வெள்ளையானை -கடிதங்கள்

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

வெள்ளை யானையை படித்த சமயத்தில்… அதெப்படி மொத்த சமூகமே இந்த அவலத்தை வாய் மூடி பார்த்து கொண்டிருந்தது என்றே பிரமிப்பாக இருந்தது. மக்களின் குரலாக ஒலிக்க ஒருங்கிணைக்க ஒரு தலைவர் கூடவா இருக்கவில்லை என்று தோன்றியது. ஆனால் இன்று 2017-ல் கூடவா அதே நிலைமை? உச்ச நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒருவர் நேரடியாக மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறார். இதை உரக்க கண்டிக்க ஒரு சிந்தனையாளர் கூடவா இங்கு இல்லை? தமிழகத்தின் கிட்ட திட்ட 32% வாக்காளர்கள் ஆதரித்த கட்சியில் நீதி உணர்வும், சொரணையும், தைரியமும் கொண்ட 100 பேர் கூட இல்லையா? அரசியலில் இல்லாதவர்கள் வாயே திறக்கவில்லை அல்லது எதோ மழுப்பலாக பேசுகிறார்கள். அப்படி என்றால் இங்கிருக்கும் சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகள், பெரும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், முன்னாள்/இந்நாள் நீதியரசர்கள், தொழிலதிபர்கள் இவர்களுக்கெல்லாம் என்ன மதிப்பு? இவர்களுக்கும் பேசுவதற்கு பயமா? இவர்களும் சாமானியர்களை போல தானா ?

ஹிட்லரை பற்றி சொல்லும்போது ஜெர்மானிய மக்களின் ஆதரவில்லாமல் ஹிட்லரால் பதவிக்கு வந்ந்திருக்க முடியாது என்று சொல்லி இருந்தீர்கள். இங்கு ரெட்டை விரலை விரித்துக்கொண்டு கூழை கும்பிடுடன் prada, isuzu கார்களை மொய்க்கும் தொண்டர் படையை பார்க்கும்போது எங்கே மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த கொள்ளைக் கும்பல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்களோ என்று பதைபதைப்பாக இருக்கிறது. சமூகத்தின் நம்பிக்கையையும் மரியாதையையும் சம்பாதித்த நல்லவர்கள் எல்லாம் எங்கே போய் தொலைந்துவிட்டார்கள்?. இது போல கைவிடப்பட்ட நிலையை உணர்ந்ததே இல்லை.

கோகுல்

***

அன்புள்ள ஜெ

வெள்ளையானை நாவலை நீண்ட காலம் கழித்து இப்போதுதான் மீண்டும் வாசிக்கமுடிந்தது. முதல் வாசிப்பில் பஞ்சம் பற்றிய சித்தரிப்புகள்தான் அந்நாவலின் முக்கியமான அம்சமாக தோன்றின. இன்றைக்கு வாசிக்கும்போது பிரிட்டிஷ்காரர்கள் இங்குள்ள அரசியலை உருவாக்கிய முறையும் நிர்வாகத்தை வடிவமைத்த முறையும் இந்நாவலில் கொஞ்சம் பகடியுடன் விவரிக்கப்பட்டிருப்பதுதான் மேலும் முக்கியமானது என நினைக்கிறேன். உண்மையில் இன்றும்கூட அரசு அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதில் அந்த மிஷினில் பாட்டு ஒலிக்கும் காட்சி வருகிறது. அதேபோலத்தான் பிரிட்டிஷ் நிர்வாகம். அந்த எந்திரத்திலே ஒரே பாட்டு மட்டும்தான் வரும்.

யானை அதில் வரும் ஒரு காட்சி உள்ளது. யானை இந்தியாவாக காட்டப்படுவது முக்கியமான உருவகம். கடைசியில் வெள்ளை யானையாக பிரிட்டிஷார் காட்டப்படுகிறார்கள். யானை ஒருபக்கம் வர்ணிக்கபடும் போது ஏன் யானை இப்படி விவரிக்கப்படுகிறது என்பதை நினைத்தேன் ஆனால் அதேயளவு விரிவாக சாரட் வண்டிகள் சொல்லப்பட்டபோது தான் நீங்கள் இரண்டுக்கும் ஒரு ஒப்பிடுதலை உருவாக்கி குறியீடாக காட்டுகிறீர்கள் என்பது புரிந்தது

சுபாஷ் சந்திரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–26
அடுத்த கட்டுரைசுட்டி -கடிதங்கள்