வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 3

 

 

3. இலக்கியப் பரிசோதனை

இலக்கிய உருவாக்கத்திற்கு எதிரான மரபு வழிபாட்டின் மீதான தாக்குதலுடன் ஆரம்பிக்கும் சாமிநாதனின் இலக்கிய விமரிசனம் தமிழ்ச்சூழலைப் பற்றியதாக ஆக்கியது. அதன் பிறகு அதற்கான காரணங்களை தமிழில் உருவாகி பெரும் செல்வாக்கு பெற்றிருந்த பரப்பியம் சார்ந்த இயக்கத்தில் தேட ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் பரவிய பரப்பிய இயக்கங்களாக சாமிநாதன் அடையாளம் காண்பது திராவிட இயக்கத்தையும், கட்சி அரசியலுக்குள் வந்து உச்சகட்ட பிரச்சார இயக்கமாக மாறிய இடதுசாரிகளையும்தான். இவ்விரு இயக்கங்களின் அரசியல் திட்டங்களைப் பற்றியும், சமூகப்பங்களிப்புப் பற்றியும் அவர் கவனிப்பதில்லை. காரணம் ஒரு பண்பாட்டு விமரிசகராக அவரது கவனம் முழுக்க முழுக்க இவ்வியக்கங்கள் பண்பாட்டுத் தளத்தில் ஆற்றிய செயல்பாடுகளைக் குறித்தே இருக்கிறது.  அங்கும் கூட சாமிநாதன், அவர்களின் திட்டங்கள், கோட்பாடுகள் குறித்த விவாதங்களுக்குள் செல்வதில்லை. அவர்கள் உருவாக்கிய விளைவுகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார். அவருக்கு அரசியல் நோக்கும் ஆர்வமும் இல்லை

எப்போதுமே இருமைகளை (dichotomy) உருவாக்கிக் கொண்டு சிந்திப்பது சாமிநாதனின் பாணி. இக்காரணத்திலேயே அவரது எழுத்துக்கள் கருத்துப்பூசல் (Polemical) தன்மை உடையவையாக ஆகின்றன. ஒரு பண்பாட்டுத் தளத்தில் அவர் விவாதத்திற்கு வரும்போது சாதகமான, படைப்புத்தன்மை உடைய ஓர் ஆற்றலை அடையாளம் காண்கிறார். படைப்புத்தன்மை இல்லாத எதிர்மறையான ஆற்றல் ஒன்றை வகுத்துக் கொள்கிறார். பின்னதைக் கடுமையாக எதிர்த்து முன்னதை விதந்தோதி முன்வைக்கிறார். மொத்தச் சூழலையுமே இவ்விரு ஆற்றல்களின் மோதல் களமாக உருவகித்துக் கொள்கிறார். இவ்விரு தரப்புகளையும் ‘அடையாளம் காட்டுவது’ மட்டுமே தன் கடமை என்று எண்ணுவதனால், சாமிநாதன் அவற்றின் வரலாற்றுப் பின்புலம் குறித்தும் அவற்றுக்கு இடையேயான முரணியக்கம் குறித்தும் பெரிதாக ஆராய்வதில்லை. ஆகவே சாமிநாதனை பண்பாட்டு ஆராய்ச்சியாளர் என்று கூறுவதற்குப் பதிலாக பண்பாட்டு விமரிசகர் என்கிறோம்.

தன் தொடக்க நாட்களில் மரபிலக்கியம் x படைப்பூக்கம் என்ற ஒரு இருமையை உருவாகிக் கொண்டிருந்தார் சாமிநாதன். மரபிலக்கியம் குறித்த பெருமிதம் மீது தாக்குதல் நடத்தி தனிமனித அகம் மற்றும் சுயதரிசனம் வெளிப்பாடு கொள்ளும் படைப்புச்சூழலுக்காக வாதாடினார். ஆனால் இரண்டாம் கட்டத்தில் மரபிலக்கியத்தையும் சமகாலத்தில் மரபிலக்கியம் மீது வைக்கப்பட்ட போலிப்பெருமிதத்தையும் ஒன்றாகக் காணும் நோக்கில் இருந்துவிடுபட்டார். தமிழின் மரபிலக்கியத்தை ஒட்டுமொத்தத் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு வலுவான பகுதியாகக் காண ஆரம்பித்தார். தமிழிசை, தமிழ் நாடகம் (அல்லது தமிழ் நிகழ்த்துகலைகள்) தமிழ்ச் சிற்பக்கலை ஆகியவற்றைப் பற்றிய விரிவான ஒரு சித்திரத்துடன் தமிழ் மரபிலக்கியத்தை அவர் இணைத்துக் கொள்வதைக் காணலாம். இந்தக் கட்டத்தில் தமிழின் மரபிலக்கியம் மீது அவர் ஏற்கனவே கூறிவந்த பெரும்பாலான குற்றச்சாட்டுகளை அவரே விளங்கிக்கொண்டு திரும்ப எடுத்துக் கொண்டுவிட்டார். தமிழ் மரபின் வெற்றியும் வீறும் அவருக்கும் ஏற்புடையதாக மாறிவிட்டிருக்கின்றன. அந்த சூழல் பின்னர் வந்த பண்பாட்டு அரசியல்களால் சிதைக்கப்பட்டது என்று வாதிடுகிறார் சாமிநாதன். இப்போது மரபு x மரபிலிருந்து உருவான பரப்பியநோக்கு என்ற இருமையை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இதன் பின்னர் சாமிநாதனின் விமரிசனச்சட்டகம் தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்து விட்ட வீழ்ச்சியைக் குறித்ததாக அமைந்தது. தமிழ் பண்பாட்டுச் சூழல் சுயவிமர்சனம் அற்றதாகவும், போலியான மிகையான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக சாமிநாதன் உணர்ந்தார். அவருக்கே உரித்தான ஆக்ரோஷத்துடன் அதை எதிர்த்து எழுதினார். ஒரு கட்டுரையில் இந்த மாறுதலைச் சாமிநாதன் வகுத்துரைக்க முற்படுகிறார். இந்தியச் சுதந்திர போராட்டத்தின் காலகட்டம் இந்தியச் சமூகத்தில் நவீனத்துவம் நுழைந்த தருணம் என்று எண்ணும் சாமிநாதன் அந்தப்போக்கு வளர்ச்சிக்குப் பதிலாகச் சீரழிவையே உருவாக்கியது என்கிறார்.

1) தீண்டாமை ஒழிப்பு ப் பிரச்சாரம்
2.) பரவிவரும் கல்வி வசதி
3) சினிமா ரேடியோ போன்ற சாதனங்களின் பெருக்கமும் நகர்புற நாகரிகத்தின் பரவலும் கிராமங்களைத் தொட்டது

 

– என்று நவீன நாகரிகத்தின் அம்சங்களைப் பட்டியலிடும் சாமிநாதன் இவற்றின் விளைவாகத் தமிழ்ச் சமூகத்தில் ஆக்கபூர்வ சக்திகளுக்குப் பதிலாக முற்றிலும் புதிய சக்திகள் தோன்றின என்கிறார்.

1) தமிழ் நாட்டில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தைவிட ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் பிராமண எதிர்ப்பு பிரச்சாரமே வலுப்பெற்றது. தீண்டாமை பற்றி, தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி, ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்யக் கிளம்பியவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. அவர்களிடையே இருந்த ஜாதி வேற்றுமைகள் பற்றி அக்கறை இருக்கவில்லை. பிராமணிய எதிர்ப்பே ஜாதி ஒழிப்பு என்று பெயர் பெற்றது.

2) மற்ற எண்ணற்ற பல விஷயங்கள் கருதப்பட்டது போல கோயில் கலாச்சாரமும் பிராமணக் கலாச்சாரமாக பெயர் பெற்றது.

3) தமிழ்க்கல்வி என்பது பிராமணர்களால் ஒதுக்கப்பட்டு பிறரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆக்கியது.

இவ்வாறாக உண்மையான வளர்ச்சிப் போக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டது என்கிறார் சாமிநாதன். (சுந்தரராமசாமிக்கு…. ‘ >கொல்லிப்பாவை – 1978) ஒரு நிலப்பிரப்புத்துவ சமூகத்தில் கலை, இலக்கியம், தத்துவம் மூன்றும் அதன் உயர்மட்டத்தில் தான் புழங்கும், அவர்களாலேயே அது வளர்க்கப்படும். அதுவே இயல்பானது. உலகமெங்கும் அப்படித்தான் அது காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள உயர்கலை, இலக்கியம், தத்துவம் மூன்றும் கோயில் என்ற அமைப்பைச் சார்ந்தவை. கோயில் என்றதும் அதைப் பக்தியுடன் இணைத்துக் கொள்ள வேண்டியதில்லை. மதத்துடன் உள்ள இணைப்புக்கூட ஒரளவு மட்டுமே. கோயில் ஒரு மையம், அவ்வளவுதான். இது ஒரு தனிப்பட்ட சாதிக்குரிய ஒரு தளமாக இருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ அமைப்பில் உயர்நிலைகளில் இருந்த சாதிகளும் அவர்களால் பேணப்பட்ட சாதிகளும் ஈடுபடக்கூடிய ஒன்றாக இருந்தது.

ஜனநாயக காலகட்டத்தில் இந்த சிறிய வட்டத்தில் இருந்து கலைகளும் இலக்கியமும் தத்துவமும் வெளியே வந்திருக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் உரிய சொத்தாக அவை மாற்றப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அனைவருமே அவற்றில் ஈடுபட்டு அவற்றில் புதிய திறப்புகளை உருவாகியிருக்க வேண்டும். உலகமெங்கும் உருவான கலையிலக்கியத் தத்துவ மறுமலர்ச்சி என்பது அவ்வாறுதான் உருவாகியது. அதையே நவீனயுகம் என்கிறோம். தமிழில் அவ்வாறு நிகழாது போனமைக்குக் காரணம் இனவெறுப்பையே அடித்தளமாகக் கொண்ட பரப்பிய – இயக்கமாகிய திராவிட இயக்கங்களே காரணம். அவை கோவில் பண்பாட்டை ஒரு குறிப்பிட்ட சாதிக்குரியதாகச் சித்தரித்து அச்சாதியை சமூகத்தின் அனைத்துத் தீங்குகளுக்கும் பொறுப்பாக்கி வெறுப்பை விதைத்தன. விளைவாக, தமிழ்ப்பண்பாட்டின் சாரமான பகுதிகள் தமிழ் வெகுஜனப் பண்பாட்டில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டன. வெகுஜன எழுச்சி மரபின் சிறந்த உச்சங்களை வந்து தொட்டு வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பே இல்லாமலாக்கப்பட்டது என்கிறார் சாமிநாதன்.

இந்த இடைவெளியில் உருவாகி வந்த வெகுஜன ரசனைக்கு மலிவான கேளிக்கைக் கலையும் கேளிக்கை இலக்கியமும் ஆர்பாட்ட அரசியலும் முன் வைக்கப்பட்டன என்கிறார் சாமிநாதன். அதிலும் பிற எவரையும் விட திராவிட இயக்கத்தின் பங்களிப்பே அதிகம் என்கிறார். ஆகவே பிற தேசங்களில் இயல்பாக நடந்த ஒரு வளர்ச்சி, உயர்மட்டத்தினரின் பண்பாடு வெகுஜனப் பண்பாட்டால் எடுத்து வளர்க்கப்படுவது, முற்றிலும் இல்லாமலாகி வெகுஜனப் பண்பாடு அதுவரையும் இருந்த பண்பாட்டின் சாயலே இல்லாமல் அபத்தமான மலிவான ஒன்றாக உருவம் பெற்றது. தமிழில் வணிக சினிமாவின் வளர்ச்சியையும் அது இன்று சமூகத்தில் பெற்றிருக்கும் இடத்தையும் சாமிநாதன் இப்படித்தான் பார்க்கிறார். வணிக சினிமாவின் அதே களத்தைச் சேர்ந்ததாகவே சாமிநாதன் வணிக எழுத்தையும் பார்க்கிறார்.

உன்னதமான கலை வெளிப்பாடுகள் நிகழ்ந்த ஒரு மொழி தமிழ். பெரும் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் உருவான மரபுள்ளது. ஆனால் நாம் காணும் வணிக இலக்கியம் அந்த மரபின் சாயலே இல்லாமல் மலிந்த ரசனைக்கு மட்டுமே ரசிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. மாபெரும் சிற்ப பாரம்பரியமும், நடன பாரம்பரியமும், நாடகப் பாரம்பரியமும்உ ள்ள தமிழில் சினிமா என்பது மேலைநாட்டுக் கேளிக்கை கலையை அப்படியே நகல் செய்வதாக உள்ளது. இதற்குக் காரணம் திராவிட இயக்கம் மரபின் சாரமான பகுதியை மதத்துடனும், உயர் சாதியுடனும் சம்பந்தப்படுத்தி துண்டுபடுத்தியதுதான் என்று வெ.சாமிநாதன் கருதுகிறார். மேலைநாட்டுக் கலையும் இலக்கியமும் தத்துவமும் எல்லாமே கிறித்தவ மரபால் உருவாக்கப்பட்டவைதான். மேலைநாட்டு மறுமலர்ச்சி என்பது கிறித்துவமரபை நிராகரிப்பதாகவே இருந்தது. ஆனால் மத அதிகாரத்தை மட்டுமே நிராகரித்தார்கள். கலையையும் இலக்கியத்தையும் தத்துவத்தையும் எடுத்துக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அது தமிழில் நிகழவில்லை.

இந்த அடிப்படையில் சாமிநாதன் முற்போக்கு இலக்கிய முகாம் உருவாக்கிய கோஷங்களை நிராகரிக்கிறார். இலக்கியமும் கலையும் அடைந்துள்ள நுன்மையையும் ஆழத்தையும் புறக்கணித்து விட்டு பெருவாரியான மக்களுக்கு என ஓர் இலக்கியத்தையோ கலையையோ உருவாக்கிவிடவே முடியாது என்று அவர் வாதிடுகிறார். ராஜ்கபூரின் சினிமா ருஷ்யாவில் பரவலாக ரசிக்கப்படுவதைப் பற்றிப் பேசும் சாமிநாதன்;

”நம்மூர் முற்போக்குகள் (இது ஒரு விசித்திர ஜாதி) போதிக்கிற சித்தாந்தங்களைக் கொண்டு பார்த்தால் கோடிக்கணக்கான ரஷ்ய மக்களைத் தன்பால் ஈர்த்துள்ள ராஜ்கபூர்தான் ‘மக்கள் கலைஞர்’ ஆகவும் அக்கோடிகள் தாம் ‘பாட்டாளி மக்கள்’ எனவும் ட்ஸைக்கோவஸ்க்கியையும், ஐஸன்ஸ்டைனையும் புடோவ்கினையும், ஸாஸ்டகோவிச்சையும் ரசிக்கும், ஒரு சில ஆயிரம் ரஷ்யர்கள் ‘மக்களிடமிருந்து’ அன்னியப்பட்டு போன பூர்சுவா மேல்தட்டு வர்க்க உயர்குழுக்கள் எனவும் எனவே மக்கள் விரோதிகள்’ ஆகவும ஆகிவிடுவார்கள்” (இரண்டு தலைமுறைகளுக்கிடையில் ”கொல்லிப்பாவை” ) என்று கூறுகிறார்.

கலையின் இயல்பு மேலும் மேலும் நுட்பத்தையும் ஆழத்தையும் தேடுவதே. அது தன்னிச்சையானது. கலைஞனின் அக இயக்கத்தால் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்படுவது. அதைக் கட்சிப்பிரச்சாரத்திற்கான கருவியாகப் பார்க்கும்போது அந்தத் தன்னிச்சையான இயக்கம் முற்றாகவே அழிக்கப்படுகிறது. அதன் பிறகு அமைப்பு உருவாக்கி அளிக்கும் கோஷங்களை எதிரொலிப்பதாக அது மாறிவிடுகிறது. இந்நிலையில் அந்தக் கலையும் இலக்கியமும் மனித இதயங்களைத் தீண்டி எழுப்பும் சக்தியை இழந்துவிடுகின்றன. எவரையுமே அவற்றால் ஈர்க்க முடிவதில்லை. ஆகவே அவை பரப்பியக் கலையின் கேளிக்கை உத்திகளைத் தாங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றன. தாங்களும் ஒருவகை பரப்புகலையாக பரப்பிலக்கியமாக மாறிவிடுகின்றன. முதல்வகைப் பரப்பிலக்கியம் வெறும் கேளிக்கை; இது பிரச்சாரம் கலந்த கேளிக்கை.

இந்த விவாதத்தின் விளைவாகவே சாமிநாதன் உள்வட்ட வெளிவட்டக் கோட்பாட்டுக்குச் செல்கிறார். மேலான, நுட்பமான கலையிலக்கிய வெளிப்பாடு என்பது ‘அனைவருக்கும்’ உரியதல்ல என்பதே அவரது நிலைப்பாடு. அதில் ஜனநாயகம் என்பதற்கு இடமில்லை. ஒரு கலையைப் பயிலவும் நிகழத்தவும் ரசிக்கவும் மனநிலையும் பயிற்சியும் நேரமும் உள்ளவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. உலகம் முழுக்க அது இவ்வாறுதான் உள்ளது. ஆகவே எந்த ஒரு சூழலிலும் கலையிலக்கியச் சாதனைகள் சிறிய உள்வட்டத்தால் மட்டுமே உருவாக்கப்பட்டு ரசிக்கப்படும். இந்த உள்வட்டத்தைச் சாமிநாதன் சாதி, இனம், வர்க்கம், சார்ந்து உருவகிக்கவில்லை. தமிழ்நாட்டின் பல உயர் கலைகளில் உள்வட்டத்தில் செயல்பட்டவர்கள் உயர்சாதியோ உயர்வர்க்கமோ அல்ல என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார். ஆனால் சாமிநாதனின் இந்த உள்வட்டக் கோட்பாடு ‘பிராமண சாதிக்கே கலையிலக்கியங்களை ரசிக்கத் தகுதியுள்ளது’ என்று அவர் கூறுவதாக இடது சாரிகளால் ‘விளக்கம்’ அளிக்கப்பட்டு சாமிநாதன் வசைபாடப்பட்டார். ஏழை எளிய மக்களுக்கு கலையிலக்கியம் தேவை இல்லை என்று சாமிநாதன் கூறுவதாக சொல்லப்பட்டது. மிஞ்சிய வாழ்நாள் முழுக்க ‘நான் சொல்ல வந்தது அதுவல்ல’ என்று கூவிக்கொண்டிருக்க நேர்ந்தது சாமிநாதனுக்கு. உண்மையில் சாமிநாதன் உள்வட்டத்தில் நிகழும் எந்த ஒரு கலையிலக்கிய உச்சமும் காலப்போக்கில் வெளிவட்டத்திற்கும் சென்று சேரும் என்றே சொல்கிறார். உள்வட்டத்து இலக்கியம்தான் வெளிவட்டத்தில் வெகுஜன வாசிப்புக்காக உருமாற்றம் கொள்கிறது. ஆகவே ஒரு சிறு வட்டத்திற்குள் நிகழும் இலக்கிய, கலைவளர்ச்சி என்பது அர்த்தமில்லாத ஒன்றல்ல. ஒரு சிறிய மக்கள் கூட்டத்திற்கு மட்டும் உரியதுமல்ல. அது அனைவருக்கும் உரியதுதான். அது மக்கள் விரோதமானதல்ல, அது மக்களுக்காகவே நிகழ்கிறது. இவ்வளவுதான் வேறுபாடு. இந்தப் பிரச்சாரத்தின் கருப்பொருள் எத்தகைய உயர்வுடையதாக இருந்தாலும் அதன் செயல்முறை இலக்கியத்திற்கு எதிரானதே. இதுதான் சாமிநாதன் பலநூறு பக்கங்கள் வழியாகக் கூறும் தரப்பு.

சாமிநாதன் கடந்த நாற்பது வருடங்களாக இவ்விரு தரப்புகளுக்கும் எதிராக அயராது சமராடி வருகிறார். ஒரு வகையில் அவரது இலக்கிய இயக்கமே இந்தப் பூசலாக உருமாற்றம் பெற்றுவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு இலக்கிய அலைக்கு எதிராக அவர் போராடியிருக்கிறார். ஐம்பது அறுபதுகளில் திராவிட இயக்கம் உருவாக்கிய போலிப்பெருமித கேளிக்கைப் பண்பாட்டு இயக்கத்திற்கு எதிராக அவர் போராடினார். எழுபதுகளில் வானம்பாடி இயக்கம் போன்ற போலி இலக்கிய இயக்கங்களுக்கு எதிராக திராவிட இயக்கங்களின் போலித்தனமும் முற்போக்கு இயக்கத்தினரின் போலித்தனமும் சரிசமமாகக் கலந்த ஒன்றுதான் ‘வானம்பாடி’ இயக்கம் என்று சாமிநாதன் கருதினார். எண்பதுகளுக்குப் பிறகு தமிழில் முன் வைக்கப்பட்ட அமைப்புவாதம் பின் நவீனத்துவம், பின் அமைப்புவாதம் போன்ற கோட்பாடுகளின் மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடினார். நெடுங்காலமாகவே தமிழில் படைப்பியக்கத்தை புறக்கணிக்கக் கூடிய, அவமதிக்கக்கூடிய ஒரு போக்கு உண்டு. அந்தப் போக்கு தான் இந்தக் கோட்பாட்டுச்சூழலிலும் உள்ளது என்பது சாமிநாதனின் எண்ணம்.

இந்த எதிர்மறைக் கூறுகளை எதிர்கொள்ள சாமிநாதன் எப்போதுமே ‘ஆத்மார்த்தம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘இதயப்பூர்வமான’ என்று தமிழாக்கம் செய்யலாம். கலை இலக்கியத்தளத்தில் முழுமையாக இதயத்தூய்மையே உண்மையான படைப்பு வெற்றிகளை உருவாக்க முடியும் என்பது சாமிநாதன் திரும்பத் திரும்பக் கூறிவரும் கருத்து. எதை எழுதினாலும் அதில் ஆசிரியரின் இதயபூர்வமான ஈடுபாடு இருந்தாக வேண்டும் என்று சாமிநாதன் தொடர்ந்து வலியுறுத்துவதைக் காணலாம். ஒரு படைப்பின் கலைத்தன்மையை தீர்மானிக்கும் அம்சமாகவே இந்த இதயசுத்தத்தை சாமிநாதன் அணுகுகிறார்.

படைப்பின் இதயபூர்வமான தன்மையை சாமிநாதன் எப்படி மதிப்பிடுகிறார். நிச்சயமாக அப்படைப்பாளியின் தனிவாழ்க்கையையும் கணக்கில் கொண்டுதான் அந்தப் படைப்பாளி செய்து கொள்ளும் சமரசங்களை, அவரது கூற்றுகளில் உள்ள முரண்பாடுகளை, அவருடைய சொந்த வாழ்வுக்கும் இலக்கியத்திற்கும் இடையேயான தூரத்தை சாமிநாதன் எப்போதுமே கவனிக்கிறார். அவருக்கே உரித்தான அதிரடியான நடையில் அவற்றை தாக்கி எழுதுகிறார். நேர்மையே இல்லாதபோது ஒரு படைப்பின் பிற தகுதிகளைப் பற்றி என்ன பேசவேண்டியிருக்கிறது என்பதுதான் சாமிநாதனின் கூற்றாக உள்ளது.

இந்த அதிரடிப்போக்குதான் சாமிநாதன் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுவதற்குக் காரணமாகியது. ஒரு பல்கலை கழகத்துப் பேராசிரியர் தன்னை தலைமறைவுப் புரட்சியாளன் போல கவிதையில் காட்டிக் கொள்வாரென்றால் அதை சாமிநாதன் வெளிப்படுத்தும்போது அது தனிநபர்த் தாக்குதல் ஆவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு கவிஞர் தன் மதத்தின் அனைத்து மூடநம்பிக்கைகளையும் முற்றிலும் ஆதரித்துக்கொண்டு தன்னைப் புரட்சியாளராகக் காட்டுவதற்காக இந்து மதத்தின் நம்பிக்கைகளை தாக்கியும் கிண்டலடித்தும் எழுதுவாரென்றால் அது மதவெறியோ ஒழிய புரட்சியோ பகுத்தறிவோ அல்ல என்று சாமிநாதன் கூறும்போது அது முற்றிலும் நேர்மையான ஒரு இலக்கிய அணுகுமுறையாகவே படுகிறது.

