சுட்டி -கடிதங்கள்

shalala

 

இனிய ஜெயம்,

சுட்டிப்ப்ப்ப்ப்ப்ப்பப்பெண் வாசித்தேன். முக்கியமான ஒன்றை தவற விட்டு விட்டீர்கள். அது சுட்டிப் பெண் சீரியஸாக மாறும் ”நாடகீய” தருணம். ஒரு குழந்தையுடன் உர்ர்ர்ர்ர் ரென திரியும் மீனாவை அஜித் துரத்தி துரத்தி விரும்புகிறார். மீனாவுக்கு கல்யாணமும் ஆகவில்லை, அக்குழந்தை மீனாவுடையதும் இல்லை எனும் திடுக் திருப்பத்தில் இன்ட்ரவல். மீனாவின் அப்பா பிளாஷ்பேக்கை துவக்குகிறார்

”எல்லா பொண்ணுங்க போலவும் அவளும் குறும்பும் சிரிப்புமா கலகலன்னு திரிஞ்சவதான்……… ”

அவளுடைய குறும்புக் காதலன் கார்த்திக் கொல்லப்படுகிறார். அப்பால உர்ர்ர்ர்ர்.

தான் சுட்டிப்ப்ப்ப்பப்பெண்ணாக இருந்தபோது எப்படி இருந்தோம் என உர்ர்ர்ர்ர் என இருக்கும் ஒரு இளம்பெண் கனவு காண்கிறாள். இன்பமாக நோகும் தேகத்துடன், பூத்தூவும் வான்மேகங்களுக்கு கீழே ஆட்டம் போடுகிறாள். பாடல் முடிந்ததும் உர்ர்ர். ஆம் அதே. அவளுக்கு கல்யாணம் வேறு ஒருவருடன். ஆம் அதே அதே அதே அவளது குறும்புக் காதலன் கார்த்திக் கொலை.

எம்ஜியாரின் வேட்டைகாரன் வேறு தினுசு. சுட்டிப் பெண், குறும்புக்கார காதலனை மணக்கிறாள். ஆனாலும் உர்ர்ர்ர் என மாறுகிறாள். அவர்களுக்கு குழந்தை பிறந்தது காரணமாக இருக்கும் என யூகிக்கிறேன். வெள்ளி நிலா முற்றத்திலே …. என எம்ஜியார் தாலாட்டு பாட, சாவித்ரி உர்ர்ர்ர் என அமர்ந்திருக்கிறார்.

ஊர்வசி எப்போதும் அப்பா விசுவுக்கு கிச்சு கிச்சு மூட்டுவார். ஹா ஹா ஹா ஹப்பா ஹவால முடியலம்மா என்று சிரித்து தளறுவார் விசு. ஹா ஹா ஹா ஹப்பா ஹவால முடியலம்மா என்று ஒரு முறை விசு சிரித்தபடியே செத்துப் போகிறார். கிச்சு கிச்சின்போது ஹார்ட் அட்டாக். அதன் பின் ஊர்வசி உர்ர்ர்ர்ர்ர்ர்ர் வசி .

இதற்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல தமிழ் சினிமாவின் குறும்புக்கார காதலர்கள். விதிவிலக்கு இன்றி எல்லா குறும்புக் காதலனும், தரையிலிருந்து எரவானத்துக்கும், அங்கிருந்து ஜன்னலுக்கும், ஜன்னலிலிருந்து மேஜைக்கும், அங்கிருந்து தரைக்கு தாவியபிறகே முதல் வசனத்தை பேசுகிறார்கள். எம்ஜியாரின் வேட்டைக்காரன், துவங்கி ஜெயம் ரவியின் சம்திங் சம்திங், இளைய தளபதியின் வசீகரா தொடர்ந்து தனுஷின் குட்டி வரை.

வேட்டைக்காரனில் எம்ஜியார் இத்தனையும் செய்வது சாவித்ரி முன்னால் . முடித்து மிரண்டு நிற்கும் சாவித்ரியை அலேக்காக்க தூக்கி… ” ஹாஆஆவ் விடுங்க. ஒரு பொம்பளப் பிள்ளைக்கிட்ட இப்பிடித்தான் நடந்துக்கறதா? அதுவும் வீட்ல யாரும் இல்லாத சமயத்துல?”

