து தென்றிசைத்தேவனின் ஆலயத்தில் வழிபட்டு அரண்மனைக்குத் திரும்பிய ஆயுஸ் அவள் அம்முடிவை எடுத்திருப்பதை முதுசேடியிடமிருந்து அறிந்தான். அமைச்சர் பத்மரிடம் அதை சொன்னபோது “ஆம், அவ்வாறே நிகழுமென்று தோன்றிக்கொண்டிருந்தது” என்றார்.

மூதரசி தன் அறைக்குள் பொருட்களை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தாள். தன் அன்னையரிடமிருந்து பெற்ற ஓலைகளை தனியாக வைத்தாள்.  அருநகைகளை இன்னொரு பெட்டிக்குள் எண்ணி வைத்தாள். அருகே அமர்ந்து சேடி ஓலையில் அதை பதிவுசெய்துகொண்டிருந்தாள். இரு சேடியர் உதவிக்கொண்டிருந்தனர். ஆயுஸும் சத்யாயுஸும் ஸ்ருதாயுஸும் அகத்தறைக்கு வந்து  துயர்கொண்ட முகத்துடன் நின்றனர். என்ன என்று அறியாத ரயனும் விஜயனும் அவர்களின் கைகளைப் பற்றியபடி மூதன்னையை நோக்கினர். அவள் விழிதூக்கி அவர்களை நோக்கி புன்னகை செய்தாள்.

ஆயுஸ் “தங்கள் முடிவை அறிந்தேன். உறுதியான முடிவு எடுப்பவர் என்று தங்களை இளமையிலேயே அறிந்திருக்கிறேன். மன்றாடவோ விழிநீர் சிந்தவோ நான் வரவில்லை. அவை உங்களை மாற்றாது என்றறிவேன். தங்கள் முடிவில் எங்களுக்கேதேனும் பங்கிருக்குமென்றால் அதன்பொருட்டு தங்கள் காலடிகளில் பிழைப்பொறை கூறவே நாங்கள் வந்தோம்” என்றான்.

அவள் அங்கிருந்து செல்லும் முடிவை எடுத்ததுமே முற்றிலும் பிறிதொருத்தியாகிவிட்டிருந்தாள். எப்போதும் அவளிடமிருந்த துயரும் மெல்லிய உள்ளிறுக்கமும் முற்றிலும் அகன்று தென்மேற்கு மூலையில் அமைந்த அன்னையர் ஆலயத்தில் சிலையென அமைந்திருக்கும் மூதன்னை நிரைகளில் உள்ள முகங்களில் விரிந்திருக்கும் இனிமையும் மென்னகையும் கூடியிருந்தன. எழுந்துவந்து ஆயுஸின் தலையில் கைவைத்து “இல்லை மைந்தா, இனிதாக உதிர்தல் என்பது இயல்பாக வருவதல்ல. தவம் செய்து அடையவேண்டிய ஒரு தருணம் அது. இங்கு என்னை தளைத்திருந்தது உங்கள் தாதையின் இருப்பு மட்டுமே. அவரில்லா இவ்வரண்மனையில், நகரில் நான் இயற்றுவதற்கொன்றுமில்லை” என்றாள்.

“இங்கிருங்கள் மூதன்னையே! எங்களை விட்டுச்செல்லாதீர்கள்” என்றபடி ரயன் அவள் கையை பற்றினான். விஜயன் பிறிதொரு கையைப் பற்றி ஆட்டியபடி “போகவேண்டாம்… போகவேண்டாம்” என்றான். “தந்தையின் இடத்தில் உங்களுக்கு மூத்தோன் இருக்கிறான். நல்லாசிரியன் இடத்தில் பிறிதொருவன் காட்டிலிருக்கிறான். இவ்வாழ்வில் அணைப்பதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் ஒருபோதும் உங்களுக்கு கைகள் இல்லாமல் ஆவதில்லை. சிறுமைந்தர்களே, நல்லூழ் கொண்டவர்கள் நீங்கள்” என்றாள் மூதரசி.

சிறுவர்கள் இருவரும் அழத்தொடங்கினர். அவள் இரு கைகளாலும் அவர்களை இழுத்து தன் தொடைகளுடன் சேர்த்துக்கொண்டு “மகிழ்ந்திருங்கள். என்றென்றும் உங்கள் மூத்தவர்களுக்கு தம்பியராய் இருங்கள். நிழல் மரங்களின் கீழே என்றும் தளிர்களாக வாழும் பேறு பெற்றவர்கள் நீங்கள்” என்றபின்  ஆயுஸிடம் “நான் கிளம்புவதற்கான அனைத்தையும் ஒருக்குக!” என்றாள். சத்யாயுஸ் “தங்கள் ஆணைப்படி அனைத்தும் ஒருங்கியுள்ளன, மூதரசியே” என்றான்.

“நாளை கருக்கலிலேயே கிளம்பிவிடலாம் என்று நான் எண்ணுகிறேன். நான் செல்லும் செய்தி நகரில் அறியப்படவேண்டியதில்லை. வாழ்த்துக்களோ வழியனுப்புதல்களோ நிகழலாகாது. ஓசையற்று இந்நகர்விட்டு நீங்கவேண்டுமென்று எண்ணுகிறேன். முதற்காலையில் காற்று அகல்வதுபோல் உகந்த அனைத்திலிருந்தும் செல்லவேண்டுமென்று பாடல்கள் சொல்கின்றன. திரும்பி ஒருகணம் நோக்க விழைந்தால், ஓங்கி ஒரு மூச்செடுத்தால், ஒரு விழிநீர்த்துளி உதிர்ந்தால் செல்லுதல் எவ்வகையிலும் பயனற்றது. அவை விதைகள். நாளுக்கு நாளென முளைத்து காடாகும் வல்லமை கொண்டவை. பின்பு அப்பெருந்துயர் முளைத்த அடர்காட்டில்தான் குடியிருக்க வேண்டியிருக்கும்” என்றாள் முதியவள்.