தன் சக காலத்தவரின் அந்தரங்க சுத்தி குறித்து பகிரங்க விமரிசனத்திற்கு முன்வருவதற்கு அபாரமான நேர்மை தேவை. ‘என்னுடைய அந்தரங்க சுத்தியை நீயும் விமரிசித்துப்பார்’ என்ற அறைகூவல் அதில் உள்ளது. தன் நேர்மை மீது அபாரமான நம்பிக்கை இல்லாத ஒருவரால் அதைச் செய்ய முடியாது. கடந்த வருடங்களில் சாமிநாதன் திராவிட இயக்க எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், வணிக எழுத்தாளர்கள் போன்ற பலரையும் குறித்து தீவிரமான எதிர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர்கள் அவரைத் திருப்பித்தாக்கியிருக்கிறார்கள். குறிப்பாகக் கைலாசபதியும் அவரது அணியும் கூறிய தாக்குதல்களை கூறலாம். சாமிநாதன் பிறந்த சாதியை ஒட்டிய தாக்குதல்களே அவர்மீது நிகழ்த்த முடிந்ததே ஒழிய அவரது நேர்மை, இலக்கியம் மீதான அர்ப்பணிப்பு இரண்டுமே எவராலும் கேள்விக்குரியதாக்கப் படவில்லை. கடந்த அரைநூற்றாண்டாக சாமிநாதனின் பிறப்பு குறித்து மட்டுமே வரும் தாக்குதல்கள் அவரது நேர்மைக்கு அவரது எதிரிகள் தங்களையறியாமலேயே அளித்த சான்று என்றுதான் கூறவேண்டும்.

சாமிநாதன் இலக்கியத்தை தீர்மானிக்கும் விழுமியங்களாக நேர்மை, சுதந்திரம் இரண்டையும் குறிப்பிடுகிறார். ”வாக்கு சுத்தம் மனச்சுத்தம் வேண்டும் என்றால் ‘குளித்துவிட்டு வந்தால் என்னிடமிருந்து சிறந்த இலக்கியங்கள் பிறந்துவிடுமா?’ என்று ஒரு கேள்வியை தூக்கி எறிகிறார்கள் வெற்றிக்களிப்புடன். மனச்சுத்தம் குளித்துவிட்டு வந்தால் வந்துவிடும் என்று இவர் நம்புகிறார்” என்று தாக்குகிறார் வெங்கட் சாமிநாதன் (‘இச்சூழலில்’ – முன்னுரை) இத்தனை முற்போக்குக் கருத்துக்கள் அனுதினமும் முழங்கும் இந்தப் பண்பாட்டுச் சூழல் ஏன் இப்படி வெறிச்சிட்டுக் கிடக்கிறது, இத்தனை சீர்த்திருத்தங்கள் பேசப்பட்டும் இச்சமூகம் ஏன் இப்படித் தேங்கிக் கிடக்கிறது, அப்படியானால் இங்கு பேசப்படுபவை அப்பட்டமான பெயர்கள், பொய்யின் விஷம்பட்டு பாலைவனமாக ஆகிப்போன சூழல் இது என்று வாதிடுகிறார் சாமிநாதன் ஒருவகையில் தமிழின் பண்பாட்டுச் சூழலை அவதானித்து வரும் யாரும் உணரக்கூடிய ஒன்றுதான் இது. அந்த எண்ணத்திற்குத்தான் சாமிநாதன் குரல் கொடுக்கிறார். அவர் மீள மீள அவதூறுகள் மூலம் எதிர் கொள்ளப்பட்டது. அக்குரலில் இந்த தனிமனிதனின் சமரசமில்லாத நேர்மை மிகவும் தொந்தரவு செய்யக் கூடியது என்பதனாலேயே.

ஒரு விமரிசகராக சாமிநாதன் நேர்மையும் சுதந்திரமும் உடையவராக இருந்திருக்கிறாரா? அவர் உக்கிரமாக எதிர்த்து வந்த தரப்புகளில் இருந்து உக்கிரமாக எதிர்க்கும் ஒருவரால் தரமான ஒரு ஆக்கம் எழுதப்பட்டிருந்தால் அதைச் சாமிநாதன் எப்படி எதிர்கொண்டிருக்கிறார்? சாமிநாதன் முற்போக்கு முகாமில் இருந்து வெளிவந்த அனேகமான அத்தனை படைப்புகளையும் அங்கீகரித்திருக்கிறார் என்ற யதார்த்தம் நம்முள் உள்ளது. கு.சின்னப்ப பாரதியின் ‘தாகம்’, டி.செல்வராஜின் ‘தேனீர்’ போன்று பல உதாரணங்களைக் கூறலாம்.அவரது பார்வை அவருடைய காலகட்டத்தில் நிகழ்ந்த அத்தனை நுண்ணிய நிகழ்வுகளையும் அங்கீகரிப்பதாகவே உள்ளது. கோட்பாட்டளவில் அவருக்கு மார்க்ஸியத்துடன் எத்தனை இடைவெளி உண்டோ அதே இடைவெளி மு.தளையசிங்கத்தின் கோட்பாடுகள் மீதும் உண்டு. ஆனால் தளையசிங்கத்தின் படைப்பூக்கத்தை அவர் அங்கீகரித்தார்.

