சுவாமி வியாசப்பிரசாத் – காணொளி வகுப்புக்கள்

1
சுவாமி வியாசப்பிரசாத்

 

ஜெ

சுவாமி வியாசப்பிரசாத்தின் வகுப்புகளை கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் மிகக்கடினமானவையாகவே இருந்தன. ஏனென்றால் இந்தவகையான வகுப்புக்கள் எனக்குப் பழக்கமானவை அல்ல. நான் வேதாந்தத்திலும் தத்துவத்திலும் ஆர்வம் கொண்டவன். ஆனால் நான் பங்கெடுத்த எல்லா வகுப்புகளும் ஒரு ‘ஸ்டேண்டேர்ட் ஆடியன்ஸ்’ காக நடத்தப்படுபவை. ஆகவே ஒரு வகையான ஜனரஞ்சக அம்சம் அவற்றில் எப்போதுமே இருந்துவந்தது. பேசுபவர் மிகத்தெளிவாக நிறுத்தி நிறுத்திப்பேசுவார்.அத்தனை சொற்றொடர்களும் மிகவும் பழக்கமான அமைப்புடன் பலமுறை சொல்லிப்பழகியவை. நகைச்சுவைத்துணுக்குகளும் குட்டிக்கதைகளும் இருக்கும்.

அதோடு அடிப்படையில் அவர்கள் மிக எளிமையாக தத்துவத்தின் நடைமுறைத்தளத்தை மட்டுமே பேசுவார்கள். அதாவது அவர்கள் பேசுவது ‘அப்ளைட் பிலாசஃபி’ மட்டுமே. வியாசப்பிரசாத் நடத்துவது வேறு ஒருவகை. தன் அருகே ஒரே ஒரு மாணவன் மட்டும் அமர்ந்திருப்பதுபோலப் பேசுகிறார். அவன் முன்னரே நன்கு அறிந்தவன் போல நினைக்கிறார். வேதாந்தத்தின் அடிப்படைகளை, உச்சங்களைத்தான் அவர் நடத்துகிறார். மிகக்கூர்மையாக கவனித்து யோசித்து மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும்.

நான் இன்று இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற எல்லா இந்திய தத்துவ ஆசிரியர்களின் வகுப்புகளிலும் போனவன். எந்தச்சந்தேகமும் இல்லாமல் இன்றிருப்பவர்களில் இவர்தான் முதன்மையான ஆசிரியர் என்று சொல்வேன். இத்தகைய ஆசிரியர்களில் ஒருவர் அனேகமாக எவரும் தேடிச்செல்லாமல் இருந்துகொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியம். ஆனால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று பின்னர் தெரிந்துகொண்டேன் .அவரைப்பற்றி முன்னரே நீங்கள் எழுதியிருக்கலாம்.

மகாதேவன்

*

அன்புள்ள மகாதேவன்,

ஆம், உண்மையில் அவருடைய அளவுக்குக் கல்வித்தகுதியும் உண்மையான மெய்யறிதலும் கொண்டவர்கள் மிகச்சிலரே. முக்கியமாக அவர் தன்னை அமைப்பாக ஆக்கிக்கொள்ளவில்லை. ஆகவே பொதுவான கூட்டம் அவருக்கு இல்லை. தெரிவுசெய்த மிகச்சிலருடன் மட்டுமே பேச விரும்புகிறார்.

முன்னரே எழுதியிருக்கிறேன். நாராயணகுருகுலத் துறவியர் ஆனால் பொதுவாக நம் மக்களின் ஆன்மிகம் என்பது நுகர்வு, பயன்பாடு சார்ந்தது. அறிதல் சார்ந்தது அல்ல.

ஜெ

***

அன்புள்ள ஜெ

 

சுவாமி வியாசப்பிரசாத்தின் வகுப்புக்களைக் கூர்ந்து கவனித்தேன். மிக இயல்பாக ஃப்ராய்டிலிருந்து இன்றைய மேலைத்தத்துவ ஆசிரியர்கள் அனைவரும் அவருடைய வகுப்பில் இடம்பெறுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். வேதாந்தம் என்றால் வெறுமே ஆன்மா பிரம்மம் என்ற செய்திகள் என நினைத்திருந்த எனக்கு மனித உணர்ச்சிகளைப்பற்றியும், மனிதனின் சப்ஜெக்டிவிட்டி பற்றியும், மனித உறவுகள் பற்றியும் வேதாந்தம் பேசுவதைக் கேட்க மிகமிக ஆச்சரியம். அவை இன்றைய அதிநவீன கொள்கைகளுடன் இணைந்து உரையாடி மேலேசெல்பவை என அறிந்தது இனிய அதிர்ச்சி

 

ரவி

 

அன்புள்ள ரவி

 

நாராயணகுருகுலத்துடன் எப்போதும் மேலைத்தத்துவம் உரையாடிக்கொண்டுதான் உள்ளது. நடராஜகுரு ஹென்ஸி பெர்க்ஸனின் மாணவர். நித்யா மேலைத்தத்துவம் கற்றவர். முனிநாராயணப்பிரசாத், வியாசப்பிரசாத் போன்றவர்களும் அவ்வாறே. ஜான்ஸ்பியர்ஸ், பீட்டர் ஓப்பன் ஹைமர், பீட்டர் மொரேஸ் போன்ற மேலைத்தத்துவ அறிஞர்கள் எப்போதும் குருகுலத்தில் இருந்துள்ளனர்

ஜெ

 

சுவாமி வியாசப்பிரசாத்

 

அன்புள்ள ஜெ சார்

சுவாமி வியாசப்பிரசாத்தின் உரையின் எட்டாவது பகுதி மிகமிகமுக்கியமானது. Personality Emotionality போன்றவற்றைப்பற்றிய முக்கியமான நவீனக் கருத்துக்கள். நாம் இதுவரை சிந்தித்த அனைத்தையும் உடைத்து அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்பவை. நான் வெளிநாட்டில் இருக்கிறேன். மானசீகமாக இங்கிருந்தே அவருடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்

செல்வா ராஜ்குமார்

*

அன்புள்ள செல்வா

நன்றி. பொதுவாக வரும் இத்தகைய மின்னஞ்சல்களுக்கு அப்பால் மிகக்குறைவாகவே எதிர்வினை வந்துள்ளது. குருகுலத்திற்கு ஒரு வேலிகட்டுவதற்காக நிதிகோரினோம். நாராயணகுருகுலம் நிதியுதவி தேவை ஏழுலட்சம். மூன்றுலட்சம்கூட இன்னும் தேறவில்லை

ஜெ

========================================================================================

=========================================================================================

 

நாராயணகுருகுலத் துறவியர்

வியாசப்பிரசாத் வகுப்புகள்

நாராயணகுருகுலம் நிதியுதவி

ஊட்டி சந்திப்பு 2012

முந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு 2017, கடிதம்-1
அடுத்த கட்டுரைகுருகுலமும் கல்வியும்