“செல்வது மிக எளிது. மீண்டு வராமல் செல்வது அரிதினும் அரிது. செல்பவன் மீண்டும் வருகையில் விட்டுச்சென்ற எதையும் காணமாட்டான். முழுதாக செல்லாதவன் அடைவதுமில்லை. விட்டவற்றை மீளப்பெறுவதுமில்லை” என்றாள் முதுமகள். ஆயுஸ் கைதொழுது “உங்கள் அகம் நிறைவுற மூதாதையரை வணங்குகிறேன், அன்னையே” என்றான். அவள் “உரிய கைகளில் இந்நகர் உள்ளது என்ற எண்ணம் எனக்கு உள்ளது. நேற்று முந்நாள்வரை இந்நகருக்கு என்னாகும் என்ற ஐயமிருந்தது. உன் தந்தையை எண்ணி வருந்தாதே. அவருக்குப் பின்னால் குருதிமணம் பெற்ற ஊழ் முகர்ந்து அணுகி வருகிறது. எத்தனை விரைந்து ஓடுபவனும் அதிலிருந்து தப்ப முடியாது” என்றாள்.

“உன் கைக்கு மணிமுடி வரும். உன் தந்தை கற்றுத் தந்த பேரறம் துணையிருக்கட்டும். உனது குருதியில் பேரறத்தான்கள் பிறக்கட்டும். மைந்தா, உன் தந்தைக்கு என்ன நிகழ்ந்தாலும் அதைப்பற்றி கவலை கொள்ளாதே. வாழ்ந்து அவர் ஒரு பாடமென உன் முன் அமைந்தார் என்று மட்டுமே கொள். தந்தை நெறிபிழைத்தால் தந்தையென்றாவர் சான்றோர் என்று உணர்க!” என்றாள் முதுமகள். ஆயுஸும் தம்பியரும் அவளைத் தொழுது நீங்கினர். “ஒன்றும் எஞ்சலாகாது, இளையவளே. அனைத்தையும் என் மருகியரிடம் அளித்துவிட்டுச் செல்லவேண்டும் நான்” என்றாள் மூதரசி.

அவள் மருகியர் சேடியரால் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் விழிநீர் வழிந்த கண்களுடன் மூக்குசிவந்து விசும்பினர். “நன்று வரும் என நம்புங்கள்… மானுடர் அந்நம்பிக்கையிலேயே வாழ்தல் இயலும்” என்றாள் மூதன்னை. அவர்கள் அழுதபடியே அவள் அளித்த பொருட்தொகைகளையும் ஏட்டுக்குவைகளையும் பெற்றுக்கொண்டனர். அவற்றில் அக்குடியின் மூதன்னையர் சேர்த்த பொருட்களும் எண்ணிய சொற்களும் இருந்தன. “இங்கு வரும் பெண்களுக்குரியவை இவை. நாம் இவை கடந்துசெல்லும் பாதைகள் மட்டுமே என்றுணர்க!” என்றாள் முதியவள்.

மறுநாள் கருக்கலில் அவள் செல்லவிருப்பதாக செய்தி அரண்மனை முழுக்க பரவியது. முதலில் அச்செய்தி ஓர் அதிர்ச்சியாக அனைவரிடமும் எழுந்தது. ஆனால் மூதரசி பலகாலம் முன்னரே அரண்மனையிலிருந்து பிரிந்து உலர்ந்து ஒட்டாதுதான் இருந்தாள் என்பதை அதன் பின்னரே அவர்கள் உளம் கூர்ந்தனர். அவள் செல்வதே உகந்த முடிவென எண்ணத் தலைப்பட்டனர். “அவ்வாறுதான் கிளம்பிச்செல்ல வேண்டும். முற்றிலும் அடைந்து. இனியொன்றும் இல்லையென்று நிறைந்து” என்றார் அவைப்புலவர்.

இரவில் மூதரசி அரண்மனையின் அனைத்துச் சேடியரையும் வரச்சொல்லி ஒவ்வொருவரிடமாக பெயர் சொல்லி விடைகொண்டாள். பெண்கள் குனிந்து விழிநீர் சிந்தினர். இளம்பெண்கள் சிலர் அவள் கால்தொட்டு சென்னிசூடி அழுதனர். காவலரும் ஏவலர்களும் அமைச்சர்களும் அவள் கால்தொட்டு வணங்கி கண்ணீருடன் விலகினர். சூழ்ந்து ஒலித்த விசும்பல்களும் விம்மல்களும் எவ்வகையிலும் அவளைச் சென்று தொடவில்லை. தொழுவோரின் உணர்வலைகளுக்கு அப்பால் கல்லென கண்மலர்ந்திருக்கும் கருவறைச் சிலை போலிருந்தாள்.

வீரனொருவனை துணைக்கு அழைத்துக்கொண்டு மஞ்சத்தறையில் துயின்றுகொண்டிருந்த புரூரவஸை சென்று கண்டாள். அவனருகே எழுந்து அமர்ந்த காமக்கிழத்தி “அரசே, அரசே” என்று மெல்ல உலுக்க மதுமயக்கில் துயின்றுகொண்டிருந்த அவன் வியர்த்த உடம்பும் எச்சில் வழிந்த வாயுமாக கையூன்றி எழுந்து குழறிய நாவுடன் “என்ன?” என்றான். “அரசி கிளம்புகிறார்கள்” என்றாள். “யார்?” என்று அவன் கேட்டான். “மூதரசி” என்றாள் அவள். “எங்கே?” என்றான். பின்னர் மீண்டும் படுத்துக்கொண்டு “பிறகு வரச்சொல்” என்றான்.

மூதரசி “மைந்தா, இனி நாம் பார்க்கப்போவதில்லை. விழைந்தால் எனக்கு நீர்க்கடன் செய்க! இல்லையேல் அதை ஆயுஸ் செய்யட்டும். நன்று சூழ்க! நீ கொண்ட அழல் அணைக! உன் அலைகள் ஓய்க! முதிர்ந்து நிறைவடைக!” என்று வாழ்த்தி குனிந்து அவன் தலையில் கைவைத்து “நன்று சூழ்க!” என நற்சொல் அளித்தபின் திரும்பிச்சென்றாள். என்ன நிகழ்கிறதென்று அறியாதவன்போல் மதுவால் தடித்த வாயுடன் ஒழுகும் மூக்குடன் கலங்கிய கண்களுடன் அவன் நோக்கி அமர்ந்திருந்தான். அவள் சென்றபின் “இன்னொரு கோப்பை மதுவை ஊற்று” என்று சேடியிடம் ஆணையிட்டான்.

மூதரசி வெளிவந்து ஆலயத்திலிருந்து நடப்பவள்போல கைகூப்பியபடி சென்று தன் அறையை அடைந்து “மஞ்சத்தை ஒருக்கு” என்றாள். அன்று அரண்மனையில் எவரும் துயிலவில்லை. தாழ்ந்த குரலில் ஒருவரிடம் ஒருவர் மூதரசி கிளம்புவதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். புரூரவஸின் அரசியர் அனைவரும் மூதரசியின் அரண்மனையைச் சுற்றிய இடைநாழிகளிலேயே அவ்விரவை கழித்தனர். ஆனால் மென்பட்டு விரிக்கப்பட்ட சேக்கையில் இறகுத் தலையணையை வைத்து உடல் நீட்டி படுத்த மூதரசி சேடி சுடர் தாழ்த்தி விலகுவதற்குள் மெல்லிய குறட்டை ஒலியுடன் ஆழ்ந்து துயிலலானாள்.

ஏழுமுறை சேடியரும் மருகியரும் உள்ளே வந்து நோக்கி அவள் ஆழ்ந்து துயில்வதை உறுதி செய்தபின் வெளியே சென்று “விந்தை! எப்படி உளக்கொந்தளிப்பின்றி அவர்களால் தூங்க முடிகிறது?” என்றனர். “இது ஒருவேளை இறப்பின் கணமோ?” என்றாள் ஓர் அரசி. “இல்லை, அவர் முகம் அமைதியில் இருக்கிறது, இறப்புக்குரிய இருளமைதி அல்ல அது” என்றாள் பிறிதொருத்தி. “புலரியில் நாம் எழுப்ப வேண்டுமா?” என்று கேட்டாள் ஒரு மருகி. “ஏன்? எழுப்பியாகவேண்டும் அல்லவா?” என்றாள் பிறிதொருத்தி. “அவரை இருளை நோக்கி எழுப்புவதாக ஆகுமே? அவர் விழைந்தால் எழட்டும். நாம் எழுப்பி அனுப்ப வேண்டியதில்லை” என்றாள் அரசியான முதல் மருகி.

மூதரசி பிரம்மப் பொழுதுக்கு முன்னதாகவே எழுந்தாள். “ஓம்!” என்று அவள் மெல்ல சொல்லும் குரலை அறைக்கு வெளியே துயிலும் விழிப்புமாக இருந்தவர்கள் கேட்டனர். முதிய சேடி கதவைத் திறந்து நோக்கியபோது வலக்கை ஊன்றி எழுந்து  கைகூப்பியபின் அவளை புன்னகையுடன் நோக்கி “நான் நீராடவேண்டும்” என்று முதுமகள் சொன்னாள். இரு சேடியர் அவளை அழைத்துச்சென்றனர். குளிர்நீரில் நீராடி மரவுரி சுற்றி அணிகளோ அரசக்குறிகளோ அணியாமல் அவள் வந்தாள். முற்றத்தில் அவளுக்கான ஒற்றைப்புரவித் தேர் காத்து நின்றிருந்தது.

மூதரசி தேரின் அருகே நின்றிருந்த தன் பெயர்மைந்தரை ஒவ்வொருவராக அணுகி புன்னகையுடன் “விடைபெறுகிறேன், மைந்தர்களே” என்றாள். அவர்கள் அவள் கால்தொட்டு சென்னிசூட அவர்கள் குழல்தொட்டு வாழ்த்தினாள். ஏவலன் கையிலிருந்த ஜயனை கையில் வாங்கி முத்தமிட்டு “நீளாயுள்!” என்றபின் திருப்பிக் கொடுத்தாள். பிற அனைவரையும் திரும்பிப் பார்த்தபின் தேர்ப்படியில் கால்வைத்து ஏறி பீடத்தில் அமர்ந்து “செல்க!” என்றாள். தேர்ப்பாகன் ஆயுஸைப் பார்க்க அவன் விழியசைத்தான். புரவி சவுக்கால் தொடப்பட்டதும் குளம்புகளை கற்தரையில் எடுத்துவைத்து தாளம் பெருக்கி விரையலாயிற்று. சகட ஒலிகள் எழ தேர் இருளில் உருண்டு புதைந்து மறைந்தது.

எவரும் உரைக்காமலேயே நகர்மக்கள் மூதரசி கிளம்பிச்செல்வதை அறிந்திருந்தனர். எந்த அறிவிப்பும் இல்லாமலேயே அச்சகட ஒலி அரசி கிளம்பிச்செல்வது என்று அவர்கள் உணர்ந்தனர். வாயில்களுக்கு வரவோ வாழ்த்துரைக்கவோ கூடாதென்று அரசாணை இருந்ததனால் தங்கள் இல்லங்களுக்குள் இருளில் ஒருவரோடொருவர் தோள்பற்றி நின்றபடி அவர்கள் அரசி செல்வதை பார்த்தனர். முதுபெண்டிர் மூச்சுவிட்டு ஏங்கினர். இளையோர் அத்தேர் கடந்து சென்றதும் வெளிவந்து அதன் இறுதி இருளசைவை விழிதொடும்வரை நோக்கினர்.

நகர் நீங்கிச்சென்ற தேர் காட்டு விளிம்பை அடைந்ததும் அரசி வண்டியை நிறுத்தச் சொன்னாள். கடிவாளம் இழுபட்டு தேர் நின்றதும் படிகளில் சிறுகால் வைத்து அவள் இறங்கினாள். பாகன் “அரசி, தங்களுக்காக அமைக்கப்பட்ட குடில் இங்கில்லை. அங்கு சென்று தங்களை விடும்படி எனக்கு ஆணை” என்றான். “இதுவே என் காடு. என் வழியை நானே தேர்வேன்” என்றாள் மூதரசி. பதறியபடி “இக்காட்டில் தாங்கள் தனியே எப்படி…?” என்றான் தேர்ப்பாகன்.

“இனி எவரும் என்னைத் தேடலாகாது. இவ்விடத்தில் என நீ சொல்வதும் கூடாது. இது என் ஆணை!” என்றபின் அவள் சிற்றடி வைத்து செறிந்த புதர்களை விலக்கி இருள் அலைகளாக குவிந்துகிடந்த காட்டுக்குள் புகுந்தாள். தலைவணங்கி கண்ணீர் உகுத்து கைகூப்பி நின்ற பாகன் நெடுந்தொலைவுவரை மெல்லிய இலையசைவு கேட்பதே அவள் செல்லும் ஓசையென்று எண்ணிக்கொண்டான். பின்னர் தேரிலேறி நகருக்குள் நுழைந்தான்.

imagesஅன்னை சென்றதை மறுநாள் உச்சிப்பொழுதுக்கு முன்னர்தான் புரூரவஸ் அறிந்தான். அமைச்சர் பத்மர் உணவருந்திக்கொண்டிருந்த அவனிடம் வந்து வணங்கி “மூதரசி நகர் நீங்கிவிட்டார்கள்” என்றார். அவன் உணவிலிருந்து விழியசைக்காமல் “ஆம், என்னிடம் சொன்னார். காட்டில் நமது குடிலில் அங்கிருக்கட்டும் அவர்” என்றான். பத்மர் சிறிய எரிச்சலுடன் “இல்லை, வழியிலேயே அவர்கள் இறங்கிவிட்டார்கள்” என்றார்.

கையில் ஊனுணவு நிலைக்க  திரும்பி நோக்கிய புரூரவஸ் “எங்கு சென்றார்?” என்றான்.  “அறியோம். காட்டின் இருளுக்குள் சென்று மறைந்திருக்கிறார்கள்.” அவன் ஆர்வமிழந்து மீண்டும் உணவை அள்ளி உண்டபடி “தேடி நமது ஒற்றர்கள் செல்லட்டும். கொண்டுசென்று குடிலில் சேர்க்கும்படி என் ஆணை!” என்றான். “எங்காவது செத்துக்கிடந்தால் அப்பழியை என்மேல் ஏற்றுவர் வீணர்களாகிய சூதர்.”

பத்மர் பொறுமையிழக்காமல் தன்னை காத்தபடி “மூதரசியின் ஆணை அது. எவரும் தேடி வரலாகாது என்று பாகனிடம் சொல்லியிருக்கிறார். விரும்பி கானேகியவர்களை தேடிச் செல்லக்கூடாது என்பது குடியறம்” என்றார். நாக்கைச் சுழற்றி மெல்லிய ஓசை எழுப்பிய புரூரவஸ் “நான் ஆணையிட்டபின் என்ன குடியறம்? செல்க!” என்றான். “அரசியின் ஆணையை மீறலாகாது” என கூரிய குரலில் அமைச்சர் சொன்னார். அக்குரலின் மாறுபாட்டை உணர்ந்து விழிதூக்கிய அரசன் சினமெரிய ஊனுணவை தாலத்தில் எறிந்துவிட்டு “மூடா! எவரிடம் பேசுகிறாய்? இது என் ஆணை!” என்றான்.

விழியசையாமல் அவன் கண்களைப்பார்த்த அமைச்சர் “அடேய் அறிவிலி, ஷத்ரியனாகிய நீ அந்தணன் முகத்தைப்பார்த்து இச்சொல் சொன்னமைக்காக வருந்தியாகவேண்டும். அது என் மூதாதையருக்கும் நெறிவகுத்த முனிவருக்கும் நான் செய்யும் கடன்” என்றார். “என்ன?” என்று கையை உதறி கூவியபடி அவன் எழுந்தான். “என்ன பேசுகிறாய்? யாரங்கே?” அவன் குரலின் பதற்றத்திற்கு மாறாக தணிந்த குரலில் “நீ சொன்ன அச்சொற்களுக்காக இக்கணமே உன் தலையை வெட்டி இம்முற்றத்தில் வைக்க என்னால் இயலும். பார்க்கிறாயா?” என்றார் அமைச்சர்.

புரூரவஸ் திகைத்து “யாரங்கே? காவலர்களே… வருக!” என்றான். கதவு வெடித்துவிரிய இரு வீரர்கள் உள்ளே வந்தனர். “சீவி எறியுங்கள் இந்த இழிமகனை” என்றபடி அவன் கையை வீசிக்கொண்டு முன்னால் ஓடினான். இருவரும் உடைவாள் பிடிமேல் படிந்த கைகளுடன், திகைத்த விழிகளுடன் அசைவற்று நின்றனர். அமைச்சர் உறுதியான குரலில் “ஷத்ரியர்களே, அந்தணனாகிய எனது ஆணை இது! இக்கணமே இவ்வரசனின் மணிமுடியை அகற்றுக! இவன் அரசஆடைகளைக் களைந்து கைகள் பிணைத்து தலைமுடியை மழித்து அவைக்கு இழுத்து வாருங்கள்” என்றபின் திரும்பி நடந்தார்.

புரூரவஸ் பாய்ந்து மேடையிலிருந்த தனது வாளை எடுத்துக்கொண்டு அமைச்சரை நோக்கி ஓட அவனுடைய அணுக்க வீரர்களில் ஒருவன் வாளின் பின்பக்கத்தால் அவன் முழங்காலில் ஓங்கி அடித்தான். அலறியபடி குப்புற விழுந்த புரூரவஸின் முதுகை இன்னொருவன் மிதித்து அவன் இருகைகளையும் பிடித்து முறுக்கி அவன் மேலாடையாலேயே பின்னால் சேர்த்து கட்டினான். புரூரவஸ் “ஓடிவாருங்கள், வீரர்களே… ஓடிவாருங்கள், காவலர்தலைவரே…” என்று கத்திக்கொண்டிருக்க உள்ளே ஓடிவந்த காவலர்தலைவன் அதிர்ந்து “என்ன நடக்கிறது?” என்றான். “அந்தணரின் ஆணை” என்றான் காவலன். “அமைச்சரா? அவரே சொன்னாரா?” என்றான் காவலர்தலைவன். “ஆம்” என்றான் இன்னொருவன்.

காவலர்தலைவன் “அரசே, மனிதர்களால் மானுடம் ஆளப்படுவதில்லை. வேதத்தால் ஆளப்படுகிறது. வேதநெறி நின்ற அந்தணர் சொல்லுக்கு அப்பால்  மறுசொல் இல்லை” என்றபின் “அவர் ஆணை நிகழட்டும்” என்றான். புரூரவஸ் திமிறியபடி “என் வீரர்கள் எழுவர்… நான் குருதியால் இவ்விழிவை கழுவுவேன். அத்தனைபேரையும் கழுவேற்றுவேன்… கழுவேற்றுவேன்… கருதுங்கள்… கழுவேற்றியே தீர்வேன்” என்று பித்தன்போல கூச்சலிட்டான். அவர்கள் புரூரவஸின் ஆடைகளையும் அணிகளையும்  கிழித்தும் உடைத்தும் அகற்றினர். அவன் “நான் அரசன்… சந்திரகுலத்து முதன்மையரசன்” என்று கூச்சலிட்டு திமிற காவலர்தலைவன் “வாயைமூடு, இழிமகனே!” என ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தான். அதிர்ந்து திகைத்து பின் புரூரவஸ் சிறுவனைப்போல விசும்பி அழத்தொடங்கினான்.

இடையில் சிறு தோலாடை மட்டும் அணிந்த அவனை கைபிணைத்த சரடைப்பற்றி இழுத்துச்சென்றனர். செல்லும் வழியிலேயே அவன் முழங்காலை மிதித்து மடித்து அமரவைத்து உடைவாளாலேயே அவன் தலை மயிரை மழித்தனர்.  புரூரவஸ் மெல்ல தளர்ந்து அரைமயக்கத்திலாழ்ந்து தலைதொங்க பிணம்போல அவர்களுடன் சென்றான். செல்லும் வழியிலெல்லாம் ஏவலரும் காவலரும் திகைத்து நோக்கி நின்றனர். சிலர் அழுதனர். “அமைச்சரின் ஆணை!” என்று சொற்கள் கிசுகிசுப்பாக பரவின. “அந்தணரே முனியும்படி என்னதான் இயற்றினார்?” என்றார் ஒரு முதியவர். “ஊழ்வினை உறுத்து வருகையில் உரியது உளத்திலெழும்” என்றார் முதியசூதர் ஒருவர்.

அமைச்சரின் ஆணைப்படி அவைமுரசு முழங்கலாயிற்று. அவ்வோசை கேட்டு சில கணங்களுக்குப் பின்னரே அதன்பொருள் புரிய நகர் முழுக்க பரபரப்பு எழுந்தது. “படையெடுப்பா? அரசரின் இறப்பா? படைக்கிளர்ச்சியா?” என வினவியபடி மக்கள் அலைமோதினர். சற்றுநேரத்திலேயே அரசனை சிறையிட்டு குடியவையை அமைச்சர் கூட்டியிருப்பதாக செய்தி பரவியது. அனைத்துக் குலங்களையும் சேர்ந்த தலைவர்கள் அணிந்தும் அணியாததுமான ஆடைகளுடனும்  குலமுத்திரைகளுடனும் படைக்கலம் ஏந்திய மைந்தர்கள் சூழ அவை நோக்கி ஓடிவந்தனர். செல்லும் வழியிலேயே “என்ன நிகழ்கிறது? என்ன விளைவு?” என்று வினவிக்கொண்டனர். “அந்தணர் முனிந்தால் அரசில்லை” என்றார் ஒருவர். “அவர் நம் குலங்கள்மேல் சினம்கொள்ள ஏதுமில்லை” என்றார் இன்னொருவர். “அரசர் எல்லைமீறியிருப்பார்… அதை நோக்கியே சென்றுகொண்டிருந்தார்” என்றார் பிறிதொருவர்.

அவையில் தனது பீடத்தின்மேல் இறுகிய முகத்துடன் கைகளைக் கட்டியபடி நிமிர்ந்த தலையும் எங்கும்நோக்கா விழிகளுமாக அமைச்சர் பத்மர் அமர்ந்திருந்தார். அவரைச் சூழ்ந்து சிற்றமைச்சர்கள் கைகட்டி நின்றிருந்தனர். முதன்மைப் படைத்தலைவன் நேரில் வந்து ஆணைபெற்றுச் சென்றான். அத்தனை படைத்தலைவர்களுக்கும் ஓலைகள் சென்றுசேர்ந்தன. படைத்தலைவன் மீண்டுவந்து அமைச்சரிடம் “தங்கள் மறுசொல்லுக்காக காத்திருக்கின்றன குருநகரின் படைகள், அமைச்சரே” என்றான். “நன்று” என்றார் அமைச்சர். “தங்கள் ஆணைப்படி ஆயுஸையும் பிற இளவரசர்களையும் சிறையிட்டு அழைத்து வந்துள்ளோம். அவைநிறுத்தவேண்டுமெனில் அவ்வாறே” என்றான் படைத்தலைவன். “செய்க!” என்றார் பத்மர்.

அவர் விழிகள் முற்றிலும் பிறிதொன்றாக மாறியிருந்தன. மானுடரில் தெய்வமெழும் தருணங்களைப்பற்றி சூதர்கள் பாடுவதை படைத்தலைவன் எண்ணிக்கொண்டான். அவை கூடிக்கொண்டிருக்கையிலேயே படைவீரர்களால் கட்டி இழுத்துக்கொண்டு வரப்பட்டு அவைமுன் நிறுத்தப்பட்டான் புரூரவஸ். அவன் நிலம்நோக்கி முகம் குனித்திருந்தமையால் மழித்த தலைமட்டுமே தெரிந்தது. வெற்றுடலில் தசைகள் விதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தன. “இளவரசர்கள் அவை புகட்டும்” என்றார் அமைச்சர்.

அமைச்சரின் ஆணையை ஏற்று இரு ஏவலர்கள் சென்று கைகூப்பி விழிநீர் உகுத்தபடி நின்ற ஆயுஸையும் இளையோரையும் அவைமுகப்புக்கு கொண்டுவந்தார்கள். சத்யாயுஸும் ஸ்ருதாயுஸும் தலைகுனிந்து வந்து அவன் அருகே நின்றனர். ஏவலரின் கைகளைப் பற்றியபடி ரயனும் விஜயனும் வந்தனர். முதிய ஏவலர் ஒருவர் ஜயனை கைபற்றி அழைத்துக்கொண்டு வந்தார். அவை நிறைந்ததும் கைகூப்பியபடி எழுந்த அமைச்சர் சற்றுநேரம் கண்மூடியபடி நின்றார். நீள்மூச்சுடன் விழிதிறந்து “அவையோரே, இன்று என் மூதாதையரில் ஒருவர் எட்டு தலைமுறைக்கு முன் செய்த ஓரு கடுஞ்செயலை நானும் செய்யும் நிலை வந்துள்ளது” என்றார்.

“குலத்தலைவர்களே, அறத்தின் பொறுப்பு இப்புவியில் இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அந்தணனாகிய எனது நாவிலும் ஷத்ரியனாகிய இவர் வாளிலும் அது வாழவேண்டும் என்பதே அரசுநெறி. எங்கள் வழிநின்று வைசியரின் துலாவிலும் உழவரின் மேழியிலும் ஆயரின் வளைதடியிலும் கொல்லரின் கூடத்திலும் அது திகழவேண்டும்” என்றார். அவர் குரல் அடைத்ததுபோல மெல்ல ஒலித்தாலும் அங்கிருந்த அனைவரும் அதை கேட்டனர். “கோல்தாங்கி அரியணை அமர்ந்திருப்பவனே விழியறியும் தெய்வம் என்பது நெறி. அவன் முன் நின்று அரிமலரிட்டு வணங்கும் அமைச்சனாகவே நான் இருந்தாக வேண்டும் என்றார் எந்தை. இருபத்தெட்டாண்டுகாலம் அவ்வண்ணம் மறுசொல்லின்றி இந்நகரை அவருக்காக ஆண்டிருக்கிறேன். அதன்பொருட்டு உங்களால் பலமுறை சினந்துகொள்ளப்பட்டுள்ளேன். பழிச்சொல் கேட்டுள்ளேன். அது என் கடன்.”

“நாற்பத்தாறாண்டுகாலம் எனது தந்தை இவர் தந்தையின் காலடிகளில் நின்று சொல்புரந்திருக்கிறார். அவருக்கு முன் பதினெட்டு தலைமுறைக்காலம் என் மூதாதையர் குருநகரியின் கோலுக்கு வேர் என நின்றிருக்கிறார்கள்” என அவர் தொடர்ந்தார். “இன்று காலை இந்நகர்விட்டு நீங்கியது அறத்தின் இறுதித்துளி. அதுவே என் எல்லை. அதன்பின் இங்கு எஞ்சிய மறத்தைத் தாங்கும் பொறுப்பு எனக்கில்லை. எந்தை எனக்களித்த சொல் இங்கு வாழவேண்டும். வேதமே வேர். நெறிகள் அதன் கனிகள். நெறியின்பொருட்டு வாழ்வதும் வீழ்வதுமே என் தன்னறம்.”

“இவ்வரசன் மக்கள் அளித்த வரிப்பொருளை பதுக்கி நகரின் வாழ்வை அழித்தான். அது பிழை. காமத்திலாடி இந்நகரப் பெண்களின் கற்புடன் விளையாடினான். அது அதனினும் பெரிய பிழை. தன் அறைக்கு வந்த அன்னை முன் நாணிலாது அமர்ந்திருந்தான். அது மாபெரும் பிழை. ஆனால் இந்நகர்விட்டு அறம் நீங்கியதையே உரைத்தும் அறிந்திராதவனாக இருந்தான் என்பதுதான் பிழையினும் பிழை. அதன்பொருட்டு என் முப்புரிநூலைப் பற்றி நான் ஆணையிடுகிறேன், இனி இவன் முடிசூடி இவ்வரியணையில் அமரலாகாது. இனி இந்நகரின் எல்லைக்குள் இவன் நுழையலாகாது. இவன் கொண்ட அரசநிலையையும் குலமுத்திரையையும் களைந்து இந்நகரெல்லைக்கு அப்பால் கொண்டுசென்று காட்டில் தனிமையில் விட்டுவருமாறு நான் பணிக்கிறேன். இந்நகர் எல்லைக்குள் இவன் நுழைவான் என்றால், இந்நகர் மக்கள் எவரேனும் இவனுக்கு துணை நிற்பார்கள் என்றால் அரசதண்டம் அவர்கள் மேல் பாயட்டும்.”

அவை சொல்லின்றி தரித்து அமர்ந்திருந்தது. “என் சொற்களை உங்கள் முன் வைக்கிறேன். இக்குலத்தலைவர்களின் ஒப்புதலை கோருகிறேன்” என்றார் அமைச்சர். முதுகுலத்தலைவர் ஒருவர் “ஆம், அந்தணர் ஆணை வாழ்க!” என சொல்ல அனைவரும் கைதூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக! அந்தணர் சொல்லில் அறம் வாழ்க! எது முறையோ அது நிகழ்க!” என்றனர்.அமைச்சர் “இவனுடைய முதல் மைந்தர் ஆயுஸ் சந்திரகுலத்து வழித்தோன்றலென இம்மணிமுடியையும் கோலையும் சூடி அரியணை அமரட்டும். அவர் விழையவில்லை என்றால் அவர் இளையோர் முடிசூடுக! அவர்கள் எவரும் விழையவில்லை என்றால் இங்குள்ள குலங்கள் கூடி அரசனை தெரிவுசெய்க!” என்றார்

புரூரவஸ் தலைதூக்கி “என் மைந்தன் முடிசூடட்டும். அது அவனுக்கு என் ஆணை!” என்றான். ஆயுஸ் கண்ணீருடன் “தந்தையே…” என்று கூவ “தந்தையின் ஆணை இது!” என்றான் புரூரவஸ். “ஆம், பணிகிறேன்” என்றான் ஆயுஸ். எந்த உணர்ச்சியும் இல்லாமல் “நன்று, அவ்வண்ணமே நலம் திகழட்டும். இன்றிலிருந்து பன்னிரண்டாவது நாள் வைகாசி முழுநிலவு. குலமூத்தாராகிய நீங்கள் அனைவரும் கூடி அம்முடியை அவர் தலையில் அமர்த்துங்கள்.  சந்திரகுலத்தின் இரண்டாவது அரசர் அறம்நின்று வெற்றிகொண்டு புகழ்பெற்று நிறைவடைக!” என்றார் அமைச்சர். “அவ்வாறே ஆகுக!” என்று உரைத்தனர் குடியவையினர்.

அமைச்சர் திரும்பி கைகூப்பியபடி ஆயுஸிடம் “இளவரசே, ஒன்றுணர்க! எல்லையற்ற ஆற்றலை உணரச்செய்கிறது  அரியணை. நீங்கள் சூடியுள்ள மணிமுடியோ ஐங்குலங்களை உங்கள் காலடியில் பணியவைக்கிறது. உங்கள் கையிலிருக்கும் கோலால் எந்தத் தலையையும் வெட்டி எறியும் உரிமை பெறுகிறீர்கள். இவை அனைத்தும் இம்மக்களால் உங்களுக்கு அளிக்கப்படுபவையே. அறம்புரிந்து நலம்நாடி நெறிநிற்கும்பொருட்டே அது அளிக்கப்படுகிறது. அறம்பிழைத்து விழுந்த மன்னன் அடைந்தவை அனைத்திலிருந்தும் விலக்கப்படுவான்” என்றார்.

அழுகையை அடக்க வாயை இறுக்கியிருந்த ஆயுஸ் தலைவணங்கினான். திரும்பி அவை நோக்கி வணங்கிய அமைச்சர் “இவ்வன்செயலை செய்த பின்னர் நான் இனி அவையமைதல் முறையன்று. இன்றே இவ்வவையிலிருந்து கிளம்புகிறேன். இந்நகருக்கு வெளியே முறைப்படி தர்ப்பைமேல் வடக்கு நோக்கி அமர்ந்து உயிர்விடுகிறேன்” என்றார். அவை திகைத்தது. ஒருவர் “அமைச்சரே…” என்று ஏதோ சொல்லியபடி எழ கைநீட்டி அவரைத் தடுத்த அமைச்சர் “அந்தணர்களுக்கு கல் நாட்டும் வழக்கமில்லை. எனக்கென்று தென்திசை புரக்கும் தேவியின் ஆலயத்தில் ஒரு சொல் நாட்டுக! நான் இயற்றிய இந்த நான்கு வரிகள் ஒவ்வொரு நாளும் அவ்வாலயத்தில் அந்தணரால் பாடப்பட வேண்டும்” என்றார். அவர் ஓர் ஓலையை எடுத்து நீட்ட அதை அவைமுதல்சூதன் வந்து பெற்றுக்கொண்டான்.

“இதன் முதல் வரி அந்தணன் தனக்கே உரைக்கும் அறம். இரண்டாவது அவன் அரசனுக்கு உரைக்கும் அறம். மூன்றாவது வரி குடிகள் அவர்கள் இருவருக்கும் உரைக்கும் அறம். நான்காவது வரி அனைவருக்கும் மூதாதையர் உரைக்கும் அறம். நலம் திகழ்க!” என்றபடி தனது தலைப்பாகையையும் மேலாடையையும் கழற்றி பீடத்தில் வைத்தார். கைகளில் அணிந்திருந்த அணிகளையும் காலில் குறடுகளையும் களைந்தபின் மூன்று முறை அவையை வணங்கிவிட்டு வாயிலினூடாக நடந்தார்.

அவரை பின்னாலிருந்து அழைத்த ஆயுஸ் “அந்தணரே, தங்கள் கால்களைத் தொட்டுப்பணியும் பேறை எனக்கு அருளவேண்டும்” என்றான். பத்மர் விழிகளில் நீருடன் தலையசைத்தார். “தங்கள் மைந்தரை எனக்கு அமைச்சராக பொறுப்பேற்கும்படி தாங்கள் ஆணையிடவேண்டும்” என்றான் ஆயுஸ். “அவன் மிக இளையோன்” என்றார் பத்மர். “நானும் இளையோனே. இங்கு இதுவரை திகழ்ந்த அறம் இனியும் பெருகவேண்டும். உங்கள் குலச்சொல் எனக்கு அரணும் அறிவுறுத்தலுமாக நின்றிருக்கவேண்டும்.” அமைச்சர் “அவ்வாறே ஆகுக!” என்றார். ஆயுஸ் சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்க “செல்வமும் புகழும் வெற்றியும் நிறைவும் சூழ்க!” என வாழ்த்திவிட்டு வெளியேறினார்.

திரும்பி ஏவலரை நோக்கி “தந்தையை விடுதலை செய்க!” என்று அவன் ஆணையிட்டான். கைகள் விடுதலைசெய்யப்பட்டு நின்ற புரூரவஸை அணுகி கைகூப்பியபடி இடறிய குரலில் “அரசநெறி நின்றேன் என்றே நினைக்கிறேன், தந்தையே. ஆனால் மைந்தன் என சரிந்துவிட்டேன். அப்பழியிலிருந்து நான் மீளப்போவதில்லை” என்றான். அவன் தலையில் கைவைத்து “நீ பிழை என ஏதும் செய்யவில்லை, மைந்தா” என்றான் புரூரவஸ். “நான் அப்பழியிலிருந்து மீள விழையவுமில்லை. தந்தையே, தங்களுக்கு நான் இழைத்த இப்பிழைக்காக எனக்கு பிழைநிகர் உரையுங்கள். பெருந்துயர் ஒன்று என்னைச் சூழாமல் என் உளம் அடங்காது” என்றான்.

புரூரவஸ் “உன் பிறவிநூலைக் கணித்த நிமித்திகர் நீ பிள்ளைத்துயர் உறுவாய் என முன்னுரைத்தனர். அன்று அது விளங்கவில்லை, இன்று துலாவின் மறுதட்டு தெரிகிறது. நன்று திகழ்க, மைந்தா! அனைத்தும் அறிவென்றே ஆகட்டும். நிறைவுறுக!” என்றான். “ஆம், அவ்வாறே” என ஆயுஸ் தந்தையை வணங்கினான்.

முந்தைய கட்டுரைசந்திப்புகள் கடிதம் 4
அடுத்த கட்டுரைவெள்ளையானை -கடிதங்கள்