தமிழில் உருவாகி வந்த தலித் இயக்கத்தைச் சாமிநாதன் அனேகமாக முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். காலம் முழுக்க சாமிநாதன் இலக்கிய ஆக்கங்களில் தேடி வந்த நேர்மை அவற்றில் உள்ளது என்று அவர் உணர்ந்தார். அவற்றில் வெற்றுக் கோஷங்கள் இல்லை. முழக்கங்கள் இல்லை. செயற்கையான உணர்ச்சி வெளிப்பாடுகள் இல்லை. அவற்றில் உள்ள அப்பட்டமான நேர்மையே அவற்றின் கலை என்று எண்ணுகிறார் சாமிநாதன். இமையம், சோ. தருமன் போன்றவர்களைத்  தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் இடத்திற்கு அவர் கொண்டு சென்று வைக்கிறார். அவர் கூறி வரும் எந்தக் கோட்பாட்டுக்கும் வாழ்க்கை நோக்கை அளித்துவிடாத சுதந்திரம் கொண்ட ஆக்கங்கள் அவை என்று அவர் எண்ணுகிறார்.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக நிகழ்ந்துவரும் சாமிநாதனின் இலக்கியப் பண்பாட்டு விமரிசனச் செயல்பாடு என்பது ஓர் எதிர்வினை மட்டுமே. இதுவே அவரது முக்கியமான பலவீனம். அவரே சொல்லிக் கொள்வது போல அவர் ஓர் இலக்கிய விமரிசகர் அல்ல. அவர் எதிர்க்கிறார், விமரிசிக்கிறார் அவ்வளவுதான். கடந்த முப்பதாண்டுகளில் சாமிநாதன் எந்த ஒரு படைப்பைப்பற்றியும் ஆழமான அலசல்களைச் செய்யததில்லை ஒரு படைப்பின் பல்வேறு அடுக்குகளை மெல்ல மெல்ல விரித்து தன் சொற்கள் மூலம் அதை புதிய ஒன்றாக காட்டுபவனே விமரிசகன். அவன் தான் வாழும் சமூகத்திற்கு இலக்கியப்படைப்புகளை வாசிப்பதற்கான பயிற்சியை அளிக்கிறான். இலக்கியப்படைப்புகளை அந்த மரபின் பேரிலக்கியச் செல்வங்களுடன் ஒப்பிட்டு தரப்படுத்துகிறான். அந்தப் பண்பாட்டின் பொதுப் போக்குடன் இணைக்கிறான். இந்த எந்தப் பணியையும் சாமிநாதனின் விமரிசனங்கள் ஆற்றவில்லை. ஏனென்றால் அவர் எப்போதுமே படைப்புகளை நோக்கித்  தன்னை முற்றாகத் திறந்து கொண்டு அதில் தன் மொழியுடன் இறங்கிச் சென்றதில்லை.

க.நா.சு.வை இலக்கிய விமரிசகர் என்று கூறமுடியாது, இலக்கிய சிபாரிசுக்காரர் என்று கூறவேண்டும் என்றார் சுந்தர ராமசாமி. அப்படிப் பார்த்தால் சாமிநாதனை இலக்கியப் பரிசோதகர் என்றே கூறவேண்டும். இந்த ரயிலில் யார் பயணச்சீட்டுடன் ஏறியமர்ந்திருக்கிறார் என்று பார்த்து சிலரை அனுமதிக்கிறார். சிலரை இறக்கி விடுகிறார்.

முந்தைய கட்டுரைகிறித்தவப்பாடல்கள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருச்செந்தூர் கடிதங்கள்