”அடடே [கண்ணடித்து] வீட்ல யாரும் இல்லையா”

”வந்துதுட்டேன்டாப்பா ” சாவித்ரி அப்பா எம்மார் ராதா உள்ளே நுழைய, சாவித்ரி வெட்கி பதறி விலக . ”அடடே உன் அப்பாவா” எம்ஜியார் அவரையும் அலேக்காக தூக்கி…

கண்ணான கண்மணிக்கு புரியாதா கொஞ்சம் முன்னாடி வந்தாலே தெரியாதா.. கண்ணழகை நான் காணக் கூடாதா.. காரோட்டியபடி சரோஜாதேவியை காதலிக்கிறார் குறும்புக்கார காதலர் எஸ்.எஸ்.ராஜேந்தரன். பாடல் நெடுக கார், பாறை, தொட்டில், சரோஜா தேவி என கிடைத்த அத்தனை மேலும் குதித்து ஏறுகிறார் . சரோஜாதேவியில் தொங்கும் அனைத்தையும் [முந்தானை, இரு கைகள், இரட்டை சடை] இழுத்துப் பார்த்து பாட்டுப் பாடுகிறார்.

குறும்புக்கார காதலன் சிவாஜியும், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அத்தனையும் கொண்டு அலைக்கழியும் காதலி கேயார் விஜயாவும் சேர்ந்து பாடும் பாடல் [மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்] எதைக் கண்டாலும் பேலியோ டயட்டின்றி உடல் இளைக்கும் ரசாயன மாற்றங்கள் உள்ளே நிகழும்.

என்னைப் போல் உடல் இளைத்தோர் பருமனாக, காதலிக்க நேரமில்லை குறும்புக்கார காதலன் ரவிச்சந்திரனை பார்க்கலாம். வாழ்வே மாயம் துவங்கி சிங்காரவேலன் வரை ஒரு குறும்புக்கார காதலர் செய்த அதகளம் வரலாறு.

இணையற்றது பாபா அனுபவம். குறும்புக்கார காதலன் ரஜினி குதித்து குதித்து வந்து, காதலி மனிஷா கொய்ராலா வசம் எதோ சில்மிஷம் செய்துவிட்டு போகிறார் [அதுவும் மாமனார் விஜயகுமார் முன்னிலையில் வைத்தே] வெட்கும் கொய்ராலாவை விஜயகுமார் கேட்கிறார்..

”வசீகரமான பையன் இவன் …. இல்லையாம்மா ”

மேல் அலமாரியில் இருந்து விஷ்ணுபுரம் என் தலையில் விழுந்த அனுபவம்.

கடலூர் சீனு

***

அன்புள்ள ஜெ

சுட்டிப்பெண் கட்டுரை ஒரு சீரியஸ் கட்டுரையின் மொழிநடை கொண்டிருப்பதன் வேடிக்கையை மிகவும் ரசித்தேன். தமிழ் சினிமா கதாநாயகிகள் பெரும்பாலும் ஆட்டிஸம் பிரச்சினை உள்ளவர்கள் என்று வாசித்தபோது உண்மையிலேயே எனக்கு அப்படித்தானா என்று தோன்றிவிட்டது. இல்லை காமெடிதான் என்று புரிவதற்கு கொஞ்சம் நேரம் பிடித்தது. அதன் பிறகே சிரிப்பு வந்தது. சிரிப்பூட்டுவதல்ல, நீங்காத வேடிக்கை உணர்வை வாசகனுக்கு ஊட்டுவதே இத்தகைய கட்டுரைகளின் நோக்கம் என நினைக்கிறேன்

சாரதி

***

ஜெ

சுட்டிப்பெண் கட்டுரை மிகவும் அருமை. நானும் என் பெண்ணும் இந்த சினிமாக் கதாநாயகிகளை பாரடி பண்ணி நிரம்பவே சிரிப்பதுண்டு. சுட்டிப்பெண்கள் முகத்தை கண்டபடி வலித்துக் கொள்வார்கள் என்றாலும் சூப்பராக முகத்தை வலிப்பதில் முதலிடத்தைத் தட்டிச் செல்பவர் ஜோதிகா அவர்கள்தான்

ஜானகிராமன்

***

முந்தைய கட்டுரைவெள்ளையானை